சமூக ஊடக வானவில்-56: ‘திறக்காமலேயே’ தெரியும் ஒளிப்படங்கள்!

சமூக ஊடக வானவில்-56: 
‘திறக்காமலேயே’ தெரியும் ஒளிப்படங்கள்!

இன்ஸ்டாவையும், ஸ்னேப்சேட்டையும் மறந்துவிடுங்கள், ஏன், டிக்டாக்கையும் கூட விட்டுவிடுங்கள். இப்போது இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் சமூக ஊடகச் செயலி என்ன தெரியுமா? ஸ்மார்ட்போன் திரையில் நேரடியாக புகைப்படங்களைத் தோன்றச்செய்வதன் மூலம் புதுமையான முறையில் கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி செய்யும் லாக்கெட் (Locket) செயலிதான் அது.

ஐபோன் பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தச் செயலி அறிமுகமான வேகத்தில், வைரலாகி இளம் தலைமுறையினர் மத்தியில் பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, தனியுரிமை குறித்த கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக லாக்கெட் செயலி பாதுகாப்பானதா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

திறக்கத் தேவையில்லை

லாக்கெட் செயலி தொடர்பான தனியுரிமை சர்ச்சையைப் பார்ப்பதற்கு முன், இந்தச் செயலியின் தனித்தன்மையைப் பார்த்துவிடலாம்.

அனைத்துப் புகைப்படச் செயலிகளுக்கும் மேல் உருவாக்கப்பட்ட செயலி என லாக்கெட் செயலியை வர்ணிக்கலாம். புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ள ஏற்கெனவே எண்ணற்ற செயலிகள் இருந்தும் இந்தச் செயலி பிரபலமானதற்கான காரணமாகவும் இது அமைகிறது.

லாக்கெட் செயலியில் அப்படி என்ன தனித்தன்மை என்றால், பயனாளிகள் அனுப்பிவைக்கும் புகைப்படத்தை அதைப் பெறுபவரின் ஸ்மார்ட்போன் திரையில் நேரடியாகத் தோன்றச்செய்கிறது என்பதுதான்.

அதாவது மற்ற புகைப்படச் செயலிகள் போல, லாக்கெட்டில் படங்களைப் பார்க்க, ஸ்மார்ட்போன் திரையைத் திறந்து, பின்னர் செயலியைத் திறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனெனில், அனுப்பி வைக்கப்படும் படங்கள் பயனாளியின் போன் திரையில் தோன்றுகின்றன. அதாவது, ஹோம்ஸ்கிரீன் எனப்படும் போனில் முகப்பிலேயே படம் வந்து சேர்கிறது.

ஐபோனில் விட்ஜெட் மூலம், முகப்புத் திரையில் புகைப்படங்கள் தோன்றும் வகையில் லாக்கெட் செயலி அமைந்துள்ளது. இதன் காரணமாக, போனைக் கையில் வைத்திருந்தாலே புதிய படங்கள் வந்திருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் இடையே கருத்துப் பரிமாற்றத்திற்கான எளிய வழியாக இது அமைவதால் இளம் பயனாளிகள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. புகைப்படங்களுக்கான பல வகை ஃபில்டர் வசதி, கேமரா ரோல் போன்ற எந்தத் துணை அம்சங்களும் இல்லாமல் இந்தச் செயலி தனது மைய நோக்கத்தால் கவர்ந்திழுக்கிறது. ஐந்து நபர்கள் வரை அல்லது நெருக்கமானவர்களுடன் இந்தச் செயலி மூலம் படங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

காதலால் உருவான செயலி

இந்தச் செயலி உருவாக்கத்தின் பின் ஒரு சுவாரசியமான காதல் கதை இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மேட் மோஸ் என்பவர் தனது காதலியுடன் தொடர்புகொள்வதற்காக இந்தச் செயலியை உருவாக்கினார். காதலில் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கியிருந்த நிலையில், புதுமையான பரிசளிக்க விரும்பியவர், அவருடன் தொடர்புகொள்வதற்காக என்று லாக்கெட் செயலியை வடிவமைத்தார்.

இருவரும் தொலைதூர தொடர்பில் இருக்க வேண்டிய நிலையில், அவ்வப்போது புகைப்படங்களைத் திரையில் பார்க்கும் வசதியை விரும்பி, முகப்புத் திரையில் படம் தோன்றும் வகையில் செயலியை உருவாக்கினார். அதன் பிறகு இருவரும் ஆறு மாத காலத்திற்கு இந்தச் செயலியை பயன்படுத்தியிருக்கின்றனர். சராசரியாக தினமும் ஐந்து படங்களையேனும் இந்த முறையில் ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொண்டனர்.

லாக்கெட் செயலி வாயிலாக அனுப்பி வைக்கப்படும் புகைப்படங்கள், போனில் சேமித்து வைக்கப்படுவதால், அவற்றை மீண்டும் பார்ப்பதும் சுவாரசியமான அனுபவமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம் எனத் தோன்றவே மோஸ் இந்தச் செயலியைப் பொதுவெளியில் அறிமுகம் செய்தார்.

லாக்கெட் செயலியை விளக்கும் வகையில் சிறிய காணொலி ஒன்றை உருவாக்கி டிக்டாக்கிலும், வெளியிட்டார். இந்தக் காணொலி வைரலாகி லாக்கெட் செயலியைப் பிரபலமாக்கியது. லட்சக்கணக்கானோர் இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்தனர். ஆப்பிள் மேடையில் மற்ற சமூக ஊடகச் செயலிகளை முந்திக்கொண்டு லாக்கெட் முன்னிலை பெற்றது.

சாதக, பாதகங்கள்

இன்ஸ்டா போன்ற புகைப்படச் செயலிகளைப் பயன்படுத்தும்போது ஒருவரது நட்பு வட்டம் விரிவடைகிறது. நூற்றுக்கணக்காண நண்பர்கள் இருப்பது நல்லது என்றாலும், அவர்களுடன் தொடர்புகொள்வது சிக்கலாகிறது. மாறாக நெருக்கமானவர்கள் வட்டத்திற்குள் தொடர்புகொள்ள உதவுவது லாக்கெட் செயலியை விரும்ப வைத்திருக்கிறது. மேலும் இன்ஸ்டா, டிக்டாக் போன்ற செயலிகளின் மிகை பயன்பாடு பலவித கவலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் இந்தச் செயலி எளிமையானதாக அமைகிறது.

லாக்கெட் போலவே லைவ் இன் (LiveIn) எனும் செயலியும் இதே போன்ற சேவையை வழங்குகிறது. புகைப்படங்களோடு குறுஞ்செய்தியையும் சேர்த்துக்கொள்ள இந்தச் செயலி வழி செய்கிறது. அதோடு, படங்களில் வரையும் வசதி மற்றும் உலகாலாவிய படங்களைப் பார்க்கும் வசதியும் கொண்டுள்ளது.

பரஸ்பரம் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள முடியாமல் பரபரப்பாக இருக்கும் சூழலிலும் அருமையான தருணங்களை எளிதாக பரிமாறிக்கொள்ள உதவுவது இந்தச் செயலிகளின் வெற்றிக்குக் காரணமாக அமைவதாகக் கருதப்படுகிறது.

இந்தச் செயலிகள் வேகமாகப் பிரபலமாகி வந்தாலும், முகப்புத்திரையில் நேரடியாகப் படங்களைத் தோன்றச்செய்யும் வசதி தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனும் கவலையும் இருக்கிறது. மேலும், இந்தச் செயலி பலவித அனுமதிகளைக் கேட்பதால் தனியுரிமை பாதுகாப்பு தொடர்பான கேள்விகளையும் எழுகின்றன.

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in