சமூக ஊடக வானவில்-55: கலைகளுக்கான இ-காமர்ஸ் சேவை

சமூக ஊடக வானவில்-55: கலைகளுக்கான இ-காமர்ஸ் சேவை

இப்போது நாம் பார்க்கவிருக்கும், ‘எட்சி' சேவை முன்னோடி இணையதளங்களில் ஒன்று மட்டும் அல்ல, சமூக ஊடக சேவையின் தன்மையையும் கொண்டது. இத்தனைக்கும் எட்சி இணையம் மூலம் விற்பனைக்கு வழி செய்யும் இ-காமர்ஸ் ரகத்தைச் சேர்ந்தது. ஆனால், இ-காமர்ஸ் தளங்களில் மிகவும் வித்தியாசமானது.

பொதுவாக, இ-காமர்ஸ் தளங்கள் என்றதும் பலருக்கும் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களே நினைவுக்கு வரும். அமேசான் இந்தப் பிரிவில் முன்னோடி தளம். இணைய காமர்சை தொடங்கிவைத்த சேவை என்றும் சொல்லலாம். அமேசான் போலவே, இ-காமர்ஸ் பிரிவில் முன்னோடி தளமாக எட்சி (https://www.etsy.com) விளங்குகிறது.

அமேசான் பொதுவான இ-காமர்ஸ் தளம் என்றால் எட்சி, கலை நோக்கிலான இ-காமர்ஸ் சேவையாக விளங்குகிறது. இணையம் மூலம் புத்தகங்களை விற்பனை செய்யும் தளமாகத் தொடங்கிய அமேசான் எல்லா வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் இணைய சேவையாக வளர்ந்திருக்கிறது.

இதற்கு மாறாக எட்சி இணையதளம் கலை மற்றும் கைவண்ணப் பொருட்களுக்கான இ-காமர்ஸ் தளமாக தொடங்கி, இந்த நோக்கம் மாறாமல் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வம் கொண்டவர்கள் எட்சி தளத்தைத் தங்களுக்கான மேடையாகக் கருதுகின்றனர்.

கைவினைக் கலைஞர்கள் மற்றும் படைப்பூக்கம் கொண்டவர்கள் தங்கள் ஆக்கங்கள் மற்றும் கலைப்பொருட்களை எட்சி தளத்தின் மூலம் விற்பனை செய்யலாம். கைவினைக் கலைஞர்கள் தங்களுக்கான இணைய கடையை அமைத்துக்கொண்டு விற்பனை செய்யலாம் என்பதோடு, கைவினைப் பொருட்களில் ஆர்வம் உள்ளவர்களைப் பரவலாகச் சென்றடையலாம் என்பது இந்தத் தளத்தின் தனிச்சிறப்பாகும்.

படைப்பூக்கத்துடன் கைகளால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்களை இந்தத் தளத்தின் மூலம் விற்பனை செய்யலாம். இவைத் தவிர, பாரம்பரிய தன்மை கொண்ட பொருட்களையும் விற்பனை செய்யலாம். 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பொருட்கள் இவ்விதம் கருதப்படுகின்றன.

நிஜ உலகிலேயே கலைப்பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளையும், வழிகளையும் கண்டறிவது கடினம் எனும் நிலையில், இணையம் மூலம் கைவினைக் கலைஞர்கள் தங்கள் பொருட்களை எளிதாக விற்பனை செய்வதற்கான வழியாக அமையும் எட்சி எத்தனை சிறப்பான சேவை எனப் புரிந்துகொள்ளலாம்.

எட்சி தளம் அடிப்படையில் இணைய விற்பனை சேவையாக அமைந்தாலும், கலைவண்ணம் கொண்ட பொருட்கள் மற்றும் கைகளால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான இணைய சமூகமாக இருப்பதால், சமூக ஊடகத்தின் தன்மையைக் கொண்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்தத் தளம் தோன்றிய விதத்திலும் சமூக அம்சமே முக்கியமாக இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் காலின் என்பவர் தனது நண்பர்களோடு இணைந்து 2005-ல் இந்தத் தளத்தைத் தொடங்கினார். கட்டுமானம் மற்றும் கைகளால் செய்யப்பட்ட அறைகலன்களில் காலின் ஆர்வம் கொடிருந்தார். இந்தப் பொருட்களை இணையம் மூலம் விற்பனை செய்வது எத்தனை கடினம் என்பதை உணர்ந்திருந்தார். அவரைப் போலவே மேலும் பலரும் இந்தப் பிரச்சினையை உணர்ந்திருந்தனர். ஆனால், மற்றவர்களுக்கு எல்லாம் இதற்கான வழி தெரியாமல் இருந்தது.

காலின் இணையதள வடிவமைப்பை அறிந்தவர் என்பதால், இணையம் மூலம் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு இணைய கடை அமைப்பதே தீர்வு என அறிந்திருந்தார். இத்தகைய இணைய கடையைக் கலைஞர்கள் தனித்தனியே அமைப்பதற்குப் பதிலாக விற்பனையாளர்கள் கூட்டாகச் சேர்ந்து விற்பனை செய்வது பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தார். அவரது நண்பர்களும் இதே எண்ணம் கொண்டிருந்தன் விளைவாக உருவானது தான் எட்சி இணையதளம்.

இந்தத் தளத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் தங்களூக்கான இணைய கடையை அமைத்து விற்பனை செய்ய முடிந்தது. இப்படி எண்ணற்ற கலைஞர்கள் எட்சியில் கடை பரப்பியதால், கைப்பொருட்களில் ஆர்வம், கொண்டவர்கள் அவற்றை எளிதாக எட்சியில் அடையாளம் காண முடிந்தது. இதன் காரணமாக எட்சி தளம் கலைப்பொருட்களுக்கான இணைய சமூகமாக பிரபலமானது. அமெரிக்கா மட்டும் அல்லாமல், உலக அளவில் இந்தத் தளம் வளர்ந்தது. இந்தியாவுக்கான பதிப்பையும் இந்தத் தளம் கொண்டிருக்கிறது.

எட்சி தளம் இணைய விற்பனை தளமாக இருந்தாலும், கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் கலைஞர்களையும், இந்தப் பொருட்களை வாங்கும் ஆர்வம் கொண்டவர்களையும் இணைத்து வைப்பதில் சமூக வலைப்பின்னல் அம்சங்களையும் கொண்டிருக்கிறது. எட்சி தளத்தில், கடை பரப்பியுள்ள கலைஞர்களை இணையவாசிகள் பின்தொடரலாம். அவர்கள் ஆக்கங்களுக்கு விருப்பம் தெரிவிக்கலாம். முக்கியமாக இந்த ஆக்கங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து சக பயனாளிகளுடன் உரையாடவும் செய்யலாம். இந்த அம்சங்களே எட்சி தளத்தை சமூக ஊடக தளமாகக் கொள்ள வைக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், எட்சி தளத்தை ராபர்ட் காலின் உருவாக்கியதில், கைவினைக் கலைஞர்களுக்கான கெட் கிராப்டி எனும் இணைய விவாதக் குழு முக்கியப் பங்கு வகித்தது. இந்தக் குழுவில் நடைபெற்ற விவாதமும், இதன் பின்னே இருந்த வலுவான சமூகமும் காலினுக்கு எட்சி போன்ற தளம் தேவை எனும் எண்ணத்தை வலுப்படுத்தியது.

கெட் கிராப்டி போன்ற இணைய விவாதக்குழுக்கள் இப்போது மூடப்பட்டுவிட்டாலும் எட்சி தளம் இன்னமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அமேசான் தளத்துடனான ஒப்பீட்டுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்கியதால், அமேசான் ஒப்பீட்டுடன் முடிப்பதும் பொருத்தமாக இருக்கும். அமேசான் இணையதளம் புத்தக விற்பனை தளமாகத் தொடங்கியபோது, புத்தகங்களை வாசகர்கள் விமர்சிக்கும் வசதி, கருத்துப் பரிமாறும் வசதி ஆகிய சமூக அம்சங்களின் மூலம்தான் வேகமாகப் பிரபலமாகி வளர்ந்தது என்பதையும் இங்கே நினைவு கூர்வது இன்னும் பொருத்தமானது!

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in