சமூக ஊடக வானவில்- 54: எளியோரும் நிகழ்ச்சி நடத்த வழிசெய்யும் வலை!

சமூக ஊடக வானவில்- 54: எளியோரும் நிகழ்ச்சி நடத்த வழிசெய்யும் வலை!

பிரத்யேகமான சேவைகளை வழங்கும் சமூகவலைதளங்களின் வரிசையில் இந்த வாரம் நாம் பார்க்கவிருப்பது ‘ஈவன்ட்பிரைட்’ (https://www.eventbrite.com/) தளத்தைப் பற்றி. அடிப்படையில் நிகழ்ச்சிகளுக்கான இணையதளம் என்றாலும், சமூக வலைப்பின்னல் சேவையின் ஆதார அம்சங்களையும் இந்தத் தளம் கொண்டிருக்கிறது. இணையம் மூலம், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதை பயனாளிகளின் கைகளில் கொண்டு வந்திருப்பதே இதன் சிறப்பு.

எளியோரும் ஏற்பாடு செய்யலாம்...

பயனர் உள்ளடக்கம் என்பது, சமூக ஊடகங்களின் தனித்தன்மைகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், சிறிய அமைப்புகளும், தனிநபர்களும் நிகழ்ச்சிகளை நடத்துவதை எளிதாக்கும் சேவையை ஈவன்ட்பிரைட் வழங்கிவருகிறது. இந்தப் பிரிவில் முன்னோடி இணையதளமாகவும் விளங்குகிறது.

அதாவது, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துவதில் பெரிய நிறுவனங்களுக்கு சாத்தியமாகும் அத்தனை வசதிகளையும், அம்சங்களையும், சிறிய நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கும் ஈவன்ட்பிரைட் தளம் சாத்தியமாக்குகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

இணையம் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டை மேற்கொள்ள பிரத்யேக மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கின்றன என்றாலும் இவை செலவு மிக்கவை என்பதால் தனிநபர்களோ, சிறிய நிறுவனங்களோ பயன்படுத்துவது எளிதல்ல. இந்த நிலையை மாற்றி தனிநபர்களும் இணையம் மூலம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதை வகையில் ஈவன்ட்பிரைட் எளிதாக்கியிருக்கிறது.

என்னென்ன சேவைகள்?

ஈவன்ட்பிரைட் தளத்தில் நுழைந்து பார்த்தாலே அதன் தன்மையை எளிதாக உணரலாம். முகப்புப் பக்கத்தில் வரிசையாக நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளதோடு, ‘உங்களுக்கான அடுத்த நிகழ்ச்சியைக் கண்டறியுங்கள்’ எனும் வாசகமும் வரவேற்கிறது. அடுத்து பார்க்கக்கூடிய திரைப்படம் அல்லது அடுத்து வாசிக்கக்கூடிய புத்தகத்தைப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் போல, இந்தத் தளம் அடுத்து பங்கேற்கக்கூடிய நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கிறது.

ஒருவர் தனக்கு ஆர்வம் உள்ள துறையில் விரும்பிய நிகழ்ச்சியைக் கண்டறியலாம். இரண்டு வழிகளில் இது சாத்தியமாகிறது. நிகழ்ச்சிகளைத் தேடல் கட்டத்தில் தேடிப்பார்க்கலாம் அல்லது, நிகழ்ச்சிகளுக்கான பிரிவுகளில் தேடிப்பார்க்கலாம். இசை, வர்த்தகம், நிகழ் கலை, பயணம், உணவு, பொழுதுபோக்கு என பல தலைப்புகளில் நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அமெரிக்காவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சர்வதேச அளவில் வளர்ந்த தளம் என்பதால், இந்தியாவில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்டறியலாம்.

தேவையான நிகழ்ச்சியை கிளிக் செய்தால் தொடர்புடைய மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்வதோடு, அவற்றுக்காக பதிவு செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாட்டாளர் அல்லது அமைப்பைப் பிடித்திருந்தால், சமூக வலைப்பின்னல் சேவைகளில் செய்வது போல பின்தொடரலாம். மேலும், நிகழ்ச்சி தொடர்பான தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் செய்யலாம். கருத்தரங்கம் முதல் யோகா பயிற்சி வகுப்பு வரை, இயந்திர செயல் விளக்கம் முதல் வேலைவாய்ப்பு முகாம் வரை விதவிதமான நிகழ்ச்சிகளுக்கான தகவல்களைப் பெறலாம்.

இந்த நிகழ்ச்சிகளை சாமானியர்களும் ஏற்பாடு செய்து இந்தத் தளத்தில் பட்டியலிடலாம் என்பதுதான் கூடுதல் சிறப்பு. ‘நிகழ்ச்சியை உருவாக்கு’ வசதி மூலம் இதைச் செய்துகொள்ளலாம். முன்பே சொன்னதுபோல, இப்படி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கான வசதியை அளிக்கவே இந்த தளம் தொடங்கப்பட்டது. இதன் பின்னே சுவாரசியமான கதையும் இருக்கிறது.

காதலர் சொன்ன யோசனை

அமெரிக்காவின் ஜூலியா ஹார்ட்ஸ் (Julia Hartz) என்பவர்தான் இந்தச் சேவையை ஆரம்பித்தார். அவர் ஊடகத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் தற்செயலாக இணையத் தொழில்முனைவு பக்கம் வந்தார். அப்போது அவர் கெவின் ஹார்ட்ஸ் என்பவரைக் காதலித்தார். ஜூலியா, பணி நிமித்தமாக லாஸ் எஞ்சல்ஸ் நகரில் வசித்தார். தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்த கெவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் வசித்தார். அவரைச் சந்திக்க அங்கும் இங்கும் பறந்தபடி இருந்த ஜூலியா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கெவினோடு சேர்ந்து இருப்பதற்காக சான்பிரான்சிஸ்கோ நகருக்குக் குடிபெயர தீர்மானித்தார்.

சான்பிரான்சிஸ்கோவில் குடிபெயர்ந்த உடன் ஜூலியாவுக்கு வேலை கிடைத்தாலும், சம்பளம் குறைவு என்பது சிக்கலானது. இந்த நிலையில்தான், ‘குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதற்கு பதில் நீயே ஏன் நிறுவனம் தொடங்கி நடத்தக்கூடாது?’ எனும் கேள்வியோடு தொழில்முனைவு எண்ணத்தை ஜூலியாவிடம் கெவின் உண்டாக்கினார். ஜூலியாவும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக்கொண்டார். ஏனெனில் கெவினுக்கு ஏற்கனவே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஆர்வம் இருந்தது. ஜூலியாவிடம் இது பற்றி ஈடுபாட்டுடன் பேசுவது அவரது வழக்கம். எனவே, இந்த யோசனையை உடனே ஏற்றுக்கொண்டார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதியை அடிப்படையாகக் கொண்டு, நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தை ஆரம்பிக்கலாம் எனும் யோசனையை ஜூலியா முன்வைத்தார். இதற்கு முக்கியக் காரணம், கெவினுக்கு ஏற்கெனவே இணையப் பணப் பரிவர்த்தனை சேவையில் அனுபவம் இருந்தது என்பதும், டிக்கெட் வசதியை ஜனநாயகமயமாக்க வேண்டும் என ஜூலியா நினைத்ததும்தான்.

ஆம், டிக்கெட்மாஸ்டர் போன்ற இணையதளங்கள், பெரிய நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் இணையம் வாயிலாக அளித்தாலும், இதே போன்ற சேவை சாமானியர்களுக்கு இல்லாததை கவனித்திருந்தார். எனவே, எல்லோரும் எளிதாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவற்றுக்கான டிக்கெட் விற்பனை சேவையையும் வழங்க தீர்மானித்தனர்.

இப்படித்தான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய உதவும் இணையதளமாக 2006-ல், ஈவன்ட்பிரைட் பிறந்தது. ஏற்கெனவே இருந்த இணையவழி பணப் பர்வர்த்தனைக்கான மேடையைக் கொண்டு இந்தத் தளத்தை அமைத்தனர். (‘மோலிகிராட்’ எனும் பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் ஈவன்ட்பிரைட் என பெயர் மாறியது).

எளிமையான பயன்பாடு

இணையத்தில் பயனர்கள் பங்கேற்பிற்கு வழிசெய்த இரண்டாம் வலை இணையதளங்கள் பெரிய அளவில் உருவாகிக்கொண்டிருந்த நிலையில், சாமானியர்களுக்கான நிகழ்ச்சி ஏற்பாடு தளமாக ஈவன்ட்பிரைட் உதயமானது. இணையம் மூலம் எவர் வேண்டுமானாலும் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்துவதை எளிதாக்கியது. டிக்கெட் சேவையை ஜனநாயகமயமாக்கும் எண்ணத்தை ஜூலியா இதன் மூலம் நிறைவேற்றினார்.

எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்த மிகுந்த திட்டமிடல் தேவை. திட்டமிடுவது தவிர, அந்தத் தகவலைக் கொண்டுசெல்ல மெனக்கெட வேண்டும். டிக்கெட் விற்பனை செய்யும் விருப்பம் இருந்தால் இன்னும் கஷ்டம். இதற்கு மாறாக, நிகழ்ச்சி நடத்த விரும்பும் எவரும், அதற்கான திட்டமிடலை எளிமையாக மேற்கொள்ள ஈவன்ட்பிரைட் வழி செய்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்தத் தளத்தில் நுழைந்து தங்கள் பெயரையும், நிகழ்ச்சிக்கான விவரத்தையும் சமர்ப்பித்தால் போதும், அந்நிகழ்ச்சிக்கான இணைய வடிவத்தை உருவாக்கிக்கொண்டுவிடலாம். அதன் பிறகு, நிகழ்ச்சிக்கான தகவல்களை இமெயில் அனுப்பி வைப்பது போன்றவற்றை இந்தத் தளமே பார்த்துக்கொள்ளும். டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி கொண்டிருந்தால், டிக்கெட் விற்பனையையும் இந்தத் தளமே கவனித்துக்கொள்ளும். சொந்தமாக நிகழ்ச்சியை நடத்த விரும்பியவர்களுக்கு இந்தத் தளம் எத்தனை பெரிய வரப்பிரசாதமாக இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

இந்தத் தளம் வாயிலாக நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு டிக்கெட்களையும் விற்க முடிந்தது. இதற்காகத் தனியே கட்டணம் செலுத்தும் கட்டாயமோ தனியே மென்பொருளை நிறுவும் அவசியமோ இருக்கவில்லை. டிக்கெட் விற்பனைக்கான கட்டணத்தில் ஒரு சிறிய தொகையை மட்டும் இணையதளத்திற்கு அளிக்க வேண்டியிருந்தது. ஆக, நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான சுயசேவை தளமாக அது அமைந்திருந்தது. இதன் காரணமாகவே இந்தத் தளம் மெல்ல வரவேற்பைப் பெற்று வேகமாக வளர்ந்து புகழ்பெற்றது.

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in