சமூக ஊடக வானவில் -52: கண்ணில் மறையும் படங்கள் பேசும் கதைகள்!

சமூக ஊடக வானவில் -52: கண்ணில் மறையும் படங்கள் பேசும் கதைகள்!

பரவலாக அறியப்பட்ட சமூக ஊடகச் சேவைகளில் இருந்து மிகவும் மாறுபட்டது என்று ஸ்னேப்சேட்டை (Snapchat) வர்ணிக்கலாம். புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் மெசேஜிங் சேவை என்றாலும், ஸ்னேப்சேட் வழக்கமான மெசேஜிங் சேவையும் அல்ல. இன்னொரு புகைப்படப் பகிர்வு சேவையும் அல்ல - மாறாக, இது தனித்துவமான சேவை என்பதை நினைவில் கொள்வோம்!

பிரத்யேக அம்சங்கள்

பயனாளிகள் பகிரும் படங்கள் மறுமுனையில் பார்க்கப்பட்டவுடன் தானாக மறைந்துவிடும் தன்மை கொண்டவை என்பதுதான் ‘ஸ்னேப்சேட்’ சேவையின் தனித்தன்மையான அம்சமாக இருக்கிறது. இந்தத் தன்மை காரணமாகவே ஸ்னேப்சேட் இளம் தலைமுறையினரால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.

தானாக அழிந்துவிடும் படங்களைப் பகிர வழி செய்வது தவிர பயனாளிகளுக்கு மேலும் பல புதுமையான அம்சங்களை ஸ்னேப்சேட் அளிக்கிறது. மெசேஜிங் உலகில் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘ஸ்டோரி’ உள்ளிட்ட அம்சங்கள் ஸ்னேப்சேட்டில் இருந்து உருவானவைதான் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

புதுமையான அம்சங்களால் வளர்ந்த மெசேஜிங் சேவை என்றாலும், ஸ்னேப்சேட்டின் ஆதார அம்சமே இந்தச் சேவையின் அடையாள அம்சமாக அமைகிறது. அது மட்டும் அல்லாமல், தனியுரிமையின் தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தும் அம்சமாகவும் இருக்கிறது.

புகைப்படப் பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் அறிமுகமான அடுத்த ஆண்டு ஸ்னேப்சேட் அறிமுகமானது என்றாலும், இன்ஸ்டாகிராமுக்குப் போட்டி சேவையாக அறிமுகமாகவில்லை. ஏனெனில், இன்ஸ்டாவில் இருந்து மற்றிலும் மாறுபட்ட தன்மையோடு ஸ்னேப்சேட் உருவாகியிருந்தது.

ஃபிளிக்கரின் நீட்சி

ஒருவிதத்தில் இன்ஸ்டாகிராமை அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான புகைப்படப் பகிர்வு வலைப்பின்னலான ஃபிளிக்கரின் நீட்சி என்று சொல்லலாம். புகைப்படங்கள் சார்ந்த சமூகத் தொடர்புகளை உருவாக்கிக்கொள்ள ஃபிளிக்கர் வழிவகுத்தது என்றால், எல்லோரும் கைகளிலும் கேமரா திறன் கொண்ட மொபைல் போன் வரத் தொடங்கிய காலத்திற்கான புகைப்படப் பகிர்வு சேவையாக இன்ஸ்டாகிராம் விளங்கியது. ஆனால், ஸ்னேப்சேட் அடிப்படையில் இவற்றில் இருந்து மாறுபட்டிருந்தது.

புகைப்படப் பகிர்வு சேவைகளில் தலைகீழ் தன்மை கொண்டதாக ஸ்னேப்சேட் அமைந்திருந்தது என்றும் சொல்லலாம். ஸ்னேப்சேட்டில் பயனாளிகள் ஒருவருக்கு ஒருவர் அல்லது ஒருவரில் இருந்து குழுவுக்கு எனப் புகைப்படம் மூலம் பேசிக்கொள்ளலாம் என்றாலும், இப்படி பகிரப்படும் படங்கள் எல்லாம் நிரந்தமான தன்மை அல்லாமல் தற்காலிகத் தன்மை கொண்டிருந்தன. ஆம், ஸ்னேப்சேட்டில் பயனாளிகள் அனுப்பும் புகைப்படம், அதைப் பெறுபவரால் பார்க்கப்பட்ட சில நொடிகளில் மறைந்துவிடும்.

புகைப்படம் என்றால் எப்போதும் இருக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்ட பாரம்பரிய மனதுக்கு ஸ்னேப்சேட் சேவையில் இந்தத் தன்மை எதிரானதாகவே தோன்றும். புகைப்படங்களைப் பாதுகாப்பது ’அனலாக்’ உலகத் தன்மை மட்டும் அல்ல, டிஜிட்டல் உலகிலும்கூட புகைப்படங்களைச் சேமித்துவைப்பதே பிரதானமாக இருக்கிறது. இதற்கு மாறாக, ஸ்னேப்சேட் வாயிலாகப் பகிரப்படும் படங்கள் சேமிக்கப்படாமல் மறையும் தன்மை கொண்டிருந்தன. இன்ஸ்டா போல எல்லாம் இதில் விதவிதமான படங்களைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. படத்தைப் பார்த்தோமா, அதன் மூலம் சொல்லப்பட்ட விஷயத்தைப் புரிந்துகொண்டோமா எனும் வகையில் ஸ்னேப்சேட் பரிவர்த்தனை அமைந்திருந்தது.

விருந்தில் தோன்றிய ‘ஐடியா!’

இந்த இடத்தில் ஸ்னேப்சேட் உருவான கதையைத் தெரிந்துகொள்வது அதன் தன்மையை உள்வாங்கிக்கொள்ள உதவும்.

இவான் ஸ்பீஜல் (Evan Spiegel), பாபி மர்பி (Bobby Murphy) மற்றும் ரெகி பிரவுன் (Reggie Brown) ஆகிய மூன்று இளைஞர்களால் 2011-ல் ஸ்னேப்சேட் உருவாக்கப்பட்டது. விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, மறையக்கூடிய படங்களை இங்குள்ளவர்களுக்கு அனுப்ப முடிந்தால் எப்படி இருக்கும் எனப் பேச்சுவாக்கில் குறிப்பிட்டிருக்கிறார் ரெகி பிரவுன். சொல்லப்போனால், இத்தகைய வசதி இருந்தால் அங்கிருக்கும் பெண்கள் தயக்கம் இல்லாமல் தங்களது படங்களை எடுத்து தனக்கு அனுப்புவார்கள் எனும் ஏக்கத்தில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இதைக் கேட்ட பாபி மர்பிக்கு, ‘அட அற்புதமான யோசனையாக இருக்கிறதே!’ எனத் தோன்றியது. உடனே அவர் தனது நண்பரான ஸ்பீஜலைத் தேடிச்சென்று இந்த யோசனையைப் பகிர்ந்துகொண்டார்.

மர்பி சொன்ன யோசனையைக் கேட்டவுடன் ஸ்பீஜெல், ‘இது மில்லியன் டாலர் ஐடியா!’ எனப் பரபரப்படைந்ததோடு, இதைச் செயல்படுத்தும் உத்வேகமும் கொண்டார். இந்த யோசனையை முன்வைத்த பிரவுனைக் கொண்டே இதற்கான செயலியை உருவாக்க சொன்னார். அப்படித்தான் ‘பிக்காபூ’ (Picaboo) எனும் பெயரிலான சேவையை அறிமுகம் செய்தனர்.

சில மாதங்களில் பிக்காபூ சேவையே ஸ்னேப்சேட்டாக அறிமுகமானது. செயலியை உருவாக்கிய பிரவுன் இதற்குள் நீக்கப்பட்டு ஸ்பீஜெல் மற்றும் மர்பி இணை நிறுவனர்களாகினர் என்றாலும், பிரவுனுக்கு இணை நிறுவனர் அந்தஸ்து மற்றும் ஒரு கணிசமான தொகை அளிக்கப்பட்டது. இந்தக் கிளைக்கதை ஒரு பக்கம் இருக்கட்டும். அறிமுகமான வேகத்தில் ஸ்னேப்சேட் பிரபலமான கதையைப் பார்ப்போம்!

ஈர்க்கப்பட்ட இளசுகள்

முதலில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளசுகள் மத்தியில் இந்த சேவை வைரலானது. தானாக மறையும் படங்களின் புதுமையை அவர்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டதோடு, பரிவர்த்தனைக்குள் பெற்றோர்கள் எட்டிப்பார்க்க முடியாது என்பதாலும் இந்தச் சேவையை மிகவும் விரும்பினர். எந்த கவலையும், தயக்கங்களும் இல்லாமல் அந்தந்த தருணங்களை சுயபடங்களாக பகிர்ந்து கொள்ளலாம் என்பதை இளம் தலைமுறை வெகுவாக விரும்பினர்.

இளம் தலைமுறையினர் இந்தச் சேவையை விரும்பியதற்கு அது தந்த சுதந்திரமும் ஒரு காரணம் என்றாலும், படங்களின் தடங்கள் இல்லாமல் போவது என்பது தனியுரிமை நோக்கிலும் ஏற்கக் கூடியதாக அமைந்தது. இணையத்தில் பயனாளிகள் தகவல் சேகரிப்பு என்பது தனியுரிமைக்கான பெரும் சவாலாகக் கருதப்பட்டு விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், ஸ்னேப்சேட்டின் மறையும் படங்கள் புதுயுக சேவையாகக் கருதப்பட்டது.

தொடர்ந்து ஸ்ன்பேசேட் அறிமுகம் செய்த பல புதிய அம்சங்கள் அந்தச் சேவையை மேலும் பிரபலமாக்கியது.

(தொடரும்)

இவான் ஸ்பீஜல்
இவான் ஸ்பீஜல்

பெட்டிச் செய்தி:

அழகிய விளக்கம்!

’ஸ்னேப்சேட் சேவை பாரம்பரியமான கோடக் தருணங்களை பதிவு செய்வதற்கானது அல்ல’ என்று அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார் இதன் இணை நிறுவனர் ஸ்பீஜல். மனித உணர்வுகளின் முழு வகைமைகளையும் பகிர்ந்துகொள்வதற்கான சேவை இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தருணங்கள் அழகானதாகவோ, முழுமையானதாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை, என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், படத்தை நீக்குவது என்றால் ஏதோ மோசமான ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்றல்லாமல், இதையே இயல்பாக்கிக் காட்டுவதை நோக்கமாகக் கொண்ட சேவை என்றும் ஸ்னேப்சேட்டைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in