சமூக ஊடக வானவில் - 51: இணையத்தில் விரியும் மருத்துவ வலை

சமூக ஊடக வானவில் - 51: இணையத்தில் விரியும் மருத்துவ வலை

இணையத்தில் எல்லாவிதமான தகவல்களையும் தேடலாம் என்றாலும், பயனாளிகள் மருத்துவம் தொடர்பான தகவல்களை மட்டும் தேடாமல் தவிர்ப்பது நலம் என்றே கருதப்படுகிறது. மருத்துவம் தொடர்பான குறிப்புகளில் அரைகுறையான, பிழையான தகவல்கள் இருக்கலாம் என்பது முதல் காரணம். சரியானவற்றைப் பகுத்துணர்வதற்கான திறன் இணையவாசிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பது இன்னொரு காரணம். அப்படியே சரியான தகவல்களை அடையாளம் கொண்டாலும், அவற்றை மருத்துவ நோக்கில் ஏற்ற வகையில் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமல் போகலாம் என்பது மற்றொரு முக்கியக் காரணம்.

மேலும், இணையத்தில் மருத்துவத் தகவல்களைத் தேடும்போது கண்ணில் படும் நோய்க்கூறுகள் தங்களுக்கும் இருப்பதாகப் பலரும் நினைத்துக்கொள்ளும் அபாயமும் அதிகம். இந்த வகை அச்சம் சைபர்காண்டிரியா (Cyberchondria ) என குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த எச்சரிக்கை எல்லாம் சராசரி பயனாளிகளுக்குத்தான். மருத்துவர்கள் என்று வரும்போது, இணையத்தைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். 70 சதவீதத்திற்கும் மேலான மருத்துவர்கள் தொழில்முறை நோக்கில் இணையத்தைப் பயன்படுத்துவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மருத்துவர்களின் தேடல்

மருத்துவர்களைப் பொறுத்தவரை, மருந்துகள் தொடர்பான தகவல்களையும், அண்மை ஆய்வு தொடர்பான தகவல்களையும் இணையத்தில் அதிகம் நாடுகிறார்கள். மருத்துவர்கள் இணைய பயன்பாட்டில் மட்டும் அல்ல, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவ்வளவு ஏன், மருத்துவர்களுக்கு என்று பிரத்யேகமான சமூக வலைப்பின்னல் சேவைகளும் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கான முன்னணி பத்து சமூக வலைப்பின்னல் தளங்கள் எனப் பட்டியலிடும் அளவுக்கு மருத்துவ வலைப்பின்னல் தளங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றான டாக்ஸிமிட்டி (https://www.doximity.com/) தன்னை மருத்துவ வலைப்பின்னல் என வர்ணித்துக் கொள்கிறது. ஜூம் வீடியோ சந்திப்பு சேவை போல, நோயாளிகளைக் காணொலி வாயிலாகச் சந்தித்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வழி செய்யும் சேவை உள்ளிட்டவற்றை வழங்கினாலும், இந்தத் தளத்தின் பிரதான சேவை மருத்துவர்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுப்பதாக அமைகிறது.

டாக்ஸிமிட்டி, பிரதானமாக நான்கு வகையான சேவைகளை மருத்துவர்களுக்கு அளிக்கிறது. மருத்துவ உலகின் செய்திகளை விரல் நுனியில் அளிப்பதோடு, மருத்துவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறது. மருத்துவர்களுடன் நட்பு வளர்த்துக்கொள்ளவும் வழி செய்யும் இந்தத் தளம், மருத்துவர்களுக்கான தனிப்பட்ட மெசேஜிங் வசதியையும் அளிக்கிறது. செவிலியர்களும் இதில் இணையலாம்.

மருத்துவர்களுக்கான லிங்க்டுஇன்

அமெரிக்காவிலிருந்து இயங்கும் இந்தத் தளம், 2010-ல் தொடங்கப்பட்டது. ‘மருத்துவர்களுக்கான லிங்க்டுஇன்’ என கருதப்படும் இந்தத் தளத்தை ஜெப் டாங்க்னே (Jeff Tangney ) என்பவர் இணை நிறுவனர்களுடன் இணைந்து ஆரம்பித்தார். 2018-ம் ஆண்டுவாக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட வலைப்பின்னலாக இது வளர்ந்தது. அமெரிக்காவில் 70 சதவீத டாக்டர்கள் இந்தத் தளத்தில் உறுப்பினராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மருத்துவர்கள் இந்த வலைப்பின்னல் வாயிலாக துறைசார்ந்த வல்லுநர்களை அறியலாம் என்பதோடு, மருத்துவத் தகவல்களையும் பரிமாறிக்கொள்ளலாம். சிக்கலான நோயாளிகளை எதிர்கொள்ளும்போது, சிகிச்சை முறை தொடர்பான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபடலாம். மருத்துவர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பதால், அவர்களுக்கு தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஏற்ற வலைப்பின்னலாக இந்தத் தளம் அமைகிறது.

இதே போல மருத்துவர்களுக்கான இன்னொரு புகழ்பெற்ற சமூக வலைப்பின்னல் தளமாக செர்மோ (https://www.sermo.com/) விளங்குகிறது. சக மருத்துவர்களைத் தொடர்புகொள்வது, சவாலான நோயாளிகள் சிகிச்சையில் உதவுவது, மருந்து கண்டுபிடிப்பில் பங்களிப்பது என பலவிதங்களில் இந்த வலைப்பின்னல் மருத்துவர்களுக்குக் கைகொடுக்கிறது. சர்வதேச அளவில் செயல்படும் இந்தத் தளம், ‘மருந்துகள் பற்றிப் பேசலாம், செய்திகளை விவாதிக்கலாம், கிசுகிசுக்கலாம்’ என்றும் சொல்கிறது.

மருத்துவர்கள் பங்கேற்பிற்கு ஊக்கம் அளிப்பது, மருந்து கண்டுபிடிப்பு பரிசீலனைகளுக்குப் புள்ளிகள் அளிப்பது என பலவிதமான அம்சங்களை இந்தத் தளம் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் மத்தியில் எவை எல்லாம் பேசுபொருளாக இருக்கிறது என்பதையும் இந்தத் தளம் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். மருத்துவர்களின் உள்ளொளியையும் இந்தத் தளத்தில் அறிய முடியும்.

இந்தியாவிலும்...

சர்வதேச அளவில் மேலும் பல பிரத்யேக மருத்துவ வலைப்பின்னல் சேவைகள் உள்ள நிலையில், இந்தியா சார்ந்த மருத்துவ வலைப்பின்னல் தளங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஒன்றான கியூரோபை (Curofy) ஐஐடி பட்டதாரிகளான பவன் குப்தா உள்ளிட்டோரால் தொடங்கப்பட்டது. இணையதளம் மற்றும் செயலி வடிவம் கொண்டுள்ள இந்தச் சேவை மருத்துவர்கள், மருத்துவர்களைக் கண்டறிய உதவுவதாகச் சொல்கிறது.

தொழில்முறை வலைப்பின்னல் சேவையான லிங்க்டுஇன் மற்றும் மெசேஜிங் சேவையான வாட்ஸ்-அப் ஆகியவற்றின் அம்சங்கள் இணைந்ததாக இந்தச் சேவை அமைகிறது. இதில் மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளலாம் அல்லது குழு உரையாடலில் ஈடுபடலாம். தனியுரிமைச் சிக்கல்கள் இல்லாமல் உரையாடலாம். நோயாளிகள் பற்றிய தகவல் பரிமாற்றத்தில் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கான தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

டாக்பிலக்சஸ் (Docplexus), டெய்லிரவுண்ட்ஸ் (DailyRounds), அமாங்க் டாக்டர்ஸ் (Among Doctors) உள்ளிட்ட தளங்களும் செயல்பட்டு வருகின்றன. மாம் எம்டி (MomMD) தளம் பெண் மருத்துவர்களுக்கான விவாதக் குழுவாக இயங்குகிறது.

இன்ஸ்டாகிராம், டிவிட்டர், ஸ்னேப்சேட் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களை ஆர்வத்துடன் பயன்படுத்தும் மருத்துவர்கள் பலர் இருக்கின்றனர். எனினும், மருத்துவர்களுக்கான பிரத்யேக வலைப்பின்னல் தளங்கள், மருத்துவர்கள் தங்களுக்கான இணைய சமூகத்தை உருவாக்கிக்கொள்ள உதவுகின்றன. மேலும், மருத்துவத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், ஆலோசனைகள் பெறவும் வழிவகுக்கின்றன.

(தொடரும்)

பெட்டிச் செய்தி:

மாணவர்களுக்கான வலை

மருத்துவர்களுக்காகப் பிரத்யேக வலைப்பின்னல் தளங்கள் இருப்பது போல, மருத்துவப் படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளமும் இருக்கிறது. ‘ஸ்டூடன்ட் டாக்டர்ஸ் நெட்வொர்க்’ (Student Doctors Network ) எனும் இந்தத் தளம், அவர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கும் இடமாக விளங்குகிறது. இதே போன்ற சேவையை டாக்டர்ஸ் ஹேங்கவுட் (DoctorsHangout ) தளமும் அளிக்கிறது. ஆல்நர்சஸ் (https://allnurses.com/) செவிலியர்களை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in