சமூக ஊடக வானவில்- 50: நேரலையில் சந்திப்போம்!

சமூக ஊடக வானவில்- 50: நேரலையில் சந்திப்போம்!

மீர்கேட் (Meerkat) செயலி அறிமுகமானபோது ஏற்பட்ட பரபரப்பையும் விவாதத்தையும் சமூக ஊடக உலகம் அதற்கு முன் பின்னும் கண்டதில்லை எனச் சொல்லலாம். சமூக ஊடக வெளிக்குள், நேரலைத் தகவல் தொடர்பு எனும் புதிய பிரிவை மீர்கேட் பிரபலமாக்கியது என்பது மட்டும் அல்ல, இந்தப் பிரிவில் முன்னிலை பெறுவதற்கான வலுவான போட்டியை அறிமுகத்திலேயே அது சந்தித்ததும் இதற்கு காரணம்.

இன்று மீர்கேட் செயலி இல்லை. அதற்குச் சவால் விடுக்கும் வகையில் உருவான பெரிஸ்கோப் (Periscope) செயலியும் பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், இந்த இரண்டு செயலிகளையும் திரும்பிப் பார்ப்பது அவசியமாகிறது. ஏனெனில், நேரலை வசதியை இந்தச் செயலிகள்தான் சமூகமயமாக்கின.

இணைய வீடியோ

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு முன்னணி சமூக ஊடக சேவைகள் மூலமாக நேரலை செய்யும் அளவுக்கு இந்த வசதி பிரபலமாகிவிட்டாலும், நேரலை வசதியின் தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர்த்த மீர்கேட் உதவியது என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்று லைவ்-ஸ்டிரீமிங் எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படும் நேரலை வசதிக்கு இணையத்தில் நீண்ட வரலாறு இருக்கிறது. 1995-ம் ஆண்டிலேயே ரியல் நெட்வொர்க்ஸ் நிறுவனம், வீடியோ ஸ்டிரீமிங் வசதி கொண்ட ரியல் பிளேயர் வசதியை அறிமுகம் செய்தது. எனினும், அன்றைய காலகட்டத்தில் வீடியோ என்பது இணைய வசதியால் சுமக்க முடியாத சுமை எனக் கருதப்பட்டதால் நேரலை வீடியோ வசதி பிரபலமாகவில்லை.

இதனிடையே 2005-ல் யூடியூப் அறிமுகமான பிறகு இணைய வீடியோ பிரபலமானது. ட்விட்டர் குறும்பதிவு வசதியைப் பிரபலமாக்கியது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட புகைப்படப் பகிர்வு சேவைகளும் பிரபலமாயின.

இந்தப் பின்னணியில்தான், 2015-ல் மீர்கேட் செயலி அறிமுகமானது. தென்னாப்பிரிக்காவில் காணப்படும் அழகிய விலங்கினத்தின் பெயர் கொண்ட இந்தச் செயலி, குறும்பதிவு சேவையான ட்விட்டருக்குள் இருந்து நேரலை செய்யும் வசதியை அறிமுகம் செய்தது.

மீர்கேட் செயலி வாயிலாகப் பயனாளிகள் தங்கள் மொபைல் கேமராவில் இருந்து நேரலை செய்ய முடிந்தது. இந்த வசதி ட்விட்டர் சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததால், பயனாளிகளின் ட்விட்டர் ஃபாலோயர்கள் இந்த நேரலையை அவர்கள் டைம்லைனில் பார்வையிடுவது சாத்தியமானது. இவ்வாறு கையில் உள்ள மொபைல் மூலம் பயனாளிகள் நேரலை செய்யும் வாய்ப்பும், அதற்கான பார்வையாளர்களை ட்விட்டர் மூலம் தேடிக்கொள்ளும் சாத்தியமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாமானியர்களும் நேரலை செய்யலாம்

மீர்கேட் நேரலையைப் பயனாளிகள் பார்த்து ரசிப்பதோடு ட்விட்டர் அல்லது மீர்கேட் செயலியில் இருந்து அவற்றுக்குப் பதில் அளிக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தது.

நேரலை தொழில்நுட்பம் சாத்தியம் ஆகியிருந்தாலும், நடைமுறையில் நேரலை செய்வது என்பது நடைமுறையில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அல்லது லைவ்ஸ்டிரீம்.காம் (https://livestream.com/) போன்ற இணையதளங்களின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களுக்குமே சாத்தியமான நிலையில், சாமானியர்களும் எளிதாக நேரலை செய்யலாம் எனும் வசதி மீர்கேட்டை உடனடியாகப் பிரபலமாக்கியது.

மீர்கேட் சேவையை உருவாக்கிய பென் ரூபின் (Ben Rubin) இந்தச் சேவையை அமெரிக்காவில் நடைபெற்ற சவுத்வெஸ்ட் எனும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து பலரும் மீர்கேட்டில் நேரலையில் ஈடுபட்டது இந்தச் செயலியின் வீச்சை அதிகமாக்கியது.

போராட்ட களத்திலிருந்து...

இனி நேரலை வசதியை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பரபரப்பாகப் பேசப்பட்டுவந்த நிலையில், நேரலை வசதியோடு பெரிஸ்கோப் செயலியும் அறிமுகமானது. இதன் நிறுவனர்களான கேவியோன் பேக்போர் ((Kayvon Beykpor), ஜோ பெர்ன்ஸ்டியன் (Joe Bernstein) ஆகிய இருவரும் துருக்கி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது அங்கு வெடித்த போராட்டத்தைப் பார்த்தனர். நேரலை செயலிக்கான தேவையை உணர்ந்தனர். துருக்கி போராட்டம் பற்றி தகவல்களைத் தேடியபோது ட்விட்டரில் போராட்டத் தகவல்களைப் படிக்க முடிந்ததே தவிர போராட்டத்தைக் காணும் வசதி இல்லை. எனவே, இது போன்ற நிகழ்வுகளை நேரலையில் பகிரும் வசதி கொண்ட பெரிஸ்கோப் செயலியை அறிமுகம் செய்தனர்.

மீர்கேட் அறிமுகமான அதே நேரத்தில் பெரிஸ்கோப் அறிமுகமானது. ஆனால், அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே ட்விட்டர் நிறுவனம் இந்தச் செயலியை விலைக்கு வாங்கி தனது சேவையில் ஒருங்கிணைத்தது. ஆக, நேரலை வசதி என்பது அடுத்த பெரிய விஷயம் என உணரப்பட்டதோடு, மீர்கேட் மற்றும் பெரிஸ்கோப் இடையிலான போட்டியாகவும் மாறியது.

முடிவுக்கு வந்த செயலி

ட்விட்டரைப் பெரிதும் நம்பியிருந்தது இந்தப் போட்டியில் மீர்கேட் செயலிக்கு மிகவும் பாதகமாக இருந்தது. அதே நேரத்தில் ட்விட்டர் மீர்கேட்டுக்குக் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்து மேலும் சிக்கலை உண்டாக்கியது. மீர்கேட் இது பற்றி கவலைப்படாமல் தனித்து நிற்பதாக அறிவித்தாலும், அடுத்த ஆண்டே சேவையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், மீர்கேட் செயலியை உருவாக்கிய ரூபல், வீடியோ வழியே தொடர்புகொள்வதற்கான ஹவுஸ்பார்ட்டி (Houseparty) எனும் மற்றொரு செயலியை உருவாக்கினார். கோவிட்-19 அலை வீசத் தொடங்கியபோது, எல்லோரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நிலையில் ஹவுஸ்பார்ட்டி வீடியோ தொடர்பு செயலி மெய்நிகர் சமூகத் தொடர்புக்கு வழி செய்தது. பின்னர் இந்தச் செயலி வீடியோகேப் நிறுவனமான எபிக்கால் வாங்கப்பட்டது.

செய்தியாளர்கள் களத்திலிருந்து நேரலை செய்தி வழங்குவதற்கு பெரிஸ்கோப் மற்றும் மீர்கேட் சேவைகள் வழி செய்ததால், இந்த வகைச் செயலிகள் மேலும் பிரபலமடையத் தொடங்கின.

பெரிஸ்கோப் சேவையும் 2021-ல் மூடப்பட்டது என்றாலும், இதனிடையே ஃபேஸ்புக் தன் பங்குக்கு லைவ் வசதியை அறிமுகம் செய்திருந்தது. இதன் பயனாக நேரலை தகவல் தொடர்பு வசதி சமூக ஊடகப் பரப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆப்பிள் அறிமுகம் செய்த ஃபேஸ்டைம் உள்ளிட்ட செயலிகளால் இந்தப் பிரிவு விரிவடைந்து கொண்டிருக்கிறது.

(தொடரும்)

பெட்டிச் செய்தி:

வீடியோ வலை

வீடியோ சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவைகள் பற்றி பேசும்போது, 2011-ல் அறிமுகமான கீக் (Keek) சேவையை மறந்துவிடக் கூடாது. ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் பிளாக்பெரி ஸ்மார்ட்போன்களில் செயல்படக்கூடிய சேவையாக அறிமுகமான கீக், பயனாளிகள் வீடியோ நிலைத்தகவல்களை வெளியிட வழி செய்தது. சக பயனாளிகள் இவற்றுக்குப் பதில் அளிக்கும் வசதியும் இருந்தது. இந்த வீடியோக்களை மற்ற சமூக ஊடகங்களில் பகிரும் வசதியும் அளிக்கப்பட்டது. கனடா நாட்டில் இருந்து அறிமுகமான இந்தச் சேவை, வீடியோவுக்கான இன்ஸ்டாகிராம், யூடியூபின் குறும் வடிவம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், 2016-ல் மூடுவிழா கண்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in