சமூக ஊடக வானவில்- 49: கேமர்களுக்கான அரட்டைச் செயலி

சமூக ஊடக வானவில்- 49: கேமர்களுக்கான அரட்டைச் செயலி

சமூக ஊடக உலகில் ஒவ்வொரு பிரிவிலும், எண்ணற்ற சேவைகள், செயலிகள் இருந்தாலும், குறிப்பிட்ட பிரிவுக்கான தனித்தன்மையான, தேவைக்கு ஏற்ப பொருத்தமான செயலிகளை நாடுவதே இணையவாசிகளின் இயல்பாக இருக்கிறது. அந்த வகையில் வீடியோகேம் பிரியர்களின் விருப்பமான சமூக ஊடகச் சேவையாக டிஸ்கார்டு (Discord) உருவாகியிருக்கிறது.

டிஸ்கார்டும் அரட்டை அல்லது உரையாடலுக்கான செயலிதான் என்றாலும், வாட்ஸ்-அப் அல்லது மெசஞ்சர் போன்ற வழக்கமான செயலிகளுடன் ஒப்பிடுவதன் மூலம் டிஸ்கார்டு செயலியைப் புரிந்துகொள்ள முடியாது. டிஸ்கார்டு சேவையின் தன்மையை உணர வேண்டும் என்றால், டீம்ஸ்பீக் அல்லது ஸ்லேக் போன்ற தொழில்முறை அரட்டைச் செயலிகளுடன் வைத்து டிஸ்கார்டை அணுக வேண்டும். அதோடு வீடியோகேம் உலகின் தன்மையையும் மனதில் கொள்ள வேண்டும்.

வரவேற்பின் பின்னணி

டீம்ஸ்பீக் அல்லது ஸ்லேக் போன்ற தொழில்முறை சேவைகளில் உள்ள அம்சங்கள் டிஸ்கார்டில் இருப்பதோடு, வீடியோகேம் சார்ந்த உரையாடலுக்கு ஏற்ற தன்மையும் கொண்டிருக்கிறது. எனவேதான் டிஸ்கார்டு, வீடியோகேம் பிரியர்களின் பிரத்யேக செயலியாக வரவேற்பைப் பெற்றுள்ளது. அது மட்டும் அல்ல, வீடியோகேம் பிரியர்கள் டிஸ்கார்டை தங்களுக்கான சேவையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகள் பிரபலமாக இருந்தாலும், வீடியோகேம் சார்ந்த கருத்துப் பரிமாற்றத்துக்கு டிஸ்கார்டே அதிகம் நாடப்படுகிறது.

கிரிக்கெட் போன்ற விளையாட்டில் நேர்முக வர்ணனை எப்படி பிரிக்க முடியாத அம்சமோ அதே போல, வீடியோ கேம்களில் பரஸ்பர உரையாடல் அல்லது அரட்டை என்பது மிகவும் முக்கியம். அதாவது, கேம் விளையாடுபவர்கள், ஆன்லைனில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே விளையாடுவதைத்தான் விரும்புகின்றனர். திரையில் சுட்டுத்தள்ளும் விளையாட்டோ அல்லது பலவிதமான பாத்திரமேற்று விளையாடும் தன்மை கொண்ட விளையாட்டோ எதுவாக இருந்தாலும், அதன் நுணுக்கங்களையும் இன்னும் பிற விஷயங்களையும் மற்ற பயனாளிகளுடன் பேசியபடி விளையாடுவதில்தான் வீடியோகேம்களின் உண்மையான த்ரில் இருக்கிறது.

ஆனால், வழக்கமான அரட்டைச் செயலிகளை ஆன்லைன் வீடியோகேம்களுடன் இணைப்பது அத்தனை எளிதல்ல. வீடியோகேம் அனுபவத்துக்கு இடையூறு இல்லாத வகையில், அரட்டை அனுபவம் வழங்கக்கூடிய செயலி இதற்குத் தேவை. இத்தகைய செயலியாகத்தான் டிஸ்கார்டு அமைந்திருக்கிறது.

சிறப்பம்சங்கள்

டிஸ்கார்டு செயலியில், பயனாளிகள் தங்களுக்கான சர்வரை உருவாக்கிக்கொண்டு, அந்த சர்வரில் இருந்து மற்றவர்களைத் தொடர்புகொள்ளலாம். டிஸ்கார்டைப் பொறுத்தவரை சர்வர் என்பது அரட்டைக்கான வெளி அல்லது அறை எனப் புரிந்துகொள்ளலாம். டிஸ்கார்டு செயலி அல்லது இணையதளத்தில் நுழைந்து உறுப்பினரான பின், பயனாளிகள் தங்களுக்கான சர்வரை உருவாக்கிக்கொள்ளலாம் அல்லது அழைப்பின் பேரில் ஏற்கெனவே உள்ள சர்வரில் இணைந்து உரையாடலாம்.

ஒவ்வொரு சர்வருக்குள்ளும் தனித்தனியே சேனல்களையும் அமைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு சேனலும் குறிப்பிட்ட தலைப்பு சார்ந்ததாக இருக்கலாம். அந்தந்த தலைப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள் அதற்கான சேனலில் உரையாடலாம். உரையாடல் வெளியைத் தனிப்பட்டதாகவும் அமைத்துக் கொள்ளலாம் அல்லது பொதுவில் வைத்து மற்றவர்கள் பங்கேற்கவும் வகை செய்யலாம்.

தனிப்பட்ட சர்வர் அல்லது சேனல் எனில், பயனாளிகள் தங்களுக்குள் மட்டும் உரையாடிக்கொள்ளலாம். எழுத்து வடிவில், பேச்சு வடிவில் அல்லது வீடியோ என விரும்பிய எந்த முறையிலும் உரையாடலை மேற்கொள்ளலாம். ஆடியோ அல்லது வீடியோ சேவையை அணுக வேண்டும் எனில் அதற்கென தனியே அரட்டை அறையை உருவாக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லாமல், நேரடியாக எந்த அறைக்குள்ளும் நுழைந்து பேசத் தொடங்கலாம்.

ஒருவர் எத்தனை சேனல்களில் வேண்டுமானாலும் உறுப்பினராகச் சேரலாம். அதோடு உரையாடல்களில் இருந்து தேவையான தகவல்களைத் தேடிப்பெறும் தேடல் வசதியும் இருக்கிறது. எனவே, வீடியோகேம் பிரியர்கள் தங்களுக்குத் தேவையான அரட்டைத் தோழர்களை எளிதாகக் கண்டறியலாம்.

துணை அரட்டைச் சேவை

டிஸ்கார்டில் எல்லாமே உரையாடல் சார்ந்ததுதான். ஃபேஸ்புக், ட்விட்டர் போல, இதில் நண்பர்கள் அல்லது ஃபாலோயர் எண்ணிக்கை எல்லாம் கிடையாது. லைக் கணக்குகளுக்கும் இதில் இடமில்லை. டிஸ்கார்டு, அடிப்படையில் கருத்து பரிமாற்றம் சார்ந்த சேவையாக அமைகிறது. அதிலும் குறிப்பாக, வீடியோகேம் சார்ந்த துணை அரட்டைச் சேவையாக விளங்குகிறது.

டிஸ்கார்டு சேவையில் மற்ற சமூக ஊடக சேவைகளையும் இணைக்கும் வசதி இருக்கிறது. விரும்பினால் அந்தச் சேவைகளையும் இணைத்துக்கொள்ளலாம். ஆனால், தனியுரிமையை விரும்புகிறவர்கள் டிஸ்கார்டு பயன்பாட்டைத் தனியே வைத்துக்கொள்ளலாம். அரட்டை தொடர்பான கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் வசதியும் டிஸ்கார்டில் இருக்கிறது.

டிஸ்கார்டு சேவை ஜேஸன் சிட்ரான் (Jason Citron) மற்றும் அவரது நண்பர் ஸ்டானிஸ்லாவ் விஷ்னவேஸ்கி (Stanislav Vishnevsky ) ஆகியோரால் 2015- ல் தொடங்கப்பட்டது. மென்பொருளாளரான சிட்ரானுக்கு வீடியோகேம் உருவாக்கத்தில் ஆழ்ந்த அனுபவம் இருந்தது. 2012-ல் அவர் வீடியோகேம் நிறுவனம் ஒன்றையும் உருவாக்கியிருந்தார். வீடியோகேம் தொடர்பான கருத்து பரிமாற்றத்துக்கான அரட்டை வசதி இல்லை என்பதை உணர்ந்த நிலையில், தானே அத்தகைய சேவையை உருவாக்கத் தீர்மானித்தார். இதன் விளைவாக உருவானதுதான் டிஸ்கார்டு!

பெருந்தொற்றின்போது பேருதவி

டிஸ்கார்டு வீடியோகேம் சார்ந்த அரட்டைச் சேவையாக உருவாகி பிரபலமானாலும் இப்போது பொதுவான பயனாளிகள் மத்தியிலும் அதிகம் விரும்பப்படுகிறது. டிஸ்கார்டு தரும் வசதிகளை விரும்பி பலரும் குழு உரையாடல் மற்றும் தனிப்பட்ட திட்டமிடல் போன்றவற்றுக்கு இந்தச் சேவையை நாடுகின்றனர். அதிலும் குறிப்பாக, கோவிட்-19 பாதிப்பு சூழலில் டிஸ்கார்டு சேவை பலருக்கும் கைகொடுத்தது.

வெறும் அரட்டைச் சேவையாக மட்டும் அல்லாமல், எழுத்து வடிவிலான உரையாடலோடு, குரல் மற்றும் வீடியோ வசதியும் கொண்டிருப்பது டிஸ்கார்டின் பயன்பாட்டை அதிகமாக்கியுள்ளது. டிஸ்கார்டில் விளம்பரக் குறுக்கீடு கிடையாது. ஆனால், கூடுதல் அம்சங்கள் கொண்ட கட்டணச் சேவையைப் பிரத்யேகமாக வழங்குகிறது.

(தொடரும்)

பெட்டிச் செய்தி:

டிஸ்கார்டு தளங்கள்

டிஸ்கார்டு சார்ந்த துணைத் தளங்களும் பல இருக்கின்றன. டிஸ்கார்டில் சர்வர்கள்தான் பிரதானம் என்பதால், பயனாளிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற சர்வரைக் கண்டறிந்து அதில் இணைவது ஏற்றதாக இருக்கும். எண்ணற்ற தலைப்புகளில் சர்வர்கள் இருப்பதால், அவற்றைக் கண்டறிவதற்கான டிஸ்கார்டுஹோம் (https://discordhome.com/) , பைண்ட்-எ-டிஸ்கார்டு (https://findadiscord.com/ ) போன்ற இணையதளங்களும் பல இருக்கின்றன. இந்தத் தளங்களில் நுழைந்து தேடிப்பார்த்தால் டிஸ்கார்டு எந்த வகையான இணைய சமூகமாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in