சமூக ஊடக வானவில்- 47: இன்ஸ்டா தன்மைக்கு எதிரான செயலிகள்!

சமூக ஊடக வானவில்- 47: இன்ஸ்டா தன்மைக்கு எதிரான செயலிகள்!

சமூக ஊடக உலகில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு எதிரான செயலிகள் அறிமுகம் ஆகிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பரவலாகப் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மாற்றாக விளங்கக்கூடிய செயலிகளாக இவை முன்னிறுத்தப்படுகின்றன. ஆன்டி -ஃபேஸ்புக் அல்லது ஆன்டி-இன்ஸ்டாகிராம் என வர்ணிக்கப்படும் இந்த வகைச் செயலிகளை, ஃபேஸ்புக் மற்றும் அதன் அங்கமான இன்ஸ்டாகிராம் எனும் தனிச் சேவைகளுக்கு எதிரான செயலிகள் எனப் புரிந்துகொள்ளக் கூடாது.

ஃபேஸ்புக்கும், இன்ஸ்டாகிராமும் முன்னிறுத்தும் தன்மைக்கு எதிரான செயலிகளாக, அதைவிட முக்கியமாக ஃபேஸ்புக்கும், இன்ஸ்டாகிராமும் பரவலாகப் பயன்படுத்தப்படும் விதத்துக்கு எதிரான தன்மை கொண்ட செயலிகளாக இந்த மாற்று செயலிகளைக் கருத வேண்டும். ஒரு வகையில் சமூக ஊடக சேவைகள் ஏற்படுத்தியுள்ள மோகத்துக்கு எதிரான செயலிகளாகவும் இவற்றைக் கருதலாம்.

இந்த வகை செயலிகளில், இன்ஸ்டாகிராமுக்கு எதிரான செயலிகள் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

சுயமோகத்துக்கு எதிரானது

இன்ஸ்டாகிராம் சமூக ஊடக உலகின் முன்னணி செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. தனிநபர்கள் முதல் பிராண்ட்கள் வரை பல வகையான பயனாளிகள் இன்ஸ்டாகிராம் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அடிப்படையில் புகைப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம், சமூக ஊடகத் தலைமுறையின் தனிமொழிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. இன்ஸ்டா மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் இருக்கின்றனர். இன்ஸ்டா மூலம் வளர்ந்த பிராண்ட்கள் உண்டு. இவ்வளவு ஏன், இன்ஸ்டாகிராமுக்கு ஏற்ற இடங்கள் எனும் தனி வகைமையும்கூட சுற்றுலாவில் உருவாகியிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்துக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. இன்ஸ்டாகிராம் அதன் பயனாளிகள் பெரும்பாலானோரை சுயமோகத்தில் மூழ்க வைக்கிறது. இன்ஸ்டாவில் பகிர்வதற்கு ஏற்ற தோற்றத்தை மனதில் கொண்டு, பயனாளிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விருப்பங்களுக்கும், எண்ணிக்கைக்கும் ஏங்கி எப்போதும் பகிர்வுக்காக அலைமோத செய்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, கண்முன் இருக்கும் தருணத்தை உணர்வதற்கு பதில், பகிர்வு மோகத்துக்கு அடிமையாக்குகிறது.

இன்ஸ்டாகிராம் இப்படி எல்லாம் பயன்படுத்தப்படுவது தெரிந்தும்கூட, இதே வகையான ஈடுபாட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊக்குவிக்கும் அல்லது திணிக்கும் வகையிலான அல்கோரிதமைக் கொண்டிருக்கிறது என்பதே இன்ஸ்டாகிராம் மீதான குற்றச்சாட்டாக அமைகிறது.

இந்த விமர்சனங்கள் மூலம், இன்ஸ்டாவுக்கு எதிரான செயலிகளுக்கான தேவையைப் புரிந்துகொள்ளலாம். இதற்கான அருமையான உதாரணமாக டிஸ்போ.ஃபன் (dispo.fun) செயலியைச் சொல்லலாம். ஒவ்வொரு விதத்திலும் இன்ஸ்டாகிராமுக்கு எதிரான தன்மை கொண்ட சமூக ஊடகச் செயலி இது.

டிஸ்போஸபிள் கேமராவின் தன்மை

இன்ஸ்டா போலவே டிஸ்போவும் புகைப்படங்களைப் பகிர வழி செய்தாலும், இதில் பகிரப்படும் எந்த படத்தையும் உடனடியாகப் பார்க்க முடியாது. மறுநாள் காலை 9 மணி அளவிலேயே படங்களைப் பார்க்க முடியும். இந்த வகையில், ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த, ஒரு முறை பயன்பாட்டிற்கான டிஸ்போஸபிள் கேமராவின் தன்மையை இது கொண்டிருக்கிறது.

ஒரு முறை கேமராவில் படம் எடுத்த பிறகு, மொத்தமாக கேமராவோடு புகைப்படச் சுருளைக் கொடுத்து அடுத்த நாள் அதில் உள்ள படங்களை அச்சிட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். கிளிக் செய்தவுடன் திரையில் படத்தைப் பார்த்து மெருகேற்றிக்கொள்ளும் டிஜிட்டல் யுகத்தில், இப்படி ஒரு கேமரா இருந்ததா என்றுகூட நினைக்கத்தோன்றும். ஆனால், ஒரு முறை பயன்பாடு கேமராக்கள், 1980-90 களில் பிரபலமாக இருந்தன.

டிஸ்போ செயலி, இந்த பழைய கேமராக்களின் தன்மையோடு, படங்களை உடனே பார்க்க வழியில்லாமல், ஒரு நாள் இடைவெளியில் பார்க்க வைக்கிறது. அது மட்டும் அல்லாமல், எடுக்கப்பட்ட படங்களைப் பலவிதமான ஃபில்டர்கள் மூலம் மேம்படுத்துவதோ, மெருகேற்றுவதோ சாத்தியம் இல்லை. அவற்றை அப்படியே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதோடு, லைக் செய்வது பின்தொடர்வது போன்றவையும் கிடையாது. வழக்கமான சமூக ஊடகச் செயலிகள் தன்மைக்கு எதிரான அம்சங்களைக் கொண்டிருப்பதாலேயே டிஸ்போ செயலி ஆன்டி- இன்ஸ்டாகிராம் என அழைக்கப்பட்டு பிரபலமானது.

டேவிட் டோப்ரிக்
டேவிட் டோப்ரிக்

ஒரு முறைதான் பகிர முடியும்

யூடியூப் மூலம் பிரபலமான டேவிட் டோப்ரிக் (David Dobrik) இந்தச் செயலியை உருவாக்கினார். ‘டேவிட்ஸ் டிஸ்போஸபிள்’ எனும் பெயரில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்து பின்னர் டிஸ்போ செயலியாக மாறியது. தொடக்கத்தில் அழைப்பின் பேரிலேயே உறுப்பினராக இணையலாம் என்பது இந்தச் செயலியின் ஈர்ப்புக்கு ஒரு காரணம் ஆனது. டிஸ்போ செயலியின் வரவேற்பை அடுத்து இதே போன்ற பெயர் கொண்ட போலி செயலிகள் பல உருவானது தனிக்கதை.

இந்த வரிசையில்தான் ’பீரியல்’ (https://bere.al/en ) செயலியும் வருகிறது. பகிர்வுக் கலாச்சாரத்தில் இருந்து விலகி, உண்மையான தருணங்களைப் பகிர வழி செய்யும் செயலியாக இது கருதப்படுகிறது. இந்தச் செயலியில் புகைப்படங்களைப் பகிரலாம் என்றாலும் ஒரு நாளுக்கு ஒரு முறைதான் பகிர முடியும். அந்த நேரத்தையும் செயலியே பரிந்துரைக்கிறது.

ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில், இப்போது படம் எடுத்து பகிரலாம் என இந்த செயலி தெரிவிக்கும். இதற்காக இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும். அதற்குள் படம் எடுத்து பகிர வேண்டும். படத்திற்காகத் திட்டமிட அல்லது தயாராக வழி இல்லாததால் அப்போதைய தருணத்தை உண்மையாக வெளியிட இந்தச் செயலி உதவுகிறது. எவ்வித பாசாங்கும் இல்லாமல் உள்ளது உள்ளபடி பகிரப்படும் இந்தத் தன்மையே ’பீ ரியல்’ செயலியைப் பிரபலமாக்கி உள்ளது. மேலும், தருணங்களின் பகிர்வு மூலம் புதிய நண்பர்களைப் பெறுவதற்கான வழியாகவும் கருதப்படுகிறது.

இது போலவே, ’வெரோ’ (Vero) செயலியும் இன்ஸ்டா எதிர் செயலியாக அறிமுகமானது. இன்ஸ்டா போன்ற அம்சங்களைக் கொண்டிருந்தாலும், புகைப்படங்கள் தோன்றுவது, பார்க்கப்படுவது ஆகிய அம்சங்களை அல்கோரிதம் தீர்மானிக்காமல், இயற்கையான முறையில் அமைவதாக இந்த செயலி தன்னை முன்னிறுத்திக்கொண்டது.

சமூக ஊடகப் பயன்பாடு என்பது மோகமாக மாறி பாதிப்பை ஏற்படுத்துவது பற்றி யோசிக்க வைக்கும் செயலிகளாக இவை அமைகின்றன.

(தொடரும்)

பெட்டிச் செய்தி:

புகைப்பட வலை

இன்ஸ்டாகிராம் புகைப்படப் பகிர்வு செயலியாகப் பிரபலமாக இருந்தாலும், புகைப்படக் கலைஞர்களுக்கான செயலியாக அது அமைந்திருப்பதாகக் கருதப்படவில்லை. இதற்கான காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, புகைப்படக் கலைஞர்களுக்கான செயலியாக ‘கிளாஸ்’ (https://glass.photo/) தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது. புகைப்படக் கலைஞர்கள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு, புகைப்படக் கலைஞர்களின் இணைய சமூகத்தில் மூழ்கியிருக்க வழி செய்வதாக இந்தச் செயலி தன்னை வர்ணித்துக்கொள்கிறது. புகைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்த வைப்பது இந்தச் செயலியின் நோக்கமாக அமைகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in