சமூக ஊடக வானவில் - 46: இது ஹேக்கர்களின் இணைய சமூகம்!

சமூக ஊடக வானவில் - 46: இது ஹேக்கர்களின் இணைய சமூகம்!

பலவிதமாகப் பரந்து விரிந்திருக்கும் சமூக வலைப்பின்னல் தளங்களின் வரிசையில், இந்த வாரம் மென் குறுக்குவழிகளுக்கான பிரத்யேக சமூக வலைப்பின்னல் தளத்தை பார்க்கலாம். தளத்தின் பெயர் ’ஹேக்கடே.இயோ’ (https://hackaday.io/). ஹேக்கடே தளம் பற்றி பார்ப்பதற்கு முன், ’ஹேக்’ என்றால் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சொல் பல பொருள்

பொதுவாக ஹேக் என்பது ஊடுருவலைக் குறிக்கிறது. இந்தச் சொல்லுக்கு மேலும் பலவகையான அர்த்தங்கள் இருக்கின்றன. தொழில்நுட்ப உலகில் கணினி அல்லது வலைப்பின்னலுக்குள் அத்துமீறி நுழைவதைக் குறிக்க ஹேக் எனும் சொல் பயன்படுத்தப்பட்டாலும், இதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. ஒரு விஷயத்தைச் செய்து முடிப்பதற்கான புதிய வழி அல்லது ஒரு பிரச்சினைக்கான எளிய தீர்வும் ஹேக் என்றே சொல்லப்படுகிறது.

அதாவது வழக்கமாகச் செய்யும் ஒரு விஷயத்தை அதைவிட எளிதாகவும் சிறப்பாகவும் செய்வதற்கான வழியாகவும் ஹேக் அமைகிறது. அந்த வகையில் ஹேக் என்பதைக் குறுக்குவழி என்றும் கொள்ளலாம். புதிய தீர்வு அல்லது மேம்பாட்டுக்கு வழிகாட்டுவதால் இதை மென் குறுக்குவழி என்றும் புரிந்து கொள்ளலாம். தினசரி வாழ்க்கைக்கு வழிகாட்டும் மென் குறுக்குவழிகள், ‘லைஃப் ஹேக்ஸ்’ என குறிப்பிடப்படுகின்றன.

ஆக, ஊடுருவும் நோக்கம் கொண்டவர்கள் மட்டும் ஹேக்கர்கள் அல்ல, தொழில்நுட்பத்தின் ஆற்றலால், ஒன்றைப் புதிதாக உருவாக்கும் நோக்கமும், திறனும் கொண்டவர்களும் ஹேக்கர்கள் தாம். இத்தகைய ஹேக்கர்களின் இணைய சமூகமாக விளங்கும், ஹேக்கடே தளத்தின் துணை அங்கமாக ஹேக்கடே.இயோ தளம் செயல்படுகிறது.

இணையத்தில் இருந்து புத்தம் புதிய மென் குறுக்குவழிகளை (ஹேக்) தேடி முகப்புப் பக்கத்தில் அளிப்பதாக ஹேக்கடே தளம் தெரிவிக்கிறது. நல்லெண்ணமும் நல்ல நோக்கமும் சார்ந்த ஹேக்கர்களின் ஆக்கபூர்வ செயல்பாடு பற்றி அறிந்துகொள்ள இந்தத் தளம் உதவியாக இருக்கும். அதைவிட முக்கியமாக, தொழில்நுட்ப திறனால் எத்தனை அருமையான புதிய வழிகளைக் காட்டுகின்றனர் என்ற வியப்பும் மேலிடும். பழைய கணினிகளை மீட்டெடுப்பதில் தொடங்கி, சின்ன சர்க்யூட் போர்டை வைத்துக்கொண்டு புதுமையான தீர்வை உருவாக்குவது வரை எண்ணற்ற குறுக்கு வழிகளை இந்தத் தளத்தில் காணலாம். எல்லாமே கொஞ்சம் தொழில்நுட்ப மெனக்கிடலோடு பயனாளிகளும் செய்து பார்க்கக்கூடியவைதான்.

தொழில்நுட்ப ஆக்கங்களுக்கான பகிர்வு

இனி ஹேக்கடே.இயோ தளத்துக்கு வருவோம். ஹேக்கடே பயனுள்ள குறுக்குவழிகள் தொடர்பான தகவல்களையும், வழிகாட்டுதலையும், வழங்குகிறது என்றால், ஹேக்கடே.இயோ தளம், இத்தகைய குறுக்குவழிகளை உருவாக்குபவர்கள் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான மேடையாக இருக்கிறது. அந்த வகையில் இந்தத் தளத்தைத் தொழில்நுட்ப ஆக்கங்களுக்கான பகிர்வு எனலாம்.

கடந்த வாரம் நாம் பார்த்த கிட்ஹப் சமூகத் தளம், மென்பொருள் திட்டங்கள் சார்ந்தது என்றால், ஹேக்கடே.இயோ வன்பொருள் திட்டங்களுக்கானது. கிட்ஹப் தளத்தில் கணக்கு இருந்தால், அதைக்கொண்டு இந்தத் தளத்திலும் நேரிடையாக நுழையலாம் என்பது கூடுதல் சிறப்பு. அதற்கேற்ப இந்தத் தளம் வன்பொருள் புரட்சியில் இணைய வாருங்கள் என்பதையே தனக்கான கோஷமாகக் கொண்டுள்ளது.

வன்பொருள் எனும்போது தொழில்நுட்பம் சார்ந்த புதிய பொருட்களை உருவாக்குவதற்கான திட்டம் எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால், ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட் வகை வன்பொருள்கள் அல்ல. மாறாக, இருக்கும் நுட்பங்களைக் கொண்டு புதுமையான தீர்வுகளை அளிக்கும் வன்பொருள் திட்டங்கள். உதாரணத்திற்கு, ரெட்ரோ ஆடியோ பிளேயர் எனப்படும் புதிய பழைய எம்பி3 பிளேயரை எடுத்துக்கொள்வோம். பழைய கேஸட் பிளேயர் வடிவில் இப்போதைய எம்பி3 இசையைக் கேட்டு ரசிக்க இந்த சாதனம் வழி செய்கிறது.

வன்பொருள் ஆக்க திட்டங்கள்

ஒரு காலத்தில் கேஸட்களை ஓடவிட்டு கேட்கும் டேப் ரெக்கார்டர்கள் பிரபலமாக இருந்தன. மெல்ல டிஜிட்டல் அலையில் வழக்கொழிந்துபோன எண்ணற்ற சாதனங்களின் வரிசையில் டேப் ரெக்கார்டர்களும் சேர்ந்துவிட்டன. இத்தகைய டேப் ரெக்கார்டரை மீட்டெடுத்து அதன் மூலம் நவீன எம்பி3 பாடல்களைக் கேட்டு ரசிக்கும் வகையில் ஒரு வன்பொருள் திட்டத்தை உருவாக்கி, அதற்கான வழிகாட்டுதலை இந்தத் தளத்தில் பயனாளி ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார். இதைப் படித்துப் பார்க்கும் எவரும் விரும்பினால் தாங்களும் அதே போன்ற நவீன டேப் ரெக்கார்டரை உருவாக்கிக்கொள்ளலாம். வடிவமைப்பு முதல் அதன் நுட்பங்கள் வரை விரிவான விளக்க குறிப்புகள் பகிரப்பட்டுள்ளதால் இதை எளிதாகவே பின்பற்றலாம்.

இப்படி நூற்றுக்கணக்கான வன்பொருள் ஆக்க திட்டங்களை இந்தத் தளத்தில் பார்வையிடலாம். சமூக வலைப்பின்னல் குணாதிசயப்படி, இந்தத் திட்டங்களைப் பின்தொடரவும் செய்யலாம். திட்டங்களுக்கு விருப்பம் தெரிவித்து ஆதரிக்கலாம். விரும்பினால் அந்தத் திட்டத்தில் இணையவும் செய்யலாம்.

ஆக, வழக்கமான சமூக வலைதளங்கள், கருத்துப் பகிர்வுக்குப் பிரதானமாக வழி செய்கின்றன என்றால் இந்தத் தளம், ஆக்கங்களைப் பகிரவும், அதன் அடிப்படையில் உரையாடவும் வழி செய்கிறது. ஃபேஸ்புக் போன்ற தளத்தில் பார்ப்பது போலவே, இதில் ஆக்கங்களுக்கான பார்வைகள், விருப்பங்கள், பின்னூட்டங்கள் ஆகிய தகவல்களை அணுகலாம்.

இணைய சமூகம்

வன்பொருள் ஆக்கங்களில் ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் தளத்தில் பகிரப்படும் திட்டங்களைப் பார்வையிடலாம். உருவாக்குநர்கள் எனில் தங்கள் திட்டங்களைப் பகிர்ந்துகொண்டு சக உறுப்பினர்களின் கருத்துகளைக் கோரலாம். உருவாக்குநர்கள் எனில் தங்கள் திட்டத்திற்கான குறிப்பேடாகக்கூட இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது திட்டத்தின் முன்னேற்றத்தை இந்தத் தளத்தின் வாயிலாக ஆவணப்படுத்தலாம்.

இப்படி பகிர்தலின் நோக்கமே கைதட்டல் பெறுவது மட்டும் அல்ல, கூட்டு முயற்சிக்கானது என்பதால் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து செயல்படலாம். உறுப்பினர்களின் கருத்துகளை அறிந்துகொண்டு திட்டத்தை மேம்படுத்தலாம். உறுப்பினர்களுக்கான பிரத்யேக அரட்டை வசதியும் இருக்கிறது.

வன்பொருள் ஆர்வம் கொண்டவர்கள் தனித்துவிடப்படுவதாக உணரக்கூடும். அதற்கு மாறாக, சக வன்பொருளாளர்களின் மத்தியில் இருக்கும் உணர்வைப் பெற இந்த இணைய சமூகம் வழி செய்கிறது. மென்குறுக்கு வழி சார்ந்த வன்பொருள் ஆக்கங்களுக்கான துடிப்பான இணைய சமூகமாகத் இந்த தளம் செயல்படுகிறது.

(தொடரும்)

பெட்டிச் செய்தி:

இது புரோகிராமர்களுக்கான தளம்

புரோகிராமர்களுக்கான தளங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. ஆனால், புரோகிராமர்கள் இது தங்களுக்கான இடம் என உணரும் வகையில் அவர்களுக்கான இணைய சமூகமாக கோட் புராஜெக்ட் (https://www.codeproject.com/) தளம் அமைந்துள்ளது. இந்தத் தளத்தில் புரோகிராமர்களும், கோடிங் ஆர்வம் கொண்டவர்களும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் கட்டுரைகளை வாசிக்கலாம்; தாங்களே பகிரவும் செய்யலாம். செயற்கை நுண்ணறிவு தொடங்கி, பைத்தான் மொழி வரை எண்ணற்ற தலைப்புகளில் கட்டுரைகளைக் காணலாம். அதைவிட முக்கியமாக, புரோகிராமர்கள் தங்களுக்கான சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்டு உறுப்பினர்களின் பதிலைப் பெறலாம். கற்றலுக்கு மட்டும் அல்ல, கூட்டு முயற்சிக்கான தளமாகவும் இது விளங்குகிறது. உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in