சமூக ஊடக வானவில் - 45: ’கிட்ஹப்’ போல வருமா?

சமூக ஊடக வானவில் - 45: ’கிட்ஹப்’ போல வருமா?

நீங்கள் புரோகிராமராக இருந்தால் அல்லது கோடிங் செய்வதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், ’கிட்ஹப்’ (Github) இணையதளத்தை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அதோடு, இந்தத் தளத்தின் தீவிர உறுப்பினராக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

‘கிட்ஹப்’பின் முக்கியத்துவம்

கிட்ஹப்பிற்கான இந்த அறிமுகத்திலிருந்தே, இந்தத் தளம் தொழில்நுட்பத்தில் அதிலும் குறிப்பாக புரோகிராமிங்கிலும், கோடிங்கிலும் ஆர்வம் கொண்டவர்களுக்கான இணையதளம் என்பதை மற்றவர்கள் ஊகித்திருக்கலாம். அதோடு, இணையத்தில் புழங்கும்போது தவிர்க்க இயலாமல் பல இடங்களில் கிட்ஹப் குறிப்பிடப்படுவதையும் கவனித்திருக்கலாம். இந்தக் குறிப்புகளும் அநேகமாக கோடிங் தொடர்பானவையாகவே இருக்கும்.

அதற்காக கிட்ஹப்பிற்கும் நமக்கும் தொடர்பில்லை என இணைய சாமானியர்கள் ஒதுங்கிக்கொள்ளாமல் இந்தத் தளத்தை அறிமுகம் செய்துகொள்வது அவசியம். ஏனெனில், கிட்ஹப் தொழில்நுட்பத் தளம் மட்டும் அல்ல, சமூக ஊடகத்தின் தன்மையும் கொண்டது.

உண்மையில், கிட்ஹப்பின் சமூக ஊடகத் தன்மையே அதன் செல்வாக்கிற்கும், இன்றிமையாத தன்மைக்கும் காரணமாகிறது. ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாவிலும் ஒருவர் நிலைத்தகவல்களையும், வீடியோக்களையும், இன்னும் பிற சுயபுராணங்களையும் பகிர்ந்துகொள்கின்றனர் என்றால், கிட்ஹப் கோடிங் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கான, அந்தப் பகிர்தல் மூலம் கோடிங்கை மேம்படுத்துவதற்கான இணையதளமாக இருக்கிறது.

கோடிங் செய்பவர்களுக்கான ஃபேஸ்புக்

எளிதான புரிதலுக்காக கிட்ஹப்பை கோடிங் செய்பவர்களுக்கான ஃபேஸ்புக் என்று வர்ணிக்கலாம். ஃபேஸ்புக் போலவே, இதிலும் பயனாளிகள் தங்களைப் பற்றிய அறிமுகத் தகவல்களை இடம்பெறச் செய்யலாம். ஃபேஸ்புக் போலவே இதிலும் பயனாளிகள் பக்கத்தில், சக உறுப்பினர்களின் பகிர்வுகளைப் பார்க்கலாம். சக பயனாளிகளுடன் உரையாடலாம்.

லைக், ஷேர் என ஃபேஸ்புக்குக்கு இருப்பது போலவே, கிட்ஹப் பயனாளிகளுக்கு என்று ஃபோர்க், புல் ரிக்வெஸ்ட் போன்ற தனிமொழியும் இருக்கிறது. ஆனால், எல்லாமே கோடிங் சார்ந்தவை என்பது கிட்ஹப்பின் சிறப்பு.

கிட்ஹப்பை ஃபேஸ்புக்குடன் ஒப்பிடுவது அவற்றின் பொதுத் தன்மைக்காக என்பதைவிட, ஃபேஸ்புக்கில் இருந்து கிட்ஹப் எந்த அளவு மாறுபட்டிருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகத்தான். அந்த வகையில் சமூக ஊடகப் பரப்பின் பல்வேறு பரிமாணத்தையும் கிட்ஹப் ஆழமாக உணர்த்துகிறது.

ரிஷிமூலம்

இந்த இடத்தில் கிட்ஹப்பின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது அதன் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும். கிட்ஹப், 2008-ல் கிறிஸ் வான்ஸ்ரத் (Chris Wanstrath) என்பவரால் இன்னும் சில இணை நிறுவனர்களுடன் சேர்ந்து தொடங்கப்பட்ட தளம் என்றாலும், அதன் மூலம், ஓபன் சோர்ஸ் எனப்படும் திறவு மூலமாக அமைகிறது. சில ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையிலும், இன்றளவும் கிட்ஹப் திறவுமூல கோடிங் திட்டங்களுக்கான பகிர்தல் களமாக அமைந்திருப்பதும் தற்செயலானது அல்ல.

கிட் (Git) என்பது பொதுவாக கோப்புகளில், குறிப்பாக மென்பொருள் மூலக் குறியீடுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களைப் பின்தொடர வழி செய்யும் மென்பொருள் ஆகும். லினக்ஸ் திறவுமூல இயங்குதளத்தை உருவாக்கிய முன்னோடி லினஸ் டோர்வல்ஸ் (Linus Torvalds) இந்த கிட்டை உருவாக்கினார். இதை அடிப்படையாகக் கொண்டே கோடிங் பதிவேற்றல், பகிர்தல் மேடையாக கிட்ஹப் உருவானது.

பரவலாக அறியப்பட்டது போல, லினக்ஸ் மாபெரும் திறவுமூல சமூகத்தின் மையமாக விளங்குகிறது. கோடிங் குறிப்புகளை அடிப்படைகளை ரகசியம் காக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்கள் திருத்தங்கள், மாற்றங்கள் உள்ளிட்ட பங்களிப்போடு மென்பொருளை மேம்படுத்துவதற்கான வழியாகத் திறவுமூலம் கோட்பாடு அமைகிறது. லினக்ஸ் இதன் அடையாளங்களில் ஒன்று மட்டும் அல்ல; இந்தக் கருத்தாக்கத்துக்கும், இணைய கூட்டு முயற்சிக்கான ஆகச்சிறந்த உதாரணங்களிலும் ஒன்று.

கோடிங் குறிப்புகளைப் பகிர்வதும், மாற்றங்களை மேற்கொள்வதும் லினக்ஸ் சமூகத்தின் அடிப்படை அம்சங்கள் என்பதால் இதற்கான மென்பொருள் களம் தேவை. அதாவது, கோடிங் மூல குறியீட்டைச் சேமித்து வைக்கவும், அதில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை மூலத்தைப் பாதிக்காத கோப்பாகப் பராமரிக்கவும் வழி தேவை. இதைத்தான் கிட் மென்பொருள் சாத்தியமாக்குகிறது.

கிட் மென்பொருளில், எந்த ஒரு புரோகிராமிங்கிற்கான மூலக் குறியீடுகளையும் பதிவேற்றலாம். பங்கேற்பாளர்கள் அந்தக் குறியீட்டைத் தரவிறக்கம் செய்து அதில் தனியே மாற்றத்தை மேற்கொள்ளலாம். இதில் திருப்தி ஏற்பட்ட பிறகு, அந்தக் கோப்பை மூலக் குறியீட்டுடன் பதிவேற்றலாம். இப்போது மாற்றமும் அதில் புதுப்பிக்கப்படும்.

ஆக, பலர் கூடி மென்பொருளை மேம்படுத்தும்போது, பயனாளிகள் செய்யும் மாற்றங்கள், மற்றவர்களின் பங்கேற்புக்குப் பாதிப்பில்லாமல் தனித்தனியே மேற்கொள்ளப்பட்டு பின்னர் மூலத்தில் சிக்கல் இல்லாமல் இணைந்து மெருகேற்றுவதை கிட் சாத்தியமாக்குகிறது.

கோடிங் பகிர்வுகள்

ஆரம்ப காலத்தில், லினக்ஸ் சமூகம் இந்த வகை கோடிங் பகிர்தலுக்காக பிட்கிப் எனும் மென்பொருளைப் பயன்படுத்திவந்தது. பிட்கிப் லாப நோக்கிலான மென்பொருள் என்றாலும், லினக்ஸ் சமூகத்துக்குக் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட்டது. 2005-ல் இந்த உடன்பாட்டில் சிக்கல் உண்டாகவே, லினக்ஸ் சமூகப் பயன்பாட்டிற்காக என்று கிட் மென்பொருளை அதன் நிறுவனர் டோர்வல்சே உருவாக்கினார்.

மென்பொருள் உருவாக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்த வான்ஸ்ரத் கோடிங் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, மென்பொருள் மாற்றங்களைப் பகிரவும், ஒருங்கிணைக்கவும் சரியான வழியில்லாத குறையை உணர்ந்து கிட்ஹப் இணையதளத்தை உருவாக்கினார். கோடிங் மூலக் குறியீடுகளைப் பகிர்ந்துகொண்டு, அதன் மாற்றங்களைப் பகிரவும், ஒருங்கிணைக்கவும் உதவும் தளமாக இது அமைந்திருந்தது.

அடிப்படையில், கோடிங் மூலக் குறிப்புகளைப் பதிவேற்றி, அதன் மாற்றங்களை நிர்வகிப்பதற்கான இணையதளமாக உருவாக்கப்பட்டாலும், பயனர்கள் ஆர்வம் காரணமாக இந்தத் தளம் கோடிங் சார்ந்த சமூக வலைப்பின்னல் தளமாக வளர்ந்தது. புரோகிராமர்கள் தங்கள் கோடிங் பணிகளை பகிர்ந்துகொள்வதற்கான எளிய வழியாக இந்தத் தளத்தை நாடினர். எல்லாமே திறவுமூலத் திட்டங்கள் என்பதால், மற்றவர்கள் இவற்றில் மாற்றங்களைச் செய்து பங்களிப்பதும் எளிதாக இருந்தது. ஆக, ஒரு கட்டத்தில் கோடிங் திட்டங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான களமாக மட்டும் அல்லாமல், கோடிங் திறனையும், ஆர்வத்தையும் பகிர்ந்துகொள்வதற்கான மேடையாகவும் கிட்ஹப் உருவானது.

இந்த அம்சங்களே அந்தத் தளத்தை கோடிங் ஆர்வம் கொண்டவர்களுக்கான மாபெரும் இணைய சமூகமாக வளர்த்தெடுத்துள்ளது.

(தொடரும்)

பெட்டிச் செய்தி:

பயோடேட்டா தளம்

கிட்ஹப் தளத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள அதை ஃபேஸ்புக்குடன் மட்டும் அல்ல, தொழில்முறை வலைப்பின்னலான லிங்க்டுஇன் தளத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். லிங்க்டுஇன், பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளைப் பறைசாற்றிக்கொள்ளவும், புதியவர்கள் வேலை தேடவும் உதவும் வலைப்பின்னலாக விளங்குகிறது. இதே போலவே கோடிங் ஆர்வம் கொண்டவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்வதற்கான மேடையாக கிட்ஹப் இருக்கிறது. ஆனால், இதில் சுய பதிவுகள் எல்லாம் கிடையாது, பயனாளிகள் தங்கள் பங்கேற்கும் கோடிங் திட்டங்களைப் பகிர்ந்து கொள்வதால், இதுவே அவர்களின் திறமைக்கான சான்றாகவும் அமைகிறது. அந்த வகையில், கிட்ஹப் பக்கமே புரோகிராமர்களுக்கான பயோடேட்டா போலவும் விளங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in