சமூக ஊடக வானவில் - 44: இனிமையும் அதிசயமுமான இம்குர்

சமூக ஊடக வானவில் - 44: இனிமையும் அதிசயமுமான இம்குர்

சமூக ஊடக உலகில், நீங்கள் ஃபேஸ்புக்கை அறிவீர்கள், இன்ஸ்டாகிராமையும் அறிவீர்கள், ஆனால் ‘இம்குர்’ (Imgur) சமூக வலைதளத்தை அறிவீர்களா என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது. இம்குர் பரவலாக அறியப்படும் சமூக வலைப்பின்னல் சேவை மட்டும் அல்ல, சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய சேவையாகவும் இருக்கிறது.

பயனாளிகளின் கைகளில்...

ஆனால் ஒன்று, இம்குர் தளத்தை அறியாதவர்களும்கூட அதன் தாக்கத்தை இணையத்தில் எதிர்கொண்டிருக்கலாம். ஏனெனில் இம்குரில் பகிரப்படும் படங்கள்தான் இணையத்தில் வைரலாகி எங்கும் பரவுகின்றன. அதோடு, அநேகமாக இந்தத் தளத்தில் பகிரப்படும் படங்களில் பெரும்பாலானவை வைரலாகின்றன. இணையத்தின் மூலை முடுக்குகளில் நீங்கள் பார்த்து ரசிக்கும் மீம்கள், கேலிப் படங்கள் போன்றவற்றில் பல இம்குரில் இருந்து வந்திருக்கலாம்.

இம்குர் வைரலாகும் தன்மையோடு அறியப்பட்டாலும், இந்தச் சேவையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய ஆதார அம்சங்கள் இன்னும் பல இருக்கின்றன. இந்தத் தளத்தின் பின்னே உருவாகியிருக்கும் துடிப்பான இணையச் சமூகம் அவற்றில் ஒன்று.

உண்மையில், இம்குரின் இணையச் சமூகமே அதில் பகிரப்படும் படங்கள் வைரலாகப் பரவ உதவுகிறது. இந்தச் சமூகத்தை உருவாக்கும் இணையப் பயனாளிகளே இம்குரை விசேஷமான சமூக வலைப்பின்னல் தளமாக உருவாக்கியுள்ளனர்.

இம்குர் தளம் பற்றி தெரிந்துகொண்டால் நாமும் இதன் சமூகத்தில் இணையலாமே எனும் எண்ணம் ஏற்படும். அதோடு, இப்படி ஒரு இணையச் சமூகம் இன்னமும் இருக்கிறதே என்ற ஆறுதலும் ஏற்படும். ஏனெனில், பெரும்பாலும் வர்த்தகமயமாகிவிட்ட சமூக வலைப்பின்னல் உலகில் இன்னமும் பயனாளிகளின் கைகளில் இருக்கும் தளங்களில் ஒன்றாக இம்குர் இருக்கிறது.

ஃபேஸ்புக் போல, இன்ஸ்டாகிராம் போல அல்கோரிதம்களால் ஆட்டி வைக்கப்படாமல், பகிர்தலின் பயன்பாட்டைப் பயனாளிகள் உணரும் சேவையாக இம்குர் திகழ்கிறது. அந்த வகையில், இம்குர் தளத்தை, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தன்மைக்கு எதிரான சமூக வலைத்தளம் என்று வர்ணிக்கலாம்.

ஃபேஸ்புக், இன்ஸ்டா தளங்களின் தன்மைக்கு எதிரானது மட்டும் அல்ல, பொதுவாகவே சமூக வலைப்பின்னல் தளங்களின் போக்கிற்கு எதிரான தன்மை கொண்டதாக இம்குர் விளங்குகிறது. அந்த வகையில் சமூக வலைப்பின்னல் தளங்களின் ஆதாரத் தன்மையை இழக்காமல் இருக்கும் தளமாகவும் விளங்குகிறது.

புனிதமான சமூக ஊடகம்

இம்குரில் அப்படி என்ன இருக்கிறது? இந்த கேள்விக்கான பதில் அதன் வரலாற்றிலும், வளர்ச்சியிலும் இருக்கிறது. இமேஜ் ஹோஸ்டிங் என சொல்லப்படும், புகைப்படப் பகிர்வு சேவையாகவே இம்குர் அறிமுகமானது. அதாவது, இம்குரில் சக பயனாளிகளோடு புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

அந்த வகையில் இப்போதைய இன்ஸ்டாவையும், அந்தக் காலத்து ஃபிளிக்கர், போட்டோபக்கெட் சேவைகள் போன்ற தளங்களையும் இம்குருக்கு உதாரணமாகச் சொல்லலாம் என்றாலும், இம்குர் வெறும் புகைப்பட பகிர்வு சேவை மட்டும் அல்ல, கமலின் ’குணா’ படப் பாடல் வரி போல அதையும் தாண்டி புனிதமானது.

மிகைப்படுத்தவில்லை. உண்மையில் இம்குர் புனிதமானதுதான். புனிதம் என்பது இணையப் பயனாளிகளின் கைகளில் பகிர்வின் பலனை அளிக்கும் அற்புதமாக இங்கு அமைகிறது. எனவேதான் இம்குரும், ‘இணையத்தின் மாயத்தை உணருங்கள்’ எனும் வாசகத்தைத் தனக்கான அறிமுகமாகக் கொண்டிருக்கிறது.

பயனாளிகள் இணையத்தைத் தங்களுக்கான இடமாக உணர்ந்து, பகிர்தலிலும், உரையாடலிலும் ஈடுபட்டு பரஸ்பர இருப்பின் பலனை பெறும் சேவையாக இம்குர் உருவாகியிருக்கிறது. இவற்றைப் படங்கள் வாயிலாகச் சாத்தியமாக்குகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் மற்றும் இன்னும் பிற இணையதளங்கள்கூட பகிர்தலையும், உரையாடலையும் சாத்தியமாக்குகின்றனவே, இம்குரில் மட்டும் என்ன தனிச்சிறப்பு என்று கேட்கிறீர்களா?

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களுக்கும் இம்குருக்கும் முக்கிய வேறுபாடு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, புகைப்படங்கள் சார்ந்த தளம் என்ற வகையில் இன்ஸ்டாவுக்கும் இம்குருக்குமான வேறுபாடு இன்னும் முக்கியமானது. இம்குர் தளத்தில், ஃபாலோயர்களோ, நண்பர்களோ கிடையாது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

அதைவிட முக்கியமான விஷயம், இம்குர் பயனாளிகளும், எண்ணிக்கைகளை இலக்காகக் கொண்டோ, லைக்குகளை அள்ளிக்குவிக்கவோ படங்களை அதில் பகிர்வதில்லை. தங்களுக்கு பிடித்தமான படங்களை அதில் பகிர்கின்றனர். எல்லோரும் இப்படி தங்களுக்குப் பிடித்த படங்களைப் பகிர்வதால் இம்குர் எல்லோரும் பார்த்து ரசிக்கும் படங்களைக் கொண்டதாக இருக்கிறது.

மாறும் படங்களின் பின்னே...

இம்குர் தளத்தின் முகப்புப் பக்கத்தைப் பார்க்கும்போதே அந்தத் தளத்தின் தன்மையை உணரலாம். அடுக்கப்பட்ட கட்டங்கள் போல இம்குர் முகப்புப் பக்கத்தில் வரிசையாகப் படங்கள் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம். நொடிப்பொழுதில் மாறிக்கொண்டே இருக்கும் அந்தப் படங்களுக்கு எல்லாம் ஒரு பொதுத்தன்மை இருப்பதை உணரலாம். அவை புகைப்படங்களோ, சுய படங்களோ கிடையாது, மாறாக ஏதேனும் ஒரு காரணத்திற்காகப் பார்த்து ரசிக்கக்கூடிய படங்கள்.

இம்குரில் பகிரப்படும் படங்கள், மீம் வடிவில் இருக்கலாம் அல்லது மீமாக மாறும் தன்மை கொண்டிருக்கலாம். அவை புன்னகையை வரவைக்கக்கூடியதாக இருக்கலாம். விழுந்து விழுந்து சிரிக்க வைக்கலாம். சில படங்கள் சிந்திக்கவும் வைக்கலாம். குறிப்பிட்ட காரணங்களுக்காக அந்தப் படங்கள் ரசிக்கக்கூடியதாக இருப்பதோடு, பகிரக்கூடியதாகவும் இருக்கும். எனவேதான் இம்குர் படங்கள் வைரலாகின்றன. அதற்கேற்ப, படங்களைப் பதிவேற்றவும், பிற தளங்களில் பகிரவும் இம்குர் வழி செய்கிறது.

இம்குரில் பகிரப்படும் படங்களைப் பயனாளிகள் பார்த்து ரசிக்கலாம். தங்களுக்குப் பிடித்திருந்தால் அவற்றுக்கு வாக்களிக்கலாம். படங்களைப் பகிர்ந்தவர்களோடு உரையாடலாம். பயனாளிகள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், படங்கள் தேர்வு செய்யப்பட்டு இம்குர் முகப்புப் பக்கத்தில் பட்டியலிடப்படும். இப்படி மாறிக்கொண்டே இருக்கும் படங்களைப் பார்த்து ரசிக்கலாம் என்பதோடு, இந்தத் தேர்வு அல்கோரிதம்களால் தீர்மானிக்கப்படாமல், பயனாளிகளின் விருப்பங்களால் தீர்மானிக்கப்படும் ஜனநாயகத் தன்மையோடு அமைகிறது என்பது தனிச்சிறப்பு. பலவித தலைப்புகளில், பலவித குறிச்சொற்களோடு படங்களை இம்குர் பரிந்துரைக்கவும் செய்கிறது. அந்த அனுபவத்தை உணர ஒரு முறை இம்குர் சேவையைப் பயன்படுத்திப்பாருங்கள்.

(தொடரும்)

ஆலன் ஸ்காப்
ஆலன் ஸ்காப்

பெட்டிச் செய்தி:

துடிப்பான இணையச் சமூகம்

இம்குர் தளம் உருவானதன் பின்னணியில் ஓர் எளிய கதை இருக்கிறது. ஆலன் ஸ்காப் (Alan Schaaf) எனும் அமெரிக்க வாலிபர் 2009-ல் இந்தத் தளத்தை உருவாக்கினார். அப்போது, போட்டோபக்கெட், ஃபிளிக்கர் போன்ற புகைப்படப் பகிர்வு சேவைகள் பல இருந்தாலும், அவற்றில் இருந்த கட்டுப்பாடுகள், சிக்கல்கள் இல்லாத வகையில் எளிதான புகைப்படப் பகிர்வு சேவையாக இம்குரை அவர் உருவாக்கினார். புகைப்படம் என்றால் நிழற்படங்கள் அல்ல, எந்தப் படத்தையும் எளிதாகப் பகிர்வதற்கான இடமாக அவர் இந்தத் தளத்தை உருவாக்கினார். அதோடு, ஆவணமாக்கல் அல்லது வரலாற்று நோக்கில் அல்லாமல், பார்க்க, ரசிக்க என புகைப்படப் பகிர்தலை அடிப்படையாகக் கொள்ள வைத்தார். அதிலும் குறிப்பாக, இணைய சமூகமான ரெட்டிட் தளத்திற்குத் துணையாக இந்தப் புகைப்படப் பகிர்வு சேவையை உருவாக்கினார். இன்று ரெட்டிட்டிற்கு இணையான துடிப்பான இணையச் சமூகமாக இம்குர் வளர்ந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in