சமூக ஊடக வானவில்-43: தனியுரிமை மீறாத சமூகவலைதளம்

சமூக ஊடக வானவில்-43: தனியுரிமை மீறாத சமூகவலைதளம்

சமூக வலைப்பின்னல் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள், முக்கியமாக ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள் ‘மீவீ’ (https://mewe.com/) சமூக தளத்தை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். அப்படியே, மார்க் வெய்ன்ஸ்டைனையும் (Mark Weinstein) தெரிந்துகொள்ள வேண்டும். வெயின்ஸ்டன், மீவீ தளத்தின் நிறுவனர் என்பது மட்டும் அல்ல, இணைய தனியுரிமை (privacy) வல்லுநர் என்பதும்தான் விஷயம்.

அது மட்டும் அல்ல, வெயின்ஸ்டன் சமூக ஊடகப் பரப்பின் முன்னோடிகளிலும் ஒருவர். முதல் சமூக ஊடக தளத்தை உருவாக்கிய ஒரு சிலரில் தானும் ஒருவர் என்று வெயின்ஸ்டன் தன்னைப் பற்றி கூறுகிறார். 1998-ம் ஆண்டிலேயே, சூப்பர் ஃபேமலி (SuperFamily.com) மற்றும் சூப்பர் ஃபிரெண்ட்ஸ் (SuperFriends.com) ஆகிய சமூக வலைப்பின்னல் தளங்களை உருவாக்கிய அனுபவத்தில்தான் வெயின்ஸ்டன் இவ்வாறு கூறியிருந்தார்.

தனியுரிமையின் முக்கியத்துவம்

நண்பர்கள், குடும்பத்தினர், பொதுக் கருத்து உள்ளவர்களை இணைக்க உதவிய இந்தத் தளங்களைப் புத்தாயிரமாண்டு தொடக்கத்தில் விற்றுவிட்டு தொழில்நுட்ப ஆலோசகராக மாறிவிட்டார். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சமூக ஊடகப் பக்கம் திரும்ப தீர்மானித்தார். இதனிடையே இணைய உலகின் முன்னணி சமூக வலைப்பின்னல் தளமாக உருவாகி செல்வாக்கு பெற்று வந்த ஃபேஸ்புக் தளத்தின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்த கருத்தே தன்னை சமூக ஊடகத்தை நோக்கி மீண்டும் அழைத்து வந்ததாகவும் வெயின்ஸ்டன் கூறியிருக்கிறார்.

தனியுரிமை என்பது எல்லாம் கடந்த கால சங்கதி என்பது போல ஸக்கர்பெர்க் கருத்து தெரிவித்திருந்தது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஃபேஸ்புக் வளர்ச்சிக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பயனாளிகள் தரவுகளைச் சேகரித்து அதனடிப்படையில் தகவல்களை முன்வைக்கும் உத்தியும் முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலம் வருவாயை அள்ளிக்குவிக்கவும் இதுவே உதவியது.

ஆனால், ஃபேஸ்புக்கின் தரவுகள் சேகரிப்பு உத்தி அதன் பயனாளிகள் தனியுரிமையைப் பெரிதும் பாதித்தது. இலவச சேவை என்றால், அதில் நீங்கள்தான் விற்பனைப் பொருள் என்றும் சொல்ல வைத்தது. தனியுரிமை தொடர்பான அணுகுமுறைக்காக ஃபேஸ்புக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளானது. தொடர்ந்து விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

ஃபேஸ்புக் தொடர்பான தனியுரிமை சர்ச்சைகளும் விமர்சனங்களும் ஒரு பக்கம் இருக்க, பயனாளிகள் தனியுரிமைக்கு மதிப்பு அளிக்கும் வகையில் ஃபேஸ்புக்குக்கு மாற்று என சொல்லக்கூடிய சமூக வலைப்பின்னல் தளங்களும் உருவாகத் தொடங்கின. மார்க் வெயின்ஸ்டனும் இந்த வரிசையில் மீவீ தளத்தை உண்டாக்கினார்.

அடுத்த தலைமுறைக்கானது

சமூக ஊடகங்களின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அதே நேரத்தில் பயனாளிகளை வேவு பார்க்காத, நியூஸ்ஃபீடில் ஆதிக்கம் செலுத்தாத, விளம்பர வலை வீசாத அடுத்த தலைமுறை சமூக வலைப்பின்னல் சேவையை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு, மீவீ தளத்தை உருவாக்கியதாக வெயின்ஸ்டன் கூறுகிறார்.

2016-ல் அமெரிக்காவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் இந்தச் சேவை அறிமுகமானது. அந்த மாநாட்டில் சிறந்த ஸ்டார்ட்-அப்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட மீவீ, தொடக்கத்தில் பயனாளிகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல் தனது சேவையை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது.

மீவீ ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலி வடிவிலும் அறிமுகம் ஆகியுள்ளது. ஆங்கிலம் தவிர பல மொழிகளில் சேவை அளிக்கிறது. பயனாளிகள் தரவுகளை அறுவடை செய்யாமல், அவர்கள் தனியுரிமையை மதிப்பாக சொல்லும் மீவீ தளம், பயனாளிகள் தங்களுக்கான தனித்துவமான அறிமுக பக்கத்தை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. இதில் பயனாளிகளை எந்த விதத்திலும் வேவு பார்ப்பதோ, தகவலுக்காக பின் தொடர்வதோ இல்லை என்கிறது.

என்னென்ன அம்சங்கள்?

பயனாளிகள் தங்கள் பக்கத்தில், புகைப்படங்கள், வீடியோ, ஆவணங்கள், குரல் பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம். மேலும், மீவீ ஜர்னல் வசதி மூலம், தங்களைக் கவர்ந்த உள்ளடக்கத்தைச் சேமித்து வைக்கலாம். உள்ளடக்கத்தை அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்துவதோடு, தேவைப்படும்போது எளிதில் கண்டறிவதற்காக டேக் செய்யும் வசதியும் இருக்கிறது.

மைகிளவுட் போன்ற மேலும் பல வசதிகள் இருந்தாலும், ஃபேஸ்புக்கில் இருப்பது போல நியூஸ்ஃபீட் ஊடுருவல் இல்லாமல், எந்த வகை தகவல்கள் தங்கள் பக்கத்தில் தோன்றுகின்றன என்பது முற்றிலும் பயனாளிகள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக மீவீ தெரிவிக்கிறது (ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய ஈர்ப்பான நியூஸ்ஃபீட் வசதியில் எந்த வகை தகவல்கள் முன்னிலை பெறுகின்றன என்பதை அதன் அல்கோரிதமே தீர்மானிக்கிறது). அதோடு பயனாளிகள் தங்கள் பகிர்வுகளை யார் பார்க்கலாம் என்பதையும் நுட்பமாகக் கட்டுப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எனில், பயனாளிகளின் தனியுரிமை மதிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தனது தனியுரிமைக் கொள்கையை, தனியுரிமை அறிக்கையாகவே இந்தத் தளம் வெளியிட்டுள்ளது. உங்கள் தகவல்களும் தரவுகளும் உங்களுக்கே சொந்தமானது, இலக்கு சார்ந்த விளம்பரங்கள் உங்களைப் பின்தொடராது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. தனியுரிமையையும், அனுமதியையும் நீங்கள்தான் கட்டுப்படுத்துகிறீர்கள் என்றும் தெரிவிக்கிறது. இவ்வாறு 10 தனியுரிமை உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளன.

பயனாளிகள் என்னவிதமான கருத்துக்களைப் பகிர்கின்றனர் என்பதை எல்லாம் பார்ப்பதும் இல்லை, அவர்கள் பற்றிய தரவுகளைப் பிற நிறுவனங்களுக்கு விற்பதும் இல்லை என்கிறது மீவீ. இந்தத் தளத்தில் நம்பிக்கை அடிப்படையில் பயனாளிகள் தங்கள் நிலைத்தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் சொல்கிறது.

மீவீ சேவை இலவசமானது என்றாலும், குறிப்பிட்ட வசதிகளுக்கான கட்டண சேவை மாதிரியைப் பின்பற்றுகிறது. இதில் சர்ச்சைக்குரிய முகம் அறிதல் தொழில்நுட்பம் போன்றவையும் பயன்படுத்தப்படுவதில்லை என்கிறது.

மாற்று சமூக வலைப்பின்னல் சேவைகளை நாடுபவர்கள், மீவீ சேவையை அறிமுகம் செய்துகொள்வது புதிய கண் திறப்பாக அமையும். மீவீ சேவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் வைய விரிவு வலையை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீ ஆதரவுடன் இந்தச் சேவை உருவானது என்பது தான். இதன் தனியுரிமைக் கொள்கைக்காக அவர் இந்தத் தளத்திற்கு ஆதரவும் ஆலோசனையும் அளித்திருக்கிறார்.

(தொடரும்)

பெட்டிச் செய்தி:

புகைப்பட வலை

மீவீ போலவே மாற்று சமூக ஊடக சேவைகள் இன்னும் பல இருக்கின்றன. அந்த வகையில் புகைப்படப் பகிர்வு சேவைகளில் ஒன்றாக ஐஎம் (https://www.eyeem.com/) அமைகிறது. அடிப்படையில் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கான இந்தச் சேவை, கலைஞர்கள் தங்கள் புகைப்படங்களைப் பகிரவும், அவற்றை விற்கவும் வழி செய்கிறது. இதன் நீட்சியாக சமூக வலைப்பின்னல் அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இதில் புகைப்பட ஆர்வம் சார்ந்து நண்பர்களை உருவாக்கிக் கொள்ளலாம். உள்ளடக்க உருவாக்குநர்களும் தங்களுக்கான ஆதரவாளர்களைத் தேடிக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in