சமூக ஊடக வானவில்- 41: இது மாணவர்களின் வலை

சமூக ஊடக வானவில்- 41: இது மாணவர்களின் வலை

சமூக ஊடக உலகில் அதிகம் அறியப்பட்ட வலைப்பின்னல் தளமாக ஃபேஸ்புக் இருக்கலாம். பயனாளிகள் எண்ணிக்கைப்படி பார்த்தால் ஃபேஸ்புக் உலகின் மிகப்பெரிய சமூகவலைதளங்களில் ஒன்றாக இருக்கும் என்று சொல்லப்படுவது அதன் செல்வாக்கிற்கான அடையாளமாக அமைகிறது. ஆனால் ஃபேஸ்புக்கின் செல்வாக்கை மீறி, இளம் தலைமுறையினர் மற்றும் பதின்பருவத்தினர் மத்தியில் அதன் வீச்சு குறைவாகவே இருக்கிறது.

சுதந்திரம் விரும்பும் இளசுகள்

மில்லினியல் என்று சொல்லப்படும் இக்காலத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கைத் தங்களுக்கான வலைப்பின்னல் தளமாக நினைப்பதில்லை எனக் கருதப்படுகிறது. ஃபேஸ்புக்கைத் தங்களது பெற்றோர்களும் இன்னும் பிற பெரியவர்களும் பயன்படுத்தும் தளமாக டிஜிட்டல் தலைமுறையினர் கருதுகின்றனர். இதன் காரணமாக ஃபேஸ்புக்கை அவர்கள் பழைமைவாதத் தளமாக நினைப்பதோடு, பெற்றோர்களின் ஊடுருவும் பார்வையில் தங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என நினைப்பதாகவும் சமூக ஊடக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

டிஜிட்டல் பூர்வகுடிகள் எனக் கருதப்படக்கூடிய இக்காலத் தலைமுறையினர், பகிரப்படும் செய்திகள் பார்க்கப்பட்டதும் தானாக மறைந்துவிடும் ஸ்னேப்சேட் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் செய்தி பரிமாற்றத்திற்கு வழி செய்யும் யிக்யாக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களைத்தான் தங்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவையாக இயல்பாக ஏற்றுக்கொள்வதாகவும் கருதப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் குட்வால் (https://www.goodwall.io/) சமூக வலைப்பின்னல் தளத்தை அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், இளம் தலைமுறையை இலக்காகக் கொண்ட தளமே தவிர இந்தத் தளம் ஸ்னேப்சேட் வகைத் தளங்களிலிருந்து வேறுபட்டதாகவே இருக்கிறது. உண்மையில் இந்தத் தளம் மாணவர்களுக்கான லிங்க்டுஇன் (LinkedIn) என்றே வர்ணிக்கப்படுகிறது.

லிங்க்டுஇன் தளத்துடன் குட்வால் தளத்தை ஒப்பிடுவது பொருத்தமானது மட்டும் அல்ல. இந்தத் தளத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளவும் உதவக்கூடியது. பரவலாக அறியப்பட்டது போல, லிங்க்டுஇன் தளம், தொழில்முறை வலைப்பின்னலாக இருக்கிறது. பணி நோக்கிலான தொடர்புகளைப் பெற, தொழில்முறை வலைப்பின்னலை வளர்த்துக்கொள்ள என லிங்க்டுஇன் பலவிதங்களில் உதவுகிறது. மாணவர்களும்கூட, லிங்க்டுஇன் தளத்தில் தங்களுக்கான இருப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் லிங்க்டுஇன் பக்கத்தை மாணவர்கள் தங்களுக்கான சுயவிவரங்களுக்கான தளமாகப் பயன்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

ஒருவிதத்தில் ஃபேஸ்புக் போலவே லிங்க்டுஇன் தளமும் பழைய தளமாகக் கருதப்படுவதால், இக்கால மாணவர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளம் தேவை எனும் புரிதலோடு குட்வால் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்தத் தளம் மாணவர்களுடன் வாய்ப்புகளை இணைப்பை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

செயலி வடிவில் அமைந்திருக்கும் இந்த சமூக வலைப்பின்னல் சேவை வாயிலாக மாணவர்கள் தங்களுக்கான சமூக வலையை உருவாக்கிக்கொள்ளலாம். மாணவர்கள் இணைய தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதோடு, தங்களுக்கான பிராண்டையும் உருவாக்கிக்கொள்ளலாம். இது அவர்கள் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் அமைகிறது.

ஆக, மற்ற பெரும்பாலான சமூக வலைப்பின்னல் சேவைகள் எல்லாம், பொழுதுபோக்கு நோக்கிலும், நிகழ்காலத் தகவல் பரிமாற்ற நோக்கிலும் அமைகின்றன என்றால், எதிர்கால வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைந்திருப்பதை குட்வால் தளத்தின் தனித்தன்மையாகக் குறிப்பிடலாம்.

கல்லூரி மாணவர்கள் மற்றும் உயர்நிலை மாணவர்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தலாம். பிரதானமாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு உருவான தளம் என்றாலும், உலக அளவில் வளர்ந்து வருகிறது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.5 மில்லியனுக்கும் மேலான பயனாளிகளைக் கொண்டுள்ளது. 2014-ல், ஓமர் மற்றும் தஹா பவா ஆகிய இளைஞர்கள் இந்தத் தளத்தைத் தொடங்கினர். இதன் தாய் நிறுவனம் ஸ்விட்சர்லாந்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.

இந்தத் தளத்தின் மூலம், மாணவர்கள், இளைஞர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம், விருப்பம் உள்ள இணையக் குழுக்களில் இணையலாம். மேலும் ஐடியாக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் தனித்தனி பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் எழுத்து வடிவில் மட்டும் அல்லது வீடியோவிலும் தகவல்களைப் பகிரலாம். மொத்தத்தில் மாணவர்கள் டிஜிட்டல் அடையாளத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் கற்றல் வாய்ப்பை மேம்படுத்திக்கொள்வதிலும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதிலும் இந்தத் தளம் கவனம் செலுத்துகிறது. இதற்கான திட்டங்களையும் இந்தத் தளம் வழங்குகிறது. அதே போல, மாணவர்களைப் பயிற்சிப் பணிக்கான வாய்ப்புகளுடன் இணைத்து வைப்பதிலும் இந்தத் தளம் கவனம் செலுத்துகிறது.

ஊக்குவிக்கும் தளம்

உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்களுக்கு ஏற்ப அவர்களின் தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வாய்ப்புகள் குறித்த பரிந்துரைகளையும் இந்தத் தளத்தின் அல்கோரிதம் வழங்குகிறது. இந்தத் தளத்தை மாணவர்கள் விரும்பிப் பயன்படுத்தி வருவதோடு, இளம் திறமையாளர்களை நாடும் வர்த்தக நிறுவனங்களும் இதைப் பயன்படுத்துகின்றன. நிறுவனங்கள் பயிற்சி வாய்ப்புகளை வழங்கி எதிர்காலப் பணியாளர்களை ஈர்க்கலாம்.

பயிற்சி பணி வாய்ப்புகளை அடையாளம் காட்டும் பிரத்யேக தளங்கள் பல இருந்தாலும், பயிற்சி வாய்ப்புகளைப் பெறக்கூடிய சமூகத் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் குட்வால் தளம் அமைந்திருக்கிறது. அதைவிட முக்கியமாக இத்தகைய தொழில்முறை வாய்ப்புகளை எதிர்பார்த்து பயனாளிகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதையும் இந்தத் தளம் ஊக்குவிக்கிறது.

பயிற்சிப் பணி வாய்ப்புகள் தொடர்பான ஊக்கத்தொகை தகவல்களை அளிப்பதோடு, இதற்கான போட்டிகளையும் நடத்தி ஊக்குவிக்கிறது. போட்டிகள் மூலம் பயனாளிகள் ஊக்கத்தொகை வாய்ப்புகளைப் பரிசாக வெல்லலாம். தன்னார்வத் திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புகளையும் மாணவர்கள் பெறலாம்.

எதிர்கால பணி வாய்ப்புகளுடன் மாணவர்களை இணைப்பதற்கான சாத்தியத்தையும் இந்தத் தளம் ஏற்படுத்தி தருவதாக கருதப்படுகிறது. வழக்கமான பாணியில் பணி வாய்ப்புகளை தேடுவதை விட, இணைய யுகத்திற்கு ஏற்ற வகையில் பணி வாய்ப்பை தேடிக்கொள்ளும் வழியாக குட்வால் தளம் அமைவதாகவும் பாராட்டப்படுகிறது. அந்த வகையில் வரவேற்க கூடிய சமூக வலைப்பின்னல் தளமாக இது அமைகிறது.

(தொடரும்)

மாணவர்களின் பயன்பாட்டுக்கானவை...

சமூக வலைப்பின்னல் தளங்கள் பலவித நன்மைகளைக் கொண்டிருந்தாலும், நேர விரயம் மற்றும் கவனச்சிதறலுக்கு வழி வகுப்பதாகவும் கருதப்படுகின்றன. ஆனால், பயன்பாடு சார்ந்த குட்வால் போன்ற தளங்கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவையாகக் கருதப்படுகின்றன. இந்தப் பிரிவில் கேரியர்ஸ்டேக் (https://careerstack.io/) போன்ற வேறு சில தளங்களும் செயல்பட்டு வருகின்றன. பெண்களுக்கான வேலைவாய்ப்பை அளிக்கும் வெர்க் (https://werklabs.com/) போன்ற தளத்தையும் இந்தப் பிரிவில் குறிப்பிடலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in