சமூக ஊடக வானவில் - 40: தாவரங்களுடன் நட்பு கொள்ளலாம் வாருங்கள்!

சமூக ஊடக வானவில் - 40: தாவரங்களுடன் நட்பு கொள்ளலாம் வாருங்கள்!

எங்கு சென்றாலும் செல்ஃபி எடுத்துக்கொள்வதும், நிலைத்தகவலைப் புதுப்பிப்பதும் பலருக்கு இயல்பாக இருக்கிறது. அபூர்வமாகச் சிலர் தாவரங்களைப் பார்த்து ரசிக்கும் அல்லது படம் எடுத்து பகிரும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அப்படியான ஆர்வலர்களை ஈர்க்கும் அம்சங்கள் கொண்ட இணையதளம் பிலாண்ட்நெட் (Pl@ntNet).

அதேசமயம், சமூக வலைப்பின்னல் தளங்களில் மூழ்கியிருப்பவர்களும் பிலாண்ட்நெட் தளத்தை அறிமுகம் செய்துகொள்வது நல்லது. ஏனெனில் இது வழக்கமான சமூக வலைப்பின்னல் தளங்களிலிருந்து மாறுபட்டதாக இருப்பதோடு பயனாளிகள் இயற்கையோடு நெருக்கமாகவும் வழி செய்கிறது. மேலும், சமூக வலைப்பின்னல் தளங்களில் செலவிடும் நேரம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தச் சேவை மிகவும் ஏற்றதாக இருக்கும்.

அடையாளம் காண...

பிலாண்ட்நெட் தளத்தைத் தாவரங்களுக்கான ஷாசம் என வர்ணிக்கலாம். இசைப்பிரியர்களுக்கான மாயாஜால ஷாசம் (Shazam) செயலி, எப்படி பயனாளிகள் முணுமுணுக்கும் மெட்டை வைத்து அதற்குரியப் பாடலை அடையாளம் கண்டு சொல்கிறதோ அதே போல, பிலாண்ட்நெட் தளம், பயனாளிகள் பதிவேற்றும் தாவர இலை படத்தை வைத்து அந்தத் தாவரத்தை அடையாளம் காண உதவுகிறது.

ஆக, இந்தத் தளத்தின் மீது நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால், இயற்கை மீதும், தாவரங்கள் மீதும் ஆர்வம் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, புதிய செடி, கொடிகளைப் பார்க்கும்போது, அதன் பெயர், தாவர இன வகை உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்தத் தளத்தின் அருமையை நன்கு உணரலாம்.

ஆனால், இந்தத் தளம் தாவரம் கண்டறிதல் தளம் மட்டும் அல்ல. இந்தக் கண்டறிதலைச் சாத்தியமாக்கும் விதத்தில் தாவர ஆர்வலர்களின் மாபெரும் இணைய சமூகமாகவும் உருவாகி வருகிறது. அதோடு குடிமக்கள் அறிவியல் ஆய்வு மூலம் தாவர ஆய்வுக்கும் உதவி வருகிறது.

பிரான்ஸில் உள்ள தாவர ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் தளம் 2009-ல் அறிமுகமானது. அடுத்த சில ஆண்டுகளில் இதன் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி வடிவம் அறிமுகமாகி பயனாளிகள் மத்தியில் பிரபலமானது.

எப்படிப் பயன்படுத்துவது?

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் புதிய தாவரங்களை எதிர்கொள்ளும்போது அதன் இலை அல்லது கிளை பகுதியைப் படம் எடுத்து இந்தத் தளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்தப் படத்தைத் தளத்தில் உள்ள மாபெரும் தாவரத் தரவுப் பட்டியலுடன் ஒப்பிட்டு, அந்தத் தாவரம் தொடர்பான தகவல்கள் பயனாளிக்கு அளிக்கப்படுகின்றன. இந்தப் பரிந்துரை எந்த அளவு பொருத்தமாக இருக்கிறது என்பதைப் படத்தைச் சமர்ப்பித்தவர் குறிப்பிடலாம்.

அதே நேரத்தில் சக பயனாளிகளும், இந்தப் பரிந்துரையைப் பார்த்து தங்கள் கருத்தைத் தெரிவிப்பார்கள். எல்லோருமே தாவரவியலில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் சொல்வது, தகவல்களைச் சரி பார்த்தல் போல அமையும். அதிகமானவர்கள் சரி என ஆமோதித்தால், தளத்தின் பரிந்துரை சரி என ஏற்கப்படும். இத்தகைய கருத்துக்கள் பரிந்துரையை வழங்கும் அல்கோரிதத்தை பட்டைதீட்டவும் உதவுகிறது.

எனவே, அதிகமானவர்கள் கருத்துகளை வழங்கினால் அதற்கேற்ப அல்கோரிதமின் செயல்பாடு மேம்படும். அதே நேரத்தில் பெயர் தெரியாத செடிகளின் படத்தைச் சமர்ப்பித்து அதை அடையாளம் காணவும் கோரிக்கை வைக்கலாம். பயனாளிகள் இதற்குப் பதில் அளித்து உதவுவார்கள்.

தாவர ஆர்வலர்கள் மட்டும் அல்லாமல் தொழில்முறை தாவர வல்லுநர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டு தரவுகளை மேம்படுத்த உதவுகின்றனர். அந்த வகையில் தாவரத் தகவல்களுக்கான மாபெரும் தரவுப் பட்டியலாக இந்தத் தளம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதுவரை, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவர இனங்களை இந்தத் தளம் அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளது.

பசுமைக் கிரீடம் பரிசு

அமேசான் காடுகள் முதல் ஐரோப்பிய வயல்கள் வரை பல வகையான இடங்களில் இருந்து உறுப்பினர்கள் இந்தத் தளத்தில் தாவரங்களின் படங்களைப் பகிர்ந்து, அது தொடர்பான தரவுகளை உருவாக்க உதவி வருகின்றனர். மற்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் போல, ஃபேஸ்புக்கில் பகிரும் வாய்ப்பை எல்லாம் இந்தத் தளம் வழங்கவில்லை. அறிவிக்கைகள் போன்ற வசதிகளும் கிடையாது. சக உறுப்பினர்களை நேரடியாகத் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பும் இல்லை.

உறுப்பினர்கள், இந்தத் தளத்தில் சமர்ப்பிக்கப்படும் தாவரப் படங்களைப் பார்த்து அவற்றை அடையாளம் கண்டு சொன்னால், உடனடியாக அவர்களுக்கு ‘பசுமைக் கிரீடம்’ பரிசளிக்கப்படுகிறது. மற்றவர்களும் இதை உறுதிப்படுத்தினால், அதற்கேற்ப உறுப்பினருக்கான மதிப்பெண் உயரும்.

உலகத் தாவரங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வுப் பணியை மேம்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்தத் தளம் செயல்பட்டு வருகிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. தாவரங்களைக் கண்டறிய வழி செய்யும் பல்வேறு திட்டங்களையும் இந்தத் தளம் கொண்டுள்ளது.

இதே போலவே தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டவர்களுக்கான பிரத்யேக சமூக வலைப்பின்னல் தளங்களும் பல இருந்தன. தோட்டக்கலை அடிப்படையில் இணைய நட்பை வளர்த்துக்கொள்ள வழிசெய்த இந்தத் தளங்களில் பல தற்போது செயல்பாட்டில் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கும் விஷயமாக இருந்தாலும், யார்ட்ஷேர் (http://www.yardshare.com/ ) போன்ற ஒரு சில தளங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

யார்ட்ஷேர் தளம், வீட்டின் முன் பகுதி பசுமை நிலப்பரப்பைப் பகிர்ந்துகொள்வதற்கான மேடையாக விளங்குகிறது. பல வகையான பசுமை நிலப்பரப்பை இந்தத் தளத்தில் பார்ப்பதோடு, அவற்றைப் பரமாரிப்பது தொடர்பான தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டின் முன் உள்ள பசுமை நிலப்பரப்பைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். தோட்டக்கலை தொடர்பான தகவல்களையும் பெறலாம். புல்தரை, தோட்டம், நீர்வீழ்ச்சி, நீச்சல் குளம் என பல வகை தலைப்புகளில் பசுமை நிலப்பரப்பை இந்தத் தளத்தில் காணலாம்.

பசுமைப் படங்களைப் பார்த்து ரசிப்பதோடு, அவற்றைப் பகிர்ந்தவர்களுடன் உரையாடலிலும் ஈடுபடலாம்.

(தொடரும்)

தாவரங்களுக்கான விக்கி

விக்கி மென்பொருளைக் கொண்டு இயங்கும் தளங்களும் சமூக ஊடகங்களின் இன்னொரு பிரிவாக அமைகின்றன. இதற்கு விக்கிபீடியா பிரபலமான உதாரணம் என்றால் இன்னும் எண்ணற்ற விக்கி களஞ்சியங்கள் உள்ளன. இவற்றில் தாவரங்களுக்கான தகவல் களஞ்சியமாக கார்டனாலஜி (http://www.gardenology.org/) அமைகிறது. இந்தத் தளத்தில் தாவரங்கள் தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்வதோடு, ஆர்வம் உள்ளவர்கள் தகவல் பங்களிப்பும் செய்யலாம். மலர்கள், கனிகள், வீட்டு செடிகள், மூலிகைகள், மரங்கள் என பல்வேறு தலைப்புகளில் தாவர தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் விரும்பினால் உங்கள் பங்குக்கும் ஒரு தாவரப் பக்கத்தை உருவாக்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in