சமூக ஊடக வானவில்-39: தாத்தா, பாட்டிகளுக்கான தனி வலை!

சமூக ஊடக வானவில்-39: தாத்தா, பாட்டிகளுக்கான தனி வலை!

சமூக வலைப்பின்னல் சேவைகள் அனைத்துத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டாலும், இளைஞர்களும், பதின்பருவத்தினரும், நடுத்தர வயதினருமே அவற்றின் பிரதான பயனாளிகளாக இருக்கின்றனர். வயதானவர்கள் இவற்றில் இருந்து விடுபட்டவர்களாக அல்லது தாமதமாக வந்து சேர்பவர்களாக இருக்கின்றனர். அது மட்டும் அல்ல, சமூக வலைப்பின்னல் சேவைகளைப் பயன்படுத்துவதில், பெரியவர்களுக்குத் தயக்கங்களும், தடைகளும் இருக்கின்றன. சமூக வலைப்பின்னல் தளங்களின் அம்சங்களையும், அவற்றுக்கான தனி மொழியையும் புரிந்துகொள்வதும் வயதானவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் வயதானவர்களுக்கான பிரத்யேக சமூக வலைப்பின்னல் சேவைகள் வருகின்றன. அதாவது தாத்தா, பாட்டிகள் தங்களுக்குள் தொடர்புகொள்ளவும், கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளவும் வழி செய்யும் சேவைகள். ஸ்டிச்.நெட் (https://www.stitch.net/) தளத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

முதியோருக்கு உதவ...

ஐம்பது வயதுக்கு மேலானவர்களுக்கான சமூக வாழ்க்கை மற்றும் நட்புறவுக்கான சேவையாக ஸ்டிச் தளம் விளங்குகிறது. வயதானவர்கள் தங்களுக்கான துணையைத் தேடிக்கொள்ள வழி செய்யும் தளமாகவும் இது அமைகிறது. அந்த வகையில் இந்தத் தளம் வயதானவர்களுக்கான டிண்டர் (Tinder) என வர்ணிக்கப்படுகிறது.

இணைய உலகில் ஆயிரக்கணக்கான டேட்டிங் தளங்கள் இருந்தாலும், இந்தப் பிரிவில் சமகாலத்தில் அதிகம் பேசப்படும் சேவையாக டிண்டர் அமைகிறது. செயலியைப் பயன்படுத்தும்போது, இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் ஸ்வைப் செய்வதன் மூலம் தேர்வு அல்லது நிராகரிப்பைத் தெரிவிக்கும் எளிதான இடைமுக வசதிக்காக டிண்டர் அறியப்படுகிறது.

ஸ்டிச் சேவை, வயதானவர்களுக்கான டிண்டர் என அழைக்கப்பட்டாலும், டேட்டிங் மட்டுமே இதன் மைய அம்சம் அல்ல. வயதானவர்கள் இணைய உலகில் தங்களுக்கான நட்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் இந்தச் சேவை அமைந்துள்ளது. அந்த வகையில், வயதானவர்களுக்கான நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவும் அமைகிறது. இந்த நிகழ்ச்சிகளை உறுப்பினர்கள் தாங்களே உருவாக்கிக்கொள்ளலாம் என்பதே சிறப்பு.

மிக முக்கியமாக வயதானவர்கள் தனிமையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஸ்டிச் உதவுகிறது. ஸ்டிச் உருவாக்கப்பட்டதற்கான முக்கியக் காரணமாகவும் இது அமைவதாக இதன் நிறுவனர் ஆண்ட்ரூ டோலிங் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டோலிங் நடுத்தர வயது நபர் என்றாலும், வயதானவர்களின் தொழில்நுட்பப் பயன்பாட்டில் ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளைப் பயன்படுத்தும்போது வயதானவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதைக் கவனித்தார்.

உறவுகளை வளர்க்க...

தாத்தா, பாட்டிகள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்த முக்கியக் காரணம், பேரன், பேத்திகளுடன் தொடர்புகொண்டு உரையாட விரும்புவதுதான். ஆனால், ஃபேஸ்புக்கின் எண்ணற்ற அம்சங்களும், இடைவிடாத நோட்டிபிகேஷன்களும் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடலாம். மேலும் பொய்ச் செய்திகளும், இணைய மோசடிகளும் அவர்களைத் திணறடிக்கலாம்.

இவற்றை எல்லாம் கவனித்த டோலிங், வயதானவர்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகளைப் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் ஒரு சேவையை ஆரம்பிக்க விரும்பினார். இந்த நோக்கத்தோடு, கடந்த 2010-ல் வேலையைவிட்டு விலகி, டேப்ஸ்டரி (Tapestry ) எனும் சேவையைத் தொடங்கினார்.

டேப்ஸ்டரி சேவைக்கு வயதானவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு, வயதானவர்களின் தேவை பற்றிய புரிதலும் கிடைத்தது. முதியோருக்கு நவீன தொழில்நுட்பம் சவாலாக இருப்பதோடு, தங்கள் வயதுக்கேற்ற தோழமை இல்லாமல் தனிமையில் பலர் இருப்பதையும் இந்த அனுபவம் மூலம் டோலிங்கால் புரிந்துகொள்ள முடிந்தது.

டேப்ஸ்டரி சேவைக்கான சந்திப்புகளில் பங்கேற்றவர்களில் பலர் நட்பை உருவாக்கி கொள்வதற்கான வாய்ப்பாகவும் இவற்றைப் பயன்படுத்திக்கொண்டனர். இதன் மூலம், டேப்ஸ்டரி சேவை வயதானவர்களின் தனிமைக்கும் தீர்வாக அமைவதை டோலிங் புரிந்துகொண்டார். தொடர்ந்து வயதானவர்களுடன் உரையாடிய அனுபவம், இந்தப் பிரிவில் பிரத்யேக சேவையின் தேவையை உணர்த்தியதை அடுத்து, வயதானவர்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவையாக ஸ்டிச்சை ஆரம்பித்தார்.

வயதானவர்களை மையமாக கொண்டிருந்ததோடு, அவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் ஸ்டிச் அமைந்திருக்க வேண்டும் என்பதில் டோலிங் உறுதியாக இருந்தார். வயதானவர்கள் இணைய மோசடிக்கு இலக்காவதைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்தார். ஸ்டிச் தளத்தை விஷமிகள் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கும் வகையில், இதன் பயனாளிகள் வயதானவர்கள் என்பதை உறுதி செய்யப்பட்ட பிறகே உறுப்பினர்களாக அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக என்று தனியே பரிசோதனையும் இருக்கிறது.

அடிப்படை சேவை இலவசம் என்றாலும், அனைத்து உறுப்பினர்களையும் தொடர்புகொள்வதற்கான வசதி கட்டணச் சேவையாக அளிக்கப்படுகிறது. நட்பு தேடுவதில் தொடங்கி துணை தேடுவது வரை எல்லா வகையான உறவுகளுக்கும் இந்தச் சேவை கைகொடுப்பதாக டோலிங் சொல்கிறார். பயணங்களை ஏற்பாடு செய்வது, உள்ளூர் நிகழ்ச்சிகளை நடத்துவது, ஆர்வம் சார்ந்த குழுக்களை உருவாக்கிக்கொள்வது, ஒன்றாக விருந்துக்குச் செல்வது எனப் பலவகையான இந்தச் சேவையை அதன் உறுப்பினர்கள் பயன்படுத்திவருகின்றனர்.

ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டாலும் மற்ற நாடுகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. வயதானவர்கள் மத்தியிலான தனிமை என்பது சமூக நோக்கிலான சிக்கல் மட்டும் அல்லாமல், ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினையாகவும் இருப்பதால், இணைய யுகத்து தாத்தா பாட்டிகளுக்கான சேவையாக ஸ்டிச் பிரபலமாகி வருகிறது.

இதே போல, சீனியர் மேட்ச், தேர்ட் ஏஜ் மற்றும் மைபூமர்பிளேஸ் போன்ற தளங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலும்கூட சில ஆண்டுகளுக்கு முன், வெர்டியூரஸ் (Verdurez.com) எனும் வயதானவர்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவை தொடங்கப்பட்டது. வயதானவர்கள் வலைப்பதிவு செய்வது, உரையாடுவது, விவாதக் குழுக்களை அமைப்பது எனப் பலவிதமான செயல்களிலும் ஈடுபடும் வகையில் இந்தச் சேவை அமைந்திருந்தது.

இணையம் என்ன இளையவர்களுக்கு மட்டுமானதா என்ன!

(தொடரும்)

பெட்டி செய்தி:

தொழில்நுட்ப உதவி

வயதானவர்களுக்கான இணையதளங்களில் சீனியர் பிளானட் (https://seniorplanet.org/ ) தளத்தையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். வயதானவர்களுக்கான தொழில்நுட்ப உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஓட்ஸ் (OATS - Older Adults Technology Services) எனும் அமைப்பு இந்தத் தளத்தை நடத்தி வருகிறது. டிஜிட்டல் யுகத்தில் வயதானவர்கள் தொழில்நுட்ப பரிச்சயம் பெறுவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பு, 2013-ல் சீனியர் பிளானட் மையத்தை நியூயார்க் நகரில் தொடங்கியது. இதன் கூட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து மற்ற நகரங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தொழில்நுட்ப வகுப்புகள் உள்ளிட்டவற்றை நடத்துவதோடு, தொழில்நுட்ப வழிகாட்டிக் கட்டுரைகளையும் வெளியிட்டு வயதானவர்களை ஊக்குவித்து வருகிறது இந்த அமைப்பு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in