சமூக ஊடக வானவில்-38: ஸ்லேக் ஒன்றே போதுமே!

சமூக ஊடக வானவில்-38: ஸ்லேக் ஒன்றே போதுமே!

இமெயில் எனப்படும் மின்னஞ்சல் சமூக ஊடக வரையறைக்குள் வருமா என்பது சுவாரசியமான கேள்வி. இணைய வழித் தகவல் தொடர்பு எனும் அம்சத்தின்படி பார்த்தால் இமெயிலும் சமூக ஊடகம் எனக் கொள்ளலாம். சமூக ஊடகத்தின் முக்கிய உட்பிரிவான சமூக வலைப்பின்னல் தளங்களுக்குச் சொல்லப்படும் இலக்கணப்படி பார்த்தாலும், இமெயிலை சமூக வலைப்பின்னல் சேவையாகக் கருதலாம்.

வாட்ஸ் -அப் குழு போல இமெயிலிலும் குழு அமைக்கலாம் என்பதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். நூற்றுக்கணக்கானோரைத் தொடர்புகொள்ளலாம், இமெயில் சரடு அமைக்கலாம் என இன்னும் பல அம்சங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

எனினும் இமெயில் சமூக ஊடகமாகுமா? என்பது புரிதல் சார்ந்தது. இதற்கென அதிகாரபூர்வ சேர்க்கை விதிகளோ, விலக்கல் நெறிமுறைகளோ இல்லை.

இமெயில் சமூக வலைப்பின்னலா இல்லையா எனும் கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும், இனி இமெயிலுக்கான தேவை இருக்காது என்று சொல்ல வைத்த ஒரு நவீன சமூக வலைப்பின்னல் சேவை ஸ்லேக் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

வர்த்தகப் பயன்பாடு

ஸ்லேக் (Slack), வாட்ஸ் -அப் போல ஒரு மெசேஜிங் சேவைதான் என்றாலும், கொஞ்சம் வேறுபட்டது, விசேஷமானது. வாட்ஸ்-அப் தவிர, சிக்னல், டெலிகிராம், வீசாட் என பலவகையான மெசேஜிங் சேவைகள் இருந்தாலும் இவை எல்லாமே பொதுப் பயன்பாட்டிற்கான சேவைகள். மாறாக ஸ்லேக் வர்த்தகப் பயன்பாட்டிற்கானது. அதாவது தொழில்முறை பயன்பாட்டிற்கான மெசேஜிங் சேவை.

வர்த்தக அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் ஒரு குழுவாகத் தொடர்புகொள்ளவும், கூட்டு முயற்சியில் ஈடுபடவும், கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளவும் ஸ்லேக் வழி செய்கிறது. இந்தக் காரணத்தினாலேயே அலுவலகச் சூழலில் இமெயிலுக்கான மாற்றாக ஸ்லேக் வர்ணிக்கப்படுகிறது.

இமெயில் அப்படி ஒன்றும் காணாமல் போய்விடாது என்றாலும், தொழில்முறை தகவல் பரிமாற்றத்தில் ஸ்லேக்கின் முக்கியத்துவம் மகத்தானது என்பதை மறுப்பதற்கில்லை. அது மட்டும் அல்ல ஸ்லேக்கைப் பயன்படுத்தியவர்கள் அதன் தனித்தன்மையை எளிதாக உணர முடியும்.

தனிச் சேவையான துணைச் சேவை

அலுவலகச் சூழலில் தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய சேவையாக அறியப்படும் ஸ்லேக் திட்டமிட்டு உருவாக்கப்படாமல் தற்செயலாக உருவானது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

முன்னோடி சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்றாகக் கருதப்படும் புகைப்படப் பகிர்வு சேவையான ஃப்ளிக்கரை உருவாக்கிய இணை நிறுவனர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் பட்டர்பீல்டு தான் ஸ்லேக்கை உருவாக்கினார். ஆன்லைன் கேம் உருவாக்கத்தின் துணைச் சேவையாக உருவாக்கப்பட்டு பின்னர் முழுவீச்சிலான புகைப்படப் பகிர்வு சேவையாக ஃப்ளிக்கர் அறிமுகம் ஆனது போலவேதான் ஸ்லேக் விஷயத்திலும் நிகழ்ந்தது.

ஃப்ளிக்கரில் இருந்து விலகி வந்த பிறகு பட்டர்பீல்டு ’டைனி ஸ்பெக்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கி கிளிட்ச் எனும் ஆன்லைன் கேமை உருவாக்க ஆரம்பித்தார். இந்த கேம் உருவாக்கத்தின்போது தொடர்புகொள்வதற்கான இணைய உரையாடல் அல்லது அரட்டைச் சேவை ஒன்றை அவர் உருவாக்கினார். ஆன்லைன் கேமைவிட இந்த அரட்டைச் சேவை சிறப்பாக இருக்கவே இதையே தனிச் சேவையாக அறிமுகம் செய்தார். 2013-ல் இப்படித்தான் ஸ்லேக் அறிமுகமானது.

சிறப்பம்சங்கள்

அணிகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கான சேவையாக அறிமுகமான ஸ்லேக் அதன் தன்மை காரணமாக வர்த்தக உலகில் வரவேற்பைப் பெற்றது. ஆரம்பித்த 24 மணி நேரத்தில் இதில் 8 ஆயிரம் வர்த்தக நிறுவனங்கள் இணைந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடிப்படையில் மெசேஜிங் சேவை என்றாலும், மைய நோக்கத்தில் மட்டும் அல்லாது செயல்பாட்டிலும் ஸ்லேக் மாறுபட்ட அம்சங்கள் கொண்டது. ஸ்லேக்கில் வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கான பணிப் பரப்பை (workspace) உருவாக்கிக்கொள்ளலாம். இந்தப் பரப்பிற்குள் எண்ணற்ற சேனல்களை அமைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு சேனலும் அலுவலகத்தில் உள்ள குறிப்பிட்ட துறை அல்லது பிரிவுக்கான தனிக் குழு போன்றது.

இவை தவிர, சேனல்களைத் தலைப்புகளுக்கு ஏற்பவும் பிரித்துக்கொள்ளலாம். சேனல்களிலும், குழுக்களிலும் வரி வடிவ செய்திகள் தொடங்கி, புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ என பரிமாறிக்கொள்ளலாம். கிட்டத்தட்ட இமெயில் போல ஆனால் இன்னமும் எளிமையாக அலுவலகத் தகவல் தொடர்புக்கு ஸ்லேக்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஸ்லேக் சேனல்களைப் பொது வெளியில் வைத்திருக்கலாம் அல்லது தனிப்பட்டதாக அமைத்துக்கொள்ளலாம். இந்த சேனல்களுக்குள் பயனாளிகள் நேரடி செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம். சேனல்களில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இணைய நாட்காட்டி வசதிகளுடனும் ஒருங்கிணைத்துக்கொள்ளலாம்.

அலுவலகத் திட்டமிடல் அல்லது அணிகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிக்கு ஸ்லேக் ஏற்றதாகக் கருதப்பட்டதால் தொழில்முறை வட்டாரத்தில் வேகமான வளர்ச்சி அடைந்தது. வாட்ஸ்-அப் போல, வீண் வம்பு சார்ந்த உரையாடல், வெற்று ஃபார்வேர்டுகள் எல்லாம் இல்லாதது போன்றவை ஸ்லேக்கைச் செயல்திறன் மிக்கதாகக் கருத வைக்கின்றன.

மெய்நிகர் அலுவலகம்

ஸ்லேக் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. இதில் பதிவான பழைய உரையாடல்களைத் தேடி எடுக்கும் வசதி இருக்கிறது. என்கிரிப்ஷன் அம்சமும் உண்டு. குழு அழைப்புகளையும் திட்டமிடலாம். ஸ்லேக் கட்டணச்சேவை என்றாலும் அடிப்படை அம்சங்கள் இலவசம்தான். வர்த்தக நோக்கிலான பயன்பாட்டிற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். அலுவலகத் தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்றதாக இருப்பதால் கட்டணத்தை யாரும் பொருட்படுத்துவதில்லை.

ஸ்லேக் சேனல்கள் தவிர, அதில் எண்ணற்ற அம்சங்கள் இருக்கின்றன. குழு உரையாடல் தவிர உறுப்பினர்கள் தங்களுக்குள் ஜாலியாகத் தனிப்பட்ட உரையாடலிலும் ஈடுபடலாம். மெசேஜிங் சேவையில் செயல்திறன் மிக்கதாகக் கருதப்படும் ஸ்லேக், கோவிட்-19 பாதிப்புக்கு மத்தியில் அலுவலக பணிகள் ஒருங்கிணைப்பிற்காக அதிகம் நாடப்பட்டது.

ஸ்ல்கே தொடர்ந்து புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து வர்த்தக நிறுவன ஊழியர்களுக்கான மெய்நிகர் அலுவலகம் போலவே ஸ்லேக்கை நிலைநிறுத்தியிருக்கின்றன.

(தொடரும்)

ஸ்லேக் பாட்கள்

ஸ்லேக் சேவையின் தனித்தன்மைகளில் ஒன்று, பயனாளிகள் அதில் பலவகையான பாட்கள் (அரட்டை மென்பொருள்) உருவாக்கிக்கொள்ளலாம் என்பதுதான். இவற்றைத் தானியங்கி உரையாடல் சேவையாகக் கருதலாம். இப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்லேக் பாட்கள் இருக்கின்றன. பயனாளிகள் தங்கள் தேவைக்கு ஏற்ற பாட்களை சேனல்களில் ஒருங்கிணைத்துக்கொள்ளலாம். மேலும் ஸ்லேக் சார்ந்த மூன்றாம் தரப்பு மென்பொருள் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்லேக் செயல்திறனை அதிகரிக்க உதவும் துணைச் சேவைகள் ஸ்லேக்கின் பயன்பாட்டையும் செல்வாக்கையும் அதிகரிக்கச்செய்துள்ளன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான செயலி வடிவத்தோடு ஸ்மார்ட் வாட்சிற்கான ஒருங்கிணைப்பையும் கொண்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in