சமூக ஊடக வானவில்-30: உங்கள் இல்லத்திற்கான வலைப்பின்னல்

சமூக ஊடக வானவில்-30: உங்கள் இல்லத்திற்கான வலைப்பின்னல்

கூகுளில் உள் அலங்காரம் எனும் சொல்லைத் தேடிப்பாருங்கள். உள் அலங்காரம் தொடர்பான நூற்றுக்கணக்கான அழகான படங்களையும், உள் அலங்காரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் இல்ல வடிவமைப்பு தொடர்பான இணையதளங்களையும் இதற்கான தேடல் பட்டியலில் பார்க்கலாம்.

உங்கள் இல்லத்திற்கான வடிவமைப்பில் ஈடுபட்டிருக்கும்போது இதே தேடலை மேற்கொள்ளுங்கள். தேடல் முடிவுகள் உங்களுக்குக் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கலாம். தேடல் முடிவுகளில் உங்களுக்கு ஏற்றதைக் கண்டறிவது சிக்கலானது என்றால், இல்ல வடிவமைப்புக்குத் தேவையான பொருட்களை வாங்கும் வழியைக் கண்டறிவது இன்னும் சிக்கலாக இருப்பதை உணரலாம்.

இணைய தேடல் என்பது பொதுவானது எனும்போது இந்த நிலையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

விதவிதமான தெரிவுகள்

இப்போது விதவிதமான இல்லங்களுக்கான உள் அலங்கார வடிவமைப்பைக் கொண்டுள்ள நூற்றுக்கணக்கான படங்கள் இருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள். இந்தப் படங்களிலும்கூட, படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை, உணவு அறை, பூஜை அறை, தாழ்வாரம் என விரும்பிய வகைகளில் பட்டியலிடப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்?

இந்தப் படங்கள் மூலம் உள் அலங்காரம் தொடர்பான காட்சி ரீதியிலான தகவல்களைப் பெறுவதோடு, இத்தகைய வடிவமைப்பு சேவையை வழங்கக்கூடிய நிறுவனங்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள் தொடர்பான தகவல்களையும் பெற முடிந்தால் எப்படி இருக்கும்?

இதே போல இல்ல வடிவமைப்பு தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெற்று, மனதில் எழும் சந்தேகங்களுக்கு வல்லுநர்களிடம் விளக்கம் கேட்பதோடு, சக பயனாளிகளோடு இது தொடர்பாக உரையாட முடிந்தால் எப்படி இருக்கும்?

சுருக்கமாகச் சொல்வது என்றால், இல்ல வடிவமைப்பு தொடர்பான துடிப்பான இணையச் சமூகம் இருந்து அதில் நாமும் அங்கம் வகிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? இல்ல வடிவமைப்பிற்கான சமூக வலைப்பின்னல் சேவையான ‘ஹவுஸ்’ (https://www.houzz.in/) தான் இத்தகைய இணையச் சமூகமாக இருக்கிறது.

பிரத்யேக சேவை

இல்ல வடிவமைப்பு தொடர்பாக எந்தத் தகவல் தேவை என்றாலும் இந்தத் தளத்தில் பெறலாம் என்பது மட்டும் அல்ல, தகவலைத் தேடும் அனுபவம் சமூகமயமானதாக இருப்பதையும் உணரலாம்.

இல்லங்களுக்கான உள் அலங்காரம் தொடர்பான தகவல்களையும், கருத்தாக்கங்களையும் தேடுபவர்கள் இந்தத் தளத்தைப் பார்த்தால் உற்சாகத்தில் மூழ்கிவிடுவார்கள். ஏனெனில், இந்தத் தளத்தில் உங்கள் அபிமான இல்லத்தை வடிவமைக்க அல்லது மேம்படுத்த தேவையான அனைத்து எண்ணங்களையும் எளிதாகப் பெறலாம் என்பதோடு, மேலதிகத் தகவல்களையும் பெறலாம். தொடர்புடைய தொழில்முறை வல்லுநர்களையும் எளிதாக அடையாளம் கண்டு தொடர்புகொள்ளலாம்.

இந்தத் தொடரில் நாம் ஏற்கெனவே பார்த்த, இணைய காட்சி பலகை சேவையான பின்டெரெஸ்ட் போல இருந்தாலும், இரண்டுக்கும் ஒற்றுமையும், முக்கிய வேற்றுமையும் இருக்கின்றன. பின்டெரெஸ்ட் காட்சி மூலம் தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவும் பொதுவான சேவை. உள் அலங்காரம் தொடர்பான தகவல்களையும் அதில் தேடலாம். ஆனால் ஹவுஸ், இல்ல வடிவமைப்பிற்கான பிரத்யேகமான சேவை. மேலும் இது காட்சிப் பலகை என்பதைக் கடந்து, உள் அலங்காரம் தொடர்பான தேவையான தகவல்களை எளிதாக அளிக்கக்கூடியது.

தேடுதலில் விளைந்த தளம்

இல்ல வடிவமைப்பிற்குப் பொருத்தமான பயனுள்ள தகவல்களைத் தேடுவதும், தொடர்புடைய சேவைகளைக் கண்டறிவதும் பெரும் சிக்கலாக இருப்பதை உணர்ந்தவர்கள் ஹவுஸ் சேவையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். உண்மையில் இத்தகைய தேவையையும், பயனாளிகள் தரப்பிலான போதாமையையும் உணர்ந்ததால் உருவான சேவை தான் இது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆதி டாடர்கோ (Adi Tatarko) மற்றும் ஆலன் கோஹன் (Alon Cohen) தம்பதி, தங்கள் இல்லத்தை மேம்படுத்த விரும்பியபோது உண்டான குழப்பம் மற்றும் ஏமாற்றத்தின் விளைவாக இந்த தளத்தை 2009-ம் ஆண்டு தொடங்கினர். பழைய வீடு ஒன்றை விலைக்கு வாங்கியிருந்த இந்தத் தம்பதி அதைப் புதுப்பித்து தங்கள் கனவு இல்லமாக்க விரும்பினர். அதற்கான தேடலில் ஈடுபட்டபோதுதான் அலுப்பையும், ஏமாற்றத்தையும் உணர்ந்தனர். அவர்கள் மனக்கண்ணில் இருந்த சித்திரத்துடன் பொருந்தி வரக்கூடிய வடிவமைப்பு எண்ணங்களைத் தேடுவது பெரும்பாடாக இருந்தது என்றால், அதற்குரிய பொருட்களை எங்கு வாங்குவது என அறிவதும், எந்த வடிவமைப்பாளரை தொடர்பு கொள்வது என்பதும் இன்னும் குழப்பமாக இருந்தது.

இது தொடர்பாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுடன் பேசிப்பார்த்தபோது பலருக்கும் இதே அனுபவம் இருப்பது புரிந்தது. இதையடுத்தே ஆதி தம்பதி இத்தகைய தகவல்களை அளிக்கும் இணையதளம் ஒன்றைத் தொடங்க விரும்பினர். இல்ல வடிவமைப்பிற்கான அடிப்படை எண்ணங்களை அளிப்பதோடு, வடிவமைப்பு கலைஞர்களைத் தொடர்புகொள்ளும் வகையிலும் இந்தத் தளம் அமைந்திருந்தது.

முதல் கட்டமாக, அருகில் இருந்தவர்கள் மற்றும் ஒரு சில வடிவமைப்பு கலைஞர்களுடன் இந்தத் தளத்தைத் தொடங்கினர். இந்தத் தளத்தைப் பார்த்தவர்கள் தாங்கள் எதிர்பார்த்த சேவை போலவே இருப்பதை உணர்ந்து, தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இதன் விளைவாகத் தளத்தின் பயனாளிகள் அதிகரித்தனர். பகுதிநேரப் பணியாக இந்தத் தளத்தைக் கவனித்து வந்த ஆதி தம்பதி, அதில் மேலும் கவனம் செலுத்தி தனி நிறுவனமாக்கி, மேலும் அம்சங்களைச் சேர்த்தனர்.

இல்ல வடிவமைப்பில் ஈடுபட விரும்புகிறவர்கள் அதற்கான விவரங்களைக் காட்சி ரீதியாகத் தேடவும், தொழில்முறை வல்லுநர்களைத் தொடர்புகொள்ளவும் இந்தத் தளம் எளிதாக வழிவகை செய்தது. உறுப்பினர்கள் தங்களுக்குள் தொடர்புகொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான வழி சமூகத்தன்மையை அளித்தது.

மேலும், இதில் இடம்பெற்றுள்ள வடிவமைப்பு சேவை நிறுவனங்கள் தொடர்பான கருத்துக்களையும் பதிவிடலாம். வடிவமைப்பு தொடர்பான வழிகாட்டி கட்டுரைகளும், விவாதப் பகுதியும் இருக்கின்றன.

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் தொடங்கி, மற்ற நகரங்களில் விரிவாக்கம் செய்த இந்தத் தளம் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் சேவை அளிக்கிறது.

(தொடரும்)

காட்சி நூலகம்

‘ஹவுஸ்’ இணையதளத்தைக் காட்சி நூலகம் என்று வர்ணிப்பதும் பொருத்தமாக இருக்கும். இந்தத் தளத்தில் இடம்பெறும் வடிவமைப்பு தொடர்பான படங்கள் தொழில்முறை வல்லுநர்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள் ஆகியோரால் பதிவேற்றப்பட்டவை. மேலும், வடிவமைப்பு ஆலோசனைகளையும் அவர்கள் வழங்குகின்றனர். தொழில்முறை கலைஞர்களை இந்தத் தளம் மூலமே தொடர்புகொண்டு கேள்வி கேட்கும் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் சந்தேகங்களுக்கான விளக்கங்களைப் பெறலாம். இந்தக் கேள்வி - பதில் வசதியே இந்தத் தளத்தின் தனித்தன்மைகளில் ஒன்றாக இருக்கிறது. இல்ல ஆர்வலர்கள் மற்றும் தொழில்முறை வடிவமைப்புக் கலைஞர்கள் இடையிலான பாலமாகவும் இந்த இணையச் சமூகம் விளங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in