சமூக ஊடக வானவில் - 20: பெற்றோர்களுக்கான வலைப்பின்னல்கள்!

சமூக ஊடக வானவில் - 20: பெற்றோர்களுக்கான வலைப்பின்னல்கள்!

'எவ்வளவு காலமாக அம்மாக்கள் இருகின்றனரோ, அவ்வளவு காலம் சமூக வலைப்பின்னல்கள் இருக்கின்றன' எனத் தொடங்குகிறது ‘கேஃப்மாம்’ (CaféMom) இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான ஹவ்ஸ்டஃப்வொர்க்ஸ் (HowStuffWorks) வழிகாட்டி கட்டுரை. வரலாறு முழுவதுமே பெண்கள் குழுவாக, குழந்தை வளர்ப்பு மற்றும் இல்லப் பராமரிப்பு தொடர்பான கருத்துகளைத் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு வந்திருக்கின்றனர். இணையம் வருவதற்கு முன், குடும்பம், அக்கம்பக்கத்தினர் என இருந்த இந்த வலைப்பின்னல் இப்போது இணைய சமூகங்களாக மாறத் தொடங்கியிருக்கிறது என்றும் இத்தகைய சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்றாக கேஃப்மாம் விளங்குகிறது என்றும் இந்தக் கட்டுரையின் அறிமுகம் அமைகிறது.

ஆம், புத்தாயிரமாண்டுக்குப் பிறகு அம்மாக்களுக்காகவும், அம்மாவாக இருக்கும் பெண்களுக்காகவும் பிரத்யேகமான சமூக வலைப்பின்னல் தளங்கள் அலையென உருவாகத் தொடங்கின. அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த போக்குகளின் அடையாளமாக கேஃப்மாம் தளத்தைக் கருதலாம். அம்மாக்களுக்கான மைஸ்பேஸ் என்று இந்த தளம் வர்ணிக்கப்பட்டதில் இருந்தே இந்தத் தளத்தின் பழமையையும், செல்வாக்கையும் புரிந்துகொள்ளலாம்.

தாய்களுக்காகத் தந்தை தொடங்கிய தளம்

இணையம் மூலம் தொடர்புகொள்ளும் சமூக வலைப்பின்னல் தளங்களின் கருத்தாக்கம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஒவ்வொரு பிரிவினருக்குமான பிரத்யேக வலைப்பின்னல்கள் தேவை எனும் கருத்தும் வலுப்பெற்றதன் விளைவாக பெண்களுக்கான, குறிப்பாக அம்மாக்களுக்கான சமூக வலைப்பின்னலாக கேஃப்மாம் 2006-ல் அறிமுகமானது.

அம்மாக்களுக்கான இந்தச் சமூக வலைப்பின்னல் தளம் ஒரு அப்பாவால் தொடங்கப்பட்டது என்பதுதான் சுவாரசியம். ஆம், ஹாலிவுட் நடிகராக இருந்து, இணைய தொழில்முனைவோராக மாறிய ஆண்ட்ரூ ஷூ (Andrew Shue) தனது பால்ய கால நண்பரோடு இணைந்து இந்தத் தளத்தைத் தொடங்கினார்.

ஆண்ட்ரூ அப்போது கிளப்மாம் எனும் இணைய நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தார். இதே காலத்தில்தான் அவரது மனைவி அம்மாவானார். குழந்தை வளர்ப்பு தொடர்பான குறிப்புகளையும், ஆலோசனைகளையும் மற்ற அம்மாக்களிடம் மனைவி ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்த ஆண்ட்ரூவுக்கு, இப்படி அம்மாக்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு சமூக வலைப்பின்னல் தளம் தேவை எனத் தோன்றியது. இந்த எண்ணமே கேஃப்மாம் தளமாக உருவானது.

என்னென்ன வசதிகள்?

இல்லப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு அமைந்திருந்த இந்த தளத்தில், கட்டுரைகள், தகவல்கள், ஆலோசனைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இளம் அம்மாக்களும், புதிய அம்மாக்களும் இந்த தளத்தில் உறுப்பினராகி தங்களுக்கான பக்கத்தை அமைத்துக்கொண்டு மற்றவர்களுடன் தொடர்புகொள்ளலாம். குழந்தை வளர்ப்பு குறித்த சந்தேகங்களைக் கேள்விகளாகக் கேட்கவும், அனுபவசாலிகள் அவற்றுக்கான விளக்கங்களைப் பதிலாக வழங்கவும் இந்தத் தளம் வழி செய்தது.

இந்தத் தளத்தில் அம்மாக்கள் தங்களுக்கான தகவல்களைப் பெற முடிந்ததோடு, சக உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் வசதியும் இருந்தது. அம்மாக்கள் தங்கள் மனநிலையை இணைய குமிழ்களாக உணர்த்தி அதற்கேற்ப நிலைத்தகவல்களைப் பகிரும் வசதி இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்தது. இவை தவிர, குழுக்களை உருவாக்குவது, கேள்விகளுக்குப் பதில் அளிப்பது, வலைப்பதிவு உருவாக்குவது உள்ளிட்ட வசதிகளும் இருந்தன. அம்மாக்களுக்கான கேம்களும் இருந்தன.

கேஃப்மாம் அம்மாக்களுக்கான இணையச் சமூகமாக பிரபலமாகி, லட்சக்கணக்கான பெண்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்தனர். இதே காலகட்டத்தில், பேரன்ட்ஸ் கனெக்ட், ஜஸ்ட் மம்மீஸ், மாம்ஸ் லைக் யூ உள்ளிட்ட பெண்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவைகளும் அறிமுகமாயின.

மாறிப்போன வடிவம்

ஆனால், இந்தத் தளங்கள் மெல்ல செல்வாக்கிழந்து பின்னுக்குத் தள்ளப்பட்டன. பல ஆண்டுகள் தாக்குப்பிடித்த கேஃப்மாம் தளம் இன்னமும் செயல்பாட்டில் இருக்கிறது என்றாலும், சமூக வலைப்பின்னல் அம்சம் நீங்கிய பெற்றோர் ஆலோசனை தளமாகவே அதன் தற்போதைய வடிவம் அமைந்துள்ளது. அம்மாக்களுக்கான சமூக வலைப்பின்னல் தளங்கள் பெரும்பாலானவை காணாமல் போனது ஏமாற்றம் அளிக்கும் விஷயம். எனினும், ஆறுதல் அளிக்கும் வகையில் பெண்களுக்கான பிரத்யேகமான சமூக வலைப்பின்னல் தளங்கள் சில இன்னமும் செல்வாக்குடன் விளங்குகின்றன.

இந்தியப் பெண்களுக்கான ஷீரோஸ் (SHEROES) தளத்தை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். லக்னோவைச் சேர்ந்த சாய்ரி சாஹல் (Sairee Chahal) தொடங்கிய இந்தத் தளம், இந்தியப் பெண்களுக்கான இணையச் சமூகமாக விளங்குகிறது. பெண்கள் பணி சார்ந்த ஆலோசனைகளைப் பெறுவதற்கான இணையச் சமூகமாகவும் இந்தத் தளம் அறியப்படுகிறது.

தொழில்முனைவில் ஆர்வம் கொண்ட சாஹல், பிளெக்ஸிமாம்ஸ் எனும் அம்மாக்களுக்கான சமூக வலைப்பின்னல் தளத்தைத் தொடங்கி நடத்திய பிறகு, ஷீரோஸ் தளத்தைத் தொடங்கினார். இணையத்தை உருவாக்கிய ஆண்கள் அதை தங்களுக்காக உருவாக்கிக்கொண்டனர் எனக் கூறும் சாஹல், பணிச் சூழலிலும், இணையப் பரப்பிலும் நிலவும் பாலின இடைவெளியைப் போக்கும் வகையில், பெண்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவை தேவை என உணர்ந்து இந்தத் தளத்தைத் தொடங்கினார்.

சாய்ரி சாஹல்
சாய்ரி சாஹல்

பெண்களுக்காகப் பெண்கள் நடத்தும் சமூக வலைப்பின்னல் சேவையாக இது விளங்குகிறது. குறிப்பாக, பெண்களுக்கான வேலைவாய்ப்பில் இந்தத் தளம் கவனம் செலுத்துகிறது. இந்தத் தளத்தில் பெண்கள் பல்வேறு தலைப்புகளின்கீழ் இயங்கும் சமூகங்களில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். பெண்கள் பதிவுகளை உருவாக்குவதன் மூலம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு மற்றவர்களுடன் கலந்துரையாடலாம். நிலைத்தகவல்களில் கருத்து தெரிவிப்பது, சக உறுப்பினர்களைப் பின்தொடர்வது உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான செயலி வடிவிலும் இந்தச் சேவையை அணுகலாம். இந்தத் தளத்தில் உள்ள உதவி எண் வாயிலாக, பெண்கள் தங்கள் பணி வாழ்க்கை தொடர்பான ஆலோசனைகளைக் கேட்டுப் பெறலாம். பெண்கள் நலனுக்காக வர்த்தக நிறுவனங்களுடனும் இந்தத் தளம் இணைந்து செயல்படுகிறது.

இதுபோலவே, மாம்ஸ்பிரஸோ (/www.momspresso.com) தளமும், பெண்களுக்கான மாறுபட்ட சமூக வலைப்பின்னல் சேவையாக அமைகிறது. நிலைத்தகவல்கள் அல்லாமல், வலைப்பதிவு சார்ந்த பகிர்வுகள் அடிப்படையில் உரையாடும் வகையில் இந்தத் தளம் அமைந்துள்ளது. உறுப்பினர்கள் மிக எளிதாக இந்தத் தளத்தில் பதிவுகளை உருவாக்கிப் பகிர்ந்துகொள்ளலாம். இதற்கு சக உறுப்பினர்கள் நிதி ஆதரவு அளித்து ஊக்குவிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

(தொடரும்)

பெட்டிச் செய்தி

தந்தையர் வலை

அம்மாக்களுக்கான சமூக வலைப்பின்னல் தளங்கள் தோன்றியது போலவே, அப்பாக்களுக்கான சமூக வலைப்பின்னல் தளங்களும் அறிமுகம் ஆயின. இவற்றில் டாட் லேப்ஸ் (DadLabs) தளம் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தது. இந்தத் தளத்தில் அப்பாக்கள் தங்களுக்கான அறிமுக பக்கத்தை உருவாக்கிக் கொண்டு, சக அப்பாக்களுடன் உரையாடலாம். இதே போலவே லைப்ஆஃப்டாட் (https://www.lifeofdad.com/) தளமும் உருவானது.

பாட்ரேகேட்ரே (https://www.padrecadre.com/) எனும் தளமும் இந்தப் பரப்பில் செயல்பட்டு வருகிறது. தந்தையர் வலைப்பதிவு, தந்தையர் விவாதப் பகுதி உள்ளிட்ட அம்சங்களை இந்தத் தளம் கொண்டிருக்கிறது. அப்பாக்கள் தங்கள் பகுதியில் உள்ள சக அப்பாக்களுடனான மீட்அப்களுக்கும் ஏற்பாடு செய்துகொள்ளும் வசதியும் அளிக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in