சிறகை விரி உலகை அறி-32: வாழ்வின் சுவடுகள்

அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தின் அடியில் அகழாய்வு
அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தின் அடியில் அகழாய்வு

கவலைகளைக் கலைத்துபோடும் மந்திரச் சொல் கலை. ரத்தம் தோய்ந்த வாள், முனை ஒடிந்த வேல், வெட்டுண்ட கால் அனைத்துடனும், அரசர்களின் போர்ப்பரணியைப் பதிவு செய்துள்ளன கலைகள். பெருநீர் குடித்த நிலம், நிலம் கொண்ட உடல், தீயுண்ட காற்று, பொருள் வளம், கொடை உளம், நிமிர்ந்து நிற்கும் கோயில், புதைந்து கிடக்கும் அரண்மனை அனைத்தையும் கலைகளே சேமித்து வைத்திருக்கின்றன. நாடகம், நாட்டியம், கதாகாலட்சேபம், கூத்து, கவிதை, பாடல் போன்ற வடிவங்களில் வடிவெடுக்கும் வரலாற்றுக் கதைகளை மக்களிடம் சேர்ப்பதில் கோயில் விழாக்களுக்குப் பெரும்பங்குண்டு.

டயனைசஸ் கோயில்

சேயுஸ் - கடவுள்களுக்கெல்லாம் கடவுள், மனிதர்களுக்கெல்லாம் தந்தை என்று கிரேக்கர்கள் நம்பினார்கள். விண்ணகக் கடவுள், எல்லோரையும் ஆள்பவர் பாதுகாப்பவர் என்று போற்றினார்கள். சேயுஸின் அடையாளமாக இடி, மின்னல், கழுகு மற்றும் வயதான தோற்றத்தைக் கொண்டாடினார்கள். சேயுஸ் கடவுளுக்கும், மனிதப் பெண் செமெலி (Semele) இருவருக்கும் பிறந்தவர்தான் டயனைசஸ் (Dionysos).

டயனைசஸ் பிறப்பு குறித்த கதைகள் பல உள்ளன. அதில் ஒன்று: செமெலி கருவுற்றதை அறிந்த சேயுஸின் மனைவி ஹேரா (Hera) பொறாமையுற்றார். செமெலியைத் தந்திரமாகக் கொல்லத் திட்டமிட்டு, “கடவுள் சேயுஸை மனித உருவத்தில் வரச் சொல்லி நீ பார்க்கலாமே” என்று அறிவுறுத்தினார். மகிழ்ந்த செமெலி அப்படியே செய்தார். முழு ஆற்றலுடன் வந்த கடவுளைத் தாங்க இயலாத செமெலி, இடி மின்னலால் எரிந்து சாம்பலானார். ஆனாலும், பிறக்காத குழந்தையை சேயுஸ் காப்பாற்றினார். தன் தொடையைக் கீறி அதனுள் வைத்து குழந்தையைக் காத்தார். பிறக்கும் நாள்வரை குழந்தை அங்கேயே இருந்தது. பிறந்ததும், டயனைசஸ் (இருமுறை பிறந்தவர்) என்று பெயர் சூட்டினார். டயனைசஸ் வளர்ந்தார். திராட்சை மதுவைக் கண்டுபிடித்தார். மது தயாரிப்பது குறித்து மற்றவர்களுக்கும் கற்பித்தார். இதனால், ‘திராட்சை மதுவின் கடவுள்’ என டயனைசஸை கிரேக்கர்கள் அழைத்தார்கள்.

டயனைசஸ் கோயில் மற்றும் தியேட்டர்

அக்ரோபோலிஸ் குன்றின் தெற்கு சரிவில் டயனைசஸ் கடவுளுக்கு, ஆர்க்கன் பெய்சிஸ்ட்ராடஸ் கி.மு.6-ம் நூற்றாண்டில் கோயில் எழுப்பினார். அருகிலேயே வட்ட வடிவில் நிலத்தை ஒதுக்கினார். மதச் சடங்குகள் அங்கே நடைபெற்றன. மக்கள் மது அருந்தி, நடனம் ஆடிக் கடவுளை மகிழ்வித்தார்கள். ஆடுவதைப் பார்க்கவும், பாடுவதைக் கேட்கவும் மக்கள் கூடினர். அவர்கள் அமர்வதற்கு அரைவட்ட வடிவில் சறுக்கலாக மேல் நோக்கிய வரிசையில் முதலில் மரத்தாலும் பின்னர் சுண்ணாம்புக் கற்களாலும் இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஏறக்குறைய 16,000 பேர் அமரும்படி கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

டயனைசஸ் தியேட்டர் தற்போது
டயனைசஸ் தியேட்டர் தற்போது

கலை நிகழ்வுகள் பகல் வெளிச்சத்திலேயே அரங்கேறின. புராணங்கள், கதைகள், சமுதாய சமய நிகழ்வுகள், இசை, நடனம், தனி மற்றும் குழு நடிப்பு உள்ளிட்டவை இடம்பெற்றன. நடிகர்கள் முகமூடிகள் அணிந்திருந்தார்கள். புராண காலத்து மனிதர்களை, குறிப்பாக கடவுள்களைத் தத்ரூபமாகக் காட்டுவதற்காக முகமூடிகளைப் பயன்படுத்தியதால், கிரேக்க நாடகத்தில் முகமூடிகள் புனிதப் பொருட்களாகக் கருதப்பட்டன. நகைச்சுவை, சோகம், பகடி எனும் 3 வகைகளிலும் நாடகங்கள் நடந்தன. குறிப்பாக, நகைச்சுவை நாடகப் புகழ் அரிஸ்டாஃபெனிஸ் (கி.மு. 460-380 - Aristophanes), துன்பியல் நாடகப் புகழ் சாஃபிகிலிஸ் (கி.மு. 496-406 – Sophocles) மற்றும் யுரிப்பிடிஸ் (கி.மு. 484-407 Euripides) ஆகியோரின் நாடகங்கள் இங்கே அரங்கேறின.

அக்ரோபோலிஸ் குன்றில் இருந்து டயனைசஸ் தியேட்டர் நோக்கி நடந்தேன். கோயில் தற்போது அங்கு இல்லை. சிதைந்திருந்தாலும் மலைச்சரிவில் மக்கள் அமர்ந்து பார்த்த இருக்கைகளின் தடயமும், இருக்கைகள் சிலவும் இப்போதும் உள்ளன. வட்ட வடிவ முற்றம் இருக்கிறது. ஆனால், நிகழ்வுகள் அரங்கேற்றம் செய்யப்பட்ட மேடையும், மேடைச் சுவரும் முற்றிலும் அழிந்துவிட்டன. தோகை விரித்துள்ள மயிலுக்குத் தலை இல்லாவிட்டால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது டயனைசஸ் தியேட்டர். சுற்றுலாப் பயணிகளுடன் சாலையில் நின்றபடியே தியேட்டரைப் பார்த்தேன். அருகில் இருந்த குறிப்பு சொன்னது, “நீங்கள் நிற்கும் இந்த இடத்தில்தான் மேடைச் சுவர் இருந்தது.”

கட்டிடப் பாதை

டயனைசஸ் தியேட்டரையும், ஹெரோடியஸ் அடிகஸ் தியேட்டரையும் 2 மாடிக் கட்டிடம் இணைக்கிறது. 163 மீட்டர் நீளம், 17.65 மீட்டர் அகலம் உள்ள இக்கட்டிடத்தைப் பாதையாக (Stoa) மக்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இரண்டாம் யுமேனிஸ் (கி.மு.197-கி.மு.159) இப்பாதையை ஏதென்ஸ் நகருக்கு வழங்கியதால், அவரின் பெயரிலேயே (Stoa of Eumenes) அழைத்திருக்கிறார்கள். பாதையின் சிதைவுகள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன.

குணமளிக்கும் கடவுள்

கட்டிடப் பாதைக்கு மேலே, உடற் சுகமளிக்கும் கடவுளான ஆஸ்கிலிபியஸ் (Asclepius) தூயகம் (sanctuary) கி.மு 420/19-ல் இருந்திருக்கிறது. ஒரு குச்சியில் பாம்பு சுற்றியிருப்பது ஆஸ்கிலிபியஸின் அடையாளம். இக்கோயிலின் முகப்பு மண்டபத்தில் தங்கி, ‘கடவுள் கனவில் வருவார், புதுமையாக குணம் தருவார்’ என நோயுற்றோர் காத்திருந்தனர். குணமான உடல் உறுப்புகளைச் செய்து காணிக்கை வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது.

அக்ரோபோலிஸ் அருங்காட்சியகம்

சூரியச் சூட்டில் நடந்து அக்ரோபோலிஸ் அருங்காட்சியகம் சென்றேன். அக்ரோபோலிஸ் குன்றிலும் அதைச் சுற்றிலும் அகழாய்வில் கிடைத்த பொருட்களை இங்கு வைத்துள்ளார்கள். அகழாய்வு நடந்த இடத்துக்கு மேலேயே அருங்காட்சியகத்தைக் கட்டியுள்ளார்கள். பார்வையாளர்கள் கண்ணாடி தளத்தில் நடந்தபடியே அகழாய்வு செய்யப்பட்ட சில பகுதிகளைக் காண முடிகிறது.

அக்ரோபோலிஸ் அருங்காட்சியகக் கலைக் காட்சிக்கூடம்
அக்ரோபோலிஸ் அருங்காட்சியகக் கலைக் காட்சிக்கூடம்

இசட் (Z) பிரிவு கட்டிடம், கி.பி. 5-ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்த 2 பெரிய வீடுகளின் மீது உள்ளது. இந்த வீடு, உயர் பொறுப்பில் இருந்தவர்கள் அல்லது உயர்குடிகளின் தலைமையகமாக இருந்திருக்கலாம் என்கிறது குறிப்பு. ஈ (E) பிரிவு கட்டிடம், கி.பி.6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த 2 தளங்களுடைய கட்டிடத்தின் மேல் கட்டப்பட்டுள்து. மேல் தளத்தில் குடும்பத்தினர் தங்கியிருந்தனர். பொதுமக்களைச் சந்திப்பது, மக்களுக்குப் பரிசு மற்றும் உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குக் கீழ்த் தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வசதியான வீடு

கி.மு.5-ம் நூற்றாண்டின் கடைசி 20 ஆண்டுகள் முதல் கி.பி.6-ம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 1,000 ஆண்டுகள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்த ஒரு வீட்டை அகழாய்வில் கண்டுள்ளார்கள். அந்த வீட்டின் கி.மு.5, கி.மு.3 மற்றும் கி.பி. 6-ம் நூற்றாண்டைச் சார்ந்த மிச்சங்களைப் பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

வீட்டின் நடுவில் சிறிய முற்றம், அதைச் சுற்றிலும் அறைகள், வீட்டின் ஆண் தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்கவும், குடிக்கவும் ‘விருந்து அறை’ உள்ளிட்டவை இருந்திருக்கிறது. மொசைக் தரை வீட்டினரின் செல்வச் செழிப்பைச் சொல்கிறது. பிறகு, கி.மு.3-ம் நூற்றாண்டின் பாதியில் வீட்டின் முற்றம் தொழிற்கூடமாக மாற்றப்பட்டுள்ளது. சுத்தமான தண்ணீர் கொண்டு வருவதற்கும் அழுக்கு நீர் வெளியேறுவதற்கும் மண் குழாய்கள் இருப்பதைப் பார்க்கும்போது, அது சலவைக்கூடமாக இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

யுமேனிஸ்  முகப்பு மண்டபம் தற்போது
யுமேனிஸ் முகப்பு மண்டபம் தற்போது

குளியல் அறை

அதோ, கி.பி.2-3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தனி குளியல் பகுதி இருக்கிறது. அதன் வடிவமைப்பை வாசிக்கும்போதே கற்பனை விரிகிறது. குளியலறையில் நுழைந்ததும் முதலில் உடை மாற்றும் அறை. அடுத்து, குளிர் நீர் பகுதி, சூடான நீர் பகுதி, வெதுவெதுப்பான நீர் பகுதி என வரிசையாக இருந்திருக்கின்றன. முதலில், வெதுவெதுப்பான நீர் உள்ள தொட்டியில் குளித்து சூட்டுக்கு உடலைப் பக்குவப்படுத்த வேண்டும். இரண்டாவதாக சுடு நீரில் குளியல். இதில், நீராவி குளியலும் உண்டு, தொட்டியில் உள்ள சூடான நீரில் குளிப்பதும் உண்டு. பிறகு மறுபடியும் வெதுவெதுப்பான நீர் உள்ள பகுதிக்கு வர வேண்டும். இங்கே, மசாஜ் செய்வார்கள், வாசனை எண்ணெய் தடவுவார்கள். அதன்பிறகு குளிர் நீர் பகுதியில் உடலைச் சுத்தம் செய்வார்கள். ஆண்களும் பெண்களும் ஒரே நேரத்தில் குளிக்க அனுமதி இல்லை. தனித்தனி நாட்கள் அல்லது தனித்தனி நேரம் பழக்கத்தில் இருந்திருக்கிறது.

கழிப்பறை

கி.பி.2-ம் நூற்றாண்டு முதல், வீடுகளில் சொந்தமாக கழிப்பறை இருந்ததை அறிய முடிகிறது. இடத்தின் அளவைப் பொறுத்து, மூன்று வீதிகளுக்கு ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. பொதுக் கழிப்பறை என்பதற்கு, ‘தனித்தனி கழிப்பறைகள் ஒரே இடத்தில்’ என்பது நம் காலத்து வரையறை. பழங்காலத்தில் இருந்த வரையறையே வேறு. நன்றாகப் பராமரிக்கப்பட்ட அறையில் 7 அல்லது 8 பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினர். ஆண்களும் பெண்களும் தனித்தனி நேரத்தில் பயன்படுத்தினர்.

கழிப்பறை
கழிப்பறை

அருங்காட்சியகம் முழுதும் சுற்றி வரலாற்றை வாசித்த நான், குறிப்புகள் சிலவற்றைப் படமெடுத்தேன். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த மற்றொரு பயணியையும் பார்த்தேன். அவருடனும் படமெடுத்துக்கொண்டு வெளியேறினேன்.

(பாதை நீளும்)

ஆணின் வலுவுடன் பெண் சிங்கம்
ஆணின் வலுவுடன் பெண் சிங்கம்

பெட்டிச் செய்தி

வலுவும் வீரமும் மிக்க பெண்கள்

எரக்தியோன் கோயிலில் தூண்களாக நின்ற 5 பெண் தூண்கள், அக்ரோபோலிஸ் அருங்காட்சிகத்தின் மையத்தில் நிற்கின்றன. ஒருவேளை, லண்டனில் உள்ள தங்களின் 6-வது தோழிக்காகக் காத்திருக்கிறார்களோ என்னவோ! மற்றொரு இடத்தில், ஏறக்குறைய கி.மு.570-ல் செதுக்கப்பட்ட கன்றுக்குட்டியை மடக்கிப் பிடிக்கும் பெண் சிங்கத்தின் சிற்பம் பார்த்தேன். ‘மார்புக் காம்புகளுடன், ஆண் சிங்கத்தின் வீரத்துடன் இருக்கும் சிங்கம்’ எனும் குறிப்பை வாசித்து வியந்தேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in