சிறகை விரி உலகை அறி - 76: மனிதக் கறி தின்றவர்கள்!

40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனிதன்
40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனிதன்

முட்டைகள் களவாடப்பட்ட இடத்திலேயே சூடு குறையாமல் முனகிக்கொண்டிருக்கிறதே கோழி ஏன்? விலை பேசிய மாடு, வளன் சாலை கடந்து ஒத்தக்கடை தாண்டி 35 கிலோமீட்டர் கடந்த பிறகும், மறுநாளில் வீடு தேடி வந்துவிட்டதே எப்படி? ஊர் கடந்து பறந்த பிறகும், பிறந்த ஊரில் சிறிய அளவிலாவது வீடு கட்ட மனம் ஏங்குகிறதே எதற்காக? அனைத்துக்குமான பதில், அடையாளம். அடையாளத்தைத் தேடுவதும், பாதுகாப்பதுமே வாழ்வை இயக்கும் சக்கரங்கள். அவமானங்களை மீறவும் அல்லது அதற்குள்ளேயே உழலவும் உரமிடுவதும் அடையாளங்களே!

“உலகின் 200 நாடுகளில், 22 நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் மீதும் கிரேட் பிரிட்டன் படையெடுப்பு நடத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார் பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் ஸ்டூவர்ட் லேகாக். அதாவது, பூமியின் 90 சதவீத நிலப்பரப்புக்குள் பிரிட்டிஷ் கொடி பறந்திருக்கிறது. ‘சூரியன் மறையாத பேரரசு’ எனும் பெயர் பெற்ற பிரிட்டனுக்கு அடையாளம் தந்தவர்கள் யார்? எப்போது? எப்படி? இவற்றுக்கெல்லாம் விடை இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கிடைத்தது.

பிரிட்டனுக்கு வந்த மக்கள்

சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஏறக்குறைய 3 கிலோமீட்டர் ஆழத்தில் பனியில் புதைந்திருந்த நிலப்பகுதிதான் இன்றைய பிரிட்டன். பருவநிலை மாறி பூமி சூடானபோது பனி உருகியது. ஏறக்குறைய 14,700 ஆண்டுகளுக்கு முன்பாக விலங்குகளும், தாவரங்களும் மீண்டும் வரத் தொடங்கின. பனி யுகம் சிறிது நீண்டபோது மறுபடியும் மறைந்தன. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதியிலிருந்து, பொதுவாக பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து பகுதியிலிருந்து, தற்கால மனிதர்கள் நடந்து பிரிட்டனுக்குள் வந்தார்கள். அவர்கள் நடந்த பகுதி, தற்போதைய ஆங்கிலக் கால்வாய் மற்றும் வட கடலுக்கு கீழே இருக்கிறது. அவர்கள் கொண்டுவந்த, கருவிகளும், கலைப் பொருட்களும் புதிய கால சூழ்நிலையில் தங்களைத் தகவமைத்துக்கொள்ள அவர்களுக்குப் பெரிதும் உதவின.

செடர் மனிதன்

பிரிட்டனின், சோமர்சேட் மாவட்டத்தில், செடர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோஃப் குகையில் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முழுமையான மனித எலும்புக்கூடு கிடைத்தது. அதன் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அந்த மனிதர் 19-23 வயதுடையவர் என்று கண்டறிந்தனர். குறிப்பாக, இடுப்பை ஆய்வு செய்து அது இன்னும் வளருகின்ற பருவத்தில் இருந்ததாகவும், ஞானப்பல் சிறிதளவு வளர்ந்திருந்ததாகவும் கண்டறிந்தார்கள். மண்டை ஓடு மற்றும் இடுப்பின் வடிவத்தைப் பார்த்து, இவர் ஆணா, பெண்ணா என்கிற சந்தேகம் எழுந்தபோது, டிஎன்ஏ ஆய்வு மூலம், ஆண் என்பதைக் கண்டுபிடித்தார்கள். மேலும், நீல நிற விழிகள், கறுப்பு நிற தோல் இருந்தையும் கண்டுபிடித்தார்கள். மேற்கு ஐரோப்பிய பகுதிகளில் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரவத் தொடங்கிய, வேட்டைக்காரர்களின் வாரிசு இவர். வேட்டைக்காரர்கள் பலர் பிரிட்டனில் குடியேறி, பிரிட்டனின் முதல் மூதாதையர்கள் ஆகியுள்ளார்கள். வேட்டையாடிய சமூகம், ஏறக்குறைய 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்துக்கு மாறியதையும் அகழாய்வுகள் நிரூபிக்கின்றன.

ஆய்வாளர்களுக்கு இங்கே மற்றொரு சந்தேகம் எழுந்தது? வேட்டையாடி சமூகம் தாங்களாக விவசாயத்துக்கு மாறினார்களா? அல்லது வெளியில் இருந்து வந்த வேறோர் சமூகம் விவசாயத்தை பிரிட்டனுக்குக் கொண்டு வந்ததா? செடர் மனிதர் உள்ளிட்ட பலரின் டிஎன்ஏ-க்களை ஆய்வு செய்து, பிரிட்டனுக்குள் வந்த மற்ற சமூகக் குழுக்கள்தான் விவசாயத்தை அறிமுகப்படுத்தினர் என்பதைக் கண்டுபிடித்தார்கள். மேலும், விவசாயக் குழுக்களால் செடர் மனிதரின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் நினைக்கிறார்கள்.

அருங்காட்சியகத்தில் குறிப்புகளை வரிசையாக வாசித்துவிட்டு, செடர் மனிதரின் உருவத்தைப் பார்த்தேன். அவரது மண்டை ஓட்டு வடிவம் மற்றும் டிஎன்ஏ சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இதை உருவாக்கியுள்ளார்கள். அப்படியே, ஒரு மனிதரின் முகத்தையும் தலையையும் பார்ப்பதுபோல் இருந்தது.

மண்டை ஓடு பாத்திரங்கள்

கோஃப் குகையில் 14,700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்வேறு பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. மனிதக் கறி தின்றவர்கள் அங்கே இருந்திருக்கிறார்கள். தோள் எலும்புகளிலும், விலா எலும்புகளிலும் உள்ள மஜ்ஜையைச் சாப்பிடுவதற்காக கடித்து உடைத்துள்ளார்கள். மண்டை ஓடுகள் கோப்பை அல்லது குவளை போன்ற வடிவில் கிடந்துள்ளன. சடங்கின் ஒரு பகுதியாக இவர்கள் மனிதக் கறி தின்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

மண்டை ஓடு கோப்பை மற்றும் தாடை குவளை
மண்டை ஓடு கோப்பை மற்றும் தாடை குவளை

அருங்காட்சியகக் காட்சியரங்குகளில் மண்டை ஓடு கோப்பையைப் பார்த்தேன். இறந்த ஒருவரின் முகத்தில் உள்ள எலும்புகள் மற்றும் தலைக்குக் கீழே உள்ள சதை அனைத்தையும் நீக்கிவிட்டுப் பயன்படுத்தியுள்ளார்கள். சதைத் துணுக்குள் ஏதும் இல்லாதபடிக்கு மிகவும் கவனமாக மண்டை ஓட்டைச் சுத்தம் செய்துள்ளதை அதில் உள்ள வெட்டுக்களும் ஓட்டைகளும் சொல்கின்றன. அதன் அருகிலேயே, குவளை ஒன்றைப் பார்த்தேன். பதின்பருவச் சிறுவனின் மேல் தாடை அது. மேல் தாடையில் உள்ள வெட்டுக்கள் சதையைப் பிய்த்து எடுத்ததைக் காட்டுகின்றன.

செடர் மனிதனின் எலும்புகள்
செடர் மனிதனின் எலும்புகள்

இங்கிலாந்துக்குப் பல பெயர்கள்

வேட்டையாடிகளாகவும், விவசாயிகளாகவும் புலம்பெயர்ந்து வந்த மக்கள்தான் இங்கிலாந்தின் முதல் அடையாளம். இன்று, அந்த நாட்டுக்கு தி யுனைட்டட் கிங்டம், பிரிட்டன், கிரேட் பிரிட்டன், தி பிரிட்டிஸ் அயல்ஸ் (தீவுகள்), இங்கிலாந்து என பல பெயர்கள் இருக்கின்றன. எது சரி? ஏன் இத்தனை பெயர்கள்? நீண்ட நெடிய வரலாற்றை சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

  • கி.பி. 43-410 வரை 367 ஆண்டுகள் இங்கிலாந்தை உரோமையர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் சென்ற பிறகு, பலரின் கைகளில் இங்கிலாந்து சிக்கியது. ஆபத்தில் உழன்றது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு…

  • கி.பி. 925-ல் ஆங்லோ-சாக்சன் பகுதிகளை இணைத்து இங்கிலாந்து பேரரசு உருவானது.

  • கி.பி. 1536-ல் அரசர் எட்டாம் ஹென்றி கொண்டுவந்த சட்டத்தின்படி இங்கிலாந்து பேரரசு மற்றும் வேல்ஸ் ஒரே ஆளுகைக்குள், ஒரே சட்டத்தால் நிர்வகிக்கப்பட்டன.

  • கி.பி. 1707-ல் இங்கிலாந்து பேரரசு, ஸ்காட்லாந்து பேரரசுடன் இணைந்து தி கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் என்றானது.

  • கி.பி. 1801-ல் இந்தக் கூட்டணியில் அயர்லாந்து சேர்ந்தது. யுனைட்டட் கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் என்று பெயர் மாறியது.

  • கி.பி. 1922-ல் தெற்கு அயர்லாந்து பிரிந்து சென்றுவிட்டாலும், யுனைட்டட் கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டனுடன் வடக்கு அயர்லாந்து அப்படியே தொடர்கிறது.

1900-ம் ஆண்டு கால, மாலுமிகளின் மருத்துவக் குறிப்பேடு அட்டை
1900-ம் ஆண்டு கால, மாலுமிகளின் மருத்துவக் குறிப்பேடு அட்டை

மேலும்,

  • ‘பிரிட்டிஷ் தீவு பகுதிகளில்’ உள்ள எண்ணற்ற தீவுகளில் பிரிட்டிஷ் தீவுதான் பெரியது என்பதால் கிரேட் என அழைக்க ஆரம்பித்தார்கள்.

  • பிரான்ஸ் நாட்டு ஆளுகைக்குள் பிரிட்டனி என்றோர் இடம் உள்ளது. அதை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும், பிரிட்டிஷ் தீவை, கிரேட் எனும் அடைமொழியுடன் அழைக்கத் தொடங்கினார்கள்.

  • ‘நான், உரோமையர்கள் ஆட்சி செலுத்திய பிரிட்டனின் அரசர் அல்ல. மாறாக, இங்கிலாந்து மற்றும் வேல்சின் சில பகுதிகளை உள்ளடக்கி, தீவு முழுவதையும் ஆட்சி செய்பவன்’ என்பதை உலகுக்கு அறிவிப்பதற்காகவும், கிரேட் பிரிட்டன் என்கிற சொல்லாடலை அரசர் முதலாம் ஜேம்ஸ் உருவாக்கினார்.

நாம் எங்கிருந்து வந்தோம்?

அருங்காட்சியகத்தின் தகவல் பலகை ஒன்றில், ‘தற்கால மனிதர்களின் தொடக்கம் ஏறக்குறைய 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் நிகழ்ந்தது. 1,20,000 ஆண்டுகளுக்கு முன்பு மற்றும் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு என இரண்டு பெரிய இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்’ என்கிற தகவலை வாசித்தேன். இதை, கடந்த காலத்தில் வாழ்ந்த ஆப்பிரிக்கர் அல்லாதவர்களின் மூதாதையரைத் தேடிச் சென்று கண்டுபிடித்துள்ளார்கள். மேலும், ‘உலகம் முழுவதும் உள்ள நம் மூதாதையர்களின் புதைபடிவங்களும் தற்போது வாழ்கிறவர்களின் டிஎன்ஏ-க்களும் ஆப்பிரிக்கர் அல்லாத அனைவரும் அல்லது பெரும்பாலானோர், இரண்டாவது இடப்பெயர்வைச் சேர்ந்தவர்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. முதல் இடப்பெயர்வில் கிளம்பியவர்களின் அழிவு மத்திய கிழக்கு நாட்டு பக்கம் நிகழ்ந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் இருந்து முதலில் ஏன் நம் மூதாதையர்கள் இடம்பெயர்ந்தார்கள் என்பதற்கு யாரிடமும் உறுதியான பதில் இல்லை. ஆனால், 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஆஸ்திரலியா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் நம் இனம் வாழத்தொடங்கியுள்ளது’ என்கிறது ஒரு குறிப்பு.

‘தற்கால மனிதர்களிடம் உள்ள குறிப்பிடத்தக்க குணநலன்களுக்கான ஆதாரம் குறைந்தது 1,00,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்காவில் இருக்கிறது. ஆனாலும், 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதாரங்களே குகை ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சடங்கு அல்லது ஆன்மிக முக்கியத்துவத்துடன் கூடிய சிற்பங்களிலிருந்து அதிகம் கிடைத்துள்ளது’ என்று தெரிவிக்கிறது ஒரு குறிப்பு.

காலச் சக்கரத்தில் சுழன்று மூதாதையர்களின் மூச்சுக்காற்றில் கலந்து தொடந்து நடக்கிறேன்.

(பாதை விரியும்)

நமது தோழர்கள்!

அருங்காட்சியகத்தில், ‘ஆதி மனிதர்’ எனும் தலைப்புக்கு அருகே, நிர்வாணமாக ஆதி மனிதர் ஒயிலாக நிற்பதைப் பார்த்தேன். பெல்ஜியத்தில் ஸ்பை என்னும் இடத்தில் கிடைத்த 40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புதைபடிவங்களின் அடிப்படையில் இம்மனிதரை உருவாக்கியுள்ளார்கள். பனி யுகத்தின் கடைசி கால குளிரிலிருந்து தப்பிக்க விலங்குகளின் தோல்களால் ஆன ஆடையை ஆதிமனிதர்கள் அணிந்திருக்க வாய்ப்பு உண்டு. மற்றொரு சிலை, 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, ‘நம்மில் ஒருவர்’ என்கிற தலைப்பு வைத்துள்ளார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in