சிறகை விரி உலகை அறி - 75: இயற்கையின் பேராலயம்

டாக்ஸோடான் எலும்புக்கூடு
டாக்ஸோடான் எலும்புக்கூடு

சேகரிப்பதும் சேமிப்பதும் காலங்காலமாக அறுபடாத தொப்புள் கொடி. உணவு, உடை எனும் அவசியச் சேகரிப்புகளில் சிலர். நாணயங்கள், அஞ்சல் தலைகள், பன்னாட்டு கொடிகள், தேனீர் குவளைகள் என ஆர்வ சேகரிப்புகளில் சிலர். ஆனால், வெகுசிலர் வாழ்நாள் முழுவதும் ஆபூர்வங்களைத் தேடித்தேடிச் சேகரித்து எதிர்காலத் தலைமுறைகளுக்காக சேமிக்கிறார்கள். அந்தச் சேமிப்புகளைப் பார்க்க, இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum) சென்றேன்.

இயற்கை ஆர்வலர்கள்

1660-ல் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தவர் சர் ஹான்ஸ் ஸ்லோன். மருத்துவராக, தாவரவியல் அறிஞராக, பொருட்கள் சேகரிப்பதில் ஆர்வம் மிகுந்தவராக வாழ்ந்த ஸ்லோன் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான இயற்கை வரலாற்று மாதிரிகள், கலாச்சாரத் தொல்பொருட்கள், 40 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள், 32 ஆயிரம் நாணயங்கள் மற்றும் பதக்கங்களைச் சேகரித்தார். ஸ்லோன் இறந்த பிறகு, சேகரிப்புகளை பிரிட்டன் பாராளுமன்றம் விலைக்கு வாங்கியதுடன், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் கட்டவும் ஒப்புதல் வழங்கியது. ஒட்டுமொத்த பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக 1963 வரை ‘இயற்கை வரலாறு’ அருங்காட்சியகம் செயல்பட்டது.

சர் ஹான்ஸ் ஸ்லோன்
சர் ஹான்ஸ் ஸ்லோன்

தொல்லுயிர் ஆராய்ச்சியாளராக (Paleontologist), உயிரியல் அறிஞராக, உடற்கூறியல் நிபுணராக வாழ்ந்த சர் ரிச்சர்ட் ஓவன் 1856-ல் இயற்கை வரலாற்றுப் பிரிவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். பேரரசி விக்டோரியாவின் காலத்தில் புதிய நாடுகளைத் தேடிச் சென்றவர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து, காலத்தால் அழிந்துபோன எண்ணற்ற விலங்குகளையும் தாவரங்களையும் பிரிட்டனுக்குக் கொண்டுவந்ததால் அவற்றை வைக்கும் அளவுக்குப் பெரிய இடம் வேண்டும் என ஓவன் நினைத்தார். அந்த இடத்தை, இயற்கையின் பேராலயம் என்றார். இயற்கை வரலாற்றுக்கான தனி அருங்காட்சியகத்துக்குக் கட்டிட வரைபடம் தயார் செய்தார். அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. கட்டும் பொறுப்பு ஆல்பிரட் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

சர் ரிச்சர்ட் ஓவன்
சர் ரிச்சர்ட் ஓவன்

எல்லோருக்குமான அருங்காட்சியகம்

19-ம் நூற்றாண்டின் மத்தியில் வசதியானவர்கள் மட்டுமே அருங்காட்சியகத்துக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தது. அதை மாற்றி, இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை அனைவருக்கும் இலவசமாக்க வேண்டும் என்றார் ஓவன். தற்போதுவரை அனைவருக்கும் இலவசம்.

அருங்காட்சியகத்தை இயற்கை வரலாற்றால் அலங்கரிக்க வேண்டும். முற்றிலும் அழிந்துபோனவற்றின் மாதிரிகளும், உயிருடன் வாழும் உயிரினங்களின் மாதிரிகளும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்றார் ஓவன். அந்தக் காலகட்டத்தில்தான் 1859-ல், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு வெளிவந்ததது. இதையடுத்து ஓர் உயிருக்கும் மற்றோர் உயிருக்குமான தொடர்பை ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும் என்று ஓவன் நம்பினார். அதன்படி, முற்றிலும் அழிந்துபோன உயிர்களின் மாதிரிகளை கிழக்கு வரிசையிலும், உயிருடன் இருப்பவைகளின் மாதிரிகளை மேற்கு வரிசையிலும் வைத்துள்ளார்கள்.

வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தினர், ஓவனின் கனவையும், தங்கள் புதுமையையும் ஒன்றிணைத்து, அரண்மனைகளே தோற்றுப்போகும் அளவுக்கு அருங்காட்சியகத்தை அழகுபடுத்தியுள்ளார்கள். உள்ளே சென்றேன். பல்வேறு அரண்மனைகளை ரசித்துப் பார்த்திருந்த நான், முதன்முறையாக அருங்காட்சியகத்தை அரண்மனையாகப் பார்த்தேன். காட்சிகளும் தகவல்களுமாக அங்கு நான் எடுத்து வந்த படங்கள் மட்டும் 358 இருக்கின்றன.

முடி கொட்டிய காண்டாமிருகம்
முடி கொட்டிய காண்டாமிருகம்

முடி கொட்டிய காண்டாமிருகம்

உள்ளே நுழைந்ததும், ‘வேறொரு பருவநிலையைச் சேர்ந்த முடி நிறைந்த காண்டாமிருகம்’ (Woolly rhino) என்றொரு தகவலைப் பார்த்தேன்.

‘பூமியின் பருவநிலையானது, 2 மில்லியன் ஆண்டுகளில் வெப்பம் - குளிர் என மாறுதலுக்கு உட்பட்டுள்ளது. தொடர்ச்சியான கடும் குளிர் நிலவிய காலத்தில் குளிர் காலநிலைக்கு ஏற்றவாறு வடக்கு அரைக்கோளத்தில் முடி நிறைந்த காண்டாமிருகங்கள் உருவாகின. கடும் குளிர் காலத்தின் முடிவில் அவை அழிந்துவிட்டன. அழிவிற்கு, பருவநிலை மாற்றமும், வேட்டையாடுதலும் காரணமாக இருந்திருக்கலாம். அருங்காட்சியகத்தில் உள்ள முடி நிறைந்த இந்த காண்டாமிருகம் 45 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இயற்கையான எண்ணெய் கசிவில் சிக்கியதால் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. எண்ணெயில் இருந்த ரசாயனங்களால் முடி உதிர்ந்துவிட்டன. கொம்புகள் அழிந்துவிட்டன. ஆனாலும், தோலும், சதையும், எலும்புக்கூடும் அழியாமல் உள்ளது’ - இந்தக் குறிப்பை வாசித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன், கண்ணாடி குடுவைக்குள் சிற்பம்போல இருக்கிறது முடியற்ற, கொம்புகளற்ற காண்டாமிருகம்.

சார்லஸ் டார்வினின் புதையல்

‘வேறொரு கண்டத்தைச் சேர்ந்த உயிரினம்: டாக்ஸோடான்’ (Toxodon) என்னும் தலைப்பைப் பார்த்தேன். கண்ணாடியில் உள்ள எலும்புக்கூட்டைப் பார்த்துவிட்டு குறிப்பை வாசித்தேன்.

’டாக்ஸோடான் என்பது அழிந்துபோன ஒரு மேய்ச்சல் பாலூட்டியாகும். சார்லஸ் டார்வின், எச்.எம்.எஸ் பீகள் (HMS Beagle) பயணத்தின்போது தென் அமெரிக்காவில் டாக்ஸோடான் புதை படிவத்தைப் (Fossil) பார்த்தார். விசித்திரமான இதன் தோற்றத்தைப் பார்த்ததும், இது கொறித்துண்ணி மற்றும் காண்டாமிருகம் இரண்டின் அம்சங்களையும் கொண்டிருப்பதாக நினைத்தார். 2015-ல் இது காண்டாமிருக வகையைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக டாக்ஸோடான் அழிந்துவிட்டது. அழிவுக்கான காரணம் தெளிவாக இல்லை. வேட்டையாடுதல், மனிதர்களின் வாழ்க்கை முறையால் அடிக்கடி இவை இடம் மாறியது, பருவநிலை மாற்றம் அல்லது இந்த 3 காரணிகளின் கலவையால் டாக்ஸோடான் அழிந்திருக்கலாம்’ என்கிறது அந்தக் குறிப்பு!

நமது பூர்விகத்தைத் தேடுதல்

அடுத்ததாக, சுவரில் மண்டை ஓடுகளைப் பார்த்தேன். அதற்கான குறிப்பில், 'மெதுவாகவும், பின்னிப் பிணைந்த பல்வேறு வளர்ச்சி நிலைகளாலும் பல மில்லியன் ஆண்டுகளாக நிகழ்ந்த மாற்றங்களால் நாம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம். மனிதர்களின் குடும்ப வரைபடத்தில் (family tree) பல பண்டைய உறவினர்கள் உண்டு. வாலில்லாக் குரங்கு போன்ற மூதாதையர்களிலிருந்து பரிணாம வளர்ச்சியில் நாம் தோன்றினோம் என்பதை இதுவரை கிடைத்துள்ள புதைபடிவங்கள் சொல்கின்றன. நீங்கள் பார்க்கும் இந்தச் சுவர், இதுவரை நாம் அறிந்துள்ள நம் உறவினர்களையும் அவர்கள் எப்போது வாழ்ந்தார்கள் என்பதையும் சொல்கிறது. சிம்பன்சி மற்றும் போனோபோ-வை (Bonobo) நோக்கிச் சென்ற பரிணாம வரிசையிலிருந்து நம்முடைய மனிதக் கிளை பிரிந்த பிறகு இந்த இனங்கள் உருவாகின. இந்தப் பிரிவு 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம். மனித இனத்தில் எஞ்சியிருப்பது, தற்போதைய மனிதர்களான, ஹோமோ சேப்பியன்ஸ் மட்டுமே. எனவே, மனித வரலாற்றின் நேரடி மூதாதையர்கள் யார் என்பது விஞ்ஞான விவாதத்துக்கு உட்பட்டது’ என்று எழுதப்பட்டிருந்தது.

சிம்பன்சி மற்றும் போனோபோ-வை நோக்கிச் சென்ற பரிணாம வரிசையிலிருந்து நம்முடைய மனிதக் கிளை பிரிந்த பிறகு உருவான அனைத்து மனித இனங்களையும் ஹோமினின் (hominns) என சொல்கிறோம். வரலாற்றில் பல ஹோமினின்கள் இருந்துள்ளன. அவை எல்லாம் முற்றிலும் அழிந்துவிட்டன. மனித இனத்தைச் சாராத (non-hominin) சிம்பன்சி மற்றும் போனோபோ மட்டும்தான் நமது நெருங்கிய உறவினராக தற்போது உள்ளன. நிறைய மனித இனங்கள் வாழ்ந்திருந்தாலும் அவர்களிடமிருந்து நாம் பல வகைகளில் வேறுபடுவதை, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த நம் உறவினரின் (ஹோமினின்) புதைபடிவங்களில் இருந்து அறிகிறோம்.

மனித இனங்கள் (hominns) அல்லது மனித இனம் அல்லாதவை (non-hominin) என்பதை வரையறை செய்வதற்காக ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை முன்னெடுக்கிறார்கள். உதாரணமாக, ‘மனித இனங்கள்’ நிமிர்ந்த உடல்வாகு கொண்டிருந்தார்கள், இரண்டு கால்களில் நடந்தார்கள், சிறிய கடைவாய்ப்பல் இருந்தது. எனவே, பற்களையும், எலும்புகளையும் ஆய்வு செய்து கண்டுபிடிக்கிறார்கள். டிஎன்ஏ சோதனை வழியாகவும் கண்டறிகிறார்கள். ஏனென்றால், சில நேரங்களில் புதைபடிவங்களில் அழியாமல் இருக்கும் டிஎன்ஏ, உயிருடன் உள்ள ‘மனித இனம் அல்லாதவை’ மற்றும் முற்றிலும் அழிந்துவிட்ட ‘மனித இனங்கள்’ பற்றி அறிய வெகுவாக உதவுகின்றன. நம்முடைய டிஎன்ஏ 98 விழுக்காடு சிம்பன்சியுடன் ஒத்துப்போகிறது. இதைவிட அதிகமாக, அழிந்துவிட்ட ‘மனித இனங்களிடம்’ இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மனித இனத்தைச் சாராத ஆண் சிம்பன்சி
மனித இனத்தைச் சாராத ஆண் சிம்பன்சி

மூதாதையரின் எலும்புகள்

‘மனித இனத்தைச் சாராத’ ஆண் சிம்பன்சியின் எலும்புக் கூடு இருப்பதைப் பார்த்தேன். ‘ஊன்றி நடப்பதற்கு வசதியாக பலமான மணிக்கட்டுகளும் கைகளும் உள்ளன. முதுகெலும்பும் முழங்கால்களும் வளைந்துள்ளன. பெரிய விரல்களும் தட்டையான பாதங்களும் உள்ளன. இதனால், இது இரண்டு கால்களால் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதும், இது மனித இனத்தைச் சாராதது என்பதும் தெரிகிறது’ என்று அதற்கான குறிப்பு சொல்கிறது.

மனித இனத்தைச் சேர்ந்த பெண்
மனித இனத்தைச் சேர்ந்த பெண்

அதை ஒட்டியே, மனித இனத்தைச் சேர்ந்த பெண்ணின் எலும்புக்கூடு உள்ளது. ‘நிமிர்ந்து நிற்க எஸ்(S) வடிவ முதுகெலும்பும், தடுமாறாமல் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க சரியான அளவில் விரல்களும், வளைந்த பாதமும் உள்ளதால், இது மனித இனத்தைச் சேர்ந்தது என்பது தெளிவாகிறது’ என்று எழுதப்பட்டிருருந்தது. அபூர்வச் சேகரிப்பை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே செல்கிறேன்.

(பாதை விரியும்)

நம் மூதாதையர்கள்
நம் மூதாதையர்கள்

தப்பிப் பிழைத்தவர்கள் நாம்

மண்டை ஓடுகள் இருக்கும் சுவரில், 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என ஆரம்பித்து ஒவ்வொரு மில்லியனாகப் பிரித்துள்ளார்கள். அந்தந்த மில்லியன் ஆண்டுகளில் வாழ்ந்த நம் மூதாதை உறவினர்களின் மண்டை ஓடு மாதிரிகளை வைத்திருக்கிறார்கள். 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஷகலந்ரோபோஸ் ட்சாடெனிசிஸ் (Sahelanthropus tchadensis), 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டிபிதேகஸ் கடப்பா (Ardipithecus kadabba) என ஆரம்பித்து, ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புகூட, நம் மூதாதையர்களான, ஹோமோ நியண்டர்தாலனிஸ் (Homo neonderthalensis), ஹோமோ ஹெய்டெல்பெர்கென்சிஸ் (Homo heidelbergensis), ஹோமோ ஆன்டிசெசார் (Homo antecessor), ஹோமோ பிளோரெசியன்சிஸ் (Homo floresiensis) இருந்துள்ளன(ர்). தற்போது, நாம், ஹோமோ சேப்பியன்ஸ் மட்டுமே இருக்கிறோம் என்பதைப் பார்த்து அறிந்து, மெய்சிலிர்த்தேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in