சிறகை விரி உலகை அறி-25: மண்ணுளிப் பொம்மைகள்

வெண்கலக் குதிரையும் வண்டியும்
வெண்கலக் குதிரையும் வண்டியும்

நினைக்கும்போதெல்லாம் சிரிக்கும்படி ஏதாவது உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? சீனாவில் எனக்கு நிகழ்ந்தது. சீனாவின் பண்டைய நகரங்களுள் ஒன்று ஷியான். அங்குள்ள விடுதிக்கு அதிகாலை ஒரு மணிக்குச் சென்றேன். வரவேற்பாளர் ஏதோ கேட்டார். “ஆங்கிலம்… ஆங்கிலம்” என்றேன். அவருக்குத் தெரிந்த மாண்டரின் மொழி, எனக்குத் தெரியவில்லை. நான் கற்றிருந்த ஆங்கிலம், அவருக்குப் புரியவில்லை. வார்த்தைகள் இசைத்த ஓசைகள் மட்டுமே பொதுவாய் இருந்தன.

பிறகு, அலைபேசியில் இருந்த மொழிபெயர்ப்பு செயலியில் பேசினார். ஓரளவு புரிந்தது. பதில் சொன்னேன். நான் பேசினேன். என் ஒலி உச்சரிப்பைத் தவறாகப் பதிவுசெய்தது செயலி. அலைபேசியின் விசைப்பலகை மாண்டரின் மொழியில் இருந்ததால், என்னால் தட்டச்சு செய்து காட்டவும் இயலவில்லை.

பேரரசர் ச்சின் ஷி ஹுவாங் திறக்கப்படாத கல்லறை
பேரரசர் ச்சின் ஷி ஹுவாங் திறக்கப்படாத கல்லறை

தாயிடம் பேச விரும்பி ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வி அடையும் குழந்தைகளானோம் நாங்கள். இலக்கைத் தொடாமல் விழுந்த வார்த்தை அம்புகளை நாங்கள் ரசித்தோம். சிரித்தோம். மீண்டும் முயற்சித்தோம். மொழி உருவாகும் முன்பு, இப்படித்தானே முன்னோர்கள் பேசியிருப்பார்கள்; நினைத்தபோதே உற்சாகம் பிறந்தது.

காலையில் பயணம் எங்கே, எப்போது, எப்படி, வாடகை வண்டி வேண்டுமா இவ்வளவுதான் பேசினோம். இதற்கே, ஒன்றரை மணி நேரம் ஆனது. அவர்கள் காட்டுவது அக்கறையா அல்லது ஏமாற்றப் பார்க்கிறார்களா என்பது புரியவில்லை. தொடக்கம் முதலே எனக்கு நல்லது செய்யவே அவர்கள் நினைத்திருக்கிறார்கள் என்பது, தாமதமாகவே புரிந்தது.

கரன்ஸி குழப்பம்

பொழுது விடிந்ததும் செயலியில் மொழிப்போர் மீண்டும் தொடங்கியது. விடுதிக்கு வந்த ஓட்டுநர் வாடகை 100 டாலர் என்றார். அது அதிகம் என்பதால், என் சீன நண்பரை அருகலை (WiFi) வழியாக அழைத்தேன். அவர் எடுக்கவில்லை. “4 பேர் பகிர்ந்து செல்லலாம்” என்றார் ஓட்டுநர். சம்மதித்தேன். ஆட்களைத் தேடினோம். இருந்ததே 3 தெரு. எங்களைப்போல் மேலும் 2 வண்டிகள் முன்னே சென்றன. ஆட்கள் கிடைக்கவில்லை.

“சரின்னு சொல்லுங்க சார். 100 டாலர் தானே” செயலி வழியே பலமுறை தூது அனுப்பினார்.

“இல்லை. பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுங்கள். அது போதும்” என பலமுறை சொன்னேன். அவரோ, “என்னுடைய விருந்தினர், சரியாக முடிவெடுப்பதாக நினைத்து தவறாக முடிவெடுக்கிறார்” என்றார். ரசித்துச் சிரித்தேன். அந்நாளில் 100 அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பு 700 சீன யுவான். நான் 600 கொடுத்தேன். பேரம் பேசினேன். அவரோ ஒரு கையில் 600, மறு கையில் 100 பிடித்துக்கொண்டு, ஏதோ சொன்னார். “கூட 100 தானே, தந்தால் என்ன?” என்பதாகப் புரிந்துகொண்டேன். மறுத்தேன்.

ஒரு மணிநேரம் கடந்ததால், வேறு வழியில்லாமல் “சரி போகலாம். 100 டாலர் தருகிறேன்” என்றேன். இரவு தங்கிய விடுதியின் முன் நிறுத்தி, நான் சம்மதம் சொன்னதை விடுதிப் பொறுப்பாளரிடம் சொன்னார். அந்நேரம், அருகலை சமிக்ஞை கிடைத்தது. மீண்டும் என் நண்பரை அழைத்தேன். அவர் எடுத்தார். விவரித்தேன். ஓட்டுநரிடம் பேசினார்.

“ஓட்டுநர் கேட்பது 100 அமெரிக்க டாலர் இல்லை. 100 சீன டாலர். அதாவது 100 யுவான்” என எனக்கு விளக்கினார். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஓட்டுநருக்குக் கும்பிடுபோட்டு, “இந்தாங்க 100 யுவான். வாங்க போவோம்” என்றேன். சத்தமாகச் சிரித்தார்.

மலேசிய பணத்தின் பெயர் ‘ரிங்கிட்’. ஆனாலும் வெள்ளி என்றும் டாலர் என்றும் சிலர் அழைக்கிறார்கள். அதேபோல், சீன யுவான் மற்றும் ரென்மின்பி என்பது சீனப் பணமாக இருந்தாலும் டாலர் எனவும் சொல்கிறார்கள் என்பதை அப்போது அறிந்தேன். “நான் 100 யுவான் தானே கேட்கிறேன். மறுக்கிறீர்கள். 600 யுவான் தருகிறீர்களே” என்பதைத்தான், ஓட்டுநர் முன்பு சொல்லியிருக்கிறார் என்பது அப்போது புரிந்தது.

இருவரும் அடிக்கடி பார்த்துச் சிரித்தபடியே பயணித்தோம். இறங்குகையில், “உங்களை நான் மறக்கவே மாட்டேன்” என சிரித்தார். “நானும் உங்களை எப்போதும் மறக்க மாட்டேன்” என்று சொல்லி சிரிப்பிசையில் கலந்தேன். செல்ஃபி எடுத்துக்கொண்டு, விலைமதிப்பில்லா அனுபவத்துடன் இறங்கினேன்.

வரலாற்றை அறிமுகம் செய்த விவசாயி
வரலாற்றை அறிமுகம் செய்த விவசாயி

விவசாயி மீட்டெடுத்த வரலாறு

சீனாவில், ஷியாயங் எனும் கிராமம் இருக்கிறது. இங்குள்ள விவசாயிகளில் சிலர் 1974-ல் கிணறு வெட்டினார்கள். 15 மீட்டர் ஆழம் சென்றும் தண்ணீர் கிடைக்கவில்லை. மண்ணால் செய்யப்பட்ட மனித தலை மற்றும் பழங்காலத்து அம்பு முனை மட்டும் கிடைத்தது. யாங் ஷிஃபா எனும் விவசாயி அதைப் பற்றி அரசாங்கத்துக்குச் சொன்னார். ஆய்வுசெய்த தொல்பொருள் ஆய்வாளர் ஷாவ் காங்மின், “இது 2,200 ஆண்டுகள் பழமையானது” என அறிவித்தார். இதைப் பற்றி அறிய நாமும் 2,200 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

கி.மு 2-ம் நூற்றாண்டில் சீனா 7 தேசங்களாக இருந்தது. 13 வயதிலேயே அரசரான ச்சின் ஷி ஹுவாங் (Qin Shi Huang) மற்றவர்களை வென்று, ஒருங்கிணைந்த சீனாவை உருவாக்கினார். முதல் பேரரசர் ஆனார். கோட்டைச் சுவர்கள் பலவற்றை இடித்தும் இணைத்தும் புதிதாகக் கட்டியும் ஏறக்குறைய 5,000 கிலோ மீட்டருக்குச் சீனப் பெருஞ்சுவர் எழுப்பினார். எக்காலமும் உயிர்வாழ ஆசைப்பட்டு, ஒருபுறம் இறவாமைக்கான அமுதம் கண்டுபிடிக்க ஆணையிட்டார். மறுபுறம், இவ்வுலகைப் போலவே மறுவுலகிலும் பேரரசராக இருக்க ஆசைப்பட்டு, பூமிக்கு அடியில் தனக்கான கல்லறையை 13 வயதிலேயே கட்டத் தொடங்கினார்.

மண்ணுளிப் பொம்மைகள்

13 தெருக்களைக் கற்பனை செய்யுங்கள். ஒரு தெருவுக்கும் அடுத்த தெருவுக்கும் இடையே வீடுகளுக்குப் பதில் மண் சுவர்கள். ஒவ்வொரு தெருவிலும் 5 அல்லது 6 வரிசைகள் என 11 தெருக்களிலும் வீரர்கள், வில்லாளர்கள், காலாட்படையினர், குதிரைப் படையினர், போர்ப்படைத் தளபதிகள், தேர்கள் அனைத்தையும் மண்ணால் செய்ய வைத்தார். ஒவ்வொரு வீரரும் 5 முதல் 7 அடி உயரமுடையவர்கள். ஒன்றுபோல் மற்றொன்று இல்லை.

குதிரைகளும் தேர்களும் சராசரி உயரம் இருக்கின்றன. அனைத்தையும் மண்ணுக்குள் புதைத்து கூரை அமைத்து மண்மேவி மூடினார். பூமிக்குள் பேரரசர் உருவாக்கிய நாட்டின் ஒரு பகுதிதான் இது. ஏனென்றால், கல்லறையின் மொத்த பரப்பளவு 98 சதுர கிலோமீட்டர் என ரேடார் கருவி கண்டுபிடித்துள்ளது. டெரகோட்டா வீரனின் தலைதான் கிணறு வெட்டியவர்களின் கையில் கிடைத்தது. அகழாய்வில் இதுவரை 8,000 வீரர்கள், 100 தேர்கள், 400 குதிரைகள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆயுதங்களை கண்டெடுத்திருக்கிறார்கள். அதில் 2 தேர்கள் வெண்கலத்தில் செய்யப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்துக்கு முன்னே இருந்த தகவல் மையத்தில் ஆங்கில வழிகாட்டிக்குப் பணம் கட்டினேன். வரலாறு முழுவதையும் சொல்லிக்கொண்டே அவர் சுற்றிக்காட்டினார். “இவ்விடம் உலகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம்” என்றார். மண், மரம் மற்றும் வெண்கலத்தால் ஆன தேர்கள், ஒவ்வொரு வீரருக்குமான தனித்துவமான முக அமைப்பு, ஆயுதங்கள், வெண்கலத்தால் ஆன உடற்கவசம், உடைந்த டெரகோட்டா வீரர்களின் உடல் பாகங்களைத் தேடி எடுத்து ஒட்டி முழுமைப்படுத்தும் ஆராய்ச்சியாளர்கள் என அனைத்தையும் பார்த்து அதிசயித்தேன். அகழாய்வில் கிடைத்த வாள் ஒன்றைப் பார்த்தேன். அதன் அடிப்பகுதியில் 10-15 மைக்ரான் குரோமியம் பூசப்பட்டிருக்கிறது. குரோமியம் பூசும் தொழில்நுட்பம் ஜெர்மனியில் 1937, அமெரிக்காவில் 1950-ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், சீனாவில் 2,200 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது.

அருங்காட்சியகத்தைவிட்டு வெளியேறும் இடத்தில் அமர்ந்திருந்த யாங் ஷிஃபாவுடன் நிழற்படம் எடுத்தேன். கடந்தகால அதிசயங்களுடன் நிகழ்காலம் திரும்பினேன். தொல்பொருள் ஆய்வில் பட்டம் பெற்று, நம் கலாச்சாரப் புதையல்களை நம் தலைமுறையினரும் தேட வேண்டும் என்கிற கனவுடன் கிளம்பினேன்.

(பாதை நீளும்)

பெட்டிச் செய்தி

என் கல்லறையைத் தொட்டுப்பார்!

இதுவரை பேரரசரின் கல்லறை திறக்கப்படவில்லை. வடக்கே வெய் நதி, தெற்கே லீ மலைத் தொடர், மேற்கே தான் கட்டிய சீனப் பெருஞ்சுவர் இருப்பதால் எதிரிகள் எளிதில் தம்மை நெருங்க முடியாது என ஷி ஹுவாங் கணித்தார். மேற்குத் திசையில் கிழக்கு நோக்கி இருக்கும்படி தன் கல்லறையைக் கட்டத் தொடங்கினார். யாரும் நெருங்க முடியாதபடி அவர் அமைத்த அரண்மனை என்றே அதைச் சொல்லலாம். அடக்கம் செய்யும் இடத்தை மிக உயரமாக, கூம்பு வடிவத்தில் அமைத்தார். கல்லறையை எதிரிகள் திறந்தால் தானாக விரைந்து தாக்கும் வில் அம்பு, ஈட்டி, உடலை உருக்கும் பாதரசம் அனைத்தையும் கொண்டு வடிவமைத்தார். கல்லறையைச் சுற்றி இரண்டரை சதுர கிலோமீட்டர் பரப்பளவில் முதல் கோட்டைச்சுவர் மற்றும் 6.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2-ம் கோட்டைச் சுவர் கட்டினார். கிழக்கிலிருந்து வரும் எதிரிகளை எதிர்கொள்ள தென்கிழக்கே டெரகோட்டா ராணுவத்தை நிறுத்தினார். டெரகோட்டா என்றால், பழுப்பு மற்றும் செந்நிற மண் என்று பொருள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in