சிறகை விரி உலகை அறி - 80: தீ உண்ட நகரம்!

டவர் பாலம்
டவர் பாலம்

இரவு ஒரு புனித நூல். வாசிக்கும் ஒவ்வொரு கண்களுக்கும் ஒருவித அர்த்தம் கொடுக்கும். விழி விரித்துப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் புதுவித புரிதல் அளிக்கும். புத்துணர்வை மீட்டுத் தரும்.

இருளை உண்ட வெளிச்சம் கண்களைக் கூச, ஈரப்பதம் நிறைந்த காற்று உடலெல்லாம் தீண்ட லண்டன் வீதிகளில் ஜனவரி குளிரில் நடந்தேன். மூச்சுக் குழலை குளிரச் செய்து, அடிவயிறு தொட்டுத் திரும்பியது காற்று. உள்ளங்கை கோடுகளைச் சுண்டி இழுத்தது குளிர். குளிராடையும், கையுறையும் விரட்டியதால், உதட்டை உறிஞ்சியது குளிர்காற்று. உதட்டைச் சப்பியபடி நடந்தேன்.

சுற்றுலா நாட்களில் எங்கிருந்துதான் என் கால்களுக்கு பலம் வருமோ தெரியவில்லை. ஒரு நாளைக்கு 15 கிலோ மீட்டருக்கு குறைவாக அலைவதை என் கால்கள் விரும்புவதில்லை. நடந்துகொண்டே இருக்கும் கால்களால், நகரத்தின் அன்றாட வாழ்வில் நான் கலந்துவிடுவேன். வரலாற்று நினைவிடங்கள், காட்சியகங்கள், சாலையோரத்தில் குளிரில் படுத்துறங்கும் ஏழைகள், பசிக்கு கை ஏந்தும் மனிதர்கள், பரபரப்பின்றி கடக்கும் மிதிவண்டிகள், இரவுக் கடைகள், கதைகளால் நிறையும் மதுக்கூடங்கள், வண்ணத் தோரணங்கள், குறுக்குப் பாதைகள், புரியாத சுவர் ஓவியங்கள் எல்லாமும் எனக்குக் கதைகள் சொல்லும்.

எரிமலைக்கு ஓர் ஆடை

லண்டன் ஒளியில் என்னைப்போலவே குளிராடைக்குள் எல்லாரும் நடந்தார்கள். ஒரே வித்தியாசம், கழுத்தையும் தலையையும் நான் மூடவில்லை. இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் நான் பார்த்த, வெப்ப ஆடையை (Heatsuit) அவர்கள் நினைவுபடுத்தினார்கள். எரிமலைக்குப் பயந்து பொதுமக்கள் விலகி இருக்கலாம், விஞ்ஞானிகள் இருக்க முடியாதல்லவா. எரிமலைக்கு அருகில் செல்லும்போது, குழம்புகளின் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாக்க விஞ்ஞானிகள் வெப்பஉடை அணிகிறார்கள். இந்த உடை 1,000°C வரையிலான வெப்பத்தைத் தாங்கும்.

வெப்ப ஆடை
வெப்ப ஆடை

தீயின் நாக்குகள்

அருங்காட்சியக நினைவுடன் நடந்த எனக்கு முன்பாக, நினைவுத்தூண் நின்றது. 1666-ஆம் ஆண்டு, ஐரோப்பிய பெரு நகரங்களுள் ஒன்றாக லண்டன் விளங்கியது. 3,50,000 மக்கள் வாழ்ந்தார்கள். மூங்கில் கம்புகளும், கூரைகளும் எண்ணற்ற வீடுகளைத் தாங்கியிருந்தன. கோடைகாலத்தில் கூரைகளெல்லாம் காய்ந்து சரசரத்தன. அதிக மழையின்றி நிலம் தகித்தது. செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி அடுமனை ஒன்றில் நெருப்பு பற்றியது. ஒருசில வீடுகள் தீயில் கருகின. ஒவ்வொரு வீதியாகத் தொடர்ந்து, தேம்ஸ் நதிக்கரைக்கு வந்தது பெரு நெருப்பு. அங்கு, எண்ணெய் மற்றும் கொழுந்துவிட்டு எரியும் பொருட்கள் இருந்த கிட்டங்கியில் பற்றியது. 

அந்நாட்களில், ஒழுங்கமைக்கப்பட்ட தீயணைப்பு படை இல்லை. பெரிய கருவிகள் இல்லை. நெருப்பின் வேகத்தைக் குறைக்க, எரிந்துகொண்டிருந்த கட்டிடங்களை நீண்ட இரும்பு கொக்கியால் இழுத்து தரையில் போட்டார்கள். பயனில்லை. நகரம் எரிந்துகொண்டே இருந்தது. கையறுநிலை. எரியத் தொடங்காத கட்டிடங்களுக்குப் பரவாதபடி, வெடிமருந்து பயன்படுத்தி எரிந்துகொண்டிருந்த கட்டிடங்களைத் தகர்த்தார்கள். செப்டம்பர் 5-ஆம் தேதி நெருப்பின் தொடர்ச்சி அறுந்தது. 4 நாட்களில் 13,200 வீடுகள், 87 பங்கு ஆலயங்கள் உள்ளிட்ட நகரத்தின் மூன்றில் இரண்டு பங்கு சாம்பலானது. அந்த ஆண்டுகளில், லண்டனின் ஆண்டு வருமானம் 12,000 பவுண்டு. நெருப்பு ஏற்படுத்திய இழப்பு ஒரு கோடி பவுண்டு!

நிலத்தின் சூடு குறையவும், ஆங்காங்கு திடீரென எழுந்த சிறு நெருப்பு அணையவும் வாரங்கள் ஆகின. மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். குளிர்காலத்தில் நோய் தொற்றும் அதிகமானது. நகரத்தையே மீண்டும் கட்ட வேண்டும். வீதிகளின் அளவு, வீடுகளின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு,  சர் கிறிஸ்டோபர் ரென் புதிய நகரத்தை வடிவமைத்தார்.  பெரு நெருப்பின் நினைவாக, 202 அடி உயர நினைவுத்தூண் (1671-1677) எழுப்பினார். தூண் நிற்கும் இடத்திலிருந்து 202 அடி தூரத்தில் உள்ளது நெருப்பு பற்றத் தொடங்கிய இடம்.

ஃபீனிக்ஸ் லண்டன்

தூணை நிமிர்ந்து பார்த்தபோது, இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வாசித்த, ‘சாம்பலில் பிறந்த ஃபீனிக்ஸ்’ நினைவுக்கு வந்தது. “அழிவின் விளிம்பில் உள்ள பாலினேசியன் மெகாபோட் (Polynesian Megapode) பறவைகளால், எரிமலைகள் இல்லாவிட்டால் வாழ இயலாது. இப்பறவைகள், எரிமலை வெப்பத்தால் சூடேற்றப்பட்ட நிலத்தில் முட்டையிட்டு அடைகாக்கின்றன. மேலும், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பால் வெப்பமடைந்த பகுதிகளில், டயனோசர் முட்டைகளின் புதைபடிவம்  கிடைத்துள்ளன. எனவே, டயனோசர்களும் எரிமலை வடிந்த நிலத்தில் முட்டையிட்டு அடைகாத்திருக்கலாம்” என்கிறார்கள் ஆய்வாளர்கள். ‘சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ்போல’ என்கிற உவமானத்துக்கு லண்டன் மாநகரம் மிகச் சிறந்த உதாரணம்.

நினைவுத் தூண்
நினைவுத் தூண்

நதி முகமும் மதி முகமும்

நினைவுத் தூணிலிருந்து நடந்து தேம்ஸ் நதிக்கரைச் சென்றேன். ஒளியில் வெட்கப்பட்டு தூண்களுக்கும், படகுகளுக்கும், சுவர்களுக்கும் அடியில் மறைந்திருந்தது இருள். நதியோரம் நடந்தேன். படகோடிய நதியின் கரையில் அலையாடியது. ஆங்காங்கே ஒளியின்றி இருள் ஓய்வெடுத்தது. வெளிச்சமில்லை. அருகில் யாருமில்லை. பரந்த வானுடன் விளையாடும் அலை, அலை கடத்திய இசை, இதழ் திறக்கும் மென்காற்றின் சுகம், நெருப்பின்றி புகையும் வாய், இரும்பு வேலியில் சாய்ந்து நதியில் மிதந்தேன். அலையைத் தொடர்ந்தேன். தூரத்தில் டவர் பாலம் (Tower Bridge) தெரிந்தது. அருகில் லண்டன் டவர் இருப்பதால், இது டவர் பாலம் எனப்படுகிறது. பாலத்தை நோக்கி நதிக்காற்றைத் தழுவி முன்னேறினேன். படகுத்துறை கடந்தேன். பாலத்தில் ஏறினேன். கனவுலகில் மிதப்பதுபோல இருந்தது.  

டவர் பாலம்

நதி வழியில் வணிகக் கப்பல்களைப் பாதிக்காதபடி பாலம் கட்ட லண்டன் நகரசபை 1876-இல் முடிவெடுத்தது. 50-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் வந்தன. நகர கட்டிட வடிவமைப்பாளர் ஹொராஸ் ஜோன்ஸ் உருவாக்கிய வடிவம் தேர்வானது. 1886-இல் கட்டத் தொடங்கினார்கள். 5 பெரிய கட்டிட நிறுவனங்கள், 11 ஆயிரம் டன் எஃகு (Steel),  தூண்களுக்கு மட்டும் 70 ஆயிரம் டன் கான்கிரீட், தினமும் 432 பணியாளர்கள் உழைத்து 8 ஆண்டுகளில் கட்டி முடித்தார்கள். பாலத்தின் நடுவில் வாகனங்கள் சென்று வரலாம். மக்கள் நடப்பதற்கும் பெரிய பாதை அமைத்துள்ளார்கள்.

டவர் பாலத்தில்
டவர் பாலத்தில்

பாலத்தின் நீளம் 244 மீட்டர். ஆற்றின் நடுவில் 2 பெரும் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. தூண்களுக்கு மேலே 61 மீட்டர் உயர கோபுரங்கள் 2 கட்டப்பட்டுள்ளன. கப்பல் வருகிறபோது, மணி ஒலிக்கும், 2 தூண்களுக்கும் முன்பாக கயிறு கட்டுவார்கள். தூண்களுக்கு இடையிலுள்ள பாலம் ஒரு நிமிடத்தில் இரண்டாக மேலே செல்லும். கப்பல் சென்றபிறகு மறுபடியும் சம நிலைக்கு வரும். அதிகபட்சம் 86° வரை தூக்கலாம். தொடக்க காலத்தில் நிலக்கரி எரித்து, நீராவியின் உந்துதலால் தூக்கினார்கள். அந்நாட்களில் ஒரு வாரத்துக்கு 20 டன் நிலக்கரி தேவைப்பட்டதாம். பிறகு எண்ணெய் பயன்படுத்தினார்கள். தற்போது மின்சார உதவியுடன் தூக்குகிறார்கள். மேலும், சாலை விளக்குகளும், தானியங்கி தடுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.

கப்பல்  செல்கிற நேரத்தில் மக்கள் காத்திருக்கத் தேவையில்லை என்பதற்காக, 44 மீட்டர் உயரத்தில் கோபுரங்களை இணைந்து நடைபாதை அமைத்தார்கள். ஆனாலும், திருட்டு மற்றும் பாலியல் செயல்கள் நடைபெற்றதால், 1910-இல் அப்பாதை மூடப்பட்டது. மறுபடியும், 1982-இல் திறக்கப்பட்டுள்ளது. மேலிருந்து கீழே கப்பலைப் பார்க்க நடைபாதையில் குறிப்பிட்ட இடத்தில்  கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் நிரந்த கண்காட்சியும் உள்ளது.

தேம்ஸ் நதிக் கரையில்
தேம்ஸ் நதிக் கரையில்

தங்குமிட அனுபவம்

அங்கிருந்து தொடர்வண்டியில் ஏறினேன். தங்குமிடம் சென்றேன். முந்தைய நாள் நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. விமான நிலையத்தில் இறங்கியபோதே மழை. இலவச அருகலை வழியாக, நான் வந்துவிட்டதை விடுதி பொறுப்பாளருக்குச் சொன்னேன். மழையும், குளிரும், பெட்டியுமாக குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றேன். பெரிய குடியிருப்பு அது. 3-வது மாடியில் எனக்கான அறை. ஆங்காங்கே சிறிய வாசல்கள் இருந்ததால் எந்த வாசலில் செல்வதென்று தெரியாமல் அலைந்தேன். அரை மணி நேரத்துக்குப் பிறகு என் அறை எண் எழுதியிருந்த வாசலைக் கண்டுபிடித்து, அருகிலேயே நின்றேன்.

சென்சார் லாக் இல்லாமல் திறக்க முடியாது. ஒருவர் கதவு திறந்தார். அவரோடு நானும் நுழைந்தேன். அடுத்த கதவுக்கு முன் நின்றேன். இன்னொருவர் வந்தார். பேசினார். அழைத்துச் சென்று என் அறைக்கு முன்னால் நிறுத்தினார். அழைப்பு மணியை அழுத்தினேன். ஒரு பெண் வந்தார். அவரிடம் அருகலை கடவுஎண் வாங்கி பொறுப்பாளரை அழைத்தேன். தன் தாமதத்திற்கு வருந்தினார். நான் உள்ளே சென்றதை நினைத்து வியந்தார். சில நிமிடங்களில் வந்தார். அறைக்குள் இருந்த நான்கு சிறிய அறைகளில் ஒன்றை எனக்குத் தந்தார். நிம்மதியாக உறங்கினேன்.

 (பாதை விரியும்)

Airbnb

வழக்கமாக பேக்பேக்கர்ஸ் விடுதியில் (கட்டுரை 29) தங்கும் நான், இம்முறை Airbnb விடுதியில் தங்கினேன். Airbnb என்பதை வாடகை வீடு என்பதாகப் புரிந்துகொள்ளலாம். வீடு முழுவதையுமோ அல்லது சில அறைகளையோ வாடகைக்கு விட விரும்புகிறவர்கள் Airbnb-இல் பதிவு செய்திருப்பார்கள். சுற்றுலா பயணிகள் தனி அறை அல்லது வீடு முழுவதையும் வாடகைக்கு எடுக்கலாம். பராமரிப்பாளர் மற்றும் பொறுப்பாளர் இருப்பார்கள். சமைக்க பாத்திரங்கள் இருக்கும். சில இடங்களில் நீச்சல் குளமும் இருக்கும். நான்கைந்து பேர் சேர்ந்து செல்வதாக இருந்தால், சிறந்த இடம் இது. வாடகை குறைவுதான். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in