இதே தேதி... முக்கியச் செய்தி: பூச்சிக்கொல்லிக்கு எதிராகப் புரட்சி செய்த புத்தகம்!

இதே தேதி... முக்கியச் செய்தி: பூச்சிக்கொல்லிக்கு எதிராகப் புரட்சி செய்த புத்தகம்!

ஒரு புத்தகம் என்ன செய்யும்? வாசகரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதன் கருப்பொருள் குறித்த விவாதம் தொடங்கலாம். மீள்வாசிப்பில் மேலும் பல விஷயங்கள் புலப்படலாம்... இப்படி நிறைய சொல்லலாம். ஆனால், ஒரு நாட்டின் மனசாட்சியை உலுக்கியெடுத்து, அந்நாட்டின் கொள்கையிலேயே மாற்றம் ஏற்படுத்திய புத்தகம் ஒன்று உண்டு. அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் கார்ஸன் எழுதிய ‘சைலன்ட் ஸ்பிரிங்’ புத்தகம்தான் அது.

பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் ரேச்சல் கார்ஸன். விலங்கியல் பட்டாதாரியான இவர், கடல்சார் உயிரியல் துறையில் நிபுணத்துவம் பெற்றார். அமெரிக்காவின் மீன்வளத் துறையில் பணியாற்றத் தொடங்கியபோதே அவரது எழுத்துத் திறமை அவருக்குத் தனித்த அடையாளம் கொடுத்தது. கடல்சார் உயிர்கள் குறித்த வானொலித் தொடரை எழுதினார். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘செஸாபீக் பே’ எனும் ஆய்விதழில் கட்டுரைகள் எழுதினார். முதலில் பகுதிநேர ஊழியராகச் சேர்ந்தவர் மீன்வளத் துறையில் பணி நிரந்தரம் செய்யப்பட்டார். அந்த கெளரவம் கிடைக்கப் பெற்ற இரண்டாவது பெண் இவர்தான்.

கள ஆய்வு செய்வது, அதைப் பற்றி விரிவாக எழுதுவது என இவரது பணி தொடர்ந்தது. ‘தி பால்டிமோர் சன்’, ‘அட்லான்டிக் மன்த்லி’ போன்ற இதழ்களில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின. கள ஆய்வுகள் சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறையை இவரிடம் ஏற்படுத்தின. 1950-களில் டைக்குளோரோ டைபினைல் டிரைகுளோரோ ஈத்தேன் (DDT) எனும் ரசாயனப் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவலாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் அதிகமாகப் பரவிய மலேரியா உள்ளிட்ட நோய்களை ஒழிப்பது, விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிப்பது எனும் நோக்கத்தில் டிடிடீ பயன்பாடு தொடர்ந்தது. குளோரினேட்டட் ஹைட்ரோகார்பன், ஆர்கனோபாஸ்பேட்ஸ் போன்ற பூச்சிக்கொல்லி தெளிப்பும் அரசால் ஊக்குவிக்கப்பட்டது.

ரேச்சல் கார்ஸன்
ரேச்சல் கார்ஸன்

ஆனால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் - குறிப்பாக டிடிடீ பூச்சிக்கொல்லியால் கொசுக்கள் மட்டுமல்லாமல் குருவிகள் போன்ற உயிரினங்களும் சேர்ந்து அழிந்துவந்தது குறித்து கவலையடைந்தார் ரேச்சல் கார்ஸன். அது தொடர்பாக ஆய்வுகள் நடத்தி ‘சைலன்ட் ஸ்பிரிங்’ எனும் புத்தகத்தை எழுதினார். 1962 செப்டம்பர் 27-ல் அந்தப் புத்தகம் வெளியானது.

சுற்றுச்சூழல் சீர்கேடு, சிறு விலங்குகளின் அழிவு, மனிதர்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் என அதிரவைக்கும் உண்மைகளை அறிவியல் சான்றுகளுடன் அப்புத்தகத்தில் அவர் பதிவுசெய்தார். மிகப் பெரிய ஆபத்தைச் சுட்டிக்காட்டிய அந்தப் புத்தகம் அமெரிக்கச் சமூகத்தைச் சிந்திக்க வைத்தது. பூச்சிக்கொல்லி கொள்கையில் மாற்றம் தேவை என அமெரிக்க அரசும் பரிசீலிக்கத் தொடங்கியது. மறுபுறம், பில்லியன் டாலர் வருமானம் கொட்டும் பூச்சிக்கொல்லி உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலதிபர்கள் ரேச்சல் கார்ஸன் மீது கடும் கோபம் கொண்டனர், சொல்லப்போனால் அந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே, எதிர்ப்பு கிளம்பிவிட்டது. அந்தப் புத்தகம் தொடர்பாக செய்திகள் வெளியிடும் பத்திரிகைகள் மீது வழக்கு தொடரப்படும் என டியுபோன்ட், வெல்ஸிகோல் போன்ற பெரிய நிறுவனங்கள் மிரட்டின. பூச்சிக்கொல்லியின் ‘நன்மைகள்’ குறித்து பக்கம் பக்கமாகக் கட்டுரைகளைப் பதிப்பித்தன. கையேடுகளை வெளியிட்டன. ரேச்சல் கார்ஸனின் வார்த்தைகளைப் பின்பற்றினால் நாம் மீண்டும் இருண்ட யுகத்துக்குச் சென்றுவிடுவோம்; பூச்சிகள், நோய்கள் மீண்டும் அதிகரிக்கும் என்றெல்லாம் ரசாயனப் பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனங்களின் சார்பில் கருத்துகள் பரப்பப்பட்டன. ரேச்சல் கார்ஸன் கடல்சார் உயிரியலில் பணிபுரிந்துவிட்டு, உயிர் வேதியியல் துறையில் ஆராய்ச்சி செய்ததை எப்படி ஏற்க முடியும் என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை ரேச்சல் கார்ஸன் பட்டியலிட்டதும், அறிவுச் சமூகமும் பொதுச் சமூகமும் அவர் பக்கமே நியாயம் இருப்பதாக ஒப்புக்கொண்டன. டிடிடீ பூச்சிக்கொல்லிகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது. சுற்றுச்சூழல் தொடர்பாக மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு உருவானதைத் தொடர்ந்து, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த விவாதங்கள் ரசாயனப் பொருட்களின் பயன்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தின.

“சார்லஸ் டார்வினின் ‘ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ்’ (உயிரினங்களின் தோற்றம்) புத்தகத்துக்குப் பின்னர் அறிவியல் உலகத்தில் மிகப் பெரியா மாற்றம் கொண்டுவந்தது ‘சைலன்ட் ஸ்பிரிங்’ புத்தகம்தான்” என புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ இப்புத்தகத்தைப் புகழ்ந்திருக்கிறார்.

ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழி என ஏராளமான மொழிகளில் இப்புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ’அமைதியான வசந்தம்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் அமைதியான, உறுதியான புரட்சியை ஏற்படுத்தியதுதான் வரலாறு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in