இதே தேதி... முக்கியச் செய்தி: இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்த காலிஸ்தான் இயக்கம்!

இதே தேதி... முக்கியச் செய்தி: இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்த காலிஸ்தான் இயக்கம்!

கடந்த சில வாரங்களாக, இந்தியா - கனடா இடையில் சற்றே அதிருப்திகரமான மனநிலை நிலவுகிறது. கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்திருப்பதாக இந்தியா கவலை தெரிவித்திருக்கிறது. அங்குள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. இதன் பின்னணியில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை - காலிஸ்தான். கனடாவில் வசிக்கும் சீக்கியர்களிடம் காலிஸ்தான் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் பஞ்சாபில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட சீக்கிய அமைப்புதான் காலிஸ்தான் இயக்கம். இந்தியாவிடமிருந்து பிரிந்து காலிஸ்தான் எனும் புதிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் இயங்கிவந்த இயக்கம் அது. இதன் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது என்ன நிலவரம்?

காலிஸ்தான் என்றால் ‘கால்சாக்களின் நிலம்’ என்று அர்த்தம். சீக்கிய சமூகத்தைக் குறிக்கும் சொல் கால்சா. 10-வது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் காலத்தில், அதாவது 17-ம் நூற்றாண்டில் இந்தக் கருத்தாக்கம் உருவானது. ஒருகட்டத்தில் சீக்கியர்களுக்கென தனி தேசம் உருவாக வேண்டும் எனும் வேட்கையுடன் காலிஸ்தான் இயக்கம் உருவானது. குறிப்பாக, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முடிவுறும் தறுவாயில் இருந்தபோது இந்தக் கோரிக்கை தீவிரமாக எழுந்தது. 1947-ல் அகாலி தளம் தலைமையில் உருவான பஞ்சாபி சூபா இயக்கம் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்னெடுத்தது.

தேசப் பிரிவினைக்குப் பின்னர் நிலவிவந்த கொந்தளிப்பான சூழல், மொழி அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கைகள் எனப் பல்வேறு காரணிகள் சீக்கியர்கள் மத்தியில் பிரிவினைவாத எண்ணத்தை வளர்த்தன. இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு இவ்விஷயத்துக்குத் தீர்வு காண முயன்றது. 1966-ல் மொழிவாரியாக பஞ்சாப் பிரிக்கப்பட்டது. ஹரியாணா மாநிலமும், சண்டிகர் ஒன்றியப் பிரதேசமும் உருவாகின. அதேசமயம், 1972-ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த அகாலி தளம் மீண்டும் தனிநாடு கோரிக்கையைத் தீவிரமாக எழுப்பியது.

ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே

1982-ல் அகாலி தளமும், தம்தமி தக்ஸால் இயக்கத் தலைவரான ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேயும் இணைந்து தொடங்கிய தர்மயுத்த இயக்கம் தனிநாடு கோரிக்கையை மேலும் தீவிரப்படுத்தியது. வன்முறையில் நம்பிக்கை கொண்டிருந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேயின் செயல்பாடுகள் பதற்றத்தை ஏற்படுத்தின.

பஞ்சாப், ஹரியாணா, இமாசல பிரதேசம், டெல்லி என வட இந்தியாவின் பல முக்கியப் பகுதிகளை இணைத்து காலிஸ்தான் எனும் தனி தேசத்தை உருவாக்க காலிஸ்தான் இயக்கத்தினர் உறுதி பூண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வசித்துவந்த சீக்கியர்கள் மத்தியிலும் காலிஸ்தான் குறித்த வேட்கை இருந்தது. 1970-ல் மேற்கு லண்டனில்தான் காலிஸ்தான் இயக்கம் முறைப்படி இயங்கத் தொடங்கியது. இந்த இயக்கத்துக்காக ஏராளமான நிதியும் குவிந்தது. இது போதாதென, காலிஸ்தான் இயக்கத்தினருக்கு பாகிஸ்தான் ஆதரவாக இருந்தது. 1971-ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசம் எனும் தனிநாடாக உருவாக்கித் தந்த இந்தியா மீது கடும் கோபத்தில் இருந்த பாகிஸ்தான், இவ்விஷயத்தில் ரொம்பவும் தீவிரம் காட்டியது.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்

பஞ்சாபில் நிகழ்ந்துவந்த வன்முறைச் சம்பவங்களால் அதிருப்தியடைந்த இந்திரா காந்தி அரசு, 1984-ல் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையைத் தொடங்கியது. அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பிந்த்ரன்வாலே தலைமையிலான சீக்கிய அமைப்பினர் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பிந்த்ரன்வாலேயும் உயிரிழந்தார். அந்நடவடிக்கைக்குப் பழிவாங்கும் வகையில் அதே ஆண்டில் இந்திரா காந்தியை, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த அவரது மெய்க்காப்பாளர்கள் படுகொலை செய்தனர். இதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கலவரங்களில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் பஞ்சாபிலும் வெளிநாடுகளிலும் காலிஸ்தான் இயக்கத்தினர் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு என வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தினர். இந்தச் சூழலில், 1986 ஏப்ரல் 29-ல் காலிஸ்தான் எனும் தனிதேசம் உருவானதாக அந்த இயக்கத்தினர் அறிவித்தனர். ஆனால், அதற்கு சர்வதேச அளவில் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. பின்னர் 1987 அக்டோபர் 5-ல் இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக காலிஸ்தான் இயக்கம் அறிவித்தது.

பஞ்சாபில் காலிஸ்தான் கோரிக்கை என்பது ஏறத்தாழ கைவிடப்பட்டுவிட்டது. எனினும், கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள், ஆயுதக் கடத்தல்கள் போன்றவற்றில் காலிஸ்தான் இயக்கத்தின் கை இருப்பதாகவே கருதப்படுகிறது. லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில், 2021 டிசம்பர் 23-ல் நடந்த குண்டுவெடிப்பின் மூளையாகச் செயல்பட்டவர் என ஜஸ்விந்தர் சிங் முல்தானி எனும் நபர் ஜெர்மனியில் கைதுசெய்யப்பட்டார். அவர், இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருக்கும் ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ எனும் அமைப்பின் நிறுவனர் குர்பத்வன் சிங் பன்னூனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனப் போலீஸார் தெரிவிக்கின்றனர். ரத்தம் தோய்ந்த வரலாறு கொண்டது காலிஸ்தான் இயக்கம்.

இப்படியான சூழலில்தான் கனடாவில் காலிஸ்தான் அமைப்பினரின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா கவலை தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in