அசோகர் - 2: பேரரசரின் ஆரம்பகாலம்

அசோகர் - 2: பேரரசரின் ஆரம்பகாலம்

ஒரு நாள் புத்தர் ராஜகிரகம் எனும் நகரின் பிரதான வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இரு குழந்தைகள் மணலிலும் புழுதியிலும் மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டார். ஒரு குழந்தையின் பெயர், ஜெயா. புத்தரைக் கண்டதும் விளையாடுவதை நிறுத்திவிட்டு புத்தரை நெருங்கியிருக்கிறான் ஜெயா. பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்த அந்த விநோத மனிதர் ஜெயாவின் ஆவலைத் தூண்டியிருக்க வேண்டும். சட்டென்று குனிந்து, உள்ளங்கை முழுக்கப் புழுதியை அள்ளி அவருடைய பாத்திரத்தில் போட்டிருக்கிறான் ஜெயா.

புத்தருக்கு உணவு அளிப்பவர் ஏதேனும் வரம் வேண்டிகொள்வது மரபு. குழந்தையாக இருந்தாலும் அந்த மரபு ஜெயாவுக்குத் தெரிந்திருந்தது. புழுதிக் கையோடு தன் கனவை அவன் புத்தரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறான்: “வருங்காலத்தில் நான் ஒரு மன்னனாக மாறுவேன். என் ஆட்சி நடைபெறும்போது பூமி ஒரே குடையின்கீழ் திரண்டிருக்கும். என் அஞ்சலியை புத்தருக்கு அப்போது செலுத்துவேன்!”

குழந்தைக்குப் புத்தரைத் தெரிந்திருந்தது. ஆனால் அவரிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியவில்லை. புத்தருக்கு அந்தக் குழப்பம் இல்லை. ஜெயாவின் உள்முகத்தை அவர் கண்டுகொண்டுவிட்டார். தரையிலிருந்து குழந்தை அள்ளிப்போட்ட புழுதியை அன்போடு ஏற்றுக்கொண்டார் அவர். குழந்தையின் கனவு நனவாகும். நிஜமாக்குவதற்கான வல்லமையை அக்குழந்தை எப்படியேனும் பெற்றுவிடும் என்பது புத்தருக்குத் தெரியும். எனவே, தனது அணுக்கச் சீடரான ஆனந்தரிடம் புத்தர் சொன்னார். “நான் மரணமடைந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குழந்தை அசோகர் எனும் பெயரில் பிறந்துவந்து, பாடலிபுத்திரத்தில் பேரரசராகப் பொறுப்பேற்றுக்கொள்ளும். ஒரு தர்மராஜாவாக, சக்கரவர்த்தியாக நான்கு கண்டங்களில் ஒன்றை, அறத்தின் பெயரால் அசோகர் ஆட்சி செய்வார். உலகுக்கு என்னை நினைவூட்டும் வகையில் என் உடலுறுப்புகளைப் பரந்து, விரிந்து எடுத்துச் சென்று பகிர்ந்துகொள்வார். 84,000 தர்மராஜிகாக்கள் (தூபிகள்) எழுப்புவார்.”

‘அசோகவதனம்’ பதிவுசெய்துள்ள நிகழ்வு இது. பவுத்த இலக்கியங்களில் முற்பிறவிக் கதைகளுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடமுண்டு. முந்தைய பிறவிகளில் ஒருவர் மேற்கொள்ளும் நல்லொழுக்கச் செயல்கள் அவருடைய அடுத்தடுத்த பிறப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையோடு இயற்றப்படும் நூலுக்கு ‘ஆவாதனம்’ என்று பெயர். அசோகரின் வாழ்வை அவருடைய முற்பிறவிகளைக் கொண்டு மகிமைப்படுத்துவதால் ‘அசோகவதனம்’ அப்பெயரைப் பெற்றது.

ஜாதகக் கதைகளில் புத்தரின் முந்தைய பிறவிகள், மனித உருவில் மட்டுமின்றி விலங்கு உருவிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. புத்தரையும் அவருடைய உபதேசங்களையும் உலகுக்குப் பரப்பிய சக்கரவர்த்தி என்பதால், அசோகருக்கும் அசோகவதனம் முற்பிறப்புகளை உண்டாக்கி பெருமை சேர்த்துள்ளது. அசோகரின் புகழ்பாடுவதற்கென்றே மதுராவிலுள்ள பவுத்த பிக்குகளால் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட நூல், ‘அசோகவதனம்’. இப்போது நம்மிடமுள்ள பிரதி, பொ.ஆ 2-ம் நூற்றாண்டு வாக்கில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் இந்நூலை ஆராய்ந்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள ஜான் எஸ். ஸ்டிராங் (1983).

அசோகரின் ஆரம்பகால வாழ்வுக்கான தேடலை முன்னெடுக்கும் எந்த வரலாற்றாசிரியரும் இத்தகைய பவுத்தப் புராணக் கதைகளிலிருந்துதான் தங்கள் ஆய்வைத் தொடங்குகிறார்கள். பவுத்தர்கள் புனிதமாகக் கருதி வாசிக்கும் அதே பிரதிகளை வேறு நோக்கங்களுடன், வேறு வகைகளில் இவர்கள் வாசிக்கிறார்கள். முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்து எழுதப்படும் ஒரு படைப்பிலிருந்து தகுந்த ஆய்வு முறையைக் கையாண்டு, தங்கள் துறை சார்ந்த தரவுகளை இவர்கள் சேகரித்துக்கொள்கிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு, நயன்ஜோத் லாஹிரி தனது அசோகர் (2015) நூலில், இந்தக் கதையை எவ்வாறு விவாதிக்கிறார் என்று பார்ப்போம். புத்தர் பொ.ஆ.மு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றால் அசோகர் அவருக்குப் பின் 3 நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தவர். இருந்தாலும் இருவருக்கும் இடையில் ஒரு மாயச் சந்திப்பை அசோகவதனம் ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும்? அசோகர் புத்தரால் அவருடைய முற்பிறவியிலேயே அடையாளம் காணப்பட்டவர்; அவர் எப்படிப்பட்டவராக மலரவிருக்கிறார் என்பதை நமக்கு முன்கூட்டியே புத்தர் உணர்த்திவிட்டார்; அசோகரின் சாதனைகள் அனைத்தும் புத்தரின் அருளால் நிகழ்த்தப்பட்டவை என்றெல்லாம் சொல்வதன்மூலம் அசோகரைப் பிரம்மாண்டமாக உருபெருக்கிக் காட்டமுடியும். இயேசுநாதரின் வருகை போல், புத்தரின் வருகை போல், மோசஸின் வருகை போல் அசோகரின் வருகையும் முன்னறிவிக்கப்பட்டது என்று நிறுவ முடியும். அவ்வாறு செய்வதன்மூலம் அவரைப் புனிதப்படுத்தவும் முடியும்.

பழங்கால கதை மரபு எப்படி இருந்தது என்பதையும் இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் என்கிறார் லாஹிரி. அசோகர் எனும் பாத்திரம் நமக்கு அறிமுகமாகும்போதே அவர் பற்றிய ஆரூடமும் நமக்குச் சொல்லப்பட்டுவிடுகிறது. ஆக, இந்தக் கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது நமக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது. அது எவ்வாறு நடக்கப்போகிறது என்பதை அறிய முழுக் கதையையும் படிக்க வேண்டும்.

இக்கதையிலுள்ள எல்லாமே கற்பனை என்றும் சொல்லிவிட முடியாது. நம்புவதற்கரிய செய்திகளைக்கூட நம்பத்தகுந்த சூழலில் பொருத்திதான் சொல்ல வேண்டும். புத்தர் வருகை புரிந்ததாக வரும் ராஜகிரகம் என்னும் நகரம் நிஜம். புத்தர் வாழ்ந்த காலத்தில் மகதப் பேரரசின் ஆட்சி நடைபெற்று வந்தது. மகதத்தின் தலைநகரமாக ராஜகிரகம் இருந்தது. அசோகர் காலத்தில் ராஜகிரகம் பொலிவிழந்து, பாடலிபுத்திரம் ஆட்சிப்பீடமாக மலர்ந்தது. அப்போது 4 கண்டங்கள்தான் தெரிந்திருந்தன என்பதால், அசோகருக்கு அவற்றிலிருந்து ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. எனக்குப் பிறகு 100 ஆண்டுகள் கழித்து அசோகர் பிறப்பார் என்பதை, அப்படியே 100 ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. 100 என்றால், நீண்ட காலத்துக்குப் பிறகு என்று மட்டுமே பொருள் கொள்ள வேண்டும்.

வடமேற்கு இந்தியாவில் பவுத்தம் எவ்வாறு தழைத்திருந்தது, எங்கெங்கே என்னென்ன விகாரைகள் அமைந்திருந்தன, பவுத்த இலக்கிய மரபு எவ்வாறு வளர்ச்சி பெற்றது, பவுத்தம் தழைத்த பகுதிகளில் சமூக வாழ்க்கை எப்படி இருந்தது உள்ளிட்ட பல தகவல்களை அசோகவதனம் போன்ற பிரதிகளிலிருந்து திரட்டமுடியும் என்கிறார் நயன்ஜோத் லாஹிரி.

ஆனால் அசோகரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய மிகவும் அடிப்படையான, அவ்வளவுகூட வேண்டாம், மிகவும் மேலோட்டமான ஒரு சித்திரத்தைக்கூட அசோகவதனம் அளிக்கவில்லை. எந்தப் பிரதியுமே அதை அளிக்கவில்லை என்பதுதான் உண்மை. அசோகர் பொ.ஆ.மு 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று மட்டும்தான் நமக்குத் தெரியும். குறிப்பாக அவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பது தெரியாது. சரி, பிறந்த ஆண்டு கிடைக்காவிட்டால் போகட்டும். அவர் குழந்தைப் பருவம் எப்படி இருந்தது, உடன் பிறந்தவர்கள் எவ்வளவு பேர், அவர்களுடன் அவர் எவ்வாறு பழகினார், எப்படிக் கல்வி கற்றார், எத்தகைய கல்வி அது, படிப்பில் அவருக்கு நாட்டம் இருந்ததா, அவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, அவர் யாரிடமெல்லாம் நெருக்கமாக இருந்தார், யாரிடம் இல்லை, எப்படித் தன் உலகைப் புரிந்துகொண்டார், எப்படிச் சிந்தித்தார், எத்தகைய கனவுகளை வளர்த்துக்கொண்டார் என்று அலையலையாக நமக்குள் எழும் எந்தக் கேள்விக்கும் விடையில்லை.

அசோகரின் ஆரம்பத்தைத் தேடி நாம் செல்லும் ஒவ்வொரு முறையும் இருளில் தொலைந்துவிடுகிறோம். அசோகவதனம் போலவே ‘திவ்யவதன’த்திலும் அசோகர் இடம்பெற்றிருக்கிறார் என்றாலும் அதிலும் புத்தர் கதைகளும் பூர்வ ஜென்மக் கதைகளும்தான் பெருமளவு நிறைந்துள்ளன. இலங்கைப் பதிவுகளான தீபவம்சமும் மகாவம்சமும் முக்கியமானவை; அசோகரின் வாழ்வைக் கட்டமைக்கப் பெரிதும் உதவுபவை என்றாலும் அவருடைய ஆரம்பகால வாழ்வை இரண்டும் பேசுவதில்லை. காரணம் அசோகரின் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பது அல்ல; அவருடைய பவுத்த ஈடுபாட்டை, குறிப்பாக இலங்கையில் அவர் மேற்கொண்ட சமயப் பணிகளைப் பதிவு செய்வதுதான் இப்பிரதிகளின் நோக்கம்.

நாம் எதிர்பார்க்கும் பிரதிகள் நம்மைக் கைவிடும்போது, எதிர்பாராத ஓரிடத்திலிருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது. நாம் தேடித் தேடிச் செல்லும் பேரரசரே நம்மைத் தேடி வந்து பேசுவதற்குத் தயாராக இருக்கிறார். சிந்து சமவெளி காலத்துக்குப் பிறகு நமக்குக் கிடைத்திருக்கும் முதல் எழுத்துகள் அசோகருக்குச் சொந்தமானவை. சிந்து எழுத்துகளை நம்மால் இன்றுவரை படிக்க முடியவில்லை எனும் நிலையில் (அவை எழுத்துகள்தானா எனும் ஐயமும் தீர்க்கப்படவில்லை), இந்திய வரலாற்றில் நமக்குக் கிடைத்திருக்கும் முதல் பழமையான எழுத்துபூர்வமான தரவு என்று அசோகரின் கல்வெட்டுகளை அழைக்க முடியும். பாறை, கல்தூண், கற்பலகை என்று இந்தியத் துணைக்கண்டம் முழுக்க அசோகரின் சொற்கள் உறைந்துபோயிருக்கின்றன. அசோகவதனம் போன்ற பவுத்தப் பிரதிகள் மெனக்கிட்டு உருவாக்கும் மாயத்தோற்றத்தை அசோகரே தன் கல்வெட்டுகள்மூலம் உடைத்தெறிகிறார். “எந்த வகையிலும் அற்புதமல்ல நான். உங்கள் எல்லோரையும் போல் நிறை, குறைகள் கொண்ட ஒரு மனிதன் மட்டுமே” என்று அறிவிக்கிறார் அசோகர்.

ஆனால், அசோகரின் குரலைக் கேட்பதற்கு நாம் இன்னமும் கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் அசோகர் தனது உரையாடலைத் தொடங்குகிறார். அதற்கு முந்தைய வாழ்க்கை குறித்து அவருமேகூட அமைதியே காக்கிறார். இதனால், அசோகரின் ஆரம்ப வாழ்வைத் தெரிந்துகொள்ள அவர் கல்வெட்டுகளையும் நம்மால் உதவிக்கு அழைக்க முடிவதில்லை.

மொழி, மதம், கலை, இலக்கியம், பண்பாடு, தத்துவம், கணிதம், வானியல் என்று பல துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்திருந்தாலும் வரலாற்றுத் துறையில் இந்தியர்கள் ஆரம்பம் முதலே ஆர்வமில்லாதவர்களாகவே இருக்கின்றனர் என்று பின்னர் வந்த ஐரோப்பியர்கள் அங்கலாய்த்துக்கொண்டதன் காரணம் ஒன்றுதான். இந்திய வரலாற்றில் ஒளி மிகுந்த பாதைகளைவிட இருள் குவிந்த மூலைகள்தான் அதிகம். நவீன முறையியல்படி இந்தியாவில் எழுதப்பட்ட ஒரே வரலாற்றுப் பிரதி என்று ஐரோப்பியர்கள் கருதியது ‘ராஜதரங்கிணி’யை மட்டும்தான்.

12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்ஹானர் இயற்றிய இந்த சம்ஸ்கிருத நூல், வடமேற்கு இந்தியாவை ஆண்ட வெவ்வேறு மன்னர்களின் வம்சாவளியை விரிவாகப் பதிவு செய்துள்ளது. காஷ்மீர் குறித்து முதல் வரலாற்றுக் குறிப்பை இதுவே அளிக்கிறது. இந்நூலில் அசோகரும் இடம்பெற்றிருக்கிறார் என்றாலும் ராஜதரங்கிணியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தரவு கிடைக்கவில்லை. பல சரியான தகவல்களைச் சொல்லிக்கொண்ட கல்ஹானர், குழப்பமூட்டும் வகையில் ஏனோ அசோகரை மகாபாரத சகுனியின் வம்சத்தோடு முடிச்சுப்போட்டுவிடுகிறார். சகுனியின் கொள்ளுப் பேரன்தான் அசோகர் என்கிறார்.

மவுரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தரின் பேரன்தான் அசோகர் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அசோகரின் தந்தை பிந்துசாரர் என்பதும் தெரிந்ததுதான். மவுரியப் பேரரசின் 3-வது மன்னர்தான் அசோகர். சரி, அசோகரின் அம்மா யார்? அசோகவதனத்தில் இடம்பெறும் மற்றொரு ஆரூடக் கதையை நாடுவோம். சம்பா எனும் பகுதியில் பிராமணர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு அழகிய மகள் ஒருவள் இருந்தாள். அவளைக் கண்ட ஊர் மக்கள், உன் மகளை நம் மன்னர்தான் மணம் முடித்துக்கொள்வார் என்று அந்த பிராமணரிடம் ஆரூடம் சொல்லியிருக்கிறார்கள். மகிழ்ச்சியடைந்த அவர், தன் மகளை அழைத்துக்கொண்டு பாடலிபுத்திரம் சென்று பிந்துசாரரைச் சந்தித்திருக்கிறார். வாக்கு பலித்திருக்கிறது. பிந்துசாரர் அவர் மகளை மணந்துகொண்டார். அந்தப் பெண்ணுக்கும் ஓர் ஆரூடம் சொல்லப்பட்டிருக்கிறது - “உனக்குத் தங்கம் போல் இரு குழந்தைகள் பிறப்பார்கள். ஒருவன் சக்கரவர்த்தியாக மாறி, நான்கு கண்டங்களில் ஒன்றை ஆள்வான். இன்னொருவன் துறவியாக மாறி தன் மதக்கடமையை நிறைவேற்றுவான்.”

முந்தைய ஆரூடத்துக்கும் இந்த இரு ஆரூடங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். அசோகர் ஒரு சக்கரவர்த்தி என்பதால், அவர் பிறப்பைக் கணிக்கும் பொறுப்பை புத்தர் ஏற்கிறார். பிராமணருக்கு ஊர், பெயர் தெரியாத யாரோ ஆரூடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் மகளுக்கு ஆரூடம் சொன்னவர் யார் என்பதும் தெரியவில்லை. காரணம் இந்த இரு ஆரூடங்களும் ஒரு பெண் தொடர்பானவை. ஒரு பெண்ணுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் போதும் என்று பவுத்த மத இலக்கியங்கள் நினைத்திருக்கின்றன. பிராமணர் சாதாரண குடிமகன் என்பதால் அவர் பெயர் சொல்லப்படவில்லை.

அசோகரின் அம்மாவாக இருந்தாலும், பிந்துசாரரின் மனைவியாக இருந்தாலும் அவர் ஒரு சாமானியப் பெண் என்பதால், அவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை. வேறு இடங்களில் அவர் சுபத்ராங்கி என்றும் தர்மா என்றும் துர்தரா என்றும் அழைக்கப்படுகிறார். அசோகவதனத்தைப் பொறுத்தவரை அவர் ‘அம்மா’ மட்டுமே. ஆனால், வேறு எங்கும் கிடைக்காத ஒரு தகவல் இதில் இருக்கிறது. அசோகரின் அம்மா ‘சம்பா’ என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்னும் தகவல் அசோகவதனத்தில் மட்டுமே இருக்கிறது. பாடலிபுத்திரத்திலிருந்தும் கங்கையிலிருந்தும் சற்றுத் தள்ளி அமைந்துள்ள இடம் இது. இன்றைய பிஹாரில் உள்ள பாகல்புரில் சம்பாவின் இடிபாடுகளைக் காணமுடியும் என்கிறார் நயன்ஜோத் லாஹிரி.

அசோகரின் அம்மா வரும்வரை பிந்துசாரர் காத்திருக்கவில்லை. அவர் ஏற்கெனவே பல திருமணங்கள் செய்துகொண்டிருந்தார். புதிதாக வந்த அழகிய இளம்பெண்ணை, ஏற்கெனவே அந்தரப்புரத்தில் வசித்து வந்த பெண்கள் சிறிதும் விரும்பவில்லை. எனவே, இயன்றவரை அவளை பிந்துசாரரிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தினார்கள் என்கிறது அசோகவதனம். பிந்துசாரர் அவள்மீது நாட்டம் கொண்டுவிடமுடியாதபடி கவனமாகப் பார்த்துக்கொண்டார்களாம். திட்டத்தின் ஒருபகுதியாக அந்தப் பிராமணப் பெண்ணுக்கு முடி திருத்தும் பணியைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அவளும் அக்கலையை நேர்த்தியோடு கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

ஓர் ஆரூடம் சொல்லப்படுகிறது என்பதால், அது பலித்தாகவேண்டும் அல்லவா? ஒருநாள் அவள் பிந்துசாரரை அணுகி, உங்கள் கேசத்தைத் திருத்தட்டுமா என்று கேட்டிருக்கிறாள். அவரும் ஒப்புக்கொள்ள, மிக அழகாக பிந்துசாரரை அவள் உருமாற்றியிருக்கிறாள். மகிழ்ந்துபோன மன்னர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, நான் உங்களைக் காதலிக்க அனுமதிக்கவேண்டும் என்று பதிலளித்திருக்கிறாள் அவள். ஆனால், முடிதிருத்தும் தொழிலில் ஈடுபடும் ஒருவளை (அவர் அப்படித்தான் நம்பினாராம்) எப்படிக் காதலிப்பது என்று பிந்துசாரர் தயங்கினாராம். அவள் ஒரு பிராமணப் பெண் என்பது தெரியவந்ததும், குறிப்பாக அவளைப் பற்றிய ஆரூடத்தைக் கேள்விப்பட்டதும் தன் பிரதான மனைவியாக உயர்த்தியிருக்கிறார்.

குழந்தையும் பிறந்துவிட்டது. என்ன பெயர் வைக்கலாம் என்று அம்மாவை அணுகிக் கேட்டிருக்கிறார்கள். அரண்மனையில் கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்த சமயம் அது. எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்னும் மனநிறைவில் இருந்த அம்மா, ‘நான் இப்போது துக்கத்தின் சாயல்கூட இன்றி இருக்கிறேன். எனவே என் குழந்தைக்கு அசோகர் என்று பெயர் சூட்டுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ‘அசோகர்’ என்றால் ‘சோகம்’ அற்றவர். 2-வது குழந்தை பிறந்தபோதும் இதே மனநிலையில்தான் இருந்திருக்கிறார் என்பதால், சோகம் முற்றுப்பெற்றுவிட்டது என்னும் பொருள்பட ‘விதஷோகா’ என்று பெயரிட்டிருக்கிறார் அம்மா.

அசோகவதனத்திடமிருந்து நமக்குக் கிடைக்கும் அசோகரின் ஆரம்பகால வாழ்க்கை இவ்வளவுதான். ஆக மொத்தம், ஆட்சிக்கு வருவதற்கு முன்பான அவருடைய வாழ்வை நம்மால் தெரிந்துகொள்ளமுடியாது என்பதுதான் உண்மை. அதன்பின்னருமேகூட அவர் வாழ்வில் ஏகப்பட்ட இடைவெளிகளை நாம் காணப்போகிறோம். இத்தனைக்கும் இந்திய வரலாற்றில் ஓரளவு தரவுகள் அதிகம் கிடைக்கும் காலம் என்றால், அது மவுரியர் காலம்தான். மவுரியப் பேரரசில் ஒளி மிகுந்த காலம் என்றால், அது அசோகரின் ஆட்சிக்காலம்தான். அதிலேயே இவ்வளவு இடைவெளிகள்.

இருந்தாலும், அசோகவதனம் போன்ற பழங்கால பவுத்தப் பிரதிகள் தொடங்கி நவீன அகழாய்வுகள்வரை, சாத்தியமான அனைத்துத் துறைகளிலிருந்தும் தரவுகள் திரட்டியிருக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். கிடைக்காததை எண்ணி மயங்கிக் கிடக்காமல் கிடைத்ததைக் கொண்டு - அது எவ்வளவு சொற்பமாக இருந்தாலும் - அவர் வாழ்வையும் காலத்தையும் இயன்றவரை கட்டமைத்திருக்கிறார்கள். அந்த அசோகரைத்தான் நாம் இங்கே சந்திக்கப்போகிறோம்.

(விரியும்)

ஆதாரங்கள்:

The Legend of King Ashoka : A Study and Translation of the Asokavadana, John S. Strong, Motilal Banarsidass Publishers, Reprint 2008 (Originally published by Princeton University Press, 1985)

Ashoka in Ancient India, Nayanjot Lahiri, Harvard University Press, 2015

மருதன், எழுத்தாளர். ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘ஹிட்லர்’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’, ‘அகதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Related Stories

No stories found.