படித்தேன்… ரசித்தேன் - 4: அற்புதம் நிகழ்த்தும் ஆசிரியர்கள்

ஆசிரியர் மகேந்திர பாபு
ஆசிரியர் மகேந்திர பாபு

புத்தகம் வாசிப்பதை மகிழ்ச்சித் தருணமாகக் கருதும் கூட்டத்தில் ஒருவன் நான். என்னை மகிழ்ச்சி செய்த புத்தகங்களில் சில, கால்களை மடக்கி சம்மணம் போட்டு மனசுக்குள் உட்கார்ந்தும்விடுகின்றன. அப்படி ஒரு புத்தகத்தை அண்மையில் வாசித்தேன். ‘அன்பாசிரியர் - இருள் நீக்கிய அருள் விளக்குகள்’ எனும் புத்தகம்தான் அது. இப்புத்தகத்தை எழுதியவர் ரமணி பிரபா தேவி.

ஒரு தடவை ஜெயகாந்தன் சொன்னார்: “நல்ல புத்தகங்களுக்குச் சிறகுகள் உண்டு… அவை பறந்து போய்விடும்” என்று. அப்படித்தான் சிறகுகள் உள்ள ஒரு புத்தகமாக இதைக் கருதுகிறேன்.

இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தை வாசிக்க வாசிக்க பெருமையாக உள்ளது. தன்னலம் பாராது கற்பிக்கும் ஆசிரியர்களைப் பற்றித்தான் ரமணி பிரபா தேவி எழுதியிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூர் சொன்னார்: "ஒரு விளக்கால் ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்" என்று. இந்த உதாரணம் முழுக்கவும் ஆசிரியப் பெருமக்களுக்குத்தான் பொருந்தும். கற்பித்தல் எவ்வளவு பெரிய புனிதப் பணி! தான் உணர்ந்தது, கற்றது, பெற்றது, அனுபவித்தது, ரசித்தது என அனைத்தையும் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டு, அவர்களிடையே அறிவுப் பயிரை விளைவிக்கும் அறிவு விவசாயிகள்தானே ஆசிரியர்கள்! இதை முற்றும் உணர்ந்து… தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைக் கண்டு தெளிந்து… அவர்களைத் தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகம் செய்விக்கும் பணியை இப்புத்தகம் அருமையாக மேற்கொண்டுள்ளது.

போற்றத்தக்கவர்களாக… தன்னலம் பாராது உழைக்கும் ஆசிரியர்களைப் பற்றி வாசிக்கிறபோது, இந்தப் புனிதமான ஆசிரியர் தொழிலை எப்படி ஒரு தவத்தைப் போல இவர்கள் மேற்கொள்கின்றனர் என்பதை உணர்ந்து வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வியப்பு ஏன் ஏற்படுகிறது எனில், தமிழ்நாட்டில் பல ஆசிரியர்கள் தங்கள் சேவையைச் சிறப்பாகச் செய்வதில்லை என்பதனால்தான்.

“கல்வித் துறை மீதும் இன்றைய கற்பிப்பு முறை மீதும் அவ்வப்போது கசப்பான பல விமர்சனங்கள் வெளிவந்தபடியேஉள்ளன. அதிலும் மாணவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய ஆசிரியர்களைப் பற்றி வருத்தமூட்டும் செய்திகள் வரும்போது… அதன் மீதான வாதங்கள் மிகப்பெரிய அளவில் நடைபெறுவதும், ‘எங்க காலத்துல ஆசிரியர்கள் இப்படியா இருந்தாங்க… என்று இன்றைய ஆசிரியர்கள் மீது பொத்தாம்பொதுவான கரும்புள்ளியைக் குத்துவதும் தொடர்வதைப் பார்க்கிறோம்…” என்று முன்னுரையில் ரமணி பிரபா தேவி எழுதியிருப்பது ஹால்மார்க் நிஜம்.

சகாயம் ஐஏஎஸ் ஆட்சியராக இருந்தபோது, மதுரையில் இருக்கும் 50 பள்ளி விடுதிகளில், மகேந்திர பாபு காப்பாளராக இருக்கும் விடுதிக்கு ‘முன்மாதிரி விடுதி’ எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிற தொல்லியல் துறையின் மேனாள் ஆணையர் த.உதயசந்திரன், “தமிழ், கணிதம், தாவரவியல் என நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் பிடித்துப்போய் இருக்கும். கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அந்தக் குறிப்பிட்ட பாடத்தை நடத்திய ஆசிரியர், நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்திருப்பார். அந்த ஆசிரியர் நமக்குப் பாடம் மட்டும் நடத்தியிருக்க மாட்டார். நம் வாழ்வின் முன்மாதிரி நபராக, நம் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் குடும்ப உறுப்பினராக, வழிகாட்டும் ஆலோசகராக விளங்கியிருப்பார்” என்று குறிப்பிட்டிருப்பது நல்லாசிரியருக்கான இலக்கணம்.

இப்புத்தகத்தில் – அரசுத் தொடக்கப் பள்ளியை வண்ணக் கலைக்கூடமாக மாற்றிய ஆசிரியர், 5 லட்சம் ரூபாய் சொந்தப் பணத்தைச் செலவுசெய்து பள்ளிக்கூடத்தை நவீன வசதிகளுடன் மாற்றியமைத்த ஆசிரியை, குழந்தைகளைக் கொண்டாடி குடும்பச் சூழல் அறிந்து கற்பிக்கும் ஆசிரியை உள்ளிட்ட 50 அன்பாசிரியர்களைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறார் ரமணி பிரபா தேவி.

இந்நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஆசிரியர்களில், ஒரே ஒருவரைப் பற்றிய நூலாசிரியரின் வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

* * *

தூத்துக்குடி மாவட்டம், பொன்னையாபுரம் எனும் ஊரைச் சேர்ந்தவர் – மகேந்திர பாபு. தற்போது – மதுரை மாவட்டத்தில் உள்ள இளமனூரில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத் துறையின்கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுபவர். உரைநடைகளையும், செய்யுள்களையும் மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் நாடகமாகவும், கதை வடிவத்திலும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்து… அதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறார்.

மேலும், இப்பள்ளியின் விடுதிக் காப்பாளராகவும் இருந்துவரும் மகேந்திர பாபு… கல்விக்குழு, இறை வழிபாட்டுக் குழு, கலைக் குழு, தோட்டக் குழு என விடுதி மாணவர்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து அவர்களை எல்லாம் மனநிறைவோடு அவற்றில் ஈடுபட வைக்கிறார். தோட்டக் குழுவின் மூலம் பள்ளி வளாகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட செடிகளை நட்டுள்ளார். மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாக ‘வளர்பிறை’ எனும் கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தப்பட்டது.

சகாயம் ஐஏஎஸ் ஆட்சியராக இருந்தபோது, மதுரையில் இருக்கும் 50 பள்ளி விடுதிகளில், மகேந்திர பாபு காப்பாளராக இருக்கும் விடுதிக்கு ‘முன்மாதிரி விடுதி’ எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 2013-ல் தேசிய பசுமைப் படையின் ஒருங்கிணைப்பாளரானார் மகேந்திர பாபு. இதன் சீரிய செயல்பாடாக, ‘கலாம் மூலிகைத் தோட்டம்’, ’மாணவர் பூங்கா’ ஆகியவை இவரால் பள்ளியில் உருவாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ‘என் வீடு என் மரம்’ என்ற திட்டத்தை ஆரம்பித்து, யார் வீட்டில் நன்றாக மரம் வளர்க்கிறார்களோ, அவர்களுக்குப் பரிசுகளை வழங்கிவருகிறார்.

மேலும், ’பசுமைச் சாலை’ என்கிற திட்டத்தின் மூலம் சாலை ஓரங்களில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டார் மகேந்திர பாபு. ‘மரமும் மனிதமும்’ என்கிற ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இதில் இருக்கும் 12 பாடல்களும் சமூக அவலங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பாடுபொருளாய் கொண்டிருக்கின்றன. தன்னலம்பாராத இந்தச் சீரிய பணிகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றிருக்கிற அன்பாசிரியர் மகேந்திர பாபு, “எங்கும் கல்விச் செல்வமும் பசுமைச் செல்வமும் பெருக தொடர்ந்து உழைப்பதுதான் எனது வேள்வி” என்கிறார். இவரது இந்த அறப் பயணத்தில் இவரது மனைவி சங்கீதாவும், குழந்தைகள் சகானாவும், சஞ்சனாவும் துணை நிற்கிறார்கள் என்பதைச் சொல்லும்போது பெருமிதம் படர்கிறது இவரது முகத்தில்.

* * *

தன்னுடைய நகைகளை அடகுவைத்து பள்ளிக் கட்டிடம் எழுப்பிய ஆசிரியை விஜயலட்சுமி, மாணவர்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த ஆசிரியை மகாலட்சுமி, 16 ஆண்டுகளுக்கு முன்னாலேயே காலை உணவு வழங்கி கல்வியை அறிமுகப்படுத்திய ஆசிரியர் கருப்பையன், மாணவர்களுக்காகக் கடன் வாங்கி கல்வி புகட்டிய ஆசிரியர் கிருஷ்ணவேணி, 250-க்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகளை உருவாக்கிய ஆசிரியர் தனபால், அரசுப் பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச புது உத்தியை உருவாக்கிய ஆசிரியர் சிவக்குமார்... என இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தனக்கே உரித்தான வகையில் படிப்பவர்களை பிரமிக்க வைப்பது இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு!

நூல்: அன்பாசிரியர் – இருள் நீக்கிய அருள் விளக்குகள்

ஆசிரியர்: க.சே.ரமணி பிரபா தேவி

வெளியீடு: இந்து தமிழ் திசை

124. வாலாஜா சாலை,

அண்ணா சாலை

சென்னை – 600 002

பக்கங்கள்: 216

விலை ரூ: 200

போன்: 74012 96562

* * *

(புதன்கிழமை சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in