படித்தேன்… ரசித்தேன்- 5: கி.ரா-வின் சொற்களில் தெறிக்கும் தேங்காத்தண்ணி ருசி!

படித்தேன்… ரசித்தேன்- 5: கி.ரா-வின் சொற்களில் தெறிக்கும் தேங்காத்தண்ணி ருசி!

கி.ரா-வின் கதைகளை வாசிப்பது, எப்போதும் எனக்குக் கிணற்றுத் தண்ணீரை மொண்டு குளிப்பது மாதிரி. குளிக்கக் குளிக்க அலுப்பு தீரும். ஆனால், ஆசை தீரவே தீராது. அவரது 'கதவு' கதையை முதன்முதலில் வாசித்தபோது ஏற்பட்ட ருசி, இன்னும் தீர்ந்தபாடில்லை. அம்புட்டு ருசி.

அவருடைய கதையொன்றில் ஒரு பெரிய மனுசர் வருவார். ஊருக்குள்ளாற அந்தப் ‘பெரிய' மனுசருக்கு நெல்முனை அளவுகூட மரியாதி இருக்காது என்பதற்கு கி.ரா ஒரு உவமானம் போட்டிருப்பார். 'அந்த மனுசனக் கண்டா பேளுறவக்கூட எந்திரிக்க மாட்டா' என்கிற அந்த உவமானம், இன்னமும் என் உள்ளுக்குள்ள சிரிச்சுக்கிட்டே கெடக்கு.

என் தாத்தாவுக்குப் பக்கத்துல உக்காந்துக்கிட்டு, அவரோட காலை அமுக்கிவிட்டுக்கிட்டே, அவரு சொல்ற கதையைக் கேட்கிற மாதிரி இருந்தது கி.ரா-வோட இந்த மிச்சக் கதைகளைப் படித்தபோது.

மீராவின் அன்னம் பதிப்பகம் நறுவிசா வடிவமைச்சு வெளியிட்டுள்ள இத்தொகுப்பில்... கி. ரா-வை, புதுவை இளவேனில் தன்னோட மூணாவது கண்ணாலப் பார்த்துப் பார்த்து எடுத்த புகைப்படங்களைப் பக்கத்துக்குப் பக்கம் வெச்சி அசத்தியிருக்காங்க.

தமிழையும் தமிழர்களையும் நேசிக்கிற எல்லோரும் அவசியம் ’மிச்சக் கதைகள்’ புத்தகத்தை வாசிக்கணும். இப்புத்தகத்தில் எடுத்த எடுப்புல கி.ரா-வைப் பற்றி பக்தவத்சல பாரதி, ‘‘ஒரு நூறு ஆண்டுகளை நெருங்கிவிட்டார் கி.ரா. காலத்தின் அற்புதம் அவர். இந்தக் கதைசொல்லியின் `மிச்சக் கதைகள்' வைரம் பாய்ந்தவை. இதில் காலமும் கலையும் கைகோத்துள்ளன. தத்துவமும் வாழ்க்கையும் பிணைந்துள்ளன. கி.ரா எப்போதுமே தரிசனங்களைக் காட்டுபவர். கிராவின் கதைகள் அவரது அகவய அனுபவங்கள். தமிழின் உச்சம் அது. கரிசல் காட்டைக் கலங்கரை விளக்கம் ஆக்கியவர். கி.ரா ஐம்பதுகளின் இறுதியில் எழுவானம் கண்டவர். மிச்சக் கதைகளில் உச்சிவானம் காண்கிறார். இதில் அவரது உன்னதங்கள் மின்னலாய் மின்னுகின்றன. காணாத கண்திறப்புகள் கண்களில் விரிகின்றன. தமிழ்ச் சொல்மரபின் வைரம் இப்போது வைடூரியம் ஆகியுள்ளது’’ என்று சொல்லியிருப்பது அவ்வளவு தித்திப்பு.

இந்தப் புத்தகத்தில் இருக்கும் 19 கதைங்களும் தேன் சொட்டு. அதில் ‘எந்த மூலை’ என்கிற ஒரே ஒரு கதையை... கி.ரா எழுதுன வடிவுலேயே உங்களோட பகிர்ந்துக்கிறேன். ஒரு பிளேட் பிரியாணிக்கு ஒரு பாசுமதி சோறு பதம்.

* * *

அடுப்பங்கூடத்துல தேங்கா தட்டுற சத்தங்கேட்டாப் போதும். அசந்து தூங்கிட்டிருந்தாலும் எந்திரிச்சிருவா. தேங்காத்தண்ணி அவளுக்கு எளநி மாதிரிதாம்.

உடையாமல் வம்பு பண்ணுது என்றால் இவளே எந்திரிச்சிருவா.

அதெ அப்பிடி பிடிக்கப்படாது என்று, இவளே கையிலெ தேங்காய வச்சிக் காமிப்பா.

பெருவிரலாலெ தேங்காக் கண்ணெப் பொத்திக்கொ. இது முக்கியம். இந்த நரம்பு புடைப்பாப் போகுதில்லெ. அதுல தட்டணும் அடி. லேசா அடிச்சாலுங்கூட நல்லா கீறல் விட்டுரும். அந்தக் கீறலுக்குள்ளெ மேஜெக் சுத்தியோட நுனியெவிட்டு, தம்ளருக்கு மேலெ கத்தியெக் குத்தி அகலிச்சா ‘தோ வந்தேன்னு’ எறங்கிடும் தேங்காத்தண்ணி.

தட்றதுக்கு முன்னாடி குலுக்கிப் பாக்கணும். எவ்வளவு தண்ணி இருக்கும்னு சொல்லீறலாம். அதுக்குத்தக்கன பெரிய தம்ளரா, சின்னத்தம்ளர் போதுமான்னு தெரிஞ்சிரும்.

சில தேங்காத்தண்ணி வெறியர்கள் அவர்களுடைய வாயிக்கு நேரா தண்ணி விழும்படி வச்சி சொட்டுக்கூட சிந்தாமல் குடித்துவிடுவார்கள்.

தம்ளர் நிறைஞ்சதும் எங்களுக்கு நேரா வரிசையா நீட்டுவாள். குடிக்கணும்னு ஆசை இருந்தாலும் அசைத்துவிடுவோம்.

தண்ணீரைக் குடித்துப் பார்த்து தேங்காயின் ருசி எப்படியிருக்கும் என்று சொல்லிவிடுவாள்.

கோவில்களில் தேங்காய் தண்ணீரைத் தரையில் விடுவது இவளுக்குப் பிடிக்காது. தேங்காய் கடையில் தண்ணீரைக் கீழே விடாமல், கழிவுத் தண்ணீர் வாளியில் விடுவார்கள். கடைக்காரர் தெரிந்தவராக இருந்தால் தேங்காய்ச் சிரட்டையில் பிடித்து வாங்கிக் குடித்துவிடுவாள். தேங்காய்த்தண்ணி வீணாகக் கூடாது அவளுக்கு.

ஒருநாள் அவளை நாங்கள் பண்ணுகிற கோட்டா அதிகமோ என்று எங்கள் அப்பாப் பாட்டிக்கு தோன்றிவிட்டதோ என்னமோ, வேண்டாம் வேண்டாம் என்று கையை வேகமாய் அசைத்தாள். பாட்டியை மீற முடியாது நாங்கள். அவர் எங்க வீட்டின் உச்சமன்ற நீதிபதி. அடங்கிவிட்டோம்.

இவள் இல்லாத நேரத்தில் ஸ்ரீவரையும் (பெரிய தங்கை) நானும் இருந்த நேரத்தில் பாட்டியிடம் கேட்டேன்.

"குழந்தைக்குப் பால் தரும் அம்மா அவள். அவர்களுக்கு என்ன குடிக்க வேணுமென்று தோன்றுமோ அதைக் கொடுத்துவிட வேணும்.

தேங்காத்தண்ணி கிடைக்காத விலை உயர்ந்த பானமில்லையே.

அவள் நம்ம வீட்டுக்கு விருப்பப்பட்டு வந்த செல்ல மருமகள். அவளை ரொம்பவும்தான் கேலி பண்ண வேண்டாம்.

நானும்கூட இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தவள்தான் என்று பாட்டி சொன்னபோது, எனக்கு என்ன சொல்ல என்று தெரியலை.

இவளுக்கு ஏம் இளநீரே வரவழைத்துத் தரக்கூடாது என்று நினைத்தேன்.

செலவெல்லாம் கூடாது என்று கணவதி கறாராக மறுத்துவிட்டாள்.

எங்கேயாவது தேங்காய் உடைக்கும் அந்த சத்தம் இப்பவும் கேட்க நேர்ந்தால் என் ஞாபகத்தில் கணவதி வருகிறாள். தேங்காய்ப் பால் எடுத்து, பாசிப் பருப்புப் பாயாசம் செய்து எங்கள் ‘தரப்பு’ கூட்டத்துக்கு வருசாந்திரம் கணவதி தவறாமல் கொண்டுவருவாள்.

பிரியமாகச் சாப்பிடுவார்கள் இலக்கிய அன்பர்கள். தேங்காய்ப் பாயாசத்துக்குக் கடிச்சிக்கிட உளுந்துவடை.

வீட்டு வாசப்படியில் அம்பை எப்பவாவது வந்து காலணி கழற்றவும் இவள் வடைக்கு உளுந்தைப் போடவும் சரியாக இருக்கும்.

“என்னா செஞ்சிக்கிட்டிருக்கீகெ’’ என்று அம்பை உள்ளே வருவதற்கும்,

“உளுந்து நனையப் போட்டுக்கிட்டிருக்கிறேம்’’ என்று சொல்லிச் சத்தமாகச் சிரிக்கவும் சரியாக இருக்கும்.

“வடை மட்டுந்தானா?’’

“பாயாசமும் உண்டெ!’’

ஆனந்தமாகச் சிரிப்பார்கள்.

எல்லாமும் போன மூலை தெரியவில்லை.

* * *

நூல்: மிச்சக் கதைகள்

ஆசிரியர்: கி.ராஜநாராயணன்

வெளியீடு: அன்னம்

மனை எண்: 1. நிர்மலா நகர்

தஞ்சாவூர் – 613 007

கைபேசி: 99430 59371

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in