படித்தேன்… ரசித்தேன்-2

சினிமா எனும் அற்புத மொழி குறித்த நூல்
படித்தேன்… ரசித்தேன்-2

சினிமாவின் நுணுக்கங்கள், அதன் வளர்ச்சி, தொழில்நுட்பத்தால் சினிமா சென்றடைந்திருக்கும் இலக்குகள் பற்றி அழகாக ஆதாரங்களோடு சொல்லும் புத்தகம் ‘சினிமா ஓர் அற்புத மொழி'.

பேல பெலாஸ் என்பவர் ஹங்கேரியைச் சேர்ந்த திரைக்கலை விமர்சகர். முதன்முதலாக ‘சினிமா கோட்பாடு’ பற்றி எழுதியவர். நல்ல சினிமாவை ரசிக்கும் ரசனை வளர வேண்டுமானால், சினிமாவையும், அதன் அழகியலையும் இளைய தலைமுறைக்குக் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பேல பெலாஸ், தனது சரித்திரப் பேராசிரிய நண்பர் ஒருவருக்கு, 60 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா பற்றிய தனது கருத்துகளைப் பதிவுசெய்து ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த நீண்ட கடிதத்தில் பதிவு செய்கிறார் பேல பெலாஸ் இப்படி:

“1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களின் அறிவியல் குழந்தையாகப் பிறந்த சினிமா என்கிற அந்த உன்னதக் கலைக்கு மனிதர்கள் மத்தியில் தொடக்கத்தில் உரிய மரியாதை கிடைக்கவில்லை. அந்தச் சகோதரர்கள் மக்கள் மத்தியில் ஒளிரும் பிம்பங்களை முதன்முதலாகக் காட்டியபோது ஒரு புத்தம் புதிய கலை பிறந்தது. அது மட்டுமல்ல; மனித மூளையில் உணர்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஒரு புதிய அமைப்பும் தோன்றியது.

பேராசிரிய நண்பரே… உங்கள் மனைவியோடு இணைந்து இன்றைக்குத் திரைப்படங்களைப் பார்க்கிறீர்கள். அப்படி தாங்கள் பார்த்த திரைப்படங்களைப் பற்றி தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறீர்கள். ஆனால் இப்போது நீங்கள் நுட்பமாகப் பார்த்து, ரசித்து மகிழ்ந்து கொண்டாடும் திரைப்படங்களை… நீங்களே 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருந்தால், இப்படி புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது” என்று இக்கடிதத்தில் எழுதிச் செல்கிற பேல பெலாஸ், மேலும் தொடர்கிறார்.

“உலகளவில் சினிமாவில் முதன்முதலாக குளோஸ் -அப் காட்சிகளை எடுத்தவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிரிஃபித். இவர் தனது கற்பனையை பயன்படுத்தி, நடிப்பவரின் கண்கள், கைகள், கால்கள் மற்றும் உடல் உறுப்புகளைத் தனித்தனியாக வெண்திரை முழுவதும் காண்பித்து அசத்தியவர்.

இந்த குளோஸ்அப் காட்சிகளைப் பற்றி விவரிக்கும் பேல பெலாஸ் எழுதுகிறார் - "சைபீரியாவில் இருந்து வந்திருந்த ஒரு விவசாயப் பெண்ணை மாஸ்கோவில் நான் சந்தித்தேன். சினிமா என்றால் என்னவென்றே அறியாத அந்தப் பெண்ணை நான் ஒரு சினிமாவைப் பார்க்க வைத்தேன். அந்த சினிமாவைப் பார்த்த அந்தப் பெண், பெரிய அளவில் திகில் அடைந்திருந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள்: அப்பப்பா என்ன பயங்கரம்! மனிதர்கள் வெட்டப்பட்டு துண்டு துண்டாகக் கிடக்கிறார்கள். அது மட்டுமல்ல வெட்டப்பட்ட தலை பேசுகிறது, சிரிக்கிறது, அழுகிறது, ஆடுகிறது, பாடுகிறது என்று அச்சத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டாள். முதன்முதலாக அவள் பார்த்த அந்த சினிமாவில் இடம்பெற்றிருந்த குளோஸ் அப் காட்சிகளைத்தான் அவள் அப்படிச் சொன்னாள்.

ஒரு திரைப்படக் காட்சி. ரயில் நிலையமொன்றில் புறப்படத் தயாராக இருக்கும் ரயிலில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். சார்லி சாப்ளினால் பெரிதும் நேசிக்கப்பட்ட அந்தப் பெண்ணைத் தேடி.. அவர் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து, பிளாட்பாரத்தை நோக்கி ஓடுவார். அப்போது திரையில் ரசிகர்களின் கண் முன்னால் விரிவது பிளாட்பாரமோ, தண்டவாளமோ, ரயிலோ அல்ல. அந்தப் பரபரப்பான நேரத்தில், சார்லி சாப்ளினுடைய குளோஸ் அப் முகம்தான் திரை முழுக்க விரிந்திருக்கும். அக்காட்சியில் அவருடைய கண்கள் எதையோ தேடுவது, அவரது முகத்தில் ஒளியும் இருளுமாக மாறி மாறி கடந்து செல்லும். பெர்லினில் இந்தத் திரைப்படம் முதன்முதலாகத் திரையிடப்பட்டபோது, ஒரு சிலர் மட்டும்தான் இந்த உன்னதமான இக்காட்சியின் உணர்வையும் அர்த்தத்தையும் உள்ளது உள்ளவாறு புரிந்துகொண்டார்கள்.”

பேல பெலாஸின் நீண்ட இக்கடிதம் இப்புத்தகத்தின் அடர்த்தியை இன்னும் கூடுதலாக்குகிறது.

ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும், எவ்விதம் ஒரு திரைப்படத்தை அணுக வேண்டும் என்று புரிந்துகொள்ள நுட்பமான நிறைய செய்திகளைக் கற்றுத் தரும் புத்தகம் இது.

இப்புத்தகத்தின் ஆசிரியர் எம்.சிவகுமார் ஆழ்ந்த சினிமா ரசனையாளர் என்பதை, சினிமா எனும் உன்னதக் கலையைப் பற்றி இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிற செய்திகளின் ஆழமும் அழகுமே வாசிப்பவரை உணர வைத்துவிடுகின்றன. “ஹாலிவுட் திரைப்படங்கள் சினிமாவை உலகச் சந்தைக்கான மொழியாக மாற்றியிருக்கின்றன. ஆனால், உலகம் முழுமைக்குமான மொழியாக மாற்றவில்லை. அதைச் செய்தது, உலகத் தரத்திலான திரைப்படங்களை எடுத்த பல்வேறு நாட்டு இயக்குநர்கள்தான்” என்கிற நூலாசிரியர், ‘சினிமா தோன்றி வெற்றிகரமாக நடைபயிலத் தொடங்கிய தொடக்க காலங்களில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மதத் தலைவர்கள், சினிமாவைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டார்கள். ஆனால், நாமோ கண்களைத் திறந்து சினிமாவைப் பார்த்துக்கொண்டே சினிமாவைப் பார்க்காமல் இருக்கிறோம்” என்று ஆதங்கப்படுகிறார்.

ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும், எவ்விதம் ஒரு திரைப்படத்தை அணுக வேண்டும் என்று புரிந்துகொள்ள நுட்பமான நிறைய செய்திகளைக் கற்றுத் தரும் இப்புத்தகம், வளரும் திரைத் துறைப் படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல; சாதாரண வாசகனுக்கும் புத்தியின் உள்ளே சென்று உட்கார வைக்கிறது.

“சினிமா பார்ப்பதில் இன்று நாம் அனைவரும் 4-வது தலைமுறை. சினிமா எனபது நமக்கு நன்றாகப் பழகிவிட்டது. நம் ஞாபகப் பதிவின் ஆழத்துக்கும் சென்றுவிட்டது. 24 மணி நேரமும் ஒலி - ஒளியாய், பிம்பங்களாய் நம்மைச் சுற்றி ஆறுபோல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதில் இன்று நாம் மிக எளிதாக நீந்துகிறோம். அதன் வெள்ளப்பெருக்கு நமக்குப் புதிதாக இல்லை. ஆனாலும், பல நேரங்களில் இந்த ஆற்றின் அழுக்கும், அவலமும் நம்மை மூச்சுமுட்டத்தான் செய்கின்றன” என்று ஆசிரியர் எழுதும்போது, சினிமாவை ரசிப்பதில் நாம் என்ன மாதிரியாக இருக்கிறோம் என்று புரிந்துபோகிறது.

“எங்கே சினிமா மொழியை மக்கள் புரிந்துகொள்ளவில்லையோ அல்லது தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்களோ… அங்கே சினிமாவின் தரம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்பதற்கு, தமிழ் சினிமாவின் இன்றைய நிலை நமக்கு அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. மக்கள் மட்டுமல்லாமல் படைப்பாளிகள்தான் அவசியம் சினிமா மொழியை நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் இங்கே அவசியம் சொல்லியாக வேண்டியுள்ளது” என்று தமிழ் சினிமாவின் தரத்தையும் எடைபோடும் ஆசிரியர், “இன்று பல இயக்குநர்கள் தங்களின் முதல் படங்களில் தொழில்நுட்பத்துக்கும், கேமாராவுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள். தங்கள் கதை மீதும், சினிமா மொழி மீதும் அவர்களுக்கு நம்பிக்கை குறைவாக இருப்பதுதான் அதற்குக் காரணம்’ என்று நிஜத்தை முச்சந்தியில் போட்டு உடைக்கிறார்.

நல்ல சினிமாவை ரசிக்கத் தூண்டும் ரசனைமிக்க புத்தகம் இது.


நூல்: சினிமா ஓர் அற்புத மொழி

ஆசிரியர்: எம்.சிவகுமார்

வெளியீடு: சவுத் விஷன் புக்ஸ்

491, ஒமேகா பிளாட்ஸ்,

4-ம் இணைப்புச் சாலை,

சதாசிவம் நகர்,

சென்னை - 600 091.

போன்: 9445318520


(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in