இதே தேதி... முக்கியச் செய்தி: பட்சிகளின் ரட்சகன் சாலிம் அலி!

சாலிம் அலி
சாலிம் அலி

இந்தியாவில் பறவையியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் சாலிம் அலி. ஆரம்பத்தில் பறவை வேட்டையில் ஈடுபாடு கொண்டிருந்த சிறுவனாக இருந்த சாலிம் அலி, பின்னாட்களில் பறவைகளின் காவலனாக மாறியது சுவாரசியமான வரலாறு.

1896 நவம்பர் 12-ல் மும்பையில் உள்ள ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் சாலிம் அலி. 4 அண்ணன்கள், 4 அக்காக்களுடன் பிறந்த சாலிம் அலி குடும்பத்தில் கடைக்குட்டி. அவரது குழந்தைப் பருவத்திலேயே அவரது தந்தையும் தாயும் அடுத்தடுத்து மரணமடைந்தார்கள். தனது தாய்வழி மாமாவான அமீருதின் தையப்ஜியின் வீட்டில்தான் சாலிம் அலி வளர்ந்தார். அப்போது துப்பாக்கிச்சுடும் விளையாட்டில் ஆர்வம் பிறந்தது. பல போட்டிகளில் கலந்துகொண்டார்.

துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் கொண்டிருந்த சாலிம் அலி, மஞ்சள் தொண்டைக் குருவி ஒன்றைக் குறிபார்த்து சுட்டுக்கொன்றார். எனினும், அழகான அந்தப் பறவையைக் கொன்றுவிட்டோமே எனும் குற்றவுணர்ச்சி அவருக்கு வந்தது.

அந்தக் காலகட்டத்தில் அமீருதின் தையப்ஜி, மும்பையில் உள்ள இயற்கை வரலாற்றுக் கழகத்தில் உறுப்பினராக இருந்தார். அவருடன் அங்கு சென்றது சாலிம் அலிக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பதப்படுத்தப்பட்ட நிலையில் பல வகையான பறவைகளையும் விலங்குகளையும் அவர் பார்த்தார்.

இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலாளராக இருந்த வால்டர் எஸ். மில்லார்டின் அறிமுகம் கிடைத்தது. பறவைகள் தொடர்பான தனது சந்தேகங்களை அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டார் சாலிம் அலி. தினமும் அங்கு சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டார். அவரது ஆர்வத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மில்லார்டு, ‘காமன் பேர்ட்ஸ் ஆஃப் பாம்பே’ போன்ற அரிய புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் செய்தார். பறவைகளின் உடல்களைச் சேகரித்து அவற்றைப் பதப்படுத்தி பராமரிப்பது குறித்தும் கற்றுக்கொடுத்தார்.

வால்டர் எஸ். மில்லார்டு
வால்டர் எஸ். மில்லார்டு

மும்பையில் பள்ளிக் கல்வி பயின்றார். நல்ல புத்திக்கூர்மை கொண்டவர் என்றாலும், தலைவலியால் அவதிப்பட்டு வந்ததால் பள்ளிக்குச் சரியாக செல்ல முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். மும்பையின் செயின்ட் சேவியர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அங்கும் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. பின்னர் பர்மாவில் (இன்றைய மியான்மர்) அவரது குடும்பத்தினர் நிர்வகித்துவந்த டங்ஸ்டன் சுரங்கத்தைக் கவனித்துக்கொள்ள அங்கு அனுப்பப்பட்டார். வளமான வனப் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் தங்கியிருந்து பணிகளைக் கவனித்துக்கொண்டவருக்கு அந்தச் சூழலே பெரும் திறப்பாக அமைந்தது. பல அரிய வகை பறவைகளைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டார். அப்போதும் பறவை வேட்டையை அவர் தொடர்ந்ததாகத் தெரிகிறது. வேட்டை இலக்கியப் படைப்புகளை வாசிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

எதெல்பெர்ட் பிளாட்டர்
எதெல்பெர்ட் பிளாட்டர்

1917-ல் இந்தியா திரும்பினார். கல்லூரிப் படிப்பைத் தொடர முடிவெடுத்தவர், தாவர் வணிகவியல் கல்லூரியில் பயின்றார். எனினும், பறவைகள் தொடர்பான அவரது ஆர்வத்தைக் கவனித்த எதெல்பெர்ட் பிளாட்டர் எனும் பேராசிரியர், தான் பணிபுரிந்த செயின்ட் சேவியர் கல்லூரியிலேயே விலங்கியல் படிப்பைத் தொடர சாலிம் அலிக்கு ஊக்கம் தந்தார். அதாவது, காலையில் வணிகவியல் மதியம் விலங்கியல் எனப் படித்துவந்தார் சாலிம் அலி. அந்தக் காலகட்டத்தில் தனது உறவினரான தெஹ்மினா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

விலங்கியலில் முறையான பட்டப்படிப்பு இல்லாததால், இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு சாலிம் அலிக்குக் கிடைக்கவில்லை. பின்னர், மும்பையில் உள்ள வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகத்தில் வழிகாட்டி விரிவுரையாளர் பணி கிடைத்தது. அங்கு இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய சாலிம் அலி, மேலும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் உந்தித்தள்ள, விடுப்பு எடுத்துக்கொண்டு ஜெர்மனிக்குப் புறப்பட்டார். பெர்லினின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பேராசிரியர் இர்வின் ஸ்ட்ரெஸ்மேனின் வழிகாட்டுதலுடன் பறவையியலின் நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார்.

எனினும், இந்தியா திரும்பியபோது, போதிய நிதி இல்லாததால் வழிகாட்டி விரிவுரையாளர் பணி ரத்துசெய்யப்பட்டதை அறிந்தார். எனினும், இந்திய சமஸ்தானங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தபோது அதில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தெஹ்மினா
தெஹ்மினா

தனது மனைவி தெஹ்மினாவை அழைத்துக்கொண்டு வனப் பகுதிகளுக்குச் சென்று முகாமிட்டார். அந்தப் பயணத்தில் கிடைத்த உற்சாகத்தில் தெஹ்மினாவும் பறவைகள் குறித்த ஆய்வில் ஆர்வம் காட்டினார். பறவைகள் குறித்து சலீல் அலி எடுத்த குறிப்புகளை நேர்த்தியாக எழுதி தொகுத்தவர் தெஹ்மினா தான். இந்த அனுபவங்களைத் தொகுத்து சாலிம் அலி எழுதிய ‘தி புக் ஆஃப் இந்தியன் பேர்ட்ஸ்’ எனும் புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த வாழ்க்கைத் துணையாக சாலிம் அலிக்குக் கிடைத்த தெஹ்மினா நீண்டகாலம் வாழ்வில்லை. 1939-ல் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் உயிரிழந்தார்.

அதன் பின்னர் தனியராகவே வாழ்ந்த சாலிம் அலி, தொடர்ந்து பறவையியல் ஆய்வுகளை மேற்கொண்டார் பல புத்தகங்களை எழுதினார். எஸ். டிலியான் ரிப்ளே எனும் அமெரிக்கருடன் இணைந்து சாலிம் அலி எழுதிய ‘ஹேண்ட்புக் ஆஃப் தி பேர்ட்ஸ் ஆஃப் இந்தியா அண்ட் பாகிஸ்தான்’ எனும் புத்தகம் மிகப் புகழ்பெற்றது. 10 தொகுதிகளாக வெளிவந்த அந்தப் புத்தகம் இன்றைக்கும் பறவையியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மிக முக்கியமான வழிகாட்டியாகத் திகழ்கிறது.

இந்தியாவின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகப் போற்றப்பட்டார். 1958-ல் பத்ம பூஷண் விருதும், 1976-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கெளரவித்தது மத்திய அரசு. 1985-ல் ராஜீவ் காந்தி அரசு, சாலிம் அலியை மாநிலங்களவை உறுப்பினராக்கியது.

இந்தியாவில் பறவையியல் ஆய்வில் முன்னோடியாக விளங்கிய சாலிம் அலி, பல் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.

1987 ஜூன் 20-ல், தனது 90-வது வயதில் சாலிம் அலி காலமானார்.

பால்யத்தில் பறவைகளை வேட்டையாடுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்த அவர், பின்னாட்களில் பறவை வேட்டையைக் கண்டித்தார். அதேசமயம், பறவையியல் ஆய்வில், அநாவசியமாக உணர்வுசார்ந்து சிந்திப்பதைக் காட்டிலும் நடைமுறை சார்ந்து இயங்குவதையே விரும்பினார். பறவையியல் ஆய்வுக்காக ஒரு சில பறவைகளைக் கொன்று அவற்றைப் பதப்படுத்தி பராமரிப்பதில் தவறில்லை என்று கருதினார். பறவைகள் குறித்த முழுமையான ஆய்வுப் பார்வை இருந்தால்தான் அவற்றைக் காப்பாற்ற முடியும் என்பது அவரது நம்பிக்கை. அதனால்தான், அவர் இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்படுகிறார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in