ஆறிலிருந்து எழுபது வரை : ரஜினி சரிதம் - 68

எம்ஜிஆருக்குப் பதிலாக ரஜினி!
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில்...
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில்...படம் உதவி: ஞானம்

ஏவி.எம் புரொடெக்‌ஷன்ஸ், தேவர் பிலிம்ஸ், விஜயா புரோடெக்‌ஷன்ஸ் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள், எம்ஜிஆர் முதல்வர் ஆனபிறகு அவரது திரையுலக சிம்மாசனத்தில் ரஜினியை அமர்த்திப் பார்த்தார்கள். இந்த மூன்று நிறுவனங்களுமே ரஜினியை வைத்து வரிசையாகப் படங்களைத் தயாரித்தார்கள். இவர்களைத் தாண்டி, எம்ஜிஆருக்கு ஏற்ற வகையில் கதைகளை எழுதிய பலரும், அவர் நடிக்க மறுத்தபோது அக்கதைகளில் ரஜினியை வைத்து படமாக்க உறுதியாக முடிவெடுத்தார்கள்.

அப்படி ‘அன்புள்ள எம்ஜிஆர்’ என்ற தலைப்பில் உருவாக இருந்த படம், அவரால் நடிக்க முடியாத சூழல் உருவானதால் அப்படியே ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ ஆக மாறியது. ரஜினி நடிப்பில் உருவான அந்தப்படம் 100 நாட்கள் ஓடி வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் ரஜினி, ரஜினியாகவே தோன்றினார். படத்தை உருவாக்கிய இரண்டு ஆளுமைகளும் பத்திரிகைத் துறையிலிருந்து சினிமாவில் கால் பாதித்தவர்கள். ஒருவர், மூத்த பத்திரிகையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அழகன் தமிழ்மணி. மற்றொருவர் பத்திரிகையாளராக இருந்து சிறுகதை எழுத்தாளராக உயர்ந்து பின்னர், கதை, வசனகர்த்தாவாக உயர்ந்த தூயவன்.

இன்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் தயாரிப்பாளராகவும் தனது கலையுலகப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து வரும் அழகன் தமிழ்மணியிடம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படம் உருவான நாட்களைப் பற்றி கேட்டதும் முக மலர்ச்சியுடன் நம்மிடம் உரையாடத் தொடங்கினார்.

வெறும் 2,500 ரூபாயில்...

“அன்புள்ள ரஜினிகாந்த் படத்தை வெறும் 2,500 ரூபாயை முதலீடாக வைத்துத் தொடங்கினோம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எனது சொந்த ஊர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள வடசேரி. விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சுதந்திரப் போராட்ட வீரர், 50 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாவட்டத்தின் முக்கிய முகமாக இருந்த, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் மணலி கந்தசாமியின் பேரன் நான். சென்னையில் ஜனசக்தி நாளிதழ் அலுவலகத்தில் தங்கிக்கொண்டு பள்ளிப் படிப்பை முடித்தேன். முடித்ததுமே ஜனசக்தி நாளிதழில் செய்தியாளனாக வேலைக்குச் சேர்ந்துவிட்டேன்.

அரசியல் செய்திகள், கட்டுரைகள் எழுதுவதற்கு எனக்குச் சொல்லிக் கொடுத்த குரு மறைந்த பத்திரிகையாளர் சோலை. அதேபோல், சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதச் சொல்லித் தந்தவர் வலம்புரி ஜான். ஒரு கட்டத்தில் அலையோசை நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் மணி என்னை சினிமா ரிப்போர்ட்டிங் பக்கம் இழுத்துக்கொண்டு வந்துவிட்டார். அதன் மூலமாகத்தான் எனக்கு சினிமா உலகம் அறிமுகமானது.

எனக்குள் இருந்த இலக்கிய ஆர்வம் காரணமாக ‘நயனதாரா’ என்கிற இலக்கிய மாத இதழையும் இரண்டு ஆண்டுகள் நடத்தி நட்டப்பட்டேன். ‘நயனதாரா’வில் சிறுகதை எழுதியபோதுதான் தூயவன் எனக்கு நண்பராகி, பிறகு உயிர் நண்பரானார். அவரைப் போலவே, கலைமணி, கலைஞானம் ஆகியோரும் நண்பர்கள் ஆனார்கள். தூயவனின் இயற்பெயர் ஒலியுல்லா முகமது அக்பர். நாகூரின் மைந்தர். சென்னைக்கு வந்த அவர், முதலில் பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் சிறுகதை எழுத்தாளரானவர். அதன்பிறகு சினிமாவிலிருந்து அழைப்பு வரவே இயக்குநர் டி.என்.பாலுவிடம் ஸ்கிரிப்ட் அசிஸ்டென்ட்டாக சேர்ந்தார். பின்னர் சாண்டோ சின்னப்பா தேவரின் அபிமானத்தைப் பெற்று, அவருடைய கதை இலாக்காவிலும் இடம்பிடித்தவர்.

நான் சினிமா பத்திரிகையாளராக இருந்த காலத்தில் எனது ஒன்றுவிட்ட சகோதரரான ராகவன் தம்பி, ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தை எடுத்துவிட்டு கடைசி கட்ட படப்பிடிப்பை முடிக்க முடியாமல் நிதிப் பிரச்சினையால் தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது நான் ஓடிச்சென்று மனைவியின் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து பணம் திரட்டி படத்தை முடித்து வெளியிட்டோம். அதன் வெளியீட்டில் நல்ல அனுபவம் கிடைத்தது. அந்தப் படம் 200 நாட்கள் ஓடி வெற்றிபெற்றபோதும், இணைத் தயாரிப்பாளர் என்கிற அங்கீகாரம் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், திரையுலகில் எனக்கென்று ஒரு அடையாளம் பெறுவது என்று ‘அன்புள்ள எம்ஜிஆர்’ படத்தைத் தொடங்கினேன்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில்...
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில்...(தி இந்து - கோப்புப்படம்)

கண்ணீர்விடவைத்த படம்

அது 1981-ம் வருடம். டெல்லியில் மத்திய அரசு நடத்திய சர்வதேசப் படவிழாவுக்கு பத்திரிகையாளர்கள் என்ற முறையில் நானும் தூயவனும் சென்றிருந்தோம். படவிழாவில் திரையிடப்படும் அனைத்துப் பன்னாட்டுத் திரைப்படங்களும் சென்சார் செய்யப்படாதவை. அதனால், செக்ஸ் காட்சிகள் இருக்கும் படங்களுக்கு கூட்டம் அலைமோதும். எனக்கோ அதுபோன்ற படங்களில் ஆர்வமில்லை. மென்மையான உணர்வுகளைப் பேசும் படங்களாகத் தேர்வு செய்து பார்ப்பேன். தூயவனுக்கும் எனக்கும் ரசனை ஒரே மாதிரியாக இருக்கும். நாங்கள் தேர்வு செய்து பார்க்கிற படங்களை எங்களுடன் இன்னும் சிலர் மட்டுமே பார்ப்பார்கள். பெரும்பாலும் தியேட்டர் காலியாகக் கிடக்கும்.

அப்படித்தான் 1980-ல் உருவான ‘டச்டு பை லவ்’ (Touched By Love) என்ற படத்தை மூன்றாம் நாள் படவிழாவில் பார்த்தோம். 500 பேர் அமரக்கூடிய திரையரங்கில் எங்களையும் சேர்த்து மொத்தமே 8 பேர் மட்டுமே அந்தப் படத்தைப் பார்த்தோம். அதில் எங்களைத் தவிர மற்ற 6 பேரும் படம் தொடங்கிய 15 நிமிடங்களில் தூங்கிவிட்டார்கள். எனக்கோ, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பதின்ம வயது சிறுமியின் இறுக்கமான வாழ்க்கையும், அவள் யாரிடமும் பேசாமல் இருப்பதைப் பார்த்து அவளை கவனித்துகொள்ளும் செவிலிப் பெண் அவளுடைய தாயைப் போல் படும் பாடுகளையும் பார்த்து கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது.

அந்தச் சிறுமிக்கு இருக்கக்கூடிய ஒரே சிறு சந்தோஷம், அன்றைக்கு அமெரிக்காவின் பிரபலமாக இருந்த பாப் மற்றும் ராக் அண்ட் ரோல் நட்சத்திரப் பாடகரான எல்விஸ் பிரெஸ்லியின் இசை மற்றும் நடனம். அவற்றை வீடியோ கேசட் பிளேயர் மூலம் போடச் சொல்லி பார்த்துக் கேட்டு ரசிப்பாள். அதனால், அவருக்குக் கடிதம் எழுதச் சொல்லி செவிலிப் பெண் சிறுமியை உற்சாகப்படுத்துவாள். கடிதம் மூலம் தொடங்கும் அந்த நட்பு, வலி மட்டுமே மிகுந்த அவளுடைய வாழ்க்கையை எப்படி முடித்து வைத்தது என்பதுதான் கதை.

அந்தப் படத்தில் எல்விஸ் ஒரு காட்சியில்கூட வராமல், அவருடைய குரலும் லைவ் இசை நிகழ்ச்சியும் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்குத் தூக்கம் போய்விட்டது. ‘இந்தக் கதையை ஒரு இன்ஸ்பிரேஷனாக வைத்துக் கொண்டு, எல்விஸ் பிரெஸ்லிக்கு பதிலாக எம்ஜிஆர் இருப்பது போல கதையை எழுதுங்கள். க்ளைமாக்ஸிலும் அதற்கு முன்பு ஒரு சில காட்சிகளிலும் சிறுமியை கருணை இல்லத்துக்கு வந்து எம்ஜிஆர் சந்திப்பதுபோல் காட்சியை எழுதுங்கள்’ என்று தூயவனிடம் சொன்னேன். படவிழா முடிந்து சென்னை திரும்பிய மறுவாரமே திரைக்கதையை தூயவன் எழுதி முடித்தார்.

கதை கேட்டுக் கலங்கிய எம்ஜிஆர்!

இதற்கு மேலும் தாமதிக்கக்கூடாது என்று அண்ணன் சோலை வழியாக எம்ஜிஆரை கோட்டையில் அவருடைய முதலமைச்சர் அறையில் சந்தித்துக் கதையைச் சொன்னோம். கதையைக் கேட்டு கண்கலங்கிய எம்ஜிஆர், ‘கதை அற்புதமாக இருக்கிறது. சில நாட்கள் வந்து நடித்துக் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. நான் இப்போது இருக்கும் தோற்றத்துடன் நடிக்கிறேன். ஆனால், அதற்கு முறையான அனுமதி பெறவேண்டும். நீங்கள் போய் அம்முவை (ஜெயலலிதா) பார்த்து இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, அடுத்து அரங்கநாயகத்தைப் போய்ப் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்தார்.

எங்களுக்கோ தலைகால் புரியவில்லை. ஜெயலலிதாவைப் பார்க்க அப்பாயின்மென்ட் இல்லை. ஆனால், இதற்கும் சோலை அண்ணின் உதவியை நாடினோம். அன்று மாலையே வேதா இல்லத்தில் அவரிடம் கதை சொல்லி முடித்தோம். கதையைக் கேட்டு முடித்த ஜெயலலிதா, ‘தலைவர் நடிக்க ஒப்புக்கொண்டதை வெளியே யாரிடமும் இப்போதைக்குச் சொல்லக் கூடாது. அதேபோல், இந்தக் கதையையும் யாரிடமும் சொல்லக்கூடாது. நான் தான் இந்தப் படத்தில் அந்தப் பெண்ணின் அம்மாவாக நடிப்பேன். அரங்கநாயகத்தைப் பார்க்கும்போது இதைச் சொல்லிவிடுங்கள். நானும் அவருக்குச் சொல்லிவிடுகிறேன்’ என்றார்.

நாங்கள் மறுநாள் அரங்கநாயகத்தைப் பார்த்தபோது அவர் எங்கள் தலையில் கல்லைத் தூக்கிப்போடாத குறையாக, ‘இந்தக் கதைக்கு என்ன விலையோ அதை வாங்கிக்கொண்டு என்னிடம் கொடுத்து விடுங்கள். கதைக்கான விலையை நீங்களே நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். அதில் நான் தலையிட மாட்டேன். ஆனால், இந்தப் படத்தை நான் தயாரிக்க வேண்டும். யோசித்துவிட்டு நாளை வந்து சொல்லுங்கள்’ என்றார்.

அரங்கநாயகம் இப்படிச் சொன்னதும் நாளை வருவதாகக் கூறுவிட்டு, விட்டால் போதுமென்று அங்கிருந்து எஸ்கேப் ஆகி சாலிகிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். பிறகு, இந்தக் கதைக்குள் ரஜினி வந்து சேர்ந்தது இன்னும் சுவாரசியமான கதை” என்று நிறுத்தினார் அழகன் தமிழ்மணி.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in