ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 77

ரஜினியை ‘வாடா’ என்றழைத்த குஷ்பு!
தர்மத்தின் தலைவன் படத்தில்...
தர்மத்தின் தலைவன் படத்தில்...

தன்னை உயர்த்தியவர்கள் கஷ்டப்படும்போது அவர்களைத் தூக்கி நிறுத்த ரஜினி தயங்கியதே இல்லை. எம்ஜிஆருக்குப் பிறகு தன்னுடைய பட நிறுவனத்தில் அந்த இடத்தை ரஜினிக்குக் கொடுத்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அவரது மறைவுக்குப் பின், தேவர் பிலிம்ஸ், தண்டாயுதபாணி பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் எடுத்த படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன.

இதனால் நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனங்கள் இனி படமெடுக்கவே முடியாது என்கிற நிலை உருவானது. இதை அறிந்த ரஜினி, அவர்களை அப்படியே விட்டுவிட விரும்பாமல் அவர்களுக்காக ஒரு படம் நடித்துக்கொடுக்க முடிவு செய்தார். அந்தப் படமே ‘தர்மத்தின் தலைவன்’. இந்தப் படத்தின் மூலம்தான் தமிழுக்கு அறிமுகமானார், குஷ்பு.

படத்தை குறுகிய காலத்தில் முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதற்காக டைரக்‌ஷன் பொறுப்பை எஸ்பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார் ரஜினி. தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் தேவரின் மகன் சி.தண்டாயுதபாணி தயாரித்தார். உறுதியான வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ரஜினி, ‘கஷ்மே வர்தே’ என்கிற இந்திப் படத்தின் தமிழ் மறுஆக்க உரிமையை வாங்கச் செய்ததுடன், தமிழுக்கு ஏற்ற திரைக்கதையை பஞ்சுஅருணாசலம் சிறப்பாக எழுதி முடிப்பார் என்று அந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தார்.

ராசியான ஜோடி...

‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சுஹாசினியும் பிரபுவுக்கு ஜோடியாக குஷ்புவும் நடித்தார்கள். இந்த படத்துக்கு குஷ்புவைத் தேர்வு செய்தது பற்றி எஸ்பி.முத்துராமன் தன் நினைவுகளைப் பகிரும்போது: “பிரபுவுக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவரை அறிமுகம் செய்யவதென்று தீர்மானித்தோம். அப்போது தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார் குஷ்பு. ரஜினி படம் என்றதும் சொன்ன அடுத்த நாளே சென்னைக்கு வந்து உற்சாகம் பொங்க எங்களைச் சந்தித்தார்.

அந்த சமயத்தில், குஷ்புவுக்கு தமிழில் ஒரு வார்த்தைகூடப் பேசத்தெரியாது. ஏவி.எம். படங்களில் நடிக்க வரும் பிற மாநிலக் கலைஞர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் பணியை எஸ்.எல்.நாராயணன் செய்துவந்தார். அவரைக் கொண்டு, குஷ்புவுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தோம். தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதி வைத்துக் கொண்டு பேசிப் பழகினார். நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக சீக்கிரமாகவே தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கக் கற்றுக்கொண்டார் குஷ்பு.

‘தர்மத்தின் தலைவ’னில் ரஜினிக்கு டூயல் ரோல். ஒன்றில், ஞாபக மறதிப் பிரச்சினை உள்ளப் பேராசிரியராகப் புதுமையான ரோலில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார், இன்னொரு ரோலில், முரட்டு இளைஞனாக நடித்தார். இளையராஜாவின் இசையில் ‘தென் மதுரை வைகை நதி’ பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. படமும் 100 நாள் ஓடி வெற்றி பெற்றது. குறிப்பாக, குஷ்புவுக்கு தமிழில் அறிமுகப்படமே பெரும் புகழைத் தேடிக்கொடுத்தது. கிடைத்த இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு படிப்படியாக முன்னேறி, வெகு விரைவில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகி என்கிற இடத்தைப் பிடித்தார். அதன் பின்னர் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து அவருடைய ராசியான ஜோடி என்று பெயரெடுத்தார்.

குஷ்புவை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவன் என்கிற முறையில், இன்றைக்கும் அவர் என் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியால் ஒளிப்பரப்பான ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அவர், ‘இயக்குநர் எஸ்பி.முத்துராமன் சார்தான் என்னுடைய குரு’ என்று குறிப்பிட்டபோது நெகிழ்ந்தேன். தமிழரையே கல்யாணம் செய்துகொண்டு தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டார் குஷ்பு. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார் எஸ்பி.எம்.

குஷ்புவின் பார்வையில்...

‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் அறிமுகமாகி, கடந்த 34 வருடங்களாக தமிழ் திரையுலகில் பயணித்து வரும் குஷ்பு, ரஜினி உடனான தனது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்:

'அண்ணாமலை' படத்தில்...
'அண்ணாமலை' படத்தில்...

“ 'தர்மத்தின் தலைவன்' படத்துக்காக நான் ஒப்பந்தம் ஆனப்போ எனக்கு ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாது. செட்ல நிறையப் பேர் ‘வாடா’, ‘போடா’ என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்த வார்த்தை, அது ஏதோ ‘ஹாய்’ என்பதுபோல என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. அன்றைய படப்பிடிப்பில் ரஜினி சார் உள்ளே வந்தபோது அவருக்கு ‘ஹாய்’ சொல்வதாக நினைத்து 'வாடா' என்று சொல்லிட்டேன். மொத்த யூனிட்டும் அதிர்ந்துவிட்டார்கள். எல்லோருடைய முகமும் கடுகடுவென்று ஆனதும் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தேன். ஆனால், அந்தச் சூழ்நிலையை அப்படியே கூலாக மாற்றினார் ரஜினி சார்.

‘அவங்களுக்கு தமிழ் தெரியாது… நிச்சயமா ‘வாடா’ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சிருக்காது. இதை யாரும் பெரிசு பண்ணாதீங்க. டேக் போலாமா?’ என்று அவர் தமிழில் சொன்னதை ஆங்கிலம் தெரிந்த உதவி இயக்குநரிடம் கேட்டு தெரிந்து கொண்டதும் எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஒருவர், அந்தச் சூழ்நிலையை எவ்வளவு பக்குவமாகவும் பெருந்தன்மையுடனும் ஹேண்டில் பண்ணியிருக்கார் என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன். அதே பக்குவமும் பெருந்தன்மையும் இன்று வரைக்கும் ரஜினி சாரிடம் அப்படியே இருக்கிறது.

ரஜினி சார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார் என்றால், பிரேக் விட்டால் மட்டும்தான் கேரவேனுக்குப் போவார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஒரு சேர் போட்டு உட்கார்ந்துகொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். சரியான நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். ஒருவேளை, தப்பித் தவறி லேட்டாக வந்துவிட்டார் என்றால், திரும்பத் திரும்ப சாரி சொல்லிக்கொண்டே இருப்பார். இன்றைக்கும் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால், அதற்கு இந்த நல்ல பழக்கம்தான் காரணம் என்று நினைக்க்கிறேன்.

மென்மனது கொண்டவர்...

'மன்னன்' படத்தில் 'ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…’ பாடல் காட்சி ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. நான் ரொம்ப ஈடுபாட்டுடன் டான்ஸ் ரிகர்சல் செய்துகொண்டிருந்தேன். ஆனால் ரஜினி சார், ரிகர்சல் ஒருமுறைகூட பண்ணவே இல்லை. இவருக்கு அவரோட வீட்டுக்கே போய் ரிகர்சல் பண்ண வெச்சிருப்பாங்களோ என்று நினைச்சேன். நான் அப்படி நினைச்சுக்கிட்டு இருக்கும்போதே, ‘குஷ்பூ... நீங்க சரியா ரிகர்சல் பண்ணல... நீங்கள் சொதப்பினத பார்த்தேன். இன்னொரு முறை பண்ணுங்க’ என்று சொன்னார்.

அவர்கிட்ட ‘நீங்க மட்டும் பண்ணலையே?’ என்று கேட்டேன். ‘நேத்து ஷூட் முடிஞ்சதும் நீங்க கிளம்பீட்டீங்க. நான் இருந்து ரிகர்சல் முடிச்சுட்டுதான் கிளம்பினேன்’ என்றார். ஓ... அதுதான் அதிகாரம் பறக்குதோ... என்று எண்ணிக்கொண்டு மறுபடியும் போய் நானும் சீரியஸாக திரும்பத் திரும்ப ரிகர்சல் பண்ணிவிட்டு வந்தேன். மறுபடியும் ரஜினி சார், ‘முன்னையாவது பரவாயில்லை... இப்போ ரொம்ப சொதப்பறீங்க’ என்று சொல்லிவிட்டு தன்னுடைய ஸ்டைலில் சிரிச்சார்.

அப்போதுதான் தெரிந்தது அவர் என்னை கிண்டல் செய்து கலாய்க்கிறார் என்று. உடனே அவரைத் திரும்பி முறைத்தேன். அவ்வளவு தான் ‘கெட்டிக்காரப் பொண்ணு.. கண்டுபிடிச்சிட்டீங்க…’ என்றார். ரஜினி அப்படித்தான். நாம் நன்றாகப் பழகினால் அவர் உரிமை எடுத்துக்கொண்டு நம்மை கிண்டல் செய்வார். ரிசர்வ் ஆக இருப்பவர்களின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்.

கிழவி வந்துட்டா...

'அண்ணாமலை' படப்பிடிப்பில் இன்னொரு சம்பவம். அந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்கு 21 வயது. அதில் 18 வயது மகளுக்கு அம்மாவாக நடித்தேன். நான் வயசான அம்மா கெட்டப் போட்டுக்கொண்டு செட்டுக்கு வந்ததும், ‘ஏய் கிழவி வந்துட்டா… சேரை எடுத்துப் போடுங்கப்பா... தடுமாறிடப் போறா... பார்த்து கிழவி. கண்ணு தெரியலீன்னா சொல்லு; கூச்சப்படாதே…’ என்று என்னைக் கிண்டல் செய்தார் ரஜினி சார். மொத்த செட்டும் கொல்லென்று சிரித்தது. நான் கடுப்பாகிவிட்டேன்.

ஒரு காட்சியின்படி நான் குளிக்கும்போது அவர் என்னை பாத்ரூமில் பார்த்துவிட்டு, ‘கடவுளே… கடவுளே…’ என்று சொல்லும் காட்சி காமெடியாக வருமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால், படம் வெளியாகி திரையரங்கில் அந்தக் காட்சியின்போது பெரும் ரகளையாக இருந்தது. அந்தக் காட்சி வொர்க் அவுட் ஆனதற்கு காரணம், ரஜினி சாரின் காமெடி சென்ஸ்தான்.

'பாண்டியன்' படத்தில் ரஜினி சாரோடு நடிக்கும்போது, நான் பயங்கர பிஸி ஆர்டிஸ்ட் ஆகிவிட்டேன். பகலில் ஒரு படம் என்றால் இரவில் வெறொரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பேன். அப்போது 'பாண்டியன்' பட ஷூட்டிங் செட்டுக்குப் போகும்போது, ‘மூனு ஷிஃப்ட்டும் வொர்க் பண்ற ஆர்டிஸ்ட் வர்றாங்க. முதல்ல அவங்க சீனை முடிச்சு அனுப்புங்கய்யா’ என்று ஜாலியாகச் சொல்லுவார் ரஜினி. அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு இயக்குநரும் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுத்துவிட்டு பின்னர் ரஜினி சாருடனான காம்போ சீன் எடுப்பார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எனக்கு பிறந்த நாள் வந்தது. யூனிட்டில் கேக் வெட்ட ஏற்பாடு செய்தார்கள். ஆனால், கேக் வெட்ட கத்தி வாங்கி வர மறந்துவிட்டார்கள். உடனே ரஜினி சார் செட் பிராப்பர்டியாக இருந்த ஒரு பெரிய அரிவாளைத் தூக்கிக்கொண்டு வந்தார். அதை வைத்துதான் கேக் வெட்டி கொண்டாடினோம்.

'அண்ணாத்த' படத்தில்...
'அண்ணாத்த' படத்தில்...

இப்போது 28 வருடம் கழித்து, ரஜினி சாருக்கு ஜோடியாக 'அண்ணாத்த' படத்தில் நடித்தேன். இத்தனை வருடத்தில் ஆளே மாறியிருப்பார் என்று நினைத்துக்கொண்டு போனபோது, வருடம்தான் மாறியிருக்கிறதே தவிர அவர் கொஞ்சம்கூட மாறவில்லை. படத்தில் குடும்பப் பாடல் காட்சியில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும்போது, தெரியாமல் ஒரு தவறு நடந்துவிட்டதில் ரீடேக் எடுத்தார் இயக்குநர் சிவா.

உடனே ரஜினி சார் ஜாலி ஆகிவிட்டார். ‘குஷ்பு தப்பு பண்ணினதால தான் ரீடேக் ஆச்சு’ என்று போற வர எல்லோரையும் கூப்பிட்டுச் சொல்லி, கலாட்டா பண்ணினார். எத்தனை வருடமானாலும் அதே எனர்ஜி, அதே காமெடி சென்ஸ். என்னைப் பொறுத்தவரைக்கும் ரஜினி சார் ஒரு ஆச்சரிய அதிசயம்” என்கிறார் குஷ்பு.

(சரிதம் பேசும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in