ஆறிலிருந்து எழுபது வரை : ரஜினி சரிதம் - 76

தானும் ஒரு தொழிலாளி...
ஆறிலிருந்து எழுபது வரை : ரஜினி சரிதம் - 76

ரஜினியை மிக நெருக்கமாக அறிந்தவர்களில் இளைய திலகம் பிரபு முக்கியமானவர். அதேபோல், பிரபுவை ஒரு நட்சத்திரமாக எண்ணி வியப்பவர் ரஜினி: “பிரபு... உங்களை ‘சங்கிலி’ படத்துல ஆரம்பிச்சு கவனிச்சுகிட்டு வர்றேன்... எத்தனை சில்வர் ஜூப்ளி கொடுத்திருக்கீங்க. சம்பள விஷயத்துல கறார் காட்டாம ‘மொதல்ல படம் நல்லபடியா முடியட்டும்... அப்பறம் பார்த்துக்கலாம்’ன்னு சொல்லூவீங்கன்னு உங்களோட தொடர்ந்து படங்கள் பண்ணின தயாரிப்பாளர்கள் எங்கிட்டச் சொல்லிருக்காங்க. எந்த ஹீரோவோட நடிக்கிறதுக்கும் நீங்க தயங்கினது இல்ல. உங்ககூட நடிக்கிறதை பெருமையா ஃபீல் பண்றேன்” என்று ‘குரு சிஷ்யன்’ படத்தில் இரண்டாம் முறையாக தன்னுடன் இணைந்து நடிக்க வந்த பிரபுவிடம் கூறியிருக்கிறார் ரஜினி.

தனக்குப் பின்னரான தலைமுறையில் நடிக்க வந்த ஒரு வெற்றிகரமான ஹீரோ நடிகரை இவ்வளவு கூர்ந்து அவதானித்து, அதை சரியான சந்தர்ப்பத்தில் மனம்விட்டு அவரிடம் கூறிப் பாராட்டுவதென்றால் ரஜினிக்கு எத்தனை பரந்த மனம் வேண்டும். அப்படிப்பட்ட ரஜினிக்கு கடந்த 2019-ல் பிரபு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன விதம் சமூக ஊடகங்களில் வைரலானது.

பிரபு ரஜினிக்குச் சொன்ன பிறந்த நாள் வாழ்த்து இதுதான்: ‘திரையுலகம் என்கிற கோட்டைக்குள் ‘வேலைக்கார’னாக நுழைந்து, ‘மாவீரனா’க மாறி, ‘தளபதி’யாக உயர்ந்து, ‘மன்னன்’ ஆகி, இன்றைக்குத் தமிழ் சினிமாவையே தன்னுடைய ‘பேட்டை’யாக மாற்றி, ‘தர்பார்’ நடத்திக்கொண்டிருக்கும் என்னுடைய அருமை அண்ணன் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என ரஜினி நடித்திருந்த வெற்றிப் படங்களின் தலைப்புகளையே அழகாகக் கோத்து வாழ்த்துச் சொன்னார். தன்னுடைய அப்பா ‘நடிப்புப் பல்கலைக்கழகம் என்று பெயர் வாங்கியவர் என்றாலும் ரஜினியை தன்னுடைய ஆதர்ச நாயகனாக பிரபு மனதில் வரித்துக் கொண்டிருந்தார். அந்தப் பாசம், அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் அழகாக வெளிப்பட்டது.

பஞ்சுவுக்காக கொடுத்த கால்ஷீட்

தனக்கு சிறந்த கதைகளையும் பாடல்களையும் எழுதியதுடன் பல படங்களையும் தயாரித்த பஞ்சு அருணாசலம் நிதி நெருக்கடியில் சிக்கியபோது, அவர் குறுகிய காலத்தில் தயாரிக்க விரும்பிய ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுக்க விரும்பினார் ரஜினி. அந்தப் படம் தான் ‘குரு சிஷ்யன்’. அந்தப் படத்தை இயக்கிய எஸ்பி.முத்துராமனை அழைத்த ரஜினி, “நான் 25 நாள் கால்ஷீட் தருகிறேன். கௌரவ வேடத்தில் நடிக்கிறேன்” என்று கூறினார். அதற்கு எஸ்பி.எம்., “நீங்கள் கௌரவ வேடத்தில் நடிப்பது பஞ்சு அருணாசலத்துக்கு பெரிய அளவுக்கு உதவி செய்யாது. நீங்களும் ஹீரோவாக நடித்தால்தான் படம் நன்கு வியாபாரம் ஆகும்; வசூலும் குறையாது. பஞ்சு மீண்டுவிடுவார். அதற்கு நீங்கள் தருவதாகச் சொல்லும் 25 நாள் கால்ஷீட்டிலேயே நான் படத்தை எடுத்து விடுகிறேன். அதற்கு ஏற்றார்போல் கதை எழுதிவிடலாம்” என்று கூறினார். ஆனால் ரஜினி, “அது எப்படி முடியும்? நான் முழு நீள ரோலில் நடிக்க வேண்டுமென்றால் 45 நாட்களாவது கால்ஷீட் இருந்தால்தானே முடியும்” என்று கேட்டார்.

அதற்கு முத்துராமன், “இரண்டு ஹீரோக்கள் உள்ள நல்ல கதை ஒன்று இருக்கிறது. உங்களுக்கு நகைச்சுவை கலந்த வேடம். நீங்களும் பிரபுவும் இணைந்து நடித்தால் அட்டகாசமாக இருக்கும். சென்னையில் படப்பிடிப்பை நடத்தாமல் மைசூருக்குப் போனால் ஒரே மூச்சில் முழுப்படத்தையும் முடித்துக்கொண்டு திரும்பிவிடலாம்” என்றார். எஸ்பி.எம்மை எப்போதும் நம்பும் ரஜினியும் அதற்குச் சம்மதித்தார். படத்துக்கு திரைக்கதை, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். இளையராஜா இசை அமைத்தார். பிரபுவின் மீது கொண்டிருந்த அபிமானத்தாலும் பாசத்தாலும் தான் செய்ய வேண்டிய ஒரு சண்டைக்காட்சியை பிரபுவுக்கு கொடுக்கும்படி சொல்லிவிட்டார் ரஜினி. அந்தச் சண்டைக்காட்சி படமானபோது அருகில் இருந்து பார்த்த ரஜினி, “அட்டகாசம்” என்று பாராட்டினார்.

ஏவி.எம்.சரவணனின் விருப்பத்தைப் பூர்த்திசெய்த ரஜினி

ரஜினி 25 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தாலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை 23 நாட்களில் எடுத்து முடித்துவிட்ட எஸ்பி.எம், “உங்கள் போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டது. நீங்கள் சென்னைக்குத் திரும்பலாம்” என்று ரஜினியிடம் சொன்னார். அதற்கு, “இல்லை... இல்லை... இன்னும் 2 நாள் நான் உங்கள் அனைவரோடும் தங்கியிருக்க விரும்புகிறேன்” என்று சொன்ன ரஜினி, படக்குழுவினருடன் 2 நாட்கள் தங்கி, லைட் மேன்களுக்கு உதவிசெய்து, கேமரா பொருத்தப்பட்ட ட்ராலியை ஒரு சினிமா தொழிலாளி போல் தள்ளி, தான் என்றைக்குமே ஒரு தொழிலாளிதான் என்று காட்டினார்.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து முதல் பிரதி தயாரானதும் ஏவி.எம்.சரவணனைப் படம் பார்க்க வைத்தார் எஸ்பி.எம். படத்தை பார்த்து முடித்ததும், “படம் நன்றாக வந்திருக்கிறது. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கு அழுத்தம் போதாதுபோல் எனக்குத் தோன்றுகிறது. என்றாலும் இனிமேல் ரஜினியிடம் கால்ஷீட் கேட்பதும் நாகரிகமாக இருக்காது. அதனால் இப்படியே விட்டுவிடுங்கள், ஒன்றும் பிரச்சினை இல்லை” என்றார்.

சரவணன் இப்படிச் சொன்னதும் முத்துராமன் யோசித்தார். சரவணன் கூறியபடி க்ளைமாக்ஸ் சண்டையில் இன்னும் விறுவிறுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கும் தோன்றியது. ஆனால் ரஜினியோ, வேறு படத்துக்கு கொடுத்த கால்ஷீட்டில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை. எதற்கும் பேசிப்பார்ப்போம் என்று தயங்கியபடியே ரஜினிக்கு போன் செய்து சரவணனின் விருப்பத்தை அவரிடம் சொன்னார்.

அதைக் கேட்ட ரஜினி, “சார்... சரவணன் சார் சொன்னால் பக்கா! நான் ஞாயிற்றுக்கிழமை காலை வந்துவிடுகிறேன். அன்று மாலை வரை என்னை வைத்து எவ்வளவு ஷாட் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சரவணன் சார் பாராட்டுகிற மாதிரி, க்ளைமாக்ஸ் காட்சியை எடுத்துவிடுங்கள்” என்று சொன்னார். சொன்னபடியே வந்து நடித்தும் கொடுத்தார். இப்படி க்ளைமாக்ஸ் சண்டை மெருகூட்டப்பட்டது பற்றி ஏவி.எம்.சரவணனுக்குத் தெரியாது. இதை அறிந்த சரவணன், “செய்த மாற்றங்களை எனக்குப் போட்டுக் காட்டுங்கள். பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார். மாற்றத்தைப் பார்த்துவிட்டு வியந்துபோனார் சரவணன்! “மாதத்தில் தனக்குக் கிடைத்த ஒரே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் நமக்காக வந்து நடித்துக் கொடுத்து விட்டுப் போனார்” என்று சொன்னார் முத்துராமன். உடனே சரவணன், ரஜினிக்கு போன் செய்து நன்றி தெரிவித்தார். ‘குரு சிஷ்யன்’ 200 நாட்களைக் கடந்தும் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கௌதமியின் பார்வையில்...

நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்த கௌதமி அறிமுகமானதும் ‘குரு சிஷ்யன்’ படத்தில்தான். ரஜினியுடன் முதன் முதலாக அவர் இணைந்து நடித்த படமும் அதுதான். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அவர் தன்னுடைய நினைவுகளைப் இப்படிப் பகிர்கிறார்:

“நான் ரஜினி சாருடன் ‘குரு சிஷ்யன்’, ‘ராஜா சின்ன ரோஜா’, ‘பணக்காரன்’, ‘தர்மத்துரை’ ஆகிய படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறேன். ‘குரு சிஷ்ய’னில் அறிமுகமானபோது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. சினிமாவுக்கு புதியவள் என்றாலும் ரஜினி சார் ரொம்ப அன்பாக பேசி என் பயத்தைப் போக்கினார். ஆரம்பத்தில் எனக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். அதனால் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதிவைத்துப் பேசுவேன். இதை பார்த்த ரஜினி சார், ‘நானும் இப்படித் தான். இந்தி படங்களின் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதிவைத்துப் பேசுவேன்’ எனச் சிரித்தார். குரு சிஷ்யன் படத்தில் கிடைத்த நல்ல அனுபவம்தான் என்னை சினிமாத்துறையிலே நிலைக்கவைத்தது.

'பணக்காரன்' படத்தின் வெளியீட்டு தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டார்கள். எனவே, நானும் ரஜினி சாரும் இரவு பகலாக நடிக்க வேண்டியதாகிவிட்டது. முதல் நாள் காலையில் செட்டுக்குள் போய் மறு நாள் நள்ளிரவு வரை ஷூட்டிங் முடித்துவிட்டு, 3-வது நாள் காலையில் தான் வெளியில் வருவோம். அப்படி சின்ன பிரேக்கூட எடுக்காமல் எடுத்த பாட்டு தான் ‘டிங் டாங்... இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது’. அந்தப் பாட்டை இப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியாக இருக்கும். ரஜினி சார் உச்சத்திற்கு வந்தபிறகும் அவ்வளவு கடினமாக உழைத்தார்.

'தர்மத்துரை' படத்தில் நடித்தபோது 'சந்தைக்கு வந்த கிளி' பாடலைக்கேட்டு ரொம்ப உற்சாகமாகி, ரசித்து டான்ஸ் ஆடினார். படத்தில் ரஜினி சார் சிறையிலிருந்து திரும்பி வந்தவுடன் என்னைத் தேடிவருவார். நான் ஒரு வீட்டில் பாத்திரம் கழுவிக்கொண்டு இருப்பேன். அப்போது அவர் என்னைப் பார்த்து மனதுக்குள் வேதனையோடு பேசும் காட்சியைப் படமாக்கினார்கள். அப்போது, முதலில் நான் நடித்ததை எடுத்தார்கள். பிறகு ரஜினி சார் காட்சி படமாக்கப்பட்டது. அவரது நடிப்பை பார்த்துவிட்டு 'அடேங்கப்பா இப்படி நடிக்கிறாரே' என்று அசந்துபோனேன். இயக்குநரிடம் போய், 'சார் நான் இன்னொரு முறை நடிக்கிறேன்' என்று கேட்டு நடித்தேன். என்னுடைய நடிப்புப் பயணம் இதுபோன்ற சில தருணங்களில்தான் வேறு எல்லைக்கு நகர்த்தப்பட்டிருக்கிறது.

ஒவ்வொருத்தருக்கும் வருடத்தின் முதல் நாள் ஜனவரி 1 அன்று யாருடன் இருக்கிறோம் என்பது உணர்வுபூர்வமாக இருக்கும். நான் ரஜினி சாருடன் 4 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் 3 படங்களின் படப்பிடிப்பு ஜனவரி 1-ம் தேதியில் நடந்தது மறக்க முடியாதது. அன்றைய நாள் முழுக்க ரஜினி சார் ஆன்மிகம் பற்றி நிறையப் பேசுவார். காட்சிகளுக்கு நடுவே பாசிட்டிவ் எனர்ஜியோடு பேசுவார். அதனாலே அந்த‌ வருஷம் ரொம்ப நல்ல வருஷமாக மாறிவிடும்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார் கௌதமி.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in