ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 74

தோட்டத்துத் திண்ணையிலும் படுத்துத் தூங்குவார்!
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 74

எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் தன்னையொரு சூப்பர் ஸ்டாராக கருதிக்கொள்ளாத குணம் ரஜினியிடம் உண்டு. அதற்கு ‘தம்பிக்கு எந்த ஊரு’ படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை உதாரணமாகப் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் ராஜசேகர். இனி அவர் சொல்வதை வாசிப்போம்:

இயக்குநர் ராஜசேகர்
இயக்குநர் ராஜசேகர்

“தம்பிக்கு எந்த ஊரு படம் எடுத்த காலகட்டத்தில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி. அவரது ஒரு நாள் கால்ஷீட் என்பது ஒரு கிலோ தங்கத்துக்கு சமம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்தப் படத்துக்காக ரஜினி கொடுத்திருந்த கால்ஷீட்டில் மூன்று நாட்களை கொடைக்கானலின் மூடுபனி களவாடிச் சென்றுவிட்டது. படிப்பிடிப்பை நடத்தமுடியாத அளவுக்குப் பஞ்சு மேகங்களாக மூடுபனி சூழ்ந்துகொண்டது. பனி விலகும் என்று எதிர்பார்த்து மூன்று நாட்கள் கடந்துவிட, நான்காவது நாள் எனக்குப் பயம் வந்துவிட்டது.

மூடுபனி இல்லாத ஒரு பசுமையான பகுதிக்குச் சென்று படப்பிடிப்பை நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் கொடைக்கானலை விட்டு கீழே இறங்கி வந்து அடிவாரத்தில் ஒரு விவசாய கிராமத்துக்கு படக்குழுவுடன் வந்துவிட்டேன். என்ன, ஏதென்று எந்தக் கேள்வியும் கேட்காமல் ரஜினியும் என்னுடன் கிளம்பிவந்துவிட்டார். கதாநாயகிகள் மாதவி, சுலக்‌ஷனா இருவரும் மேக்கப்போட்டு ரெடியாக ஒரு மணிநேரம் ஆனது. அவ்வளவுதான்... நெல் வயல்கள், களத்து மேடு, பம்ப் செட், பாக்குத் தோட்டம், சூரியகாந்தி பூ தோட்டம் என்று அந்தக் கிராமத்தில் இருந்த அழகான லொக்கேஷன்களில் எல்லாம் ‘ஆசைக் கிளியே’ பாடலை வளைத்து வளைத்து எடுக்கத் தொடங்கினேன்.

பாதி பாடல் முடியவே மாலை 5 மணி ஆகிவிட்டது. அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி கொடைக்கானல் ஹோட்டலுக்குப் போய்விட்டு திரும்பினால் மறுநாள் அதேபோன்ற நேச்சர் லைட்டிங்கில் எடுக்க முடியாது. அதனால், நட்சத்திரங்களை மட்டும் அனுப்பிவிட்டு, நானும், கேமராமேன் ரங்காவும் படக் குழுவில் இருந்த இன்னும் சிலரும் தென்னந்தோப்பில் இரவு தங்கிவிடுவது என்று முடிவு செய்தோம். அந்தத் தோப்பில் தென்னங்கீற்று வேயப்பட்ட ஒரு நடுத்தரமான குடிசை வீடு மட்டுமே இருந்தது. தோப்புக்கு அந்தப் பக்கம் சுடுகாடு.

ரஜினி தங்குவதற்காக அந்த ஊரின் மீராசுதார் வீட்டை ஏற்பாடு செய்தோம். படப்பிடிப்பு முடிந்ததும் தனக்கு ஏற்பாடு செய்திருந்த வீட்டுக்குச் சென்ற ரஜினி, அங்கே என்னைத் தேடியிருக்கிறார். நான் தென்னந்தோப்பில் தங்குவதை தனது உதவியாளர் மூலம் அறிந்தவர், ‘எனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் வேண்டிக் கிடக்கிறது. இயக்குநர் தங்கும் இடத்தில் தான் நானும் தங்குவேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பி தோப்புக்கு வந்துவிட்டார்.

ரஜினி அங்கே வந்து சேருவதற்கு சற்று முன்னர்தான், பக்கத்து சுடுகாட்டில் ஒரு சடலம் ஏரியூட்டப்பட்டிருந்தது. நான் பதறிப்போய், ‘சார் பக்கத்தில் சுடுகாடு இருக்கிறது. தயவு செய்து நீங்கள் பெரியவரின் வீட்டில் போய்த்தங்குங்கள்’ என்று கெஞ்சினேன். ரஜினி பதிலே சொல்லவில்லை. ‘தூக்கம் வருது ராஜு சார்... வாங்க தூங்குவோம்’ என்று சொல்லிவிட்டு, சாணி மெழுகப்பட்ட அந்தக் குடிசையின் சிறு திண்ணையில் படுத்துக் கொண்டார். தான் படுத்துக் கொண்டது இல்லாமல், ‘இங்கே இன்னொருவரும் படுத்துக்க இடமிருக்கு’ என்று அட்ஜஸ்ட் செய்துகொள்ளவு முன்வந்தார்.

தம்பிக்கு எந்த ஊரு படத்தில்
தம்பிக்கு எந்த ஊரு படத்தில்

அதுமட்டுமல்ல... இரண்டு நாள் கழித்து கொடைக்கானல் லொக்கேஷனில் படப்பிடிப்பு இடைவேளையில் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது என்னிடம் வந்த ரஜினி, ‘தூக்கம்தான் கடவுள் மனுசனுக்கு காட்டிய மிகச் சிறந்த கருணை. ஒருத்தர் தூங்கறதுக்கு என்ன வேணும்னு நினைக்கிறீங்க சார்?’ என்று கேட்டார். தவறான பதிலைச் சொல்லி அவரிடம் தோற்றுவிடக்கூடாதே என்று நினைத்துக் கொண்டு, ‘நீங்களே சொல்லிடுங்க சார்’ என்றேன். அவர், ‘ரொம்ப சிம்பிள் சார்... ஒருத்தர் அமைதியா ஆழமா தூங்கணும்னு சொன்னா… மெத்தையோ, ஏசியோ தேவையில்ல; தூக்கம் தான் வேணும். எல்லா வசதியும் இருந்தும் தூங்க முடியாத மனுசங்க தான் அதிகம். எனக்கு அப்படியில்லை. என்னை எங்க தூங்கச் சொன்னாலும் தூங்கிடுவேன்’ என்று சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தார்.

குழந்தை மனம்

பள்ளியில் நடக்கும் போட்டிகளில் நம் குழந்தை மூன்றாவது பரிசு வாங்கிவிட்டால்கூட, அவர்கள் பெரிய சாதனை செய்துவிட்டது போல் மகிழ்ச்சியடைந்து, அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டுவோம். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. அப்படித்தான் நம் உள்ளத்திலிருந்து உண்மையாக வரும் பாராட்டுகளைக் கேட்டால் ரஜினியும் பெற்றோரின் பாராட்டைக் கேட்கும் குழந்தைபோல நெகிழ்ந்து போவார்.

‘படிக்காதவன்’ படத்தில் அப்படியொரு சம்பவம். ‘ஜோடிக்கிளி’ டூயட் பாடலில் அம்பிகாவும் ரஜினியும் போட்டி போட்டுக் கொண்டு அழகான மூவ்மென்டுகளில் ஆடியிருப்பார்கள். சில மூவ்மென்ட்ஸ் பார்க்க அழகாக இருந்தாலும் அதை செட்டில் சக நடிகருடன் ஆடி நடிக்கும்போது சில அசௌகரியங்கள் இருக்கும். அப்படித்தான் ரஜினிக்கும் அம்பிகாவுக்கும் சாவாலான சில மூம்மென்டுகளை அமைக்கும்படி நடன இயக்குநர் சின்னி பிரகாஷிடம் கூறிவிட்டேன்.

அவரோ சூப்பர் ஸ்டார் ஆச்சே என்று தயங்கினார். ‘இந்த மூவ்மென்டுகளை நீங்கள் ஆடினால் விஷுவலாக வரும்போது நன்றாக இருக்கும் என்று சொல்லி ஆட வைத்துவிடுங்கள். ரஜினி சார் தயங்கினால், நான் உள்ளே புகுந்து பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றுவிட்டேன்.

நடன இயக்குநர் சொன்னபடியே சில மூவ்மென்டுகளில் ரஜினி நடனமாட ஒத்திகை செய்யும் முன் என்னைப் பார்த்து, ‘என்ன சார், இந்த மூவ்மென்டால கோ-ஆர்ட்டிஸ்டுக்கு சிரமத்தை ஏற்படுத்துவமோனு தயக்கமா இருக்கு. வேற மாத்தச் சொல்லுங்களேன்’ என்று கெஞ்சலாகக் கேட்டார். நான் விடுவதா இல்லை. ’டான்ஸ் மாஸ்டர் சொல்றது ரொம்பச் சரி சார்... இந்த மூவ்மென்ட் மட்டும் பண்ணிடுங்க. தியேட்டர்ல உங்கள் ரசிகர்கள் என்னமா அப்ளாஸ் கொடுக்குறாங்கன்னு மட்டும் பாருங்க. நானும் உங்கக் கூடத்தானே தியேட்டர் விசிட் வருவேன்’ என்று சொன்னதும் பள்ளியில் முதல் பரிசு வாங்கிய குழந்தையைப் போல் ரஜினியின் முகத்தில் அப்படியொரு குழந்தைச் சிரிப்பும் துள்ளலும். தயக்கத்தை தவிர்த்துவிட்டு இரண்டு முறை மட்டுமே ஒத்திகை செய்த ரஜினி, அந்த மூவ்மென்ட்ஸை ஒரே ஷாட்டில் செய்து முடித்து அசத்தினார். இந்த இடத்தில் ரஜினியின் வேகத்துக்கு ஏற்றார் போல் நடனமாடிய அம்பிகாவையும் பாராட்ட வேண்டும்.

தன் நடிப்பையே வியந்த கலைஞன்

‘படிக்காதவன்’ படத்தில் ரஜினிக்கு பெரும் பெயரைப் பெற்றுக்கொடுத்த ’ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன்...’ பாடல் காட்சியை ஒட்டியும் ஒரு சம்பவம் உண்டு. இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘குத்தார்’ படத்தின் தழுவல்தான் ‘படிக்காதவன்’. அந்தப் படத்தில் இல்லாத ஒரு சோகப் பாடலை படிக்காதவனில் இணைக்க விரும்பினேன். காரணம், அதற்கான அழுத்தமான சூழல் அமைந்திருந்தது. ‘ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன்... உலகம் புரிஞ்சுக்கிட்டேன்’ பாடல் பதிவாகி முடிந்ததும் அதை ரஜினியைக் கேட்க வைத்து படப்பிடிப்புக்கு தயாராகும்படி கூறினேன். ஆனால் ரஜினி, ‘ஏற்கெனவே படத்தின் நீளம் பதினேழாயிரம் அடியாக இருக்கிறது. இப்போது இந்தப் பாடலையும் சேர்த்தால் இன்னும் லெங்த் அதிகமாகிவிடும். எதற்கு இந்த விஷப் பரிச்சை?’ என்று கேட்டார்.

‘என்னை நம்பினா இரண்டு நாள் மட்டும் கால்ஷீட் கொடுங்க’ என்று வெடுக்கென்று நான் சொன்னதும் எங்கே நான் கோபித்துக்கொள்வேனோ எனப் பயந்து, ‘உங்க இஷ்டம் சார்’ என்று சொல்லிவிட்டார். சூட்டோடு சூடாகப் பாடலை படமாக்கி படத்தில் சேர்த்துவிட்டேன். படத்தின் ‘மேரீட் பிரின்ட்’ ரெடியானதும் ரஜினியை அழைத்து ஃபிலிம் லேப்பில் இருந்த பிரிவியூ தியேட்டரிலேயே போட்டுக்காட்டினேன். என் அருகில் உட்கார்ந்து படம் பார்த்த ரஜினி, பல இடங்களில் சின்னப் பிள்ளை போல் அழுதார். பல இடங்களில் சிரித்தார்; பல இடங்களில் தன்னையும் அறியாமல் கை தட்டினார். ‘ஊரத் தெரிஞ்சுக் கிட்டேன்’ பாடல் காட்சி வரும்போது அவருடைய ரியாக்‌ஷன் எப்படியிருக்கிறது என்பதை ரகசியமாகக் கண்காணித்துத் தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன். அந்தப் பாடல் காட்சியும் வந்தது.

ரஜினிக்கு பாதி பாடலின் நடுவே அதில் நடித்திருப்பது நாம் தானா என்கிற சந்தேகம் வந்துவிட்டது. சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு என் கையை அழுத்தமாகப் பிடித்தபடி, ‘ராஜு சார்... உண்மையிலேயே இது நான்தானா... நம்ப முடியலையே..!?’ என்று தனது நடிப்பையே வியந்து கேட்டார். அதன் பின்னர் மாறு வேடத்தில் நானும் அவரும் சென்னையில் இரண்டு தியேட்டர் களுக்கு விசிட் அடித்தோம். அந்தப் பாடல் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு ஒன்று சொன்னார். ‘கேப்டன் ஆஃப் த ஷிப்னு சொல்றது ரொம்பச் சரியான பிரயோகம். உங்க பேச்சை கேட்காமப் போயிருந்தா இந்த அப்ளாசை மிஸ் பண்ணியிருப்பேன்’ என்றவர், அப்போதே என்னிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார். ‘நான் அடுத்து தயாரிக்கப் போற படத்தை நீங்கதான் டைரக்ட் பண்ணணும்’ என்பதுதான் அந்த வேண்டுகோள். அந்தப் படம்தான் ‘மாவீரன்’. தமிழ் சினிமாவின் முதல் 70 எம்எம் படம்” என்று நிறுத்தினார் ராஜசேகர்.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in