ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 70

வீட்டைக் கொடுத்த ரஜினி!
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 70

இயக்குநராகவும் நடிகராகவும் கே.பாக்யராஜ் இரவு பகலாக வேலை செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதுதான், ‘அன்புள்ள எம்.ஜி.ஆர்’ கதையைக் கேட்டு, அதை விட மனமில்லாமல், அதைத் தனக்காக ‘ஹோல்ட்’ செய்ய நினைத்தார். ஆனால், பாக்யராஜ் வரும்வரை திரைக்கதையாசிரியர் தூயவனும் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணியும் பொறுத்திருக்க விரும்பவில்லை. மேலும் ரஜினியின் ‘இன்ஸ்டிடியூட்’ நண்பரான நட்ராஜ், ரஜினியிடம் கதை சொல்ல வைத்து ஓகே செய்ததால் அவர் உடனே கால்ஷீட் கொடுக்க ‘அன்புள்ள எம்.ஜி.ஆர்’ அப்படியே ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ ஆகிவிட்டது. இதன்பிறகு நடந்தவற்றை அழகன் தமிழ்மணி தொடர்ந்து விவரிக்கிறார்.

அன்புடன் உபசரித்த ரஜினி தம்பதி

“முதல் கட்டப் படப்பிடிப்பை ஏவி.எம் ஸ்டுடியோவில் முடித்துவிட்டு, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முழுவதையும் சென்னை சாந்தோமில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், 300 மாணவ, மாணவிகளை வைத்து நடத்திக்கொண்டிருந்தோம். இந்தப் படத்துக்காக ரஜினி தந்த ஒத்துழைப்பை என்றைக்கும் மறக்க மாட்டேன். ஏனென்றால், நான் நினைத்ததுபோலவே ரஜினி கொடுத்திருந்த 6 நாள் கால்ஷீட் போதவில்லை. அதுவரை நடித்திருந்த காட்சிகளை ‘ரஷ்’ பார்த்த ரஜினி, ‘படம் இவ்வளவு சிறப்பாக வளர்ந்துகொண்டிருக்கிறது. நான் மேலும் 8 நாட்கள் கால்ஷீட் கொடுக்கிறேன். கவலைப்படாமல் படம் பண்ணுங்கள். படம் நன்றாக வருவதும், ரசிகர்கள் கொடுக்கும் காசுக்கு உரியதாக இருப்பதும் முக்கியம். அவர்கள் வந்து நான் படத்தில் அதிக நேரம் வரவில்லையே என்று ஏமாந்து செல்லக் கூடாது’ என்று சொன்னார். அதுமட்டுமல்ல; சில செட் உடைகளை மட்டும் பயன்படுத்தி நடித்தார். தனக்கென தனி மேக்கப் மேன், டச்-அப் பாய் என்று யாரையும் அமர்த்திக்கொள்ளவில்லை. தயாரிப்பாளர்களாகிய எங்களுக்குக் கூடுதல் செலவு வராமல் பார்த்துகொண்டார்.

இதையெல்லாம்விட ரஜினி இந்தக் கதையின் யதார்த்தத்துக்காக இன்னொரு காரியமும் செய்தார். திரைக்கதையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டுக்குச் சென்று மீனா சந்திப்பது போல் ஒரு காட்சி வரும். அதைச் சொன்னதும், “இந்தக் காட்சியை வேறு எங்கும் போய் எடுக்காதீர்கள். படத்தில் நான் நானாகவே வரும்போது, எனது வீடு மட்டும் கற்பனையாக இருந்தால் நன்றாக இருக்காது. அந்தக் காட்சியை என் வீட்டிலேயே படமாக்கிக்கொள்ளுங்கள்” என்று கூறினார். இப்படிப்பட்ட ஒரு நல்மனம் கொண்ட கலைஞனை சினிமாவில் பார்ப்பது அரிது.

ரஜினியின் வீட்டில் படப்பிடிப்பு நடந்த அன்று காலையில், தன்னுடன் காலை சிற்றுண்டி அருந்த வரும்படி கூறிவிட்டார். அவர் அன்புடன் அழைத்து மறுத்தால் நாகரிகமாக இருக்காது என்பதால், கொஞ்சம் தயக்கத்துடன்தான் சென்றோம். பார்த்தால், டைனிங் டேபிளில் அவரது துணைவியார் லதா தன் கைப்பட சமைத்திருந்த விதவிதமான சிற்றுண்டி வகைகள். லதாவையே எங்களுக்குப் பரிமாறும்படி கூறி, எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தார். இத்தனைக்கும் லதா அப்போது கர்ப்பிணியாக இருந்தார். அங்கே படப்பிடிப்பு நடந்த இரண்டு நாட்களும் படக்குழுவில் இருந்த அனைவரையும் லதா தமிழ்க் கலாச்சாரத்துக்கே உரிய முறையில் விருந்தோம்பல் செய்து உபசரித்தார்.

அந்தச் சமயத்தில் எனக்கு ஓர் எண்ணம் உதித்தது. லதா ரஜினிகாந்த் நல்ல பாடகி என்று தெரியும். அவரை இந்தப் படத்தில் இடம்பெறும் ‘கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே’ பாடலைப் பாடச் செய்தால் என்ன?! உடனே இதை ரஜினியிடம் கேட்டோம். ‘லதா சம்மதித்தால் தாராளமாகச் செய்யலாம்’ என்றார். இதை இளையராஜாவிடம் சொன்னபோது அவரும் ஒப்புக்கொண்டார். வாலி அவர்களுடைய வரியில் லதா ரஜினிகாந்த் பாடிய அற்புதமான அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. படத்தைப் பார்த்த அத்தனை ரசிகர்களும் அந்தப் பாடலையும் கருணை இல்லத்தில் வளரும் குழந்தைகளையும் பார்த்து கண்ணீர் சிந்தினார்கள்.

சலவை நோட்டில் ரஜினிக்குச் சம்பளம்!

படத்தின் முதல் பிரதி தயாரானதும் ரஜினி தம்பதியை அழைத்து திரையிட்டுக் காட்டினோம். படத்தைப் பார்த்த ரஜினி, ஒரு எளிய ரசிகனைப்போல பல இடங்களில் கண்கலங்கி அழுதார். ரஜினி இப்படி அழும்போதெல்லாம் லதா கண்களைத் துடைத்துவிடுவார். இதைக் கவனித்துகொண்டிருந்த நான் வியந்துதான்போனேன்.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் நடித்துகொண்டிருந்தபோது, ஒரு முழு நீளப் படத்தில் நடிக்க ரஜினி 25 லட்சம் ஊதியம் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால், இது அவருக்கு சற்று அதிகக் காட்சிகளில் வரக்கூடிய கௌரவத் தோற்றம் என்றபோதும், ‘இந்தப் படத்துக்கு எனக்கு ஊதியம் வேண்டாம். அப்படிக் கொடுத்தே தீருவோம் என்று நீங்கள் நினைத்தால், அதையும் சேர்த்து நட்ராஜுக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்றார். கதையையும் அதில் தனது பங்களிப்பின் அவசியத்தையும் புரிந்துகொண்டு 6 நாள் கால்ஷீட்டுக்குப் பதிலாக 14 கால்ஷீட் கொடுத்த ரஜினியின் அந்த அறிவுரையை மட்டும் ஏற்றுக்கொள்ள எங்களுக்கு மனம் வரவில்லை. ரஜினிக்கு 3 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்தோம். ஒரு பெரிய வெள்ளித் தட்டை வாங்கினோம். வங்கிக்குப் போய் சலவைக் கட்டுகளாக 3 லட்சம் ரூபாயை வாங்கிவந்தோம். பணத்தை வெள்ளித் தட்டில் வைத்து, அதைப் பட்டுத்துணியால் போர்த்தி, ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் கொடுத்தோம்.

அப்போது ரஜினி சொன்னார் - ‘கதை சொல்கிறபடி யாரும் எடுக்க மாட்டார்கள். எப்படியிருந்தாலும் அதில் சில மாற்றங்கள் வந்துவிடும். ஆனால், கதை எப்படிச் சொன்னீர்களோ…. அப்படியே எடுத்திருக்கிறீர்கள். இன்னொன்றுக்காகவும் உங்களைப் பாராட்ட விரும்புகிறேன். இந்தப் படத்தில் பாக்யராஜின் பங்களிப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டது, உங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஒரு சக திரைக்கதை எழுத்தாளரின் தலையீட்டை ஏற்றுக்கொள்வது அத்தனை எளிது கிடையாது’ என்று தூயவனின் இரண்டு கைகளையும் பிடித்து பாந்தமாக அணைத்துக்கொண்டார்.

பாக்யராஜின் திறமை பளிச்சிட்டது!

பாக்யராஜுக்கு இந்தக் கதை முன்னதாகவே தெரிந்திருந்ததையும் அதில் அவர் எதாவது ஒருவகையில் பங்களிக்க விரும்புகிறார் என்பதையும் நானும் தூயவனும் ரஜினியின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது சொன்னோம். அவ்வளவுதான்! ரஜினி எங்கள் கண் முன்பாகவே போனை எடுத்து பாக்யராஜ் அலுவலகத்துக்கு டயல் செய்தார். அவர் படப்பிடிப்பில் இருக்கும் தகவல் ரஜினிக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அழகன் தமிழ்மணியும் தூயவனும் ரஜினியிடம் விடைபெறும் முன்பே போன் ஒலித்தது. ‘ரஜினி சார் வணக்கம். எப்படியிருக்கீங்க?’ என்று லைனில் வந்துவிட்டார் பாக்யராஜ்.

ரஜினி அப்போது, ‘இந்தத் திரைக்கதை உங்களுக்கு நல்லா தெரியும். படத்துல உங்க பங்களிப்பு எப்படியிருந்தா நல்லாயிருக்கும்னு இந்நேரம் நிச்சயமாக நீங்க முடிவு பண்ணியிருப்பீங்க. சொல்லுங்க’ என்று பாக்யராஜிடம் கேட்டார். அப்போது பாக்யராஜ் சொன்ன பதிலை மறக்கவே முடியாது. ‘ரஜினி சார்… தூயவன் என்னுடைய குருமார்கள்ல ஒருத்தர். அவர்கிட்ட திரைக்கதை உதவியாளராக நான் 5 வருஷம் இருந்திருக்கேன். அவர்கிட்ட நான் கத்துகிட்ட விஷயங்கள் அதிகம். அவர் திரைக்கதையில இருக்கிறது எனக்கும் பெருமை. அவரையும் கௌரவப்படுத்துகிற மாதிரி’ என்று பாக்யராஜ் சொன்னதும் தூயவன் நெகிழ்ந்துவிட்டார்.

அப்படித்தான் கிருஷ்ண தேவராயராக ரஜினியும் அவருடைய புத்திசாலி மந்திரி தெனாலிராமனாக பாக்யராஜும் நடித்த அந்த காமெடி ஓரங்க நாடகம், அந்தப் படத்தில் இடம்பெற்றது. அந்தக் காட்சி இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. அந்த நாடகத்தில் வேறொரு ரஜினியையும் வேறொரு பாக்யராஜையும் பார்க்க முடியும். இன்றைக்கு அதெல்லாம் சாத்தியமல்ல” என்று சொன்ன அழகன் தமிழ்மணி, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தின் வியாபாரம் பற்றிப் பேசினார்.

24 லட்சம் வியாபாரம்

“ஒரு விநியோக ஏரியாவுக்கு 3 பிரதிகள் வீதம் என 8 ஏரியாக்களுக்கு 24 பிரதிகள் அச்சிட்டு ஏரியா உரிமையை விற்பதுதான் வழக்கம். ஆனால், வசதி இருப்பவர்கள் ரஜினி படம் என்றால் டபுளாக பிரதிகளை அச்சிடுவார்கள். எங்களால் 24 பிரதிகளுக்கு மேல் அச்சிட வசதியில்லை. ஒரு பிரதி 1 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் 24 லட்சம் ரூபாய்க்குப் படத்தை விற்பனை செய்தோம். படத்தை வாங்கிய அனைவருக்கும் பலமடங்கு லாபம். ஆனால், சம்பளம், பைனான்ஸ் ஆகியவற்றை செட்டில் செய்ததுபோக தயாரிப்பாளர்களான எனக்கும் தூயவனுக்கும் தலா ஒன்றேகால் லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைத்தது. அந்தப் படத்துக்கு ரசிகர்களும் விமர்சகர்களும் கொடுத்த பாராட்டுகளையே இன்றளவும் லாபமாக நான் பார்க்கிறேன். மானுட வாழ்வில் மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கும் குழந்தைகளை, மனிதர்களை நாம் எவ்வாறு நடத்த வேண்டும், அவர்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்ன படத்தில் சூப்பர் ஸ்டாரின் பங்களிப்பு இருந்ததால்தான் அந்தப் படம் சொன்ன செய்தி மக்களைச் சென்றடைந்தது. அந்தப் படம் மக்கள் மனதில் தாக்கத்தை உருவாக்கவும் தவறவில்லை. அதையெல்லாம் மறக்க முடியாது” என்று நெகிழ்கிறார் அழகன் தமிழ்மணி.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in