‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினியுடன் மேனகா...
‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினியுடன் மேனகா...

ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் 48

ரஜினி சொல்லித் தந்த மந்திரம்!

ரஜினியை சூப்பர் ஸ்டாராகப் பார்த்துப் பழகிய புத்தாயிரத் தலைமுறை ரசிகர்கள், அவர் நடிப்பிலும் சாகசங்களை நிகழ்த்தக் கூடிய அசாத்தியக் கலைஞன் என்பதைப் புரிந்துகொள்ள ‘நெற்றிக்கண்’ படத்தைப் பார்த்தால் போதும்.

வில்லன் தன்மை பொருந்திய எதிர்மறைக் கதாபாத்திரமாகத் தந்தை. அப்படியே நேரெதிராக நேர்மையை விரும்பும் நாயகனாக மகன் கதாபாத்திரம். இருவருக்கும் மோதல் நடக்கும் காட்சிகளில் அப்பா ரஜினி அனலைக் கக்கினால்... அன்பின் புனலாக மகன் ரஜினி அம்மாவிடமும் தங்கையிடமும் காதலியிடமும் பெருக்கெடுத்து பாய்ந்திருப்பார். இரண்டாம் பாதியில் அப்பாவுக்கும் மகனுக்கும் மோதல் வலுக்கும் கட்டங்களில் அனுபவக் கெத்து காட்டுவார் அப்பா. மகனோ, பெரியவர் மனம் புண்படாமல், அதேநேரம் எள்ளல் நடிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தி கவர்ந்துகொண்டுவிடுவார்.

ரிஸ்க் எடுத்த ரஜினி!

ஒரே படத்தில் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து இரண்டும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் என்று நம்பவைத்த ரஜினி, வசனங்களை உச்சரிப்பதில் நடிப்பின் பங்கை அதிகரித்துக் காட்டிய கலைஞராகவும் ‘நெற்றிக்கண்’ படத்தில் ஒளிர்வார். “நான் சிங்கம் என் முன்னாலே நீ எல்லாம் ஒரு கொசு”, “சிங்கம் வந்தா அதுதான் வலைக்குள் சிக்கும். ஆனா கொசு வந்தா நாமே வலைக்குள் போய் ஒளிஞ்சிக்க வேண்டி வரும்”, “நீ சொல்ற உபதேசத்த கேக்குறதுக்கு நான் ஒன்னும் அந்த ஈஸ்வரன் இல்ல டா.., நான் கோடீஸ்வரன்”, “இளமை பொறுமை கடமை இதுதான் என் வலிமை” என்று பன்ச் வசனங்களைக் கதாபாத்திரங்களின் குரலாக, அவற்றுக்கே உரிய குணத் தோரணையுடன் உச்சரித்துக் காட்டியிருப்பார்.

பெண்ணாசை பிடித்த பெரிய மனிதனாக, கத்தி மேல் நடக்கும் கதாபாத்திரம் ‘நெற்றிக்கண்’ சக்கரவர்த்தி. கொஞ்சம் சறுக்கினாலும் தன்னைக் காணவரும் மக்கள் சட்டென்று முகம் சுழித்துவிட வாய்ப்பு அதிகம். சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கும் நேரத்தில் இப்படி ஒரு முயற்சி சறுக்கினால், தன்னுடைய திரைப்பயணத்துக்கு தடையாகிவிடும் என்று தெரிந்தும், அந்தக் கதாபாத்திரத்தை துணிச்சலோடு ஏற்று, அதை ஜனங்கள் கொண்டாடும் விதத்தில் நடித்துக் காட்டி, சமூகத்தில் சக்கரவர்த்திகளும் உண்டு என எண்ண வைத்துவிட்டார். நக்கீரர் கதையில் வரும் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற கருத்தை எடுத்துக்காட்டிய ‘நெற்றிக்கண்’ ரஜினியின் திரைப் பயணத்தில் பொழுதுபோக்குச் சித்திரமாகவும், நல்ல செய்தி சொன்னவகையிலும் மைல்கல்லாகிப் போனது. அப்படிப்பட்ட படத்தின் மூலம் பளிச்சென்று தமிழ் ரசிகர்களுக்கு தெரியவந்தார் மேனகா. அவருடைய மகளும் இன்று தென்னிந்திய சினிமாவில் முத்திரை பதித்துகொண்டிருக்கிறார். அவர்தான் கீர்த்தி சுரேஷ். ‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர். ரஜினியுடன் நடித்த நினைவுகளை நமக்காகப் பகிர்ந்திருக்கிறார். ஓவர் டூ மேனகா சுரேஷ்:

தொடாமல் நடித்த ரஜினி!

“1980-ல், ‘நான் டைரக்ட் பண்ற படத்துல ரஜினி சாரோட நடிக்கிறீங்களா?’ன்னு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சார் என்கிட்ட கேட்டார். அப்போ என்கிட்ட கால்ஷீட் இல்ல. மலையாளப் படங்கள்ல பிஸியாக நடிச்சுக்கிட்டு இருந்தேன். அடுத்த வருஷமே மறுபடியும் எஸ்.பி.முத்துராமன் சார்கிட்டேயிருந்து போன். ‘என்னம்மா... எப்படியிருக்கே? எனது இயக்கத்தில் அடுத்த படம், அதே தயாரிப்பு, ரெண்டாவது முறையா கேட்கிறேன், நடிக்கிறியா?’ என்றார். நான் ‘ஹீரோ யார் சார்?’ என்றேன். ‘அதே ரஜினிதான்மா’ என்றார். உற்சாகமாக ஓகே சொன்னேன். கதை கூடக் கேட்கல. அப்படித்தான் ‘கழுகு’ படத்துல தவறவிட்ட வாய்ப்பை ‘நெற்றிக்கண்’ படத்தில் பிடிச்சேன்.

மகள் கீர்த்தி சுரேஷுடன் மேனகா
மகள் கீர்த்தி சுரேஷுடன் மேனகா

‘முதல் ஷெட்யூல் ஷூட்டிங் ஊட்டியிலம்மா... கேரளத்துலேர்ந்து நேரா ஊட்டிக்கு வந்திடு’ன்னு சொன்னார் டைரக்டர். முதல்நாள் படப்பிடிப்புக்கு செம ஸ்டைலா டிரஸ் பண்ணி, தலைமுடியை கர்லிங் எல்லாம் பண்ணிக்கிட்டுப் போனேன். ‘உன்னோடது ரொம்ப அமைதியான பாவப்பட்ட பொண்ணு கேரக்டர். நீ வரும்போதே அய்யோ பாவம்னு ஆடியன்ஸ் நினைக்கணும். தலைய நல்லா படிய வாரிக்கிட்டு அப்பாவி மாதிரி வா’ என்றார். ‘அய்யோடா!’ என்று ஆகிவிட்டது அவர் சொன்னபடியே ரெடியாகிப் போனேன். எடுத்ததுமே 'ராமனின் மோகனம்' பாடல் காட்சியை ஷூட் பண்ணினார். அந்தப் பாட்டுல ஓடி வரணும். அதுவரைக்கும் எந்தப் படத்துலேயும் நான் ஓடி வர்ற மாதிரி நடிச்சதே இல்ல. அதனால ஓடி வரச்சொன்னதும், ஸ்கூல் பிள்ளைங்க ஓட்டப் பந்தயத்தில ஓடுற மாதிரி தடால் புடால்னு ஓடிவந்தேன். ரஜினி சார் விழுந்து விழுந்து சிரிச்சார். ‘இதுவரைக்கும் இந்த மாதிரி சீன்ல நீ நடிச்சதே இல்லியா?’ன்னு கேட்டு, அவரே என் தோள்ல கை போட்டுக் கூட்டிட்டுப் போனாரு. ‘இந்த மாதிரி ஓடணும்’னு அழகா, மெல்லமா ஓடச் சொல்லித் தந்தாரு. ஓடிட்டு வந்ததும் அவர்கிட்டதான் முதன்முதலா, ‘ஓகேவா சார்?’னு கேட்டேன். அவர் கைதட்டிப் பாராட்டினார். ரஜினி சார், தன்னோட கதாநாயகியைத் தொடாமல் நடிச்ச படம் அதுதான்!

ஆறுதலும் மந்திரமும்

அந்தப் பாடல் ஷூட்டிங் அப்போ, எனக்குத் தமிழ் சரியா தெரியல. பாடல் காட்சியில வாயைத் தப்புத் தப்பா அசைச்சிட்டேன். அந்த பாடலைப் படம் பிடிச்ச டான்ஸ் மாஸ்டர் கிரிஜா எல்லார் முன்னாடியும் என்னைக் கடுமையா திட்டிட்டாங்க. இப்ப கூட பிள்ளைங்களோட ஊட்டிக்குப் போனா, பொட்டனிக்கல் கார்டனைப் பார்த்ததும் அப்போ திட்டு வாங்கினதுதான் ஞாபகத்துக்கு வரும். அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. அப்ப ரஜினி சார் தான் ஆறுதல் சொன்னார். ‘உனக்குத் தமிழ் புரியல... அதனால தான் சரியாப் பண்ண முடியல. பாட்டைத் திரும்பத் திரும்ப நல்லா கேட்டுக்கோ. வருத்தப்படாதே... நீ நல்லாத்தான் பண்ற’ என்றார். பிறகு, ஒரு மந்திரமும் சொல்லித் தந்தார். அந்த மந்திரம், ‘பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயஜ பஜதாம் கல்ப விருட்ஷாய நமதாம் காமதேனவே’. இன்னிக்கும் சுவாமி முன்னாடி அந்த மந்திரத்தைச் சொல்லும்போது எனக்கு ரஜினி சார் ஞாபகம்தான் வரும்.

ஊட்டி ஷூட்டிங்ல ஒருநாள் எனக்கு சீன் எதுவும் இல்ல. ரஜினி சாருக்கு ஃபைட் சீன் எடுத்தாங்க. காலையில 7.30 மணிக்கு என்னோட அறைக் கதவைத் தட்டினார் ரஜினி சார். என்னோட அப்பா கதவைத் திறந்து, ‘என்னங்க?’ன்னு கேட்டார். அதுக்கு, ‘நான் ஷூட்டிங் போறேன் சார்.. ஜில்லு (மனைவி லதாவை அப்படித்தான் செல்லமாக அழைப்பார்) ரூம்ல தனியா இருக்காங்க. மேனகாவைக் கொஞ்சம் அவங்க கூட இருக்கச் சொல்லுங்க ப்ளீஸ்..’ என்றார். நான் லதா அக்கா கூட சாயங்காலம் வரைக்கும் ஜாலியா பேசிக்கிட்டு இருந்தேன். திடீர்னு அவங்க முகம் கவலையா மாறிப்போச்சு! ‘ஃபைட் சீன் ஷூட்டிங்னாலே பயமா இருக்கு மேனகா. சமீபத்துல ஆந்திரால ஃபைட் சீன் எடுக்கும்போது அடிப்பட்டு ஒரு நடிகர் இறந்திட்டாருன்னு கேள்விப்பட்டேன். அதுதான் பயமா இருக்கு’ என்று கலங்கினார். ‘அதெல்லாம் சாருக்கு ஒண்ணும் ஆகாதுக்கா’ என்று சொன்னேன். ஷூட் முடிஞ்சு ரஜினி சார் திரும்பி வரும்போது சாயங்காலம் 6.30 மணி ஆகிவிட்டது. வந்ததும் ‘இவ்வளவு நேரம் இங்கேயே தான் இருந்தீங்களா?’ என்று கேட்டு, திரும்பத் திரும்ப நன்றி சொன்னார். அவ்வளவு பரபரப்பான ஷூட்டிங்கிலும் மனைவியை எவ்வளவு அக்கறையுடன் பார்த்துக்கொண்டார் என்பதை நினைச்சா ஆச்சரியமா இருக்கும்!

மகளுக்குத் தந்த மரியாதை

“இப்போ நான் சொல்லப்போறது என் மகளுக்கு நடந்த அனுபவம். ‘அண்ணாத்த’ படத்துல தங்கையா யாரை நடிக்க வைக்கலாம்னு இயக்குநர் சிவா, ரஜினி சார்கிட்ட சாய்ஸ் இருக்கான்னு கேட்டப்போ, ‘நீங்க செலக்ட் பண்ணலேன்னா... என்னோட சாய்ஸ் கீர்த்தி சுரேஷ்’ன்னு சொல்லியிருக்கார். உடனே சிவா ‘சூப்பர் சாய்ஸ்’ன்னு சொல்லியிருக்கார். அப்போ சென்னையில ‘காலா’ படத்தோட ஷுட்டிங் நடந்த அதே இடத்துலதான், கீர்த்தி நடிச்ச ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தோட ஷூட்டிங்கும் நடந்தது. ரஜினி சாரை சந்திக்க கீர்த்தி நேரம் கேட்டிருக்கா. சின்ன வயசுலேர்ந்து அவ ரஜினி சாரோட ஃபேன். சாயங்காலம் 6 மணிக்கு ஷூட்டிங் பேக் அப் ஆனதும் மீட் பண்ண நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கார். ஆனா, என் மகளுக்கு ஷூட்டிங் முடிய 6.15 ஆகிப்போச்சாம். வேக வேகமாக ஓடிப்போய் பார்த்தா, ரஜினி சார் கீர்த்திக்காக கேரவன்ல காத்துக்கிட்டு இருந்திருக்கார்.

ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ்
ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ்

உள்ளே நுழையும்போதே, ‘வாங்கம்மா.. வாங்க.. என்னோட நடிச்ச ஹீரோயினோட பெண்ணே வாங்க.. சினிமாவுல கலக்குறீங்க. வாழ்த்துக்கள். என்னோட தங்கையா நடிக்க உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே...’ என்று கேட்டிருக்கிறார். இந்தப் பக்குவமும் அடக்கமும்தான் ரஜினி சார் சூப்பர் ஸ்டாரா இருக்கக் காரணம்னு நான் நினைக்கிறேன். ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் ரஜினி சாரோட நடிச்ச நாட்களை இன்னும் பேசிக்கிட்டு இருக்கா கீர்த்தி. ‘மனிதர்களை மதிக்கிறதுல தலைவரை மிஞ்ச ஆளே கிடையாதும்மா'ன்னு சொல்லிக்கிட்டே இருக்கா” என்று சொல்லி நெகிழ்ந்துபோகிறார் மேனகா சுரேஷ்.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி ஞானம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in