ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 47

ரஜினியை வைத்து படம் இயக்குவதை நிறுத்திய கேபி!
‘நெற்றிக்கண்’ படத்தில்...
‘நெற்றிக்கண்’ படத்தில்...Scanned in Chennai R.K.Sridharan

வில்லனுக்கு முடிவுரை எழுதும் ‘மாஸ் மசாலா’ யுத்தத்தில், ‘பைரவி’ படத்திலிருந்தே பங்கெடுக்கத் தொடங்கிவிட்டார் ரஜினி. அந்தப் படத்தைத் தொடர்ந்து வந்த, ’குப்பத்து ராஜா’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘பில்லா’, ‘காளி’, ‘பொல்லாதவன்’, ‘கழுகு’ ஆகிய படங்கள் அவரை கமர்ஷியல் சினிமாவின் வசூல் நாயகன் ஆக்கின. இதன்பின்னர், ரஜினியை வைத்துப் படம் இயக்குவதை கேபி நிறுத்திக்கொண்டார்.

காரணம், இயக்குநர் சிகரத்தின் படைப்புப் பாதை, ரஜினியின் நாயக பிம்ப சினிமாவுடன் இணையமுடியாமல் போனதுதான். அதேநேரம், “நீங்கள் அறிமுகப்படுத்திய ரஜினிகாந்தின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டவர்களுக்கு, “ரஜினி ஒரு நடிப்புச் சுரங்கம், அவருடைய திறமை கமர்ஷியல் படங்களில் வீணாகிறது” என்று வெளிப்படையாகவே பதில் சொன்னர் கேபி. கடைசியாக, கலாகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினியின் நகைச்சுவை நடிப்பை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டியிருந்த கேபி, சொந்தமாக ‘கவிதாலயா’ பட நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது, அதன் முதன் தயாரிப்பில் ரஜினி நடிக்க வேண்டும் என்று விரும்பி, ரஜினியை அழைத்து விஷயத்தைச் சொன்னார்.

சிகரம் சிகரம்தான்!

“நீ இன்று சூப்பர் ஸ்டார்... உனக்கென்று ஒரு மார்க்கெட் உருவாகிவிட்டது. இந்த சமயத்தில் ஒரு மாறுதலாக உனது ரசிகர்களுக்கு ஒரு விருந்து கொடு. முழுவதும் உனது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் கதையை உனக்காகக் கொண்டுவந்திருக்கிறேன். வயதான அப்பா - மகன் என இரட்டை வேடம். அப்பா பெண்கள் மீது சபல புத்தி கொண்டவர்... ஒரு நடுத்தர வயதுக் கிழவன் வேடம். மகன் அவருக்கு நேர் எதிர்மாறானவன். பெண்களை மதிப்பவன். இந்தப் படத்தை நான் இயக்கப்போவதில்லை. உனக்குச் சம்மதமா, என்ன சொல்கிறாய் ரஜினி?” என்று சொன்னார் கேபி.

அவர் இப்படிச் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ரஜினி, “உங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் நடிப்பது எனக்குப் பெருமை. நீங்கள் சொன்னால் 100 வயது கிழவனாக நடிக்கவும் நான் தயார்!” என்றார். அப்போது கேபி சொன்னார், “உனக்கும் எஸ்பி.முத்துராமனுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை நான் மதிக்கிறேன். இந்தப் படத்தை அவர்தான் இயக்கப்போகிறார்” என்றார். ரஜினி “டபுள் ஓகே” என்றார்.

இதன் பின்னர், கேபி தன்னை அழைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்தது பற்றி எஸ்பி.முத்துராமன் விவரிப்பதைப் பாருங்கள். “பாலசந்தர் சார் சொந்தப் பட நிறுவனம் தொடங்கியதும் என்னைக் கூப்பிட்டிருந்தார். நானும், வழக்கம்போல் மேற்பார்வை வேலைகள் ஏதாவது இருக்கும் என்ற எண்ணத்தோடு சென்றேன். போனபிறகு, ‘கவிதலாயாவின் முதல் படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். உங்களுக்கும், அவருக்கும் அலைவரிசை சரியா இருக்கு. அந்தப் படத்தை நீங்கதான் இயக்கப் போறீங்க?’ என்றார். எனக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், தயக்கமும் இருந்தது.

என் தயக்கதை சட்டென்று புரிந்துகொண்டுவிட்ட கேபி சார், ‘என்னப்பா நீ... இப்படி யோசிக்கிறே..? ஃபுல் ஃப்ரீடம் எடுத்துக்கோ... நான் படம் இயக்கும்போது யாரோட தலையீடும் இருக்கக்கூடாதுன்னு நினைப்பேன். உனக்கும் அதுதான். பஞ்சு அருணாசலத்துக்கும், ஏவி.எம் நிறுவனத்துக்கும் எப்படிப் படம் இயக்குவியோ அதே மாதிரி இங்கேயும் இயக்கு. என் தலையீடு துளிகூட இருக்காது!’ என்று தைரியம் கொடுத்தார். கேபி சார் சொன்னதுடன் நிற்கவில்லை. அதன்பின்னர் ‘கவிதாலயா’வுக்கு நான் இயக்கிய 5 படங்களிலும் அவர் எந்த தலையீடும் செய்யவில்லை. சிகரம் சிகரம்தான்” என்கிறார் எஸ்பி.எம்.

வெளுத்துக்கட்டிய ரஜினி!

பெரும் கோடீஸ்வரத் தொழிலதிபரான அப்பா ரஜினி, வயதுக்கு மீறிய உல்லாச உணர்வு கொண்டவர். மக்கள் தொடர்பு அலுவலர் வேலைக்கான நேர்காணலுக்கு வரும் சரிதாவிடம் தன் சபல அணுகுமுறையைக் காட்டி, கன்னத்தில் சப்பென்று அறை வாங்கிவிடுவார். அதைச் சமாளித்துக்கொண்டு, அவரையே பணியில் அமர்த்திவிடுவார். ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கி, தன்னுடைய ஆசைக்கு அவரை இணங்கவைத்து விடுவார். இது மகன் ரஜினிக்கு தெரியவருகிறது. வெட்கித் தலைகுனியும் அவர், அப்பாவை எப்படித் திருத்தலாம் என யோசிக்கும்போது அதிரடியாக ஒரு யோசனை பிறக்கிறது!

அப்பாவிடம் போய், “நான் இவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். இவர்தான் என் காதலி’ என்று சரிதாவைக் காட்டுகிறார். இதைக் கேட்டு அப்பா ரஜினிக்கு திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் இக்கட்டான நிலைமை. இறுதியில் மகனின் உத்திக்கு வெற்றி கிடைக்க, விபத்தில் சிக்கி கால்களை இழக்கும் அப்பா ரஜினி, மனம் திருந்தி அனைவரது முன்னிலையிலும் சரிதாவிடம் மன்னிப்புக் கேட்டு, மனிதனாக முயற்சிப்பதுடன் ‘நெற்றிக்கண்’ படம் முடியும்.

செல்வச் செருக்குடன் கம்பீர மிடுக்கு குறையாமல் அப்பா சக்கரவர்த்தியாக ரஜினியின் நடிப்பு, ரசிகர்களை புருவம் உயர வைத்தது. ஸ்திரி லோலன் கதாபாத்திரம் ஒன்று எப்படியிருக்கும் என்பதற்கான முன்மாதிரியை, தன்னுடைய அட்டகாசமான நடிப்பின் மூலம் அந்தப் படத்தில் கொண்டுவந்து காட்டினார் ரஜினி. மகன் கதாபாத்திரத்தை அப்படியே தலைகீழாக மாற்றி அதில் அமைதியான நடிப்பைக் கொண்டுவந்தார். கல்லூரி மாணவனாக தன்னுடைய ரசிகர்களுக்கு, அதிரடியும் ஸ்டைலும் கலந்த குங்பூ சண்டையும் போட்டுக்காட்டினார்.

‘நெற்றிக்கண்’ படத்தில் லட்சுமி, சரிதா என நடிப்பில் மிண்ணும் இரண்டு ரத்தினங்கள் இருந்தபோதிலும், அப்பா - மகனாக நடிப்பில் ரஜினியின் கொடியே படம் முழுதும் பறந்தது. இரண்டு ரஜினிகளும் நடத்திய ‘மவுன யுத்தம்’ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதிய பாலசந்தர், கதை, வசனம் எழுதும் பொறுப்பை விசுவிடம் கொடுத்தார். பாடல்களை கண்ணதாசன் எழுத, இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. 1981 ஆகஸ்டு 15-ம் தேதி வெளியான ‘நெற்றிக்கண்’ நூறு நாட்களுக்கு மேல் ஓடி, மசாலா படங்களில் மட்டுமல்ல; அழுத்தமான கதைப் படங்களிலும் ரஜினி சூப்பர் ஸ்டார்தான் என்பதை நிரூபித்தது.

‘நெற்றிக்கண்’ படத்துக்கு ரஜினியிடமிருந்து இத்தனை சிறந்த நடிப்பை எஸ்பி.எம் எதிர்பார்த்தாரா? அதை அவரே பகிந்துகொண்டிருக்கிறார். “அப்பா வேடத்துக்கு ரஜினி வசனம் பேசிய முறை, ஒரு கோடீஸ்வரருக்கான ஹைஃபை ஸ்டைலை தனது வேகமான ஸ்டைலுடன் இணைத்தது எல்லாமே ரஜினியின் திறமை. அப்பா ரஜினிக்கு மனைவியாக நடித்த லட்சுமியை நான் நடிப்புப் பிசாசு என்பேன். அந்த அளவுக்கு பிரமாதப்படுத்தினார். சரிதாவின் நடிப்பைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படியே கேபி நடிப்பது போலவே இருக்கும். அந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரும் அவ்வளவு சிறப்பான முத்திரையை பதித்திருப்பார்களா என்று என்னால் சொல்லமுடியவில்லை. கிட்டத்தட்ட சரிதாவுக்கு அது டைப் காஸ்ட்தான். அந்தக் குறை தெரியாதவாறு நடிப்பால் சிறப்பு செய்தார்!

படத்தில் இரண்டு ரஜினி கதாபாத்திரத்தையும் ஒளிப்பதிவில் பாபு மிகவும் சிறப்பாக காட்டியிருப்பார். மிக்சல் கேமராவில் ஒரு பக்கம் மாஸ்க் வைத்து மகன் ரஜினியை எடுத்துவிட்டு, அடுத்து அதை மறைத்து இன்னொரு பக்கம் அப்பா ரஜினியை ஷூட் செய்வோம். கொஞ்சம்கூட திரைக்கு இடையே இடைவெளியோ, கோடோ தெரியாமல் இரண்டு கதாபாத்திரங்களையும் படமாக்கினோம். இரண்டு ரஜினிகளும் தோன்றும் காட்சிகளை உடனுக்குடன் காலம் கடத்தாமல் எடுத்துவிடவேண்டும். அந்த புகழ் முழுதும் ஒளிப்பதிவாளர் பாபு, ரஜினி ஆகிய இருவருக்கு மட்டுமே சேரும். காரணம், அப்பா, மகனாக உடனுக்குடன் கூடு பாய்ந்து நடிப்பது ஒரு நடிகனுக்கு பெரிய சவால். அதை கவனமாக நடித்துக்கொடுத்து அசத்தினார் ரஜினி” என்று கூறியிருக்கிறார் எஸ்பி.எம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் என அனைத்து அம்சங்களும் ஜாம்பவான்களின் பங்களிப்புகளாக அமைந்துவிட்ட நெற்றிக்கண் படத்தின் வெற்றியில், மகன் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மேனகாவுக்கும் ஒரு பங்கு இருந்தது. மேனகாவின் துறுதுறு நடிப்பையும், உள்ளங்கைகளில் அவர் பேனாவால் எழுதிக்கொண்டு செய்யும் வாலிப சேட்டைகளையும் கண்டு ரசிக்க, இளம் ரசிகர்கள் மீண்டும் திரையரங்குக்கு வந்தார்கள். ரஜினி சாம்ராஜ்ஜியம் அமைத்த படத்தில், தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக நடித்து, ‘ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்’ பாடல் காட்சியில் காதல் ரசம் சொட்ட நடித்த மேனகா, ரஜினியுடன் பழகிய நாட்களைக் குறித்து பல ரகசியங்களை நம்முடன் பகிர்ந்திருக்கிறார். அது அடுத்த வாரம்!

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in