இதே தேதி... முக்கியச் செய்தி: அலாஸ்காவை ரஷ்யாவிடமிருந்து வாங்கிய அமெரிக்கா!

கையெழுத்தானது ஒப்பந்தம்
கையெழுத்தானது ஒப்பந்தம்

ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிய சிக்கலான உறவும், பனிப்போரும் உலகப் பிரசித்தம். ஆனால், உலகின் பெரும் வல்லரசுகளான இரு நாடுகளுக்கும் மத்தியில் பல கொடுக்கல் வாங்கல்கள் நடந்தவண்ணம்தான் இருந்தன (இப்போதும் அது தொடர்கிறது என்பது வேறு விஷயம்). அந்த வகையில் ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா எனும் பகுதியை அமெரிக்கா வாங்கியது முக்கியமான நிகழ்வு. ஆனால், இந்த நில விற்பனை நடந்த காலகட்டத்தில் இரு நாடுகளும் பகை நாடுகளாக உருவாகியிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

பின்னணி

ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான சக்தியாக அமெரிக்கா உருவெடுக்க இந்நிகழ்வு முக்கியக் காரணியாக அமைந்தது. 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்யாவைப் பொறுத்தவரை, வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் முனைப்புடன் இருந்தது. குறிப்பாக, அலாஸ்காவில் குடியிருப்பு முகாம்களை உருவாக்கிவந்தது. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று தீர்மானித்த அமெரிக்கா, நேரடியாக ரஷ்யாவிடம் பேசி அலாஸ்காவை முறைப்படி வாங்க தீர்மானித்தது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருந்த சமயம் அது. அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் சிவார்டு, இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் எடுவர்ட் டெ ஸ்டோக்கிலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 1867 மார்ச் 30-ல் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு அமெரிக்க நாடாளுமன்றமும் ஒப்புதல் வழங்கியது. மொத்தம் 7.2 மில்லியன் டாலரைக் கொடுத்து அலாஸ்காவை வாங்கியது அமெரிக்கா (இன்றைய தேதிக்கு அதன் இந்திய மதிப்பு 1,150 கோடி ரூபாய்)!

7.2 மில்லியன் டாலருக்கான காசோலை
7.2 மில்லியன் டாலருக்கான காசோலை

1867 அக்டோபர் 18-ல் அலாஸ்காவின் சிட்கா நகரில், ஆளுநர் மாளிகைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். ரஷ்யக் கொடி இறக்கப்பட்டு அமெரிக்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

6,65,000 சதுர மைல் நிலப்பரப்பு கொண்டது அலாஸ்கா. அதாவது, டெக்சாஸ் மாநிலத்தைப் போல இரண்டு மடங்கு பெரிய நிலப்பகுதி; கலிபோர்னியாவைவிடவும் மூன்று மடங்கு பெரியது. கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாகத் தமிழக அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டைப் போலவே, இயற்கை வளம் நிறைந்த அத்தனைப் பெரிய நிலப்பகுதி அமெரிக்காவுக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய தேசியவாதிகள் இன்றும் குற்றம்சாட்டுவது உண்டு.

அமெரிக்காவில் நிலவிய அதிருப்தி

அலாஸ்காவை அமெரிக்காவுக்குக் கொடுப்பதில் ரஷ்யாவுக்குப் பெரிய ஆட்சேபம் ஏதும் இருக்கவில்லை. ஜார் இரண்டாம் அலெக்ஸாண்டர் இசைவாகவே இருந்தார். க்ரைமியா போருக்குப் பின்னர் அலாஸ்காவைத் தங்கள் வசம் வைத்திருப்பது சிரமமான காரியம் என்றே அவர் கருதினார். அப்போது ரஷ்யாவின் முக்கிய எதிரியாக இருந்த பிரிட்டன் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தி அலாஸ்காவைக் கைப்பற்றலாம் எனும் அச்சம் அவருக்கு இருந்தது. பேசாமல் அமெரிக்காவுக்கு அலாஸ்காவை விற்பதே நல்லது என்றும் கருதினார்.

ஆனால், வெறும் பனிப்பாறைகள் நிறைந்த வெற்று நிலத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்று அமெரிக்கப் பத்திரிகைகள் கரித்துக்கொட்டின. அப்போதைய அதிபர் ஆண்ட்ரூ ஜான்ஸன் கடும் விமர்சனக் கணைகளை எதிர்கொண்டார். இப்படியான எதிர்மறையான அம்சங்களுக்கு இடையில் இந்த நிலப் பரிவர்த்தனை வெற்றிகரமாக நடந்தது.

பல ஆண்டுகளுக்கு அலாஸ்காவில் குடியேற அமெரிக்காவின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அலாஸ்காவின் மலைப்பகுதிகளில் தங்கம் கிடைப்பதாக 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பரவிய தகவல்களையடுத்து அங்கு மக்கள் அணி அணியாகப் படையெடுக்கத் தொடங்கியது இன்னொரு சுவாரசிய வரலாறு.

அலாஸ்காவின் முக்கியத்துவம்

ரஷ்யாவிடமே அலாஸ்கா இருந்திருந்தால், இன்றைய புவி அரசியல் சூழலே முற்றிலும் மாறியிருக்கும் என க்ரைமியாவின் (உக்ரைனிடமிருந்து 2014-ல் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதி) பிரதமர் செர்கேய் அக்ஸியோனோவ் 2017-ல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருந்தார்.

உக்ரைன் மீது நடத்திவரும் போரின் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் நிலையில், அதற்குப் பதிலடியாக அலாஸ்காவை அமெரிக்காவிடமிருந்து மீட்டெடுக்கும் பணிகளை ரஷ்ய அரசு மேற்கொள்ளும் என ரஷ்ய அதிபர் புதினின் நண்பரும் அரசியல் தலைவருமான வியாசெஸ்லாவ் வொலோதின் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in