இதே தேதி... முக்கியச் செய்தி: ‘சுதந்திர இந்தியா’வின் பிரதமராகப் பொறுப்பேற்ற சுபாஷ் சந்திரபோஸ்!

இதே தேதி... முக்கியச் செய்தி: ‘சுதந்திர இந்தியா’வின் பிரதமராகப் பொறுப்பேற்ற சுபாஷ் சந்திரபோஸ்!

இந்திய விடுதலைக்காகப் போராடிய நம் தலைவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரப் பிரகடனத்தை அறிவிக்க அத்தனைப் பாடுபட்டார்கள். 1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரமடைந்தது என்றாலும்,1946 செப்டம்பர் 2-ல் பதவியேற்றுக்கொண்ட ஜவாஹர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுவிட்டது நாம் அறிந்த செய்தி. இந்த அரசில் ஜவாஹர்லால் நேரு துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். ஒரு பிரதமருக்குரிய அனைத்து அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்பட்டன. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது எனத் தீர்மானித்த பின்னர் பிரிட்டிஷ் அரசு முன்னெடுத்த முயற்சி இது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் முக்கியத் தலைவர் ஒருவரின் அருமுயற்சியால் சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டது. அது நாடு கடந்த இந்திய அரசு. அதை அமைத்தவர் சுபாஷ் சந்திரபோஸ்!

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படைகளில் இந்திய வீரர்கள் பயன்படுத்தப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார் சுபாஷ் சந்திரபோஸ். அந்தப் போரில், ஐரோப்பாவில் பல நாடுகளைக் கைப்பற்றி ஜெர்மனி மளமளவென முன்னேறிவந்தது. ஆசியாவைப் பொறுத்தவரை ஜெர்மனியின் கூட்டணியில் இருந்த ஜப்பானின் கை ஓங்கியிருந்தது.

அந்தச் சமயத்தில் ஜெர்மனி சென்று பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் ஹிட்லரிடம் பேசிய சுபாஷ் சந்திரபோஸ் இந்திய விடுதலைக்காக அவரிடம் உதவி கோரினார். அந்தப் போரின்போது ஜெர்மனிக்குப் பல்வேறு திட்டங்கள் இருந்தன. எனினும், போரில் ரஷ்யாவின் தாக்குதலால் பின்னடைவைச் சந்தித்த ஜெர்மனி, சுபாஷ் சந்திரபோஸுக்குச் சில உதவிகளைச் செய்தது. அதன்படி, ஆசியாவுக்குத் திரும்பிய சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானின் உதவியுடன் சிங்கப்பூரில் சுதந்திர இந்திய அரசை அமைத்தார். 1943 அக்டோபர் 21-ல், ஆஸாத் ஹிந்த் அல்லது சுதந்திர இந்தியா உருவானதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. சுதந்திர இந்திய அரசின் பிரதமராக சுபாஷ் சந்திரபோஸ் பதவியேற்றுக்கொண்டார். போர்த் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பொறுப்புகளையும் அவரே ஏற்றுக்கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏ) உயரதிகாரிகளுக்கும் அமைச்சகப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. சுதந்திர இந்திய வங்கி (Bank of Independence) அமைக்கப்பட்டது. சுபாஷ் சந்திரபோஸின் உருவப் படம் அச்சிடப்பட்ட கரன்ஸி நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

மதச்சார்பின்மை, மகளிர் உரிமை, சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவது என உயர்ந்த லட்சியங்களுடன் இந்த அரசை அவர் உருவாக்கினார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவைப் போலவே விடுதலைக்காகத் துடித்துக்கொண்டிருந்த அயர்லாந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியா நாடுகளின் தலைவர்கள் உருவாக்கிய தற்காலிக அரசுகளின் கூறுகளை உள்வாங்கி இந்த அரசு உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி தலைமையிலான அச்சு நாடுகளில் பெரும்பான்மையானவை இந்த அரசை அங்கீகரித்தன.

அந்தமான் தீவுகள், நாகாலாந்து மற்றும் மணிப்பூரின் சில பகுதிகளைக் கைப்பற்றிய ஜப்பான், அவற்றை சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான சுதந்திர இந்தியாவுடன் இணைத்தது. எனினும், முறையான சுதந்திர அரசாக அதை நிர்வகிக்க போதிய அவகாசம் சுபாஷ் சந்திரபோஸுக்குக் கிடைக்கவில்லை. உண்மையில், ஜப்பானும் உறுதியளித்தபடி ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதற்கிடையே, மணிப்பூரின் இம்பால்-கோஹிமா பகுதியில் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப் போரிட்ட இந்திய தேசிய ராணுவம் படுதோல்வியைச் சந்தித்தது. சுபாஷ் சந்திரபோஸ் மறைந்ததாக அறிவிப்பு வெளியான பின்னர் சுதந்திர இந்திய அரசின் ஆட்சிக்காலமும் முடிவுக்கு வந்தது.

இது தொடர்பாக, நெகிழ்ச்சியூட்டும் இன்னொரு தகவலும் உண்டு. தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட வணிகச் சமூகத்தினர் சிங்கப்பூரின் டாங்க் வீதியில் ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டியிருந்தனர். இந்திய சுதந்திரப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், சிங்கப்பூரில் இருந்த செல்வந்தர்கள், சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்துக்கு நன்கொடை அளிக்க விரும்பினர். அத்துடன் அந்தக் கோயிலுக்கு சுபாஷ் சந்திரபோஸ் வருகைதர வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், “அந்தக் கோயிலில் அனைத்து சாதி, மதத்தவரும் அனுமதிக்கப்பட்டால்தான் அங்கு வருவேன்” என்று நிபந்தனை விதித்தார் சுபாஷ் சந்திரபோஸ்.

இதையடுத்து, அத்தனை ஆண்டுகளாக அந்தக் கோயிலில் சமூக ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சாதி, மத பேதம் இல்லாமல் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு சமத்துவமான சமுதாயத்தை அமைப்பதில் சமரசம் காட்டாத தலைவராக இருந்தார் சுபாஷ் சந்திரபோஸ். இந்தத் தகவலை, சிங்கப்பூர், பாகிஸ்தான் நாடுகளுக்கான இந்தியத் தூதராகப் பதவிவகித்த டி.சி.ஏ.ராகவன் பதிவுசெய்திருக்கிறார்.

ஒருவேளை சுபாஷ் சந்திரபோஸின் முயற்சிகள் பலனளித்திருந்தால் இந்தியாவில் சமூக மாற்றத்துக்கான பலமான அஸ்திவாரம் அப்போதே அமைக்கப்பட்டிருக்கும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in