ஏனெனில்- 12: வாக்ரிகளின் துயர்மிகு வாழ்க்கை

ஏனெனில்- 12: வாக்ரிகளின் துயர்மிகு வாழ்க்கை

கோயில் அன்னதானத்தில் அவமதிக்கப்பட்டதாகக் குமுறலுடன் பேசிய வாக்ரி சமூகப் பெண்ணுடன் பந்தியில் அமர்ந்து அறநிலையத் துறை அமைச்சர் உணவருந்திய காட்சி, அவருக்கு நற்பெயரைத் தேடித் தந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, வாக்ரிகள் பொதுச் சமூகத்தால் நடத்தப்படும் விதம் குறித்த விவாதங்களும் தொடங்கியிருக்கின்றன. வாக்ரி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உரிமைக் குரல், நெடுநாட்களாகக் கண்டுகொள்ளப்படாதிருந்த அம்மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கும் காதுகொடுக்க வைத்திருக்கிறது.

தமிழில் மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியான பிலோ இருதயநாத், வாக்ரிகளைப் பற்றி 1985-ல் ‘யார் இந்த நாடோடிகள்?’ என்ற தலைப்பில் தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார். வாக்ரிகளைப் போல, மேலை நாடுகளில் வாழும் நாடோடிகள் ஜிப்ஸிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களது தாயகமும் இந்தியாதான் என்கிறார் இருதயநாத். அவர்களது மொழியில் இன்னும் இந்தியப் பூர்வக் குடிகளின் வார்த்தைகள் 40 சதவீதம் அளவுக்கு இருப்பதை அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்.

தன்னுடைய தலைச்சொட்டைக்கு மருந்து கொடுத்து குணப்படுத்திய வாக்ரி பெண்ணின் மீதான ஈர்ப்புதான், பிலோ இருதயநாத் ஆய்வுகளுக்கான தொடக்கம். அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களது வழக்கங்களைக் கேட்டறிந்து இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறார். அதில் ஒரு சில விஷயங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. சில, மிரட்சியையும்கூட அளிக்கின்றன.

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்படும் ஒரு வாக்ரி, காய்ச்சிய இரும்பைக் கையில் பிடித்தபடி பஞ்சாயத்துக்காரர்களைச் சுற்றிவந்த பிறகுதான், அப்படியொரு குற்றச்சாட்டை அவள் மீது சொல்ல வேண்டும். இந்தப் பழக்கத்தைத் தானே நேரில் பார்த்து உறுதிசெய்துகொண்ட பிறகுதான், தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் பிலோ இருதயநாத். அதுவே ஒரு பெண் தனது கணவனிடமிருந்து பிரிந்துசெல்ல விரும்பினால், அவனால் அணிவிக்கப்பட்ட 3 சரக் கருப்புக் கீரை மணியை அறுத்துவிட்டாலே போதுமானது. அதன்பிறகு, அவளுக்குப் பிறந்த குழந்தைகளோடு அவன் ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான். விவாகரத்து செய்யும் சுதந்திரம் பெண்ணிடமே இருந்தாலும், மாலைக்குள் ஒரு பெண் வீடு திரும்பாவிட்டால் கணவன் அவளைத் தள்ளிவைக்கலாம். பஞ்சாயத்தார் முன்னிலையில்தான் அவள் பின்பு கணவனோடு சேர முடியும். காலமாற்றத்தில் இதுபோன்ற சில விநோத வழக்கங்களை மெல்ல விட்டொழித்தும் வருகிறார்கள்.

நோய்கண்டு இறந்தவர்களை, பொழுது சாய்வதற்குள் புதைத்துவிட்டு அடுத்த ஊருக்குக் கிளம்பிவிட வேண்டும் என்ற வழக்கம் வாக்ரிகளிடம் இருந்துள்ளது. இறந்தவர்களைப் பற்றி அதன் பிறகு நினைக்கவே கூடாது என்பதுதான் அதற்கான காரணமாம். சிவப்பு நிறத் துணி மீது இவர்களுக்குத் தனி பிரியம் இருந்துள்ளது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கண்டிப்பாக மணிமாலை அணிய வேண்டும் என்பது அவர்களது சமூகத்தின் பொதுவிதி. செவ்வாய்க் கிழமையன்றும் சனிக்கிழமையன்றும் அவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் திருமணத்தைத் தவிர்க்கிறார்கள். குருணமோட்டோ என்று அழைக்கப்படும் குழுத் தலைவனை ஆண்கள், பெண்கள் இருவரும் சேர்ந்துதான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருகாலத்தில், குழந்தைப் பேறுக்காக மருத்துவமனை செல்பவர்கள் தங்களது கூட்டத்தாருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்ற வழக்கமும்கூட அவர்களிடம் இருந்துள்ளது.

காக்கையைச் சுடுவது தொடங்கி கடைக்குப் போய் துணி வாங்குவதுவரை பலவிதமாக அவர்கள் திரைப்படங்களில் நகைச்சுவையாக, பல சமயம் இழிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வாழும் வாக்ரிகள் தாங்கள் இரவில் காணும் கனவுகள் விரைவில் நடந்தேறும் என்று கடுமையான நம்பிக்கை கொண்டிருப்பதை, பிலோ இருதயநாத் தனது நூலில் விளக்கியிருக்கிறார். கனவில் எலியைக் கண்டால் விரோதிகள் ஏற்படுவர், கிழவனைக் கண்டால் செல்வம் ஓடிவரும், தன்னை நோக்கிப் பாம்பு வந்தால் காரியம் வெற்றிபெறும், தன்னைப் பிச்சைக்காரனைப்போல கனவுகண்டால் எதிர்காலத்தில் பணக்காரனாகலாம் என்றெல்லாம் அவர்கள் கனவுகளை அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். கனவில் காணும் எலிக்கும் பாம்புக்கும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அர்த்தம் எனக்கு வேறொன்றையும் நினைவுபடுத்திவிட்டது.

அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல்வயல்கள் எதிர்பாராத மழைக்கு மட்டுமல்ல, எலிகளின் படையெடுப்புக்கும் பயந்தாக வேண்டியிருக்கிறது. காவிரிப் படுகையில் வசிக்கும் வாக்ரிகள்தான் விவசாயிகளை அந்தத் தொல்லையிலிருந்து பாதுகாக்கிறார்கள். எலிகளைக் கிட்டிவைத்துப் பிடிப்பது அவர்கள்தான். வயல்களில் பதிக்கும் கிட்டிகளின் எண்ணிக்கையை வைத்தோ பிடிபடும் எலிகளின் எண்ணிக்கையை வைத்தோ அவர்கள் அதற்கான தொகையைப் பெற்றுக்கொள்வார்கள். காக்கையைச் சுடுவது தொடங்கி கடைக்குப் போய் துணி வாங்குவதுவரை பலவிதமாக அவர்கள் திரைப்படங்களில் நகைச்சுவையாக, பல சமயம் இழிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இப்படியொரு வயல்வெளி வாழ்க்கை ஏட்டிலோ இன்னபிற கலைவடிவங்களிலோ வந்ததாகத் தெரியவில்லை. ‘களவாணி’ படத்தில் வயல்வெளியில் ஓவியாவுடன் பேசிக்கொண்டிருக்கும் விமல், கையில் அப்படியொரு எலி பிடிக்கும் கிட்டியை வைத்திருக்கிற காட்சியை மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.

கிட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி வாக்ரிகள் கேட்கும் தொகை மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், சமயங்களில் ஆயிரத்தையும் தாண்டும். ஆனாலும், விவசாயிகள் அதைக் குறைத்துக்கொள்ள நினைப்பதில்லை. காரணம், கிட்டிக்காரன் சாவு வயலில்தான். எலிகள் மட்டுமில்லை, சில நேரங்களில் பாம்புகளும் கிட்டிகளில் மாட்டிக்கொள்ளும். சீற்றத்தோடு அவை காத்திருக்கும்.

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.