
இந்தியாவின் சமூக வரலாற்றில் பூனா ஒப்பந்தம் மிக முக்கியமான தருணமாகப் பதிவாகியிருக்கிறது. பெரும் சர்ச்சைகள், ஏமாற்றங்கள் என எதிர்மறையான விஷயங்கள் இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு அது.
பின்னணி
1906-ல் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது. அந்தக் கட்சியின் தலைவர்கள், தங்கள் தரப்பில் மக்கள் பிரதிநிதிகள் குறைவு எனக் கருதினர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம்களே தேர்தலில் போட்டியிடும் வகையில், முஸ்லிம் மக்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என பிரிட்டிஷ் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கை 1909-ல் நிறைவேறியது. 1919-ல் கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் சீக்கியர்களுக்கும் இப்படியான தனித்தொகுதி உரிமை வழங்கப்பட்டது. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இது நடந்தேறியது. அப்போது, அந்த நடவடிக்கையால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராயவும்; வேறு என்ன மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என தீர்மானிக்கவும் ஒரு குழு அமைக்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது.
1927-லேயே அதற்கான கமிஷன் உருவாக்கப்பட்டது. சர் ஜான் சைமன் அந்தக் கமிஷனுக்குத் தலைமை வகித்தார். சைமன் கமிஷனில் முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களே இடம்பெற்றிருந்ததால், அதை ஏற்க காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், முஸ்லிம் லீக் தலைவர்களும் அதைப் புறக்கணித்தனர். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என விரும்பிய அம்பேத்கர், அது குறித்து சைமன் கமிஷனிடம் பேச முடிவெடுத்தார். அந்தக் குழுவைச் சந்தித்துப் பேசினார். தனித்தொகுதி, வாக்குரிமை குறித்து கோரிக்கை விடுத்தார். சைமன் கமிஷன் அவரது கோரிக்கையை ஏற்று பரிசீலிக்கத் தொடங்கியது. 1930 மே மாதம் சைமன் கமிஷனின் அறிக்கை வெளியானது.
காந்தியின் எதிர்ப்பு
அதன் தொடர்ச்சியாக, வட்ட மேஜை மாநாடுகள் நடத்தப்பட்டன. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டின் முடிவில் பிரிட்டன் பிரதமர் ராம்ஸே மெக்டொனால்டு அம்பேத்கர் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அது கம்யூனல் அவார்டு என்று அழைக்கப்பட்டது. அதன்படி ஒடுக்கப்பட்டோருக்கானா தனித் தொகுதிகளில், பிற சாதியினர் வாக்களிக்க முடியாது என்ற சூழல் ஏற்படும் என்பதை அறிந்த காந்தி அதை ஏற்க மறுத்துவிட்டார். இது இந்து சமுதாயத்துக்குள் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என அவர் கருதினார். அந்தக் காலகட்டத்தில், சட்ட மறுப்பு இயக்கத்தின் சார்பில் போராடிய காந்தி கைதுசெய்யப்பட்டு பூனா (இன்றைய புணே) நகரின் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதி வழங்குவதைக் கண்டித்து 1932 செப்டம்பர் 20-ல் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தனித்தொகுதி முடிவு திரும்பப் பெறப்படும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர் அறிவித்தது இந்தியா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அம்பேத்கர் தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனும் அழுத்தம் ஏற்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் காந்தியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது இந்த அழுத்தத்தை அதிகரித்தது. தனித்தொகுதி கோரிக்கையைக் கைவிடுமாறு மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அம்பேத்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார் அம்பேத்கர். அதன் விளைவாக, பூனா ஒப்பந்தம் 1932 செப்டம்பர் 24-ல் கையெழுத்தானது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் அம்பேத்கர் கையெழுத்திட்டார். முன்னேறிய வகுப்பினர் சார்பில் மதன் மோகன் மாளவியா கையொப்பம் இட்டார். கம்யூனல் அவார்டு முறையில் 71 தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பூனா ஒப்பந்தத்தின் விளைவாக அது 148 தொகுதியாக உயர்ந்தது.
பூனா ஒப்பந்தம், ஒடுக்கப்பட்ட மக்களைக் கைதூக்கிவிடும் பொறுப்பை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்துக்கும் கையளித்தது. அது இந்தியாவில் நிகழ்ந்த மிக முக்கிய சமூக மாற்றமாக உருவெடுத்தது!