படித்தேன்… ரசித்தேன்-30: விண்ணை அளக்கும் எழுத்து!

படித்தேன்… ரசித்தேன்-30: விண்ணை அளக்கும் எழுத்து!

நான் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் எழுத்துகளுக்கு தீவிர வாசகன். அவருடைய ‘தண்டோராக்காரர்கள்’, ‘பாம்பின் கண்’, ‘ராஜா சாண்டோ’, ‘சினிமா கொட்டகை’, ‘கானுறை வேங்கை’, ‘கல் மேல் நடந்த காலம்' ஆகிய படைப்புகளை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். அவர் எழுதி இந்து ‘தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘விண்ணளந்த சிறகு’ நூலை வாசிக்கும் நற்தருணம் அமைந்தது. இதில் நான் வாசித்து மகிழ்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்
எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்

சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை என்பது தமிழ்ச் சூழலில் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் கவனம் பெற்று வருகிறது. நெடிய பாரம்பரியமும் சூழலியல் பின்புலமும் கொண்ட தமிழ்ச் சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமீப காலமாகவே கவனம் பெற்றிருப்பது சற்றே முரண் ஆனது. சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை சமீப காலத்தில் பரவலாவதில், சூழலியல் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. அத்தகைய தனித் துறை சார்ந்த எழுத்துகளை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துபவர்களில் மிக முக்கியமானவர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்.

‘விண்ணளந்த சிறகு’ எனும் இந்நூலில் உயிரினங்கள் சிலவற்றைப் பற்றிய கட்டுரைகளும், இயற்கை சார்ந்த சில கட்டுரைகளும் புத்தம் புதிய செய்திகளை நமக்கு அளிக்கின்றன.

ஒரு நாள் தனது வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் தியடோர் பாஸ்கரன். அவரது வீட்டுக்குப் பின் பக்கத்தில் இருக்கும் முருங்கை மரத்தில் ஒரு கழுகு வந்து உட்கார்ந்திருக்கிறது. அதையே அவர் உற்றுப் பார்க்கிறார். அந்தக் கழுகோ அருகில் இருக்கும் செம்மயில் கொன்றை தாவரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறது. அதில் இருந்த தேன் கூடுதான் அதன் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பதைக் கண்டுகொண்ட தியடோர் பாஸ்கரனுக்கு. அபோதுதான் அக்கழுகின் அடையாளம் புலப்படுகிறது. ஆம், அந்தக் கழுகின் பெயர்: தேன் பருந்து (Crested honey buzzard).

நீதானா அந்தக் குயில்?

இன்னொரு இடத்தில் இரைக்கொல்லிப் பறவைகளைப் பற்றி எழுதுகிறார். விராலடிப்பான் என்கிற கழுகு நீர்நிலைகளில் தண்ணீரின் மேல் பறந்து, கால்களை மட்டும் நீருக்குள் விட்டு, தன் கூரிய நகங்களால் மீனைக் கவ்விக்கொண்டுப் பறந்துவிடுமாம். அதேபோல முசலடிக் கழுகு, புல்வெளி மீது தாழ்வாகப் பறந்து முயல், உடும்பு போன்ற சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும். பாம்புக்கழுகு சர்ப்பங்களை சட்டென்று பிடித்துவிடும் என்றெழுதிச் செல்பவர், ‘இம்மாதிரி இரையிலும் இரை தேடும் முறையிலும் தனித்துவம் கொண்ட உயிரினங்கள் அற்றுப்போகும் ஆபத்து அதிகம் கொண்டவை’ என்கிறார் கவலையோடு.

குயிலைப் பற்றி இப்புத்தகத்தில் இவர் எழுதியிருப்பதில் அத்தனை நுணுக்கம்; அத்தனை இனிமை. நாம் கேட்கும் குயிலோசையை எழுப்புவது உடல் முழுக்க கருப்பு வண்ணம் கொண்ட ஆண் குயில்தானாம். சாம்பல் வண்ணத்தில் வெள்ளைப் பொறிகளுடன் காணப்படும் பெண் குயில் கூவுவது இல்லை. காக்கையின் கூட்டைக் கண்டுகொள்ளும் ஆண் குயில் அந்தக் காக்கையை வம்புக்கு இழுத்து வெகுதூரத்துக்குத் துரத்தி வரச் செய்யுமாம். இப்படி கிடைத்த நேரத்தில், காவல் இல்லாத காக்கையின் கூட்டில் பெண் குயில் தனது முட்டைகளை இட்டுச் சென்றுவிடும். குயில் இனத்தைச் சேர்ந்த புள்ளினங்கள் கூடு கட்டுவதே இல்லை. மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டுச் சென்றுவிடும் என்கிறார் தியடோர் பாஸ்கரன்.

பங்கோலின் எனும் எறும்புத் தின்னி

இந்நூலில் நாம் அதிகம் அறிந்திராத ‘அலங்கு’ எனும் ஓர் உயிரினத்தைப் பற்றி ஆசிரியர் அழகாகப் பதிவு செய்கிறார். ‘அலங்கு’ எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த உயிரினத்துக்கு எறும்புத் தின்னி என்றும் பெயர் உண்டு. ஆங்கிலத்தில் பங்கோலின் என்று இது அழைக்கப்படுகிறது. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த அலங்கு ஓர் இரவாடியாகும். பகல் முழுக்க பாறை இடுக்குகளிலும், பொந்துகளிலும் வசிக்கும் இவ்வுயிரினம் இரவில்தான் உணவு தேடுமாம்.

எறும்புகள், கரையான், ஈசல் இவற்றை உண்டு வாழும். தனது முன்னங்கால்களில் உள்ள கூர்மையான உறுதியான நகங்களால் கரையான் புற்றுகளையும், எறும்பு வளைகளையும் தோண்டி பறிக்கும். அலங்குக்குப் பற்கள் இல்லாததால் தனது கூரிய நாக்கை எறும்பு வளைக்குள்ளும், கரையான் புற்றுக்குள்ளும் உள்ளே விட்டு எறும்பு, கரையான்களை ஸ்வாஹா செய்யுமாம். ‘அலங்கு’ கூர்மையான முகத்தையும், நீண்ட வாலையும் உறுதியான செதில்களையும் கொண்டிருக்கும். இந்தச் செதில்கள் தகரம் போன்று உறுதிகொண்டவை.

மற்ற உயிரினங்களால் தனக்கு ஏதேனும் ஆபத்து என அலங்கு உணர்ந்தால், சட்டென்று உருண்டையாக ஒரு கால் பந்தைப் போல இறுக்கமாகச் சுருண்டுவிடும். இதன் செதில்கள் உறுதியான கவசம் போல இருப்பதால் எந்த உயிரினத்தாலும் அதனைத் தாக்கவே முடியாதாம்.

அலங்கு பற்றி தியடோர் பாஸ்கரன் எழுதியிருப்பதை வாசிக்கும்போது, நம்மைச் சுற்றிலும் வாழும் வித்தியாசமான இதுபோன்ற உயிரினங்களைப் பற்றி இத்தனை நாட்களும் அறிந்திராமல் இருந்திருக்கிறோமே என்கிற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இத்தகைய அதிசயத்தக்க உயிரினமான அலங்குவின் செதில்கள் மருத்துவ குணம் கொண்டவை என்பதை அறிந்துக்கொண்ட மனிதர்கள், அரிதான இவ்வுயிரினத்தை வேட்டையாடி பிடித்து, அதன் செதில்களை கள்ளச்சந்தையில் விற்று பணம் பார்க்கிற கொடுமையை என்னவென்று சொல்வது என்று மனம் புழுங்குகிறார் தியடோர் பாஸ்கரன்.

இந்தியாவில் 28 ஆயிரம் யானைகள்

இந்தியாவில் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதைக் கண்டறிந்த பிரிட்டிஷ் அரசு 1871-ல் மதராஸ் ராஜதானியில் யானைகளை, பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்தது. இந்தியாவில் 1982-ல் யானைகளைப் பிடிப்பது அறவே தடை செய்யப்பட்டது. இந்திய அரசு யானைகளைப் பாதுகாக்க ‘புராஜெக்ட் எலிஃபென்ட்’ என்கிற செயல் திட்டத்தை 1992-ல் உருவாக்கியது.

ஆசிய கண்டத்தில் 13 நாடுகளில் யானைகள் வாழ்ந்தாலும், இந்தியாவில்தான் அதிகளவில் உள்ளன. இந்தியாவில் இப்போது சுமார் 28 ஆயிரம் யானைகள் உள்ளன. இதே போல் மனிதர்களிடம் வளர்ப்பு விலங்காகவும், கோயில்களிலும், வனத் துறையிடமும் சுமார் 3,500 யானைகள் உள்ளன. யானைகள் முதன்முதலாக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது தென்னிந்தியாவில்தான் என்கிற யானைகளைப் பற்றிய தகவல்களை தியடோர் பாஸ்கரன் திரட்டித் தந்துள்ள செய்திகள், யானை என்கிற அந்த பெருவுயிரின் மீதான் நமது மதிப்பீட்டை இன்னும் உயர்த்துகின்றன.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், நாம் வாழும் இயற்கைச் சூழல் குறித்தும் அக்கறை காட்ட வேண்டும். இயற்கை குறித்த புரிதல் நம்முள் உருவாக வேண்டும் என்றால், தியடோர் பாஸ்கரனின் எழுத்துகளைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்!

நூல்: விண்ணளந்த சிறகு

ஆசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன்

வெளியீடு: ‘தமிழ் திசை’ பதிப்பகம்

124. வாலாஜா ரோடு

அண்ணா சாலை

சென்னை – 600 002

போன்: 7401296562

(புதன்கிழமை சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in