படித்தேன்… ரசித்தேன்- 9: ரசிக்கவைக்கும் நடையில் ராணுவ அறிவியல்

படித்தேன்… ரசித்தேன்- 9: 
ரசிக்கவைக்கும் நடையில் ராணுவ அறிவியல்

அறிவுதான் மனிதர்களின் மிகப்பெரிய சொத்து. "டேட்டா இஸ் வெல்த்" என்று இறுமாப்புடன் சொன்னார் இந்தியப் பெருவியாபாரி அம்பானி. ‘வெல்த் இஸ் நாலேட்ஜ்’ என்பார்கள் பெரும் அறிஞர்கள். ’அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்றார் அய்யன் வள்ளுவர்.

நாம் அறிந்துகொள்ள இன்னும் நிறைய இருப்பதை, நாம் படிக்காத புத்தகங்கள் வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில்தான் புத்தகப் புதையலாய் இந்திய ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய, ’போர்முனை முதல் தெருமுனை வரை’ எனும் அற்புதமான புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பலத்த பாதுகாப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் ராணுவ ஆய்வுக்கூடங்களை வெளியில் இருந்து பார்க்கும் பலரும், 'நமது ராணுவ வீரர்களுக்கான ஆயுதங்கள் தயாரிக்கும் இடம் இது' என்று கடந்து வந்திருக்கலாம். ஆனால், ஆயுதங்கள் மட்டுமல்ல; அன்றாடம் நம் பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு சாதனங்களின் பிறப்பிடமே ராணுவ ஆய்வுக்கூடங்கள்தான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இப்புத்தகம்.

இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களைப் படிக்கப் படிக்க ஆச்சரியம் மலர்கிறது. ராணுவப் பயன்பாட்டுக்கு என உருவாக்கப்பட்டு, நாளடைவில் சாமானிய மனிதர்களின் சாதனங்களாகிப்போன பல அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி, நம் தமிழில் விரிவாக எழுதப்பட்ட முதல் நூல் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

ராணுவ விஞ்ஞானிகளின் சிந்தனை மற்றும் உழைப்பிலிருந்து, சந்தைக்கு வந்து பொதுமக்களின் தினசரி வாழ்வைத் தொடுகிற தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை… கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் பொறியியல், கொஞ்சம் மானுடவியல் சேர்த்து டில்லிபாபு இதில் வழங்கியிருக்கிறார்.

இப்புத்தகத்தில் டில்லிபாபு எழுதியிருக்கும் பல்வேறு தகவல்களிலிருந்து சில துளிகள் உங்களுக்காக...

ராணுவ விஞ்ஞானிகளின் சேவை

நவீன உலகைக் கட்டமைப்பதில் கணிசமான பங்காற்றி இருப்பவர்கள், ராணுவ விஞ்ஞானிகள். இன்றைக்கு இளையோர் முதல் முதியோர் வரை அனைவரின் வாழ்விலும் கலந்துவிட்ட இணையம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது ராணுவப் பயன்பாட்டுக்குத்தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? விமானமும் முதலில் போர் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு, பிறகுதான் பயணிகள் சேவைக்குப் பரிமாறப்பட்டது. உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்ததற்குக் காரணம் ராணுவ விஞ்ஞானிகளும், போர்க்காலத் தேவைகளும்தான் என்பதை வரலாறு தனது லேசர் விரல்களால் பதிவுசெய்திருக்கிறது.

இந்தியாவின் பிற ஆய்வு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்பவை. அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் ஒற்றை இலக்கை நோக்கி உழைப்பவர்கள். ஆனால், ராணுவ விஞ்ஞானிகளோ எல்லா தொழில்நுட்பத் துறைகளிலும் அணு அணுவாக ஆராய்ச்சி செய்பவர்கள். கடலுக்கு அடியில் கடல்மட்டத்தில், நிலத்தில், பனிமலையில், வானத்தில், விண்வெளியில் என எல்லா தளங்களிலும் ஏறக்குறைய இந்தியாவின் 50 ஆய்வுக்கூடங்களில் ராணுவ விஞ்ஞானிகள் களமாடி வருகிறார்கள்.

அறிவியலில் ஆழ்ந்த அறிவு கொண்ட டில்லிபாபுவின் தமிழ்நடை, வாசிப்போரை வசீகரிக்கக்கூடியது. எளிய தமிழில் அவர் முன்வைக்கும் அறிவியல் தகவல்கள், பள்ளி மாணவர்களுக்கும் எளிதில் புரியும்படி இப்புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன.

உயிரிக் கழிப்பறை (Bio Toilet)

உலகத்தின் உயரமான போர்க்களம் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இமயமலைத் தொடர்களில் ஏறக்குறைய 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 'சியாச்சின்'… பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதி இது. இங்கு பனிமூடிய சிகரங்களின் வழக்கமான சவால்களோடு, மிக முக்கியமான சவாலாக இருப்பது மனிதக் கழிவு மேலாண்மைதான்.

பனிமலைகளில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. மண்ணில் கழிவுகளைப் புதைத்து மக்கச் செய்யும் வழக்கமான முறையிலும் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. பனியின் உறைநிலை வெப்பத்தில் கழிவுகள் மக்குவது இல்லை. நண்பகல் சூரிய வெப்பத்தால் பனிப்படிவுகள் உருகும்போது, கழிவுகளும் நீரில் கலந்துவிடும். பனிக்கட்டிகள் நீரோட்டமாகி ஜீவநதிகளில் கலக்கும்போது, அவற்றுடன் கழிவுகளும் கலந்துவிடும். இதனால், நதியோரக் கிராமங்களில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படும்.

கிடைமட்டமான நிலப்பரப்பு உயரமான மலைப்பகுதிகளில் கிடையாது. கிடைத்த இடங்களில் ராணுவ முகாம்கள் அமைக்கப்படும். ராணுவ வீரர்கள் தங்குமிடம், ஆயுத அறை, சமையலறை என எல்லாவற்றுக்கும் இடம் வேண்டும். இந்த நெருக்கடியில் மக்காத கழிவின் தூர்நாற்றமும், நுண்கிருமிகளின் அபாயமும்… நாடு காக்கும் வீர்களுக்கு, நம் எதிரிகளைவிட மிகப் பெரும் சவால்களைத் தருபவை. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக, ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியதுதான் ’உயிரிக் கழிப்பறை’. இதற்கு ’உயிரி செரிமானம்’ என்ற தொழில்நுட்பப் பெயரும் இதற்கு உண்டு.

எப்படி இயங்குகிறது?

காற்றில்லா பாக்டீரியத் தொகுதிதான் இதன் சூட்சுமம். கழிப்பறையின் தொட்டியில் இந்த பாக்டீரியா திரவம் ஊற்றப்படும். இது மனிதக் கழிவை நீர், மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு எனப் பிரிக்கிறது. இதில் இருந்து வெளிவரும் நீர் தெளிவானது. வாசனையற்றது. தோட்டங்களுக்கும், உபகரணங்களைக் கழுவுவதற்கும் பயன்படுத்தலாம். மீத்தேன் மிகச் சிறந்த எரிபொருள். சமைக்கவும், அறைகளை வெப்பமேற்றவும் உதவும். இதில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைடு மிகக் குறைவு. இந்த உயிரிக் கழிப்பறை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை செயல்படும். பனிப் பிரதேசங்களில் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பராமரிப்பு என்ற பேச்சேயில்லை. சிகரங்களில் புழங்கும் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட உயிரிக் கழிப்பறையின் பயன் பரந்துபட்டது. கழிவுநீர் வடிகால் வசதியில்லாத குக்கிராமங்களிலும், தீவுகளிலும், சுற்றுலா மையங்களிலும் சுலபமாக ‘உயிரிக் கழிப்பறை’யை அமைக்கலாம்.

ரயிலுக்கு வந்த கதை

இந்தியாவின் நீளமான கழிப்பறை' என்று சங்கடத்துடன் அழைக்கப்படும் அளவுக்கு மனிதக் கழிவுகள் விஷயத்தில், இந்திய ரயில்வே துறை பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறது. குறிப்பாக, தண்டவாளங்களில் சேரும் மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர்களின் துயரம் சொல்லி மாளாது. இந்தச் சூழலில்தான், உயிரிக் கழிப்பறைகளை ரயில் பெட்டிகளில் அமைக்க விரும்பியது இந்திய ரயில்வே துறை. லக்னோவில் உள்ள ரயில்வே வடிவமைப்பு மற்றும் தரநிலை நிறுவனப் பொறியாளர்களும் ராணுவ விஞ்ஞானிகளும் ரயில் பெட்டிகளில் பொருத்துவதற்கேற்ப, உயிரிக் கழிப்பறைத் தொட்டியை மாற்றம் செய்தனர். தற்போது - குறிப்பிட்ட சில ரயில்களில் உயிரிக் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக எல்லா ரயில்களுக்கும் இது விரிவடையலாம். மேலும் விமானம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் எனக் கழிவுநீர் வடிகால் வசதியற்ற இடங்களில் இது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும்.

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

அபிநந்தனைக் காப்பாற்றிய அறிவியல்

அறிவியலில் ஆழ்ந்த அறிவு கொண்ட டில்லிபாபுவின் தமிழ்நடை, வாசிப்போரை வசீகரிக்கக்கூடியது. எளிய தமிழில் அவர் முன்வைக்கும் அறிவியல் தகவல்கள், பள்ளி மாணவர்களுக்கும் எளிதில் புரியும்படி விளக்கப்பட்டிருக்கின்றன. ஆபத்துக் காலத்தில் விமானியைக் காப்பாற்றும் அறிவியல் கண்டுபிடிப்பு குறித்து அவர் எழுதியிருக்கும் தகவல்களை வாசியுங்கள்:

போர் விமானங்கள் மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் பறக்கும். விமான இன்ஜின் செயல் இழந்தால், எதிரி ஏவுகணைகளால் தாக்கப்பட்டால் (அ) விமானம் கட்டுப்பாட்டை இழந்தால், விமானி விமானத்தைக் கைவிட்டுவிட்டு உயிர் பிழைக்க வேண்டும். இவ்வளவு வேகத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து வெளியேறுவது எப்படி? விமானப் படை விமானி அபிநந்தன் எப்படி தாக்கப்பட்ட விமானத்தில் இருந்து தப்பித்துத் தரை இறங்கினார்?

உசுப்பிவிட்டால் வெடிக்கக்கூடிய வெடிபொருள் குப்பிகள் பொருத்தப்பட்ட இருக்கையில் அமர்ந்துதான் போர் விமானி விமானத்தை இயக்குவார். நாட்டைக் காக்கும் போர் விமானிக்கு வெடிகுண்டா.. ஏன்? அது அவருடைய உயிரைக் காப்பாற்றத்தான். எப்படி?

ஆபத்துக் காலத்தில் விமானத்தைக் காப்பதா, விமானியைக் காப்பாற்றுவதா? விமானத்தின் இமாலய விலையைவிட மனித உயிரின் மதிப்பு மிக மிக அதிகம். பணம் கொடுத்தால் உடனடியாக விமானத்தை வாங்கிவிடலாம். பல ஆண்டு விமான அனுபவமும், வான்வெளிப் போர்க் கலைகளில் தேர்ச்சியும் பெற்ற விமானியை உடனடியாக உருவாக்க இயலாது.

அதிவேகத்தில் விரையும் விமானத்தில் இருந்து ஆபத்து நேரத்தில் எப்படி விமானி வெளியேறித் தப்பிப்பார்? ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தில் இருந்து இறங்குவதைப் போல எளிதல்ல என்றாலும், பாராசூட் உதவியுடன் குதிக்கலாமே என உங்களுக்குத் தோன்றும், பயணிகள் விமானத்தைப் போல், போர் விமானத்தின் கதவைத் திறந்துகொண்டு விமானி குதிக்க இயலாது. ரேடார்களின் பார்வையில் இருந்து தப்புவதற்காகப் போர் விமானம் மிகச் சிறிய வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும். போர் விமானியின் இருப்பிடம் ஒருவர் மட்டுமே அமரும் வகையில் மிக நெருக்கமாக இருக்கும்.

பேருந்திலோ, காரிலோ ஓட்டுநர் பக்கவாட்டில் இருந்து இருக்கையை அடைய முடியும். ஆனால், விமானி மேலிருந்து கீழாக இறங்கித்தான் இருக்கையை அடைய முடியும். விமானியின் அறையை 'காக்பிட்' என்பார்கள். 'காக்பிட்’ என்பது சண்டை சேவல்களுக்கான போட்டி நடத்தப்படும் பள்ளத்தைக் குறிக்கும் சொல். இவ்வளவு இடநெருக்கடியில்தான் விமானி உட்கார்ந்திருப்பார். மேலும் விமானி, இருக்கையோடு பெல்ட் மூலம் இணைக்கப்பட்டிருப்பார். அதோடு காற்றுக் குழாய்களும் அவரது உடையில் பொருத்தப்பட்டிருக்கும். எதற்குக் காற்றுக் குழாய்கள்?

தொப்புள் கொடிகள்

விமானத்தின் அதிவேக இயக்கத்தைப் பொறுத்து விமானியின் உடலில் ரத்தம் கால்களிலோ தலையிலோ அதிக அளவில் பாய்கிற போக்கு இருக்கும். தலையில் அதிக ரத்த ஓட்டம் இருந்தால் பார்ப்பதெல்லாம் சிவப்பாகத் தோன்றும். கால்களில் அதிக ரத்த ஓட்டம் இருந்தால் கண்கள் இருட்டாகும். இரண்டு சூழ்நிலைகளும் விமானியின் உயிருக்கு ஆபத்தாகும். எனவே, காற்றின் அழுத்தத்தைக் கால்களிலும் வயிற்றிலும் செலுத்தவல்ல ‘ஜி உடை'யை விமானி அணிந்திருப்பார். இந்த உடைக்கு விமானத்தில் இருந்து காற்றைச் செலுத்தும் குழாய்களும் பொருத்தப்பட்டிருக்கும். உயரங்களில் ஆக்ஸிஜன் குறைவு என்பதால் கவாசிக்க ஆக்ஸிஜன் முகமூடியையும் அணிந்திருப்பார். விமானத்தில் உள்ள ஆக்ஸிஜன் குழாயுடன் முகமூடி இணைக்கப்பட்டிருக்கும். இப்படிப் பல தொப்புள் கொடிகளால் விமானத்தோடு இணைக்கப்பட்டிருப்பார் விமானி. அதுமட்டுமல்ல, காக்பிட்டை மூடியுள்ள கண்ணாடி மூடி காற்று நுழையாதபடி இறுக்கமாக அடைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால். நெருக்கடிகளைத் தாண்டி விமானி வெளியேற வேண்டும் என்பதால்தான்.

வெடிகுண்டு இருக்கை

போர் விமானத்தில் விமானியின் நேர் பின்னே, விமானத்தின் செங்குத்து வால் அமைந்திருக்கும். விமானி கண் இமைக்கும் நேரத்தில் தனது இருக்கையைவிட்டு மேலேறி வர வேண்டும். தவறினால், செங்குத்து வால் விமானியைத் தாக்கிச் சிதைக்கும். கண் இமைக்கும் பொழுதில் விமானியை வெளியேற்றவே வெடிகுண்டு பயன்படுத்தப்படுகிறது. வெடிகுண்டு வெடிக்கும்போது கண் இமைக்கும் நேரத்தில் அருகில் இருக்கிற பொருட்களைத் தூக்கி வீசும். வெடிபொருள் நிரப்பிய குப்பிகளை விமானியின் இருக்கைக்கு அடியில் பொருத்தியிருப்பார்கள்.

அவசரச் சூழ்நிலையில், கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தந்துவிட்டு வெளியேற்றக் கைப்பிடியை விமானி இழுப்பார். அப்போது ஒரேநேரத்தில் வெடிபொருள் குப்பிகள் உசுப்பப்படும். குப்பிகள் வெடிக்கும்போது, விமானி இருக்கையோடு விமானத்தில் இருந்து தூக்கி வீசப்படுவார். ரயில் பெட்டி எப்படி தண்டவாளத்தில் ஒரே திசையில் நகருகிறதோ அதைப் போல விமான இருக்கை திசை மாறாமல் மேல் நோக்கி நகரும் வகையில், தண்டவாள அமைப்பும் இருக்கையின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும். எனவே, விமானி இருக்கையோடு விமானத்தைவிட்டு சடுதியில் மேல்நோக்கி சீறிப்பாய்ந்து, வால் பகுதி மோதும் ஆபத்தில் இருந்து தப்பிப்பார். பெல்ட்டால் இருக்கையோடு இணைக்கப்பட்டிருப்பதால், விமானி கீழே விழாமல் பாதுகாப்பாக இருப்பார்.

இப்படி விமானி வெளியேறும் முன்பு, 'காக்பிட்'டை மூடியுள்ள கண்ணாடி மூடி திறக்கப்பட வேண்டும். ஒரு பெட்டியைத் திறப்பது போல இதை மேல்நோக்கித் திறந்து மூட இயலும். மூடியைத் திறக்க தாமதமானால் விமானி அதில் மோதும் ஆபத்து உண்டு. இங்கும் வெடிபொருளே பயன்படுத்தப்படுகிறது. வெடிபொருள் நிரப்பிய குப்பிகளைக் கண்ணாடி மூடியைத் தாங்கும் சட்டத்தில் பொருத்தியிருப்பார்கள். உசுப்பினால் குப்பிகள் வெடித்து கண்ணாடி மூடி தூக்கி வீசப்படும்.

இருக்கையோடு விமானத்தைவிட்டு வீசப்படும் விமானி எப்படித் தரையிறங்குகிறார்? இருக்கையின் தலைப்பகுதியில் பாராசூட் மடித்து வைக்கப்பட்டிருக்கும். சிறிய வான் குடை (Drogue Parachute) முதலில் விரியும். இது, இருக்கையோடு இருந்தால் விமானி வான் குடையைக் கட்டுப்படுத்தி தரையிறங்குவது இயலாது. எனவே, வான் குடை விரியும்போது இருக்கை விமானியிடம் இருந்து பிரிந்து கீழே விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வான் குடை உதவியுடன் விமானி பாதுகாப்பாகத் தரையிறங்குவார்.

பாராசூட், இருக்கை, வெடிமருந்து குப்பிகள் மற்றும் இவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் மென்பொருள் போன்றவற்றை உருவாக்கும் விஞ்ஞானிகள், தமது கடின உழைப்பாலும், செறிந்த அறிவினாலும் தேசம் காக்கப் புறப்படும் விமானியின் உன்னதப் பணிக்கு உயிர்நாடியாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘போர்முனை முதல் தெருமுனை வரை’ என்கிற இப்புத்தகத்தில், ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஆளில்லா விமானம், நாட்டின் எல்லைப்பகுதிகளை உயரத்தில் இருந்து கண்காணிக்கும் வான் மிதவை (Aerostat), விமான விபத்துக்குப் பறவைகள் காரணமாவது எப்படி எனப் பல்வேறு அறிவியல் தகவல்களை, படிக்க சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு.

நூல்: போர்முனை முதல் தெருமுனை வரை

ஆசிரியர்: ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

வெளியீடு: இந்து தமிழ் திசை

124, வாலாஜா ரோடு,

அண்ணா சாலை

சென்னை – 600 002

போன்: 7401296562

(திங்கள்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.