படித்தேன்… ரசித்தேன் -31: கற்களை உடைக்கும் கண்ணாடி

படித்தேன்… ரசித்தேன் -31: கற்களை உடைக்கும் கண்ணாடி

சமீப காலங்களில் நிறைய கவிதைப் புத்தகங்கள் வரத் தொடங்கியுள்ளன. முகநூல் புழக்கத்தால் ஏகப்பட்ட 'போலச் செய்தல்’ கவிதைகள் எழுதப்படுகின்றன. நவீன கவிதை உலகுக்குள் எளிதாக நுழைந்துவிடுகிற இவர்கள் தங்களையும் படைப்பாளிகள் என சொல்லிக்கொள்கின்றனர். தூசி, தும்பட்டைகளைப் புறந்தள்ளிவிட்டுத்தான் நல்ல கவிதைகளைத் தேடிக் கண்டடைய முடிகிறது. முனையை ஒடித்துப் பார்த்து வெண்டைக்காய் வாங்குவது போல, சமீபத்தில் நான் தேடிப் படித்த கவிதைத் தொகுப்பு: நிலாகண்ணன் எழுதியிருக்கும் ‘பியானோவின் நறும்புகை’

உணர்வெழுச்சியில் சொல்லவில்லை. தமிழில் அண்மையில் சுயம்பு மொழியில், அலங்காரம் உடைத்து, எந்தச் சாயலுமின்றி வந்திருக்கும் கவிதைத் தொகுப்பு இது. அறிமுக உரையில் ‘கண்ணீரைத் தொட்டுத் தொட்டு புன்னகை என்று எழுதுவது போலிருக்கிறது நிலாகண்ணனின் கவிதைகள்’ என்று கவிஞர் வெய்யில் உச்சிமுகர்ந்திருப்பது இத்தொகுப்பின் மீதான மரியாதையை இன்னும் கூடுதலாக்குகிறது.

கவிஞர் நிலாகண்ணன்
கவிஞர் நிலாகண்ணன்

அன்பை நீராக்கினால் நான் மீன்

அன்பை நிலமாக்கினால் நான் மண்புழு

அன்பை காற்றாக்கினால் நான் புல்லாங்குழல்

அன்பை தீயாக்கினால் நான் சுடர்

அன்பை வெளியாக்கினால் நான் பறவை

- என்று நிலாகண்ணன் எழுதிய கவிதையை வாசித்தபோது அணில் வாலொன்று முகத்தைத் தடவிச் சென்றது போலிருந்தது. அன்பின் நிழற்சாலையில் இறைந்துக் கிடக்கிற ஜூலை மலர்களாகவே இக்கவிதையில் நிறைந்திருக்கிறார் கவிஞர்.

‘காலத்தைப் பருகும் தேனீ’ என்றொரு கவிதையின் இடுக்கில்…

தன்னை எதிர்கொள்பவர்களை எல்லாம்

இறந்த காலத்திற்குள் அழைத்துக்கொண்டு பறக்கும்

மாயப்பறவைகள் அவனது கண்கள்

- என்கிற மூன்று வரிகள் கோபுரத்தின் இடுக்கில் முளைவிட்ட ஆலந்துளிராக என்னைப் பெரிதும் ஈர்த்தது.

இதைப்போல ‘அழை தூர ஞமலி’ என்றொரு கவிதை. அதன் கடைசி வரிகளை

வாழ்வென்பதே

கண்ணீரில் துளிர்க்கும்

தாவரம்தானே நண்பா - என நிலாகண்ணன் நிறைவு செய்வது, வாழ்க்கை மீது எப்போதும் புகார் சொல்லிக்கொண்டே இருப்போருக்கான கடைத்தேற்றமாக மிளிர்கிறது.

‘பியானோவின் நறும்புகை’ என்கிற தலைப்பிலான…

எந்தும் விரல்களற்று தனித்த புல்லாங்குழலின் மீது

மயிலிறகைக் கிடத்தி அதன் துயரை ஆற்றலாம்

நானோ

தம் பழைய புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எவ்வளவு கண்ணீர் விரயமற்ற கண்கள் நமக்கு!?

ஜன்னலின் வெளிர் நீலத் திரைச்சீலை

நளினிப்பது நிறைவாக இருக்கிறது

இசை எங்கிருந்து வருகிறதென தெரியாத

மிரட்சியான கண்களோடு நாதப்படிகளின் மீது

ஒரு மயில் புறா நடந்து செல்லும் இப்படித்தான்

பழைய இசை தொடங்குகிறதில்லையா!

உன் கனவுக்குள்ளிருந்து

இரண்டு கருப்பு வெள்ளைக் கட்டைகள்

வெளியே வந்து கிடக்கின்றன

இனியந்தப் பியானோவை வாசிக்காதே எரித்துவிடேன்

அதிலிருந்து ஒரு நல்ல புகை எழும்பட்டும்

- என்கிற கவிதை பழைய நம்பிக்கைகள், ஆராதனைகள், கீழ்மையின் நிழல் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு ஒரு நேர்க்கோட்டுப் பாதையை அறிமுகம் செய்விப்பதாகவே புலனாகிறது. பார்ப்பதற்கு ஒரே வண்ணம் போன்று இக்கவிதை தென்பட்டாலும், இக்கவிதையை மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது அதன் மேல் சில பல அடுக்குகளில் வெவ்வேறு வண்ணங்கள் படிந்திருப்பதை உணர முடிகிறது.

நடுத்தர வர்க்கத்தின் துயர் நாட்களை நினைவூட்டுகிறது ஒரு கவிதை. வெற்றிலைக் காம்பை கிள்ளித் தூர எறிந்துவிட்டு தாம்பூலம் தரிப்பதைப் போல, மத்தியமர் வாழ்வில் அவ்வளவு எளிதாகச் சிலவற்றைக் கிள்ளி எறிந்துவிடவே இயல்லது என்பதை உணர்த்தும் கவிதை இது:

தையல் எந்திரத்திற்காக வாங்கிய கடனால்

உறவில் ஒரு கிழிசல் நேர்ந்துவிடுகிறது.

நல்லவேளை

துணைவி கத்தரி நிறத்தில் அதன் மேல்

ஒரு பூ வரைந்துவிடுகிறாள்.

ஒரு தாவரத்தைப்போல படருகின்ற கடனால்

மறைந்துகொள்ள ஒரு காடும் கிடைத்துவிடுகிறது.

என்னைத் தேடி வனம் புகும்

நண்பனின் பஞ்சரான சைக்கிளே

தயவுசெய்து உன் முதலாளியிடம் சொல்

நான் சாகவுமில்லை என் பெயர் ராமசாமியுமில்லை

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும் என்பதைப் போல் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளை எதிர்கொள்வதற்கு ஓர் அழகிய போதி ஞானத்தை கீழ்க்கண்ட கவிதையில் தருகிறார் நிலாகண்ணன்:

எந்த இடத்தில் நின்று பார்த்தால்

வாழ்வு அர்த்தப்படுகிறதோ

அவ்வளவு தள்ளியே நில்லுங்கள்.

கெட்டிப்பட்ட உறவுநிலை தன்னை எப்போதும் அன்பின் திரையை விலக்கிப் பார்ப்பதில்லை என்பதை மெளனத்தில் உணர்த்தும் கவிதை இது:

யாரும் தட்டாத கதவினை

நீ தட்டுவதாய்

அன்பின் பிரமை

ஒலியெழுப்பும் அவ்வப்போது

அதற்காகவேனும்

சாத்தியே இருக்கட்டும்

நம் உறவின் கதவுகள்.

‘கடைசி டேபிள்’ என்றொரு கவிதை… மது அருந்துபவனுள் எழும் அரூபங்களின் தரிசனமாகவே இருக்கிறது. பல உளறல்களுக்கு மத்தியில் வாய் வார்த்தைகளின் மூலம் கொலாஜ் சித்திரம் வரைபவர்களை மதுக்கூடங்களில் காண முடியும். இக்கவிதை புறத்தில் நின்று அகவெளியைப் பார்ப்பவனின் சொற்சித்திரமாக வெளிப்படுகிறது:

தனியே மதுவருந்துவதுதான்

பிடிக்குமெனக்கு

காலி மதுப்புட்டிகள்

குவிந்துகிடக்கும் சுவரோரத்தில்

தரையோடு பிடிமானமற்று ஆடும்

டேபிள்தான் வாய்த்ததின்று

அம்மா உயிரோடிருக்கையில்

‘ஓரிடத்தில் நின்னு ஆடாம

ஆ வாங்கிக்க சாமி’ என்பாள்.

நெகிழிக்கோப்பையின் கழுத்துவரை நீர்கலந்து

மெல்லிய நுட்பத்தோடு கையிலெடுக்கிறேன்

‘கிழக்கு முகமா நின்னு கண்ண மூடிக் குடிச்சுட்டு

இந்த ஜீனிய வாய்ல போட்டுக்க சாமி

வயித்துக்கு நல்லது’ என்றாள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனசுக்கு நெருக்கமான தோழனைச் சந்தித்த மகிழ்வினைத் தருகிறது ‘பியானோவின் நறும்புகை’ எனும் இத்தொகுப்பு. நவீனக் கவிதை என்பது வாசிப்பவருக்கு எளிதில் புரிபட்டுப்போய்விடக் கூடாது; கிழிறங்கும் ஏகப்பட்ட படிகளைக் கடந்தால்… அங்கே ஒரு மாயக்கிணறு தென்படும். அதுதான் நவீன கவிதை... என்றெல்லாம் பயமுறுத்தும் நவீனர்களின் மத்தியில் நிலாகண்ணனின் கவிதை உண்மையின் மொழியாக இருந்து நவீனம் பொழிகிறது. சில கண்ணாடிகள் கற்களை உடைத்துவிடும். நிலாகண்ணனின் கவிதைகளும் அப்படித்தான்!

நூல்: பியானோவின் நறும்புகை

ஆசிரியர்: நிலாகண்ணன்

வெளியீடு: படைப்பு பதிப்பகம்

8, மதுரை வீரன் நகர்

கூத்தப்பாக்கம்

கடலூர் – 607 002

போன்: 94893 75575

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

- ஓவியங்கள்: வெ.சந்திரமோகன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in