
சிறுகாற்றின் புன்னகையைப் போல எனக்கு கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன். ஒரு குளிர் காலத்தில்தான் அவரது ஒரு கவிதையை முதன்முதலாக வாசித்தேன். மனசின் விரல்களுக்கு தும்பி பிடிக்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்தன அவரது கவிதைகள். தண்டவாளம் முழுக்க பூவும் காயும் வைத்துக்கொண்டு பறங்கிக் கொடி படர்ந்திருப்பதைப் பார்க்கும் நொடியில்... மனசு பதுபதைக்குமல்லவா... ரயிலின் சக்கரப் பல் கடித்து குதறிவிடுமே என்று மனம் அதிர்ந்து பரபரக்குமல்லவா... அப்படியாக இவரது எழுத்துகள் என்னுள் அதிர்வை உண்டாக்கியிருக்கின்றன. ஆசையை உண்டாக்கியிருக்கின்றன.
வண்ணதாசன் எழுதிய ‘தானாக இப்படி / தட்டுப்பட்டது தவிர / நிலாப் பார்க்கவென்றுபோய் / நிலாப் பார்த்து நாளாயிற்று’ - என்கிற அவருடைய கவிதை என்னுள் பொழிந்த வெய்யில் மழையை இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பாதுகாக்கும் மனசு.
‘அகம் புறம்’, ‘சில இறகுகள் சில பறவைகள்’, ‘உயரப் பறத்தல்’, ‘கல்யாண்ஜி தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்’, ‘ஒரு சிறு இசை’, ‘என் ஓவியம் உங்கள் கண்காட்சி’, ‘இன்னொரு கேலிச் சித்திரம்’, ‘மூன்றாவது முள்’, ‘பெய்தலும் ஓய்தலும்’, ‘மீனைப் போல இருக்கிறது மீன்’, ‘ஒளியிலே தெரிவது’, ‘பூனை எழுதிய அறை’… போன்ற புத்தகங்கள் எனக்குத் தந்த நடன ஆனந்தத்தைச் சொன்னால் சொற்களுக்குத் திருவிழா வாசம் வரும்.
இந்த வரிசையில் அண்மையில் ’கல்யாண்ஜி கவிதைகள்’ எனும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்தை வாசித்தேன். இதில் நான் ரசித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இத்தொகுப்பை 1987-ம் ஆண்டு இளங்கோ என்கிற டி.எம்.நந்தலாலா என்பவர் தனது ‘தாரணி பதிப்பகம்’ மூலம் வெளியிட்டுள்ளார். அப்புத்தகத்தைத்தான் 34 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தியா நடராஜன் பதிப்பித்துள்ளார்.
தொட்டிச் செடி அவ்வப்போது
துளிர்த்துக்கொண்டிருக்கிறது.
பருவம் பாராமல்
உதிர்ந்துகொண்டே இருக்கிறது
சிவப்புப் பூ.
பால்காரக் குவளை சிந்திய
பாலை நக்கிவிட்டு
அற்புதமாகப் பார்க்கிறது
குட்டி போட்டு
மடி தொங்கும் மணி.
சுத்திகரிக்க வரும் மூக்கம்மா
கூடைப் பக்கத்தில்
விட்டுப்போன குழந்தை
பேசுகிற பாஷை
எப்போதும் உயரத்திலேயே
இருக்கிறது.
சுற்றிலும்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
பார்க்கவிடாமல் வாழ்க்கை
நெற்றியில்
சுருங்கிக் கனக்கிறது.
- நிகழ்மனசைப் படம் பிடிக்கிறது இக்கவிதை. சுற்றி நடக்கும் நல்லது, கெட்டது யாவற்றையும் வேக வேகமாக கடந்து போய்க்கொண்டேதான் நாம் இருக்கிறோம். நான் உட்பட எல்லா மனிதர்களின் முதுகையும் காலம் வேக வேகமாகத் தள்ளிக்கொண்டேதா இருக்கிறது. சிலர்தான்… சிலதை சிலதை… ரசிக்கிறார்கள்… ரசிக்கிறார்கள். எப்போதும் அவர்கள் தங்கள் உள்ளங்கையில் வேகத்தடையை வைத்திருக்கிறார்கள்.
இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப்போகிறது
இருந்து தொலையலாம்.
***
முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை.
-வண்ணதாசனின் இந்த இரு கவிதைகளையும்… சிந்து பதிப்பகத்தின் மூலம் நிமோஷினி எழுதிய ‘அம்மா – அட்டிகை – நான்’ புத்தக வெளியீட்டு விழாவில் சுஜாதா எடுத்துக்காட்டி, வெகுவாகப் பாராட்டிப் பேசினார். இப்போதுதான் இவற்றை ‘கல்யாண்ஜி கவிதை’ புத்தகத்தில் எழுத்தெண்ணி படித்து ரசித்தேன்.
ஆரியங்காவுக் குகையில்
எல்லோரும்
பாறையைப் பார்க்க
நான்
கசியும் நீரையும்
துளிர்த்த புல்லையும்.
அருவிக் கரையில்
எல்லோரும்
வீழ்வதைப் பார்க்க
நான் பாறைகளை.
பிறிதொன்றைப் பார்ப்பதில்
பிழை எதுவும் இல்லையே.
-இதை வாசித்தபோது ஏனோ ‘நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை’ என்ற பாடல் ஓடியது.
முன் எப்போதுமில்லாத
நெருக்கடியின்
துண்டுப் பிரசுரம் போல
உள்ளங்கை வியர்வைக்குள்
திணிக்கப்பட்ட
டவுன்பஸ் டிக்கெட்டின்
கசங்கலைப் பார்த்ததும்
கஷ்டமாக இருந்தது.
என்ன செய்வது
இறங்கும்வரை
வைத்திருப்பதைத் தவிர?
-இக்கவிதை எனது சென்னை வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டியது. சென்னை – சின்னமலை நிறுத்தத்தில் 23 சி பல்லவன் பேருந்தில் ஏறிய நான், டிவிஎஸ் நிறுத்தத்துக்கு வாங்கிய டிக்கெட்டை எங்கேயோ வைத்துவிட்டு, நந்தனத்தில் பரிசோதகர் வந்தபோது திருதிருவென விழித்ததும், சக பயணிகள் அனைவரும் கேவலமாக என்னைப் பார்த்ததும், பரிசோதகர் என்னைப் பேருந்தைவிட்டு இறக்கிவிட்டு… அபராதம் கட்ட நிர்பந்தித்ததும்… ஐந்து நிமிடம் பொறுக்க சொல்லி ஆற அமர தேடியதில்… புயணத்தில் வாசிப்பதற்காக வைத்திருந்த வார இதழின் ஒரு பக்கத்தில் அந்த டிக்கெட் இருந்ததும் நினைவுக்கு வந்தது. ஆனால் சகபயணிகள் என்னை ஒரு மாதிரியாக பார்த்த அந்தப் பார்வையை என்னால் என்ன செய்ய முடியும்?
சைக்கிளில் வந்த
தக்காளிக்கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளில் பழங்கள்.
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்.
பழங்களைவிடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள் மீதான
அக்கறை.
- இந்தக் கவிதையைப் படித்தபோது அவரவர் வாழ்க்கை, அவரவர் உலகம், அவரவர் சூழல் என்று யாவரும் எல்லாவற்றையும் மனமொட்டது விரைந்து
கடப்பது எதற்காக? தனது சட்டையில் தீப்பற்றாதவரை எவரும் தீயைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதைத்தானே இந்தக் கவிதை நிஜமாக உணர்த்துகிறது.
சூரியனை
ஆற்றங்கரை மணலை
தொட்டாற்சுருங்கிச் செடியை
பாசஞ்சர் ரயிலின்
அற்புத இரைச்சலை
பட்டாம்பூச்சியை
தொலைத்துவிட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை.
-இந்தக் கவிதையை வாசித்தபோது… வண்ணதாசனின் இந்தக் கவிதையை வாசிக்காமலே நான் எழுதிய ‘கடல் பார்ப்பதும்/ ரயில் பார்ப்பதும்/ யானை பார்ப்பதும் / காணாமல் போயின/ பிழைப்பைப் பார்ப்பதில்’ என்கிற கவிதை ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் வண்ணதாசன் 1980 –களிலேயே இப்படி எழுதியிருப்பதால் என்னைப் போன்ற பலருக்கு அவர் ஆசானாக இருக்கிறார்.
நூல்: கல்யாண்ஜி கவிதைகள்
ஆசிரியர்: கல்யாண்ஜி
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
77, 53-வது தெரு,
9-வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை – 600 083
போன்: 044 - 24896979
(புதன்கிழமை சந்திப்போம்)