படித்தேன்… ரசித்தேன் - 14: டெல்டா பூமியின் சிவப்புச் சிந்தனையாளர்!

மணலி கந்தசாமி
மணலி கந்தசாமி

சமீபத்தில் பனைமரப் பாதுகாப்பு இயக்கத்தின் செயல் தலைவர் பருத்திச்சேரி ராஜாவைச் சந்தித்தேன். அவர் எனக்கு அருமையானதொரு புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். கு.வெ.பழனித்துரை எழுதிய ’மணலி சி.கந்தசாமி - வாழ்வும் போராட்டமும்‘ என்கிற புத்தகம்தான் அது. தமிழ்நாட்டில், விவசாயிகள் இயக்கத்தை உருவாக்குவதில் முன்னோடித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த, மணலி கந்தசாமியின் வாழ்க்கை வரலாற்று நூலான இதில், அவரைப் பற்றிய அரிய தகவல்களை அறிய நேர்ந்தது. தஞ்சை டெல்டா பகுதிகளில், நிலப்பிரபுத்துவக் கோட்டைக்குள்ளேயே அடித்தட்டு மக்களை அணிதிரட்டியவர்களில் முக்கியமானவராக மணலி கந்தசாமி விளங்கியிருக்கிறார்.

மணலி கந்தசாமியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, 2010-ல் வெளியிடப்பட்ட இப்புத்தகத்தில் கீழத் தஞ்சை மாவட்டத்தின் விவசாய மக்களின் வரலாறும், எழுச்சியும் முழுமையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. காவிரி டெல்டா என்றழைக்கப்படுகிற தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் நிலப்பிரபுத்துவத்தின் அதிகாரம் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. நிலப்பிரபுத்துவக் கொடுமை உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது. ஆதிக்க சக்திகள் உழவர் மக்களைச் சாட்டையால் அடிப்பதும், சாணிப்பால் ஊற்றுவதும் சாதாரண நிகழ்வுகளாக இருந்திருக்கின்றன. இந்நிலையில் சாதியால் பிளவுபட்டு விதியை நொந்து காலம் கழித்துவந்த உழவர் குடிமக்களை எல்லாம் மணலி கந்தசாமி ஒன்றுதிரட்டி, ‘தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்’ என்று நம்பிக்கைக் கொடுத்து… அவர்களுக்குப் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

உழவர் குடிமக்களின் ஒற்றுமையைக் கண்டு மிராசுதாரர்கள் பணிந்திருக்கிறார்கள். சவுக்கால் அடிக்க மாட்டோம் என்றும், சாணிப்பால் ஊற்ற மாட்டோம் என்றும் அதிகாரிகள் முன்னிலையில் கையொப்பமிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையை அடைவதற்கு மணலி கந்தசாமி டெல்டா பகுதிகளில் பெரும்பாடுபட்டுள்ளார். மணலி கந்தசாமியின் பொதுவாழ்வு 1930-ல் தஞ்சை மாவட்டத்தில் ஒரு காங்கிரஸ்காரராகத்தான் தொடங்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து 1936-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சுயமரியாதைக் கட்சி மாநாட்டில் ஜீவாவை மணலி கந்தசாமி சந்தித்த பிறகு, அவரது சிந்தனையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து ஜீவா தொடங்கிய ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’யில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டிருக்கிறார் கந்தசாமி. அதே ஆண்டு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஏ.சி.டாங்கேயின் உரையும், ஜீவாவின் உரையும் மணலி கந்தசாமியின் நெஞ்சில் மிகப்பெரிய மாற்றத்தை விதைத்தன. இந்நிலையில் டாங்கேயின் ஆலோசனையுடன் சுயமரியாதை சமதர்மக் கட்சியைக் கலைத்துவிட்டு, காங்கிரஸ் கட்சியிலும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் இணைந்து பணியாற்றுவது என்ற முடிவை ஜீவா எடுத்தார். டாங்கே மற்றும் ஜீவாவின் சிந்தனைகளை ஏற்று மணலி கந்தசாமியும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து இடதுசாரி சோசலிஷக் கொள்கைகளை ஏற்று, கந்தசாமி தீவிரமாகச் செயல்பட்டதை அன்றைய காங்கிரஸ் அமைப்பினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கட்சியின் பல பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 1940-ல் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டபோது, அதன் முதல் கூட்டத்தில் கந்தசாமியும் கலந்துகொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலில் விவசாய சங்கங்கள் டெல்டா பகுதியில் உருவாகி இருந்த காலகட்டம் அது. இதன் பின்னணியில், விவசாய சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் பணியாற்றியுள்ளார் மணலி கந்தசாமி.

பண்ணையாட்களாக நிலச்சுவான்தார்களிடம் நீண்ட காலம் வேலை செய்த ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டு, அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுத் தரவேண்டும்; வார சாகுபடியாளர்கள் குத்தகைதாரர்களுக்கு விளைச்சலில் கிடைக்க வேண்டிய நியாயமான பங்கை கிடைக்கச் செய்ய வேண்டும்; பணியாட்களுக்கு நிலச்சுவான்தார்கள் அளித்துவந்த சாட்டையடி, சாணிப் பால் புகட்டல் போன்ற தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாய சங்கங்கள் சார்பில் மணலி கந்தசாமி போராடியுள்ளார்.

அக்காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குழந்தைகளை 6 வயதில் மாடு மேய்க்க, 10 வயதில் சாணம் அள்ள, 15 வயதில் வண்டி ஓட்ட, 18 வயதில் பண்ணை வேலை செய்ய அனுப்பும் பரிதாபமான நிலை இருந்துள்ளது. இதையெல்லாம் எதிர்க்கும் குரலாக மணலி கந்தசாமியின் உரிமைக்குரல் இருந்திருக்கிறது.

1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பின்னர், தலைமறைவாகி கட்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுள்ளார். 1952-ல் நடைபெற்ற தேர்தலில் தலைமறைவாக இருந்த வண்ணமே, மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகைசூடி சாதனை படைத்திருக்கிறார் மணலி கந்தசாமி. இவர் சட்டப்பேரவையில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், மாகாணச் சீரமைப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போது, சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும்; மத்திய - மாநில அரசு உறவுகள் குறித்த விவாதத்தில் மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

பெண் விவசாயத் தொழிலாளர்கள் கிராமத்தில் வசிக்கும் மற்ற பெண்களைப் போல சேலை உடுத்தக்கூடாது; முழங்கால் தெரிவதைப் போல சேலையைத் தூக்கிக் கட்ட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளைத் தகர்க்கும் உரிமைப்போராட்டங்களில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் மணலி கந்தசாமி. நிலம் வைத்திருக்கும் முதலாளிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் புகழ்பெற்ற ‘களப்பால் ஒப்பந்தம்’ மற்றும் ‘மன்னார்குடி ஒப்பந்தம்’ போன்றவற்றில், நிலப்பிரபுத்துவத்தின் ஏகபோக அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தவர்களைக் கையொப்பமிட வைத்தவர்களில் மிக முக்கியமானவராக இருந்திருக்கிறார் மணலி கந்தசாமி.

கம்யூனிஸ்ட்கள் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் சிதம்பரத்தில் ஒரு தோழர் வீட்டில் நடைபெற்ற ஒரு ரகசியக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு மார்வாடி, கீழத்தஞ்சை மாவட்ட விவசாயக் குடிமக்களுக்கு ஆதரவாகப் பல சிந்தனைகளைப் பேசியுள்ளார். கூட்டத்தின் முடிவில்தான் அங்கிருந்த பலருக்கு மார்வாடி வேடத்தில் இருந்தவர் மணலி கந்தசாமி என்பது தெரிய வந்திருக்கிறது. முஸ்லிம் வேடத்தில் மாயவரத்திலும், ஆண்டி கோலத்தில் தஞ்சாவூரிலும் மணலி கந்தசாமியைப் பார்த்ததாக அப்போது மக்கள் பேசிக்கொள்வார்களாம். அந்த அளவுக்குத் தலைமறைவு வாழ்க்கையிலும் மக்கள் பணியாற்றிய மனிதநேயராக மணலி கந்தசாமி இருந்திருக்கிறார் என்பதைப் படித்தபோது, இடதுசாரிச் சிந்தனையாளர்களின் மகத்தான வாழ்வும் போராட்டமும் எவ்வளவு உன்னதமானது என நெஞ்சம் நெகிழ்ந்தது.

மணலி கந்தசாமியின் தலைமறைவு வாழ்க்கையின்போது, அவரது தலையைக் கொண்டுவந்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு அறிவித்திருந்த காலகட்டத்தில், நடந்த 2 சம்பவங்களை வைத்து கவியரசு கண்ணதாசன் ‘ரத்த புஷ்பங்கள்’ என்கிற ஒரு படைப்பையே எழுதியிருக்கிறார் என்ற தகவல் மணலி கந்தசாமிக்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

நூல்: மணலி சி.கந்தசாமி - வாழ்வும் போராட்டமும்

ஆசிரியர்: கு,வெ.பழனித்துரை

வெளியீடு: கு.வெ.பழனித்துரை

ஏ-10, பிளாசா கோர்ட்,

28. சர்ச் ரோடு,

பெருங்குடி, சென்னை – 600 096.

விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம்


(வெள்ளிகிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in