படித்தேன்… ரசித்தேன்-11: மறக்க முடியாத மாதர்

படித்தேன்… ரசித்தேன்-11: மறக்க முடியாத மாதர்

ஒவ்வொரு புத்தகமும் எனக்கு ஒரு பறவைதான்… வாசிக்கும்போது உள்ளங்கைகளில் உட்கார்ந்திருக்கும் அந்தப் பறவைகள்… வாசிக்க வாசிக்க இதய வானத்தில் சிறகசைத்துப் பறக்க ஆரம்பித்துவிடுகின்றன. இதுவரை அறிந்திராத ஒரு உலகத்தை நமக்கு அறிமுகம் செய்கிற புத்தகங்கள்… தங்கள் பச்சையங்களை நினைவின் இலைகளில் பூசிச் சென்றுவிடுகின்றன. அப்படி ஒரு புத்தகம்தான் அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்தது.

வானம் – தனது புன்னகைத் தூறலால் முன்காலைப் பொழுதில் சுபலாலி பாடிக்கொண்டிருந்த வேளையில், அந்தப் புத்தகம் எனது விரல்கிளையில் பூத்தது. கி.மணிவண்ணன் எழுதிய ‘செம்மை மாதர்’ என்கிற புத்தகம்தான் அது. கலைஞர் தொலைக்காட்சியில் ‘ரசிகன்’ தொடர் மூலம் ஏற்கெனவே தமிழ் வாசகப் பரப்பைச் சென்றடைந்திருந்தவர் இவர். ஊடகத் துறையில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இவர் படித்தது – பொறியியல் கல்வி. ரசனையும் தமிழும் காட்சிக்கனவும் கலையின் பக்கம் இவரை இழுத்துவிட்டன.

காட்சி ஊடகம் கைவரப்பெற்றவர் என்பதால், இந்நூலை வாசிப்பவரின் மனத்திரையில் மொழிவழியே காட்சிகள் விரியும் வகையில் விவரணைகளை நெய்திருக்கிறார் மணிவண்ணன். நீண்ட உரையாடல்களில் வார்த்தைகளின் நெரிசலை உருவாக்கிவிடக் கூடாது என்கிற கவனத்துடன் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

கி.மணிவண்ணன்
கி.மணிவண்ணன்

மணிவண்ணன்… இப்புத்தகத்தில் தமிழகத்தின் புகழ்பெற்ற 13 ஆளுமைகளைச் சந்தித்துள்ளார். அவர்களைச் சுதந்திரமாகப் பேச வைத்திருக்கிறார். அவர்கள் வாயில் இருந்து உருகும் வார்த்தை மெழுகைத் தனது உள்ளங்கையில் சுடச்சுட ஏந்தியிருக்கிறார். ஒரு வாக்கியத்துக்கும் இன்னொரு வாக்கியத்துக்கும் இடையில் அவர்கள் விரித்த மவுன வலையை… இவர் தனக்குச் சாதகமாக விரித்து… அந்த ஆளுமை பேசும் தருணத்தின் பொழுதை… சூழலை… நறுமணத்தைப் புகுத்தியிருக்கிறார். காட்சி – உரையாடல் – மவுனம் – இசை எல்லாம் கூட்டி ஒரு திரைப் படைப்பாளி தனது கலைப் படைப்பை வடிப்பது மாதிரி…. காட்சி ஊடகத்தில் இருக்கிற மணிவண்ணன் இக்கட்டுரைகளைத் தந்திருக்கிறார். இதை ஒரு புது உத்தியாகவே நான் பார்க்கிறேன்.

நல்லகண்ணு, வாலி, வண்ணதாசன், பழநிபாரதி, மகேந்திரன், மணிவண்ணன், பிரபஞ்சன், பாஸ்கர் சக்தி, வெ.இறையன்பு, ட்ராட்ஸ்கி மருது, தமிழருவி மணியன், திருச்சி சிவா, கிரேஸி மோகன் ஆகியோரைச் சந்தித்து, “உங்கள் வாழ்க்கையில் எப்போதும் நினைவில் நீந்திக்கொண்டே இருக்கும் ஒரு பெண்மணியைப் பற்றி நீங்கள் பேச வேண்டும்” எனும் கேள்வியை முன்வைத்திருக்கிறார். அதேவேளையில் – “அவர்கள் உங்கள் தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ இருக்கக்கூடாது” என்பது கண்டிஷன்ஸ் அப்ளை. அந்தச் சட்டகத்துக்குள் 13 பேரும் புகுந்து புறப்பட்டுள்ளனர்.

பாப்பம்மாள் என்கிற பெண்மணியைப் பற்றி அய்யா நல்லகண்ணு சொல்லியிருப்பதை வாசிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு நெகிழ்வு. தூக்குத் தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருந்த, வேலாயுதம் என்கிற முடிதிருத்தும் தோழரின் மனைவிதான் இந்த பாப்பம்மாள்.

தனக்குத் தூக்குத் தண்டனைதான் கிடைக்கும் என்று காத்திருந்த தனது கணவரைப் பார்த்து, “நாலு வீட்டுக்கு நடந்து ஊர்ச் சாப்பாடு வாங்கியாவது எங்க வயித்தக் கழுவிக்குவோம். பீடி சுத்தியாவது நம்ம பிள்ளையள கரையேத்திடுவேன். கூடவே நம்ம தோழர்களும் இருக்காங்க… நீ எங்களப் பத்தி கவலைப்படாம தைரியமா இரு…’’ என்று பாப்பம்மாள் சொல்லியதைச் சிறை வளாகத்தில் அருகில் இருந்து அன்று கேட்டிருக்கிறார் நல்லகண்ணு. நெஞ்சுரமிக்க அந்தப் பெண்மணியின் மனதின் திடம் - மணம் - ருசி… அனைத்தும் வாசிக்கிற நமக்குள் தேயிலையாய் துளிர்க்கிறது.

ராமநாதபுரம் இளையான்குடியில் நிகழ்ந்த நிஜம் இது. தனது தாயின் தொப்புள்கொடியை அவசர அவசரமாகத் துண்டித்துக்கொண்டு குறைப்பிரசவமாக ஒரு குழந்தை பிறந்தபோது… அந்தக் குழந்தையின் உயிரின் ஒளி சீக்கிரம் அணைந்துவிடும் என உற்றாரும் உறவினர்களும் சொன்ன அந்தத் தொட்டில் நாட்களில்… இன்குபேட்டர் வசதி மலராத அந்தக் காலத்தில் ஒரு பெண் மருத்துவர்…. அந்த சிசுவை எடுத்து, தனது அடிவயிற்றில் கட்டிக்கொண்டு தனது அடிவயிற்றுச் சூட்டைத் தொடர்ந்து சில நாட்களுக்கு அந்திப்பகல் பாராமல் அந்தச் சிசுவுக்கு மடைமாற்றி…. அந்த உடற்சூட்டிலேயே அக்குழந்தைக்கு உயிரூட்டியிருக்கிறார். அந்த மருத்துவக் கருணையின் பெயர்- டாக்டர் சாரா. அந்த சிசு, இயக்குநர் மகேந்திரன்!

“இப்போதும் எனது குருதி சூடாக இருக்கிறதென்றால் அது அந்த டாக்டர் சாராவின் அடிவயிற்றுச் சூடுதான்'' என்று, உள்ளத்திலிருந்து உதிரும் பூக்களால் நன்றியில் நனைந்த மாலையைத் தொடுத்திருக்கிறார் மகேந்திரன்.

1931-ம் ஆண்டு, பொன்னம்மாள் என்கிற பெண்மணிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. பிரசவக் களைப்பில் தாயும், மழைக் குளிரில் சேயும் தவிக்கின்றன. பிள்ளைக்குப் பாலூட்ட முடியாத அளவுக்குத் தாய்க்குக் கடும் காய்ச்சல் அடிக்கிறது. புட்டிப்பாலோ, ஃபீடிங் பாட்டிலோ இல்லாத நிலைமை. யாரைக் காப்பாற்றுவது… தாயையா, சேயையா?

குழந்தையை முத்தமிட்டு தூக்கிய தந்தை சீனிவாச ஐயங்கார், “நீதான் என் பிள்ளையைக் காப்பாத்தணும்…’’ என்று சொல்லி, தனக்குக்கீழ் வேலை பார்க்கும் இப்ராஹிமிடம் ஒப்படைக்கிறார். குழந்தையை வாரியணைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு ஓடுகிறார் இப்ராஹிம். சமீபத்தில் பிறந்த தனது குழந்தைக்குப் பக்கத்திலேயே தனது மனைவியின் புடவைகளைப் பரப்பி… தூக்கிவந்த குழந்தையையும் படுக்கவைத்துவிட்டு தனது மனைவியிடம் சொல்கிறார், “பொறந்த குழந்தைக்குப் பாலு குடுக்க முடியாம அய்யங்கார் வீட்டம்மா ஜன்னி வந்து கெடக்கிறாங்க… நீதான் இந்தக் குழந்தையைக் காப்பத்தணும்.”

அந்தத் தாய் இக்குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட்டு… உடனே தன் மார்பை எடுத்து அந்தப் பிஞ்சுக் குழந்தையின் வாய்க்குக் கொடுக்கிறார். ஒரு மார்பில் முஸ்லிம் குழந்தையும், இன்னொரு மார்பில் இந்துக் குழந்தையும் பால் குடிக்கின்றன. பெற்ற தாய் உடல் நலம் தேறி உயிர் பிழைக்கும்வரை, குழந்தைக்குப் பாலுட்டி உயிர் கொடுத்த அந்த அன்புத் தாயின் பெயர் - பாத்திமா. அன்னை பாத்திமாவின் முலைப்பால் ஈரத்தில் முளைவிட்டவர் யார் தெரியுமா? 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படப் பாடல் உலகில் வெற்றிக்கொடி நாட்டிய கவிஞர் வாலி.

நெகிழ்வூட்டும் இந்நினைவைப் பதிவுசெய்யும் வாலி, ‘நீ இல்லாத இடமே இல்லை… நீதானே உலகின் எல்லை… அல்லா அல்லா’ என்று ‘முகமது பின் துக்ளக்’ படத்திலும், ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்று ‘அணையா விளக்கு’ படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி, “வைணவக் குடும்பத்தில் பிறந்த என்னால் மனமொன்றி இஸ்லாமியப் பாடல் எழுத முடிந்ததற்குக் காரணமே… எனக்கு உயிர்ப்பால் கொடுத்த அந்த முஸ்லிம் தாய் என் உள்ளத்தில் எப்போதும் குடியிருப்பதுதான்” என நெகிழ்ந்திருக்கிறார்.

கவிஞர் வண்ணதாசனை, நூலாசிரியர் மணிவண்ணன் சந்தித்து சரம் தொடுக்க முனைகிறார். “நான் நாகம்மக்காவைச் சந்தித்துவிட்டு வந்தபிறகு, இதுபற்றி உங்களுடன் பேசுகிறேனே” என்கிறார் வண்ணதாசன். காத்திருக்கிறார் மணிவண்ணன். ஒரு வழியாக வண்ணதாசன் தான் இளம்வயது முதல் இன்றுவரை அன்பால் பின்தொடரும் நாகம்மக்காவைப் பற்றிப் பேசுகிறார்.

“நாகம்மக்கா எப்போதும் இப்படித்தான். மிக இயல்பாக எல்லா இடத்திற்கும் எல்லோரிடமும் முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்துவிட அவளுக்கு முடியும். எல்லா இடத்துக்கும் எல்லோரிடமும் போய்ச் சேர்ந்துகொள்வதைவிட உலகத்தில் கூடுதலாக ஒன்று இருக்கிறதா என்ன?” என்கிற வண்ணதாசனின் நாகம்மாக்கா நம் நினைவுத் தெருக்களிலும் ஒரு ஓவியமாய் அசைகிறாள்.

ரசனை மிதக்கும் இந்தப் புத்தகத்தை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பதை ஒரு கோரிக்கை ஆணையாகவே வாசகர்களிடம் முன்வைக்கிறேன்!

நூல்: செம்மை மாதர்

ஆசிரியர்: கி.மணிவண்ணன்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,

6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை,

கே.கே.நகர் மேற்கு,

சென்னை - 600 078.

தொலைபேசி: 8754507070

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.