படித்தேன்... ரசித்தேன் - 45: ஆப்பிரிக்க வானம் அறைக்குள் வருமா?

படித்தேன்... ரசித்தேன் - 45: ஆப்பிரிக்க வானம் அறைக்குள் வருமா?

சென்னைக்கு வந்த புதிதில் ‘தினகரன்’ நாளிதழில் வேலைபார்த்த நண்பர் மோகனரூபன், ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று கெடு விதித்து ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். வாசித்துவிட்டு மகிழ்ந்து கிடந்தேன். அதுமட்டுமல்ல அந்தப் புத்தகம் எனக்குள் அதிர்வலைகளை உருவாக்கியும் இருந்தது. அதன்பிறகு அண்மையில் நடந்த புத்தகக்காட்சியில் ‘யாளி’ அரங்குக்குச் சென்ற எனக்கு, அந்தப் புத்தகத்தை எழுதியவரே அந்தப் புத்தகத்தை அன்பளித்தார்.

எழுத்தாளர் இந்திரன்
எழுத்தாளர் இந்திரன்

அந்தப் புத்தகம்: ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ அதை எழுதியவர் – புகழ்பெற்ற கலை இலைக்கிய விமர்சகர் இந்திரன். மீள் வாசிப்பில் அதே அதிர்வலைகளை இப்போதும் உருவாக்கியது ’அவஆவா’ புத்தகம். ‘ஆப்பிரிக்க வானம் / ஜன்னலில் தெரிந்தது / முகத்தில் கம்பிகள் புதைய / வானத்தின் எல்லைகளை / அளக்க முனைந்தேன் / விழிப் பறவையின் / சிறகு முனையில் /சுருங்கிப்போன வானவெளி/என் அழைப்பிற் கிணங்கி / அறைக்குள் வந்தது’ என்று புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே இந்திரன் நம் கைகளுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்கிறார்.

தமிழில் வெளிவந்த முதல் ஆப்பிரிக்க இலக்கிய தொகுப்பான இப்புத்தகத்தில் ’புதிய காற்று உள்ளே வரட்டும்’ என்று ஒரு தன்னுரை எழுதியிருக்கிறார் இந்திரன். அதில் ‘நாம் நமது ஜன்னல்களைத் திறந்து வைப்போம். அப்போதுதான் வெளியே மழை பெய்கிறதா? வெயில் காய்கிறதா என்பது தெரியும். நறுமணங்களும், பறவைகளின் பாடல்களும், அவதிப்படுவோரின் அழுகுரலும், நம்மை யாரோ வெளியில் இருந்து அழைக்கிறார்கள் என்ற உண்மையும் புலப்படும். வெளி உலகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டோமானால், இந்த மொத்த பிரபஞ்சத்தில் நமது இடம் எது என்பது தெளிவாகிவிடும்’ என்கிற இந்திர வரிகள் நமது சிறகுகளின் அளவை இன்னும் அகலமாக்க முயற்சிக்கின்றன.

’’ஆப்பிரிக்காவை இன்றைய மானுடவியலாளர்கள் ‘முதன் மனிதனின் தொட்டில்’ என்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்கரல்லாத நேற்றைய வரலாற்றாசிரியர்கள், ஆப்பிரிக்கக் கண்டம் இருக்குமிடத்தை ஒரு வெற்றிடமாகச் சுட்டிக்காட்டி ‘ஒருவேளை இங்கு சிங்கங்கள் இருக்கலாம்’ என்று குறிப்பிட்டார்கள். கடந்த 400 வருடங்களாக பிரிட்டிஷ், பிரெஞ்சு, டச்சு நாடுகளின் கீழ் இருந்த ஆப்பிரிக்கா தனது அடையாளத்தை இழந்திருந்தது. உலகின் எந்த இனத்துக்கும் இழைக்கப்படாத கொடுமை 15-ம் நூற்றாண்டில் அடிமை வணிகம் என்கிற பெயரின் கருப்பின மக்களுக்கு இழைக்கப்பட்டது. அவர்களது தோல் கருப்பாயுள்ளது என்பதை காரணம் காட்டி அந்த இனமே மனித நிலையில் இருந்து இறக்கப்பட்டது. 17, 18, 19-ம் நூற்றாண்டுகளில் மட்டும் 100 கோடி ஆப்பிரிக்கர்கள் சொந்த மண்ணில் இருந்து வேறு வேறு நாடுகளிக்குத் தூக்கியெறியப்பட்டார்கள்.

இந்தக் காயத்துக்குக் கட்டுப்போடும் முயற்சியாகத்தான் ‘நீக்ரோவியம்’, ’புதிய நீக்ரோ இயக்கம்’ போன்ற இயக்கங்கள் தோன்றி வளர்ந்தன. இசை, இலக்கியம், ஓவியம், சிற்பம் என எல்லா கலைத் துறைகளிலும் கருப்பின மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டத் தொடங்கினர். இவ்விதமாக கருப்பின படைப்பாளிகள் முகிழ்க்க தொடங்கினர்’’ என்று ஆப்பிரிக்க இலக்கியத்தை இந்திரன் அறிமுகம் செய்துள்ளதன் வழியாக கருப்பின மக்களின் துயர்மிகு வரலாறு தமிழில் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வருகிறது. இதற்காகவே நாம் இந்திரனை கொண்டாடலாம்.

’புதிய தலைமுறையைச் சேர்ந்த

கருப்பு கலைஞர்களான நாங்கள்

எங்களது தனிப்பட்ட

கருப்புத்தோல் போர்த்திய பண்புகளை

எவ்வித பயமோ, வெட்கமோ இன்றி

வெளிப்படுத்த முனைகிறோம்.

நாங்கள் அழகானவர்கள் என்று

எங்களுக்குத் தெரியும்.

அசிங்கமானவர்கள் என்றும் தெரியும்.

முரசுகள்

சிலநேரம் சிரிக்கின்றன.

சிலநேரம் அழுகின்றன.

நாங்கள்

எங்களுக்குத் தெரிந்த முறையில்

எங்களுக்கான

நாளைய கோயில்களைக் கட்டுகிறோம்' - லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் எழுதிய இந்தக் கவிதை கருப்பின மக்களின் வாக்குமூலமாகவே பதிவாகிறது.

இன்னொரு கவிதை:

’எங்கே வானவில் முடிவடைகிறதோ

அங்கே

ஓர் இடம் இருக்கப் போகிறது சகோதரனே.

அங்கே இந்த உலகம்

எல்லா வகை பாடல்களையும்

பாட முடியும்.

அங்கே நாம் எல்லோரும்.

ஒன்றாகச் சேர்ந்து பாடப் போகிறோம்.

சகோதரனே.

அது ஒரு

சோக கீதமாக இருக்கப் போகிறது.

ஏனெனில்

நமக்கு அதன் ராகம் தெரியாது.

மேலும்

அது கற்றுக்கொள்வதற்கு

கடினமான ராகமும் கூட.

ஆனால், நாம் அதை

கற்றுக்கொள்ள முடியும்.

கருப்பு ராகமென்றோ

வெள்ளை ராகமென்றோ

எதுவும் இருக்கப் போவதில்லை

சகோதரனே,

அங்கே

இசை மட்டும் இருக்கும்,

வானவில் எங்கே முடிவடைகிறதோ

அங்கே’,

இந்தக் கவிதையை ஆப்பிரிக்க மொழியில் எழுதியிருப்பவர் ரிச்சர்டு ரிவ்.

வரலாற்றின் கருப்பு அத்தியாயங்களாக கருதப்பட்ட அனைத்தையும் நிச்சயம் வரலாறு விடுதைலை செய்யும் என்று நம்பும் தமிழ் கூட்டத்துக்கு இந்தத் தொகுப்பு நம்பிக்கையூட்டும் .

அனைவரும் வாசிக்க வேண்டிய தொகுப்பு இது.

நூல்: அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்

ஆசிரியர்: இந்திரன்

வெளியீடு: யாளி பதிவு வெளியீடு

8/17, கார்ப்பரேசன் காலனி,

ஆற்காடு சாலை,

சென்னை – 600 024

போன்: 98407 38277

(திங்கள்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.