படித்தேன்... ரசித்தேன்-44: சோலைக்காடுகளின் அழிவை எதிர்த்த வேளாண் விஞ்ஞானி

படித்தேன்... ரசித்தேன்-44: சோலைக்காடுகளின் அழிவை எதிர்த்த வேளாண் விஞ்ஞானி

இன்று விவசாயி என்பவன் பாவப்பட்ட ஜீவன். பிழைக்கத் தெரியாத ஜந்து. இப்படி தமிழனின் விவசாயமும், தமிழனும் தாழ்பட்டுப் போனதற்குக் காரணம்… தமிழர்கள் தங்கள் வேர்களை மறந்ததுதான் காரணம். ’டிராக்டர் நல்லாத்தான் உழும் ஆனால் சாணி போடாதே’ என்ற ஜே.சி.குமரப்பாவின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று வாழ்நாள் முழுதும் சிந்தனை ஏர்பூட்டிய நம்மாழ்வாரைத் தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள உதவும் புத்தகம் ‘உழவுக்கும் உண்டு வரலாறு’. இப்புத்தகத்தை எழுதியவரே நம்மாழ்வார் என்கிறபோது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

இந்நூலில் நான் ரசித்த செய்திகளைச் சிறிதளவு தொகுத்துத் தருகிறேன்.

மகாத்மா காந்தியைப் போலவே தனது மேலாடையைத் துறந்த இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார்… நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற ரசாயன உரங்கள் மண்ணுக்கு அவசியம் தேவை என நம்மில் பலர் உரக்கக் குரல் கொடுத்தபோது - நமது மரபு ரீதியிலான உழவுமுறையான ‘பயிர் சுழற்சி உழவு’ மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என…தமிழகத்தில் செயல்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார் நம்மாழ்வார்.

இன்றைக்கு இயற்கை விவசாயம் பற்றி நம் தமிழ்நாட்டில் உரக்கப் பேசுவதற்கும்… இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வுக்கும் நம்மாழ்வாரின் தொடர் செயல்பாடுகள்தான் முக்கியக் காரணம் என்பதை இப்புத்தகத்தை வாசித்தபோது உணர முடிகிறது.

இப்புத்தகத்தைப் படித்து முடித்தபோது இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தவராக மட்டும் அவரைச் சுருக்கிப் பார்க்க முடியவில்லை. தமிழகத்தில் சிறந்த சுற்றுச் சூழலியலாளர் ஆகவும் வாழ்ந்திருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகள் தொடந்து அழிந்து வருவதை எதிர்த்து தனது ஆயுளின் இறுதி வரையில் போராடியிருக்கிறார் என்பதை இப்புத்தகம் வழியாக அறிய முடிகிறது.

தமிழ் இலக்கியத்திலும் ஆங்கில இலக்கியத்திலும் ஆர்வம் மிகுந்த வாசிப்பு திறனைக் கொண்டிருந்தாலும் ‘பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் உரையாடினால்தானே சாதாரண விவசாயிக்கும் தெளிவாகப் புரியும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் அப்படியே உரையாடியிருக்கிறார்.

இந்தியாவில் பசுமைப் புரட்சி எனும் பரபரப்பு பேரலையாய் எழுந்தபோது…அரசாங்கம் ரசாயன உரங்களைத்தான் அதிகளவில் ஊக்குவித்துக்கொண்டிருந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் நம்மாழ்வார் அய்யா… தமிழக கிராமங்களுக்கெல்லாம் கால்நடையாகவே சென்று விவசாயிகளைச் சந்தித்து ரசாயன உரத்தின் தீய விளைவுகளைத் தீவிரமாக விளக்கிப் பேசியுள்ளார்.

ரசாயன உரப் பயன்பாட்டால் மண்ணில் காரத்தன்மை அதிகரித்து… அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைத் தனது செயல்விளக்கம் மூலம் செய்துகாட்டியிருக்கிறார்.

விவசாயப் பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும்… தமிழ் மரபார்ந்த சிந்தனைகளால் வேளாண் அறிஞராக அவர் தமிழர்களால் கொண்டாடப்பட்டாலும்… பாமரத் தமிழ் மக்களுக்கும், விவசாய குடிகளுக்கும் எளிதாக விளங்கும் வகையில் பாமரத் தமிழில் உரையாடியிருப்பது இந்நூல் எங்கும் விரவி பரவிக்கிடக்கிறது.

இந்தியப் பாரம்பரிய விதைநெல் வகைகளை உயிராகப் போற்றியவர் நம்மாழ்வார். இவர் பாரம்பரிய நெல் வகைகளைப் பற்றி உரையாடல் நிகழ்த்தும்போதெல்லாம்… மறக்காமல் ஒரு பெயரை உச்சரித்திருக்கிறார். அந்தப் பெயர் - ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா. இந்தியாவின் 22,900 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாட்டினரின் கைகளுக்குச் செல்லாமல் பாதுகாத்த ரிச்சார்யா…. மத்திய அரசு நிறுவனமான - மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இயக்குநராகப் பணியாற்றிய உயர்ந்த மனிதர். ரிச்சார்யாவின் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டு… 2003-ம் ஆண்டுவாக்கில் பாரம்பரிய நெல் வகைகளை ஒரு பன்னாட்டு நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தபோது… மாதக்கணக்கில் அவரது விழிகள் வெந்நீர் சிந்தின.

‘விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை’ என்று சொன்ன நம் காலத்து வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் ‘பசிக்கு மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் சிறந்தது’ என்பதைப்போல, விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையை வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான களப்பயிற்சிகள் நடத்தி, இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் முன்னோடி இயற்கை விவசாயிகள் பலர், அந்தப் பயிற்சிகள் மூலமாகப் பட்டை தீட்டப்பட்டிருக்கிறார்கள். ‘இனியெல்லாம் இயற்கையே...’ என்ற அந்தக் களப்பயிற்சி மூலம் தமிழகமெங்கும் நம்மாழ்வார் நேரடியாக மண்வெட்டி எடுத்து… வயல்களில் வேலை செய்து கற்றுக்கொடுத்திருக்கிறார்.

அன்றைய மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவில் பி.டி கத்திரிக்காயை அறிமுகம் செய்யும் எண்ணத்தில் அவர் கருத்துக்கேட்புக் கூட்டத்தைக் கூட்டினார். அதில் - , நம்மாழ்வார் தனது பிரதிநிதிகளை அனுப்பிவைத்து தனது கருத்தை ஆழமாக அக்கூட்டத்தில் பதிவுசெய்ய வைத்தார். அவரது பிரதிநிதிகளாக அன்றைக்கு அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பி.டி கத்திரிக்காயை எதிர்த்துப் பேசினர்.

நம்மாழ்வார் தனது பிரதிநிதியாக டாக்டர் கு.சிவராமன், அரச்சலூர் செல்வம் ஆகியோரை அனுப்பி அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியைச் சந்திக்கவைத்து… பி.டி கத்திரிக்காயின் கேடுகளை எடுத்துச் சொல்ல வைத்தார். அதன் நல்விளைவாக தமிழகத்தில் பி.டி கத்தரிக்காய்க்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது இயற்கை வேளாண் வரலாறாகும்.

நம்மாழ்வார் என்கிற வயல்மனிதர் விதைத்துவிட்டுப் போயிருக்கிற பாரம்பரிய விவசாயம் என்கிற உழவு வாழ்க்கை, தமிழகத்தில் இன்னும் காலகாலத்துக்கு அவரது வாழ்வையும் வழிமுறையையும் ஞாபக அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும்.

நூல்: உழவுக்கும் உண்டு வரலாறு

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

வெளியீடு: விகடன் பிரசுரம்

757, அண்ணா சாலை

சென்னை – 600 002

போன்: 044 – 42634283 / 84

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in