படித்தேன்… ரசித்தேன் - 43: நவீனத்துவ ஆளுமைகளின் நல்லறிமுகம்!

படித்தேன்… ரசித்தேன் - 43: நவீனத்துவ ஆளுமைகளின் நல்லறிமுகம்!

தமிழின் முக்கியமான 16 எழுத்தாளர்களின் ஆளுமையையும், அவர்களின் சிறப்பு குணங்களையும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றை அண்மையில் படித்தேன். அப்புத்தகத்தின் தலைப்பு ‘நடைவழி நினைவுகள்’. எழுதியவர்: சி.மோகன். கலை சார்ந்த ஆளுமைகள் வாசகர்களோடு நெருங்கி வந்து கைகுலுக்குவதைப் போன்ற தனது கருத்துகளை இந்நூலில் சி.மோகன் பதிவுசெய்துள்ளார்.

தமிழில் கலை, சிந்தனை, பண்பாட்டுத் துறைகளில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு, பல்வேறு விதமான பங்களிப்புகளையும் செய்துவிட்டு மறைந்தவர்களை, இன்றைய தலைமுறைக்கு நல்லறிமுகம் செய்விக்கும் புத்தகம் இது.

சி.மோகன்
சி.மோகன்

பிரமிள் முதல் பிரபஞ்சன் வரை தமிழின் முக்கியமான படைப்பாளிகள் குறித்து வாசகர்கள் தெரிந்துகொள்ள ‘நடைவழி நினைவுகள்’ புத்தகம் உதவும். பெருமைக்குரிய படைப்பாளிகளை வாசகர்களுக்கு சாதாரணமாக அறிமுகம் செய்யும் விதமாக இல்லாமல், அந்த மதிப்புக்குரிய ஆளுமைகளின் அரிய வாழ்க்கையையும், அவர்கள் தமிழ் மொழிக்குக் கொடையாக வழங்கியுள்ள படைப்பாக்கங்களையும் தமிழ் வாசகர் அறிவதற்குப் பெரிதும் உதவும் புத்தகமாக இது இருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் தமிழ் நவீன இலக்கிய வரலாற்றை எழுதும் கட்டுரையாசிரியர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு, ஆவணப்படுத்த விரும்பும் கலைஞர்களுக்கு இப்புத்தகம் முன்னோடி நூலாகவும் அமையும்.

சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

இப்புத்தகத்தில் சுந்தர ராமசாமியுடனான தனது பழகனுபவத்தை சி.மோகன் பதிவுசெய்திருப்பது பேரழகு. இதோ அவரது வார்த்தைகள்:

‘’வீட்டுமாடிக் ‘காகங்கள்’ கூட்டத்துக்கு, முதல் நாளே, மாலை 4 மணிபோல, நாகர்கோவில் சென்று ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினேன். வந்துவிட்ட தகவலைத் தெரிவிக்க சு.ரா-வுக்கு போன் செய்தேன். ‘அறையைக் காலி செய்துவிட்டு, நம் வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம்’ என்றார். அறையைக் காலிசெய்துவிட்டு நின்றபோது ஒரு கார் வந்து ‘ஏறிக் கொள்ளுங்கள்’ என்றார் அதன் ஓட்டுநர்.

‘சுந்தர விலாஸ்’ வீட்டு மாடி அறையில் தங்கினேன். நீண்ட முற்றமும் திண்டுகளுமாக, மரங்கள் சூழ்ந்த விசாலமான வீடு. நன்கு வளர்ந்து, ஒய்யாரமாய் மாடியில் கிளைகள் பரப்பியிருக்கும் சப்போட்டா மரம் பேரழகு. மறுநாள் மாலைக் கூட்டத்தில், பத்துப் பதினைந்து பேர் ஜமக்காளம் விரித்த தரையில் அமர்ந்திருந்தனர். சுந்தர ராமசாமி சுவரில் சாய்ந்தபடி, ஒரு கால் மடக்கி மறுகால் குத்திட்டிருக்க, அவருடைய வழக்கமான பாணியில் அமர்ந்திருந்தார். அ.கா.பெருமாள், ராஜமார்த்தாண்டன், வேத சகாயகுமார், உமாபதி ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தது நினைவிருக்கிறது.

...என சி.மோகன் எழுதியிருப்பது, அக்காலத்தில் சுந்தர ராமசாமி ஏற்பாடு செய்த அக்கூட்டத்தில் நாமும் கலந்துகொள்ள இயலாத வருத்தத்தையோ… கலந்துகொண்டது மாதிரியான திருப்தியையோ வாசகருக்கு ஏற்படுத்தும்.

 தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்

இதேபோல இந்தப் புத்தகத்தில் - தி.ஜானகிராமன் பற்றி எழுதியிருப்பதும் சுவையாக உள்ளது. சி. மோகன் எழுதுகிறார்:

‘’தி.ஜானகிராமனின் படைப்புகள் பெரும்பான்மை வாசகர்களின் வசீகரிப்புக்கும் அதேசமயம், தீவிர இலக்கிய வாசகர்களின் ஈர்ப்புக்கும் இடமளித்தவை. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஜானகிராமனுக்கும் ஜெயகாந்தனுக்கும் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளில் தத்துவார்த்த ஒளி கூடிய புதிய வெளிச்சம் சுடர்விட்டது. அன்பு, காதல், ஆன்மா, வாழ்வின் அர்த்தம் என்றாக அமைந்த நவீன செவ்வியல் படைப்புகளை சுவீடனின் ஸெல்மா லாகர்லாவ், பேர் லாகர்குவிஸ்ட், நார்வேயின் நட் ஹாம்சன் போன்ற படைப்பாளுமைகள் உருவாக்கினர். தமிழின் மொழிபெயர்ப்புத் தேர்விலும் இவர்களின் படைப்புகள் பிரதானமாக அமைந்தன. இதேபோன்று, நவீனத் தமிழ் இலக்கியப் போக்கில் தஞ்சை எழுத்தாளர்களான மெளனி, கு.ப.ரா., எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் ஆகியோர் நவீனத்துவ மையப் போக்கில் இருந்து விலகி புத்தெழுச்சிமிக்க படைப்பியக்கத்தை வடிவமைத்தனர். இத்தகைய ஒளியில் சுடர்வதுதான் தி.ஜானகிராமனின் படைப்புலகம். நவீனத்துவக் கலை ஆளுமைமிக்கப் படைப்பாளிகள் என் மூளைக்கு அணுக்கமாக இருந்த அதேசமயம், என் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தவர், செவ்வியல் மறுமலர்ச்சிப் படைப்பாளியான தி.ஜானகிராமன்.

- என்றெழுதிச் செல்கிறார் சி.மோகன்.

நவீன தமிழ்க் களத்தில் தொடர்ந்து பயணிக்க விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

நூல்: நடைவழி நினைவுகள்

ஆசிரியர்: சி.மோகன்

வெளியீடு: தமிழ் திசை பதிப்பகம்

124, வாலாஜா ரோடு

அண்ணா சாலை

சென்னை – 600 002

போன்: 7401296562

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in